திங்கள், 24 ஆகஸ்ட், 2015

மரணத்திற்கான வீதி

இரவின் விளிம்பில் நின்று கதிரவன் சோம்பல் முறித்துக் கொண்டிருந்தான். 

இரண்டு வாரமாக நாவலூருக்கு பயணிக்கிறேன். புது வழி புது வேலை, பயணநேரமும் அதிகம், காலை வேளை பேருந்தில் இருக்கைக்கு சாத்தியமுண்டு என்பதனால் பல்லி போல் ஒட்டிக் கொண்டிருந்தது தியோடர் பாஸ்கரன் எழுதிய “இன்னும் பிறக்காத தலைமுறைக்காக” புத்தகம்.

காடு, காட்டுயிர்கள், சரணாலையங்கள், புலிகள் காப்பகம், சிற்றுயிர்கள்,  அழிந்த உயிர்கள், நாம் அழித்துக் கொண்டிருக்கும் உயிர்கள் பற்றி பகிரப்படும் தகவல்கள் இதுவரை வாசிக்காதது. புலி ஏன் தேசிய விலங்காக இருக்கிறது என்பதற்கு இதற்கு முன் என்னிடம் பதிலே இல்லாமல் இருந்தது, ஆனால் இந்த புத்தகம் அதற்கான காரணத்தையும், புலிகள் சுற்றுச்சூழலுக்கு எத்தனை அவசியம் என்பதையும் இயல்பாக விவரிக்கிறது. உணவுச்சங்கிலியை ஐந்து மதிப்பெண்ணிற்காக காலாண்டுக்கும், அரையாண்டுக்கும், முழுவாண்டிற்கும் வாசித்த நம்மில் எத்தனை பேருக்கு இப்போது அது நினைவிருக்கும்?. அதில் புலிக்குத்தான் முதலிடம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?. எனக்கு மட்டும்தான் இப்படி என்றால் என்னைவிட நீங்க புத்திசாலியாக இருக்கலாம் இல்லை நடிக்கலாம். பள்ளிக்கு வெளியே கற்கவேண்டியது மிகையாக கொட்டிக் கிடக்கிறது என்பதை நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அதையே கூறுகிறது.

நச்சுத்தன்மையற்ற பல்லியை உணவுக்கு எதிரியாக திரித்து விட்டதற்கு நாம் தான் காரணம் என்பது நமக்குத் தெரியுமா? உணவில் பல்லி விழுந்ததால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி எனக் கூவும் ஊடகங்களின் அறியாமையை பற்றி நாம் அறிந்திருக்கிறோமா?  யானை ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தது என்கிறோம், இதில் உள்ள உண்மையை அறிந்திருக்கிறோமா? பக்கத்து மாநிலம் நமது காய்கனிகளில் நச்சுத்தன்மை இருப்பதால் தடை செய்வேன் என்கிறது இதற்கு யார் காரணம்?

காட்டுயிர் பற்றி அறிந்துகொள்ள தமிழிலில் சொற்கள் உருவாகவில்லை எனவும் அதுவே நம்மை இத்தனை காலம் காடுகளை பற்றி புரிந்துகொள்ளவும் விவாதிக்கவும் தெரியாமல் நெடுந்தூரம் அழைத்து வந்திருப்பது வேதனை அழிப்பதாக தெரிவிக்கிறார். மேலும் பல நூல்களை இத்தோடு அறிமுகம் தருகிறார். நிச்சயம் வாசிக்கவேண்டிய பெட்டகம்.

நாம் காடுகளை அழித்துக் கொண்டிருப்பதற்கு மௌன சாட்சிதான் பள்ளிக்கரணை சதுப்புநிலம். மேடவாக்கத்திலிருந்து சோழிங்கநல்லூர் செல்லும் சாலையில் குறிப்பிட்ட தொலைவிற்கு பிறகு சதுப்புநிலம் கண்ணுக்கு புலனாகிறது. சுற்றிலும் கட்டிடங்கள் வளர்ச்சியின் பெயரில் நீரை உறிஞ்சி உயர்ந்து நிற்கிறது. அங்கிருக்கும் சாலைகளெல்லாம் மரணத்திற்கான வீதி என்பதைத்தவிர வேறென்ன?.

சதுப்புநிலத்தில்
சகிப்புத் தன்மையோடு
நீரலையில் உடல் நனைத்து
புல் தரையில்
சிறகு உலர்த்தும்
உள்ளூர்ப் பறவைகளும்

வலசை வரும்
வெளிநாட்டுப் பறவைகளும்

அந்தரத்தில்
சிறகுலர்த்தும்
பெயரறியா பறவையொன்றும்

பேய்களென்று
நமை நினைக்கும்…..






2 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


கவிதை அருமை நண்பரே... சிறிது நாட்களாக காண முடியவில்லையே.....

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மனிதனின் எல்லையற்ற ஆசைகளே எல்லாவற்றிற்கும் காரணம்! சிறப்பான பகிர்வு! நன்றி!