செவ்வாய், 21 மார்ச், 2017

அடையாற்றில் மலப்புரட்சி

2015 நவம்பரில் வெள்ளம் வந்தபோது வீட்டின் வெளிக்கதவைத் தாண்டி உள்வரவில்லை. சாலையிலிறங்கி முட்டு அளவு ஆழத்தில் நடந்து சென்று வேடிக்கைப்பார்த்தோம். அனகாபுத்தூர் ஆற்றுப்பாலத்தை நெருங்க முடியாத அளவு வெள்ளம். பாலத்தில் நீரில் நிந்தி வந்த எருமைகள் நீரின் போக்கில் நிலைகொள்ள இயலாமல் அடித்துச்சென்றதை உச்சென்று ஒலியெழுப்பி வருந்திக்கொண்டோம். பின் இரண்டாவது வெள்ளம் வந்தபோதைய நிகழ்வுகள் ஒரு நாவலுக்கான அடித்தளம். எப்போது எழுதித் தீர்க்கப்படுமோ தெரியவில்லை.

மழைக்குப்பிறகும் நான்கைந்து நாளாக வெள்ளம் பாலத்திலிருந்து சற்று கீழிறங்கி நெழிந்து சுழிந்து ஓடியதும், நாயொன்று வேடிக்கைப்பார்த்தவர்களை ஏளனப்பார்வையோடு ஒய்யாரமாக நீரில் நகர்ந்துபோனதும் வேடிக்கை மனிதர்களுக்கு உளக்கிளர்ச்சியை உண்டு பண்ணியிருக்க வேண்டும். மொத்தமாக இரைந்தார்கள்.

அந்தப்பக்கம் தினமும் கடந்துபோக தலைப்பட்டிருப்பதால் அருகிலுள்ள கம்பெனிக் கழிவுகள் கலந்த சாக்கடை நீரின் ஓட்டத்தை கண்டு மனம் வெதும்ப வேண்டியுள்ளது. ஆறும் குளமும் குப்பை மேடாகும் கொடுங்கோல் ஆட்சி வேறெதும் நாட்டில் உண்டா எனத்தெரியவில்லை. ஊருக்குள் மீண்டும் பன்றிகள் அட்டகாசம் என வாட்சப்பில் பகிரும் நண்பர்களை எண்ணி நகைப்பதைத்தவிர என்ன செய்ய. தூய்மை இந்தியாவென்று கழிப்பறை கட்ட எத்தனிக்கும் அரசு, கழிப்பறையில் கக்கா இருப்பதையே முன்னேற்றம் என நம்ப வைக்க விளம்பரம் செய்யும் அதே அரசு, அங்கே ஆழ்கிடங்கில் தேங்கியொழுகும் மலநீரை என்ன செய்ய வேண்டுமென அறிவுறுத்துகிறது? அதனை முறைப்படுத்தி எரிவாயு எடுக்க வக்கற்ற அரசு விவசாய நிலங்களை குறிவைத்து தாக்க எத்தனிப்பது ஏன்?

நாங்கள் தற்போது வசிக்கும் பகுதி குன்றத்தூரின் கிழக்கு எல்லை, அடையாறு ஆற்றுப்போக்கிற்கு அரை கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது. இங்கு எந்த தெருவிலும் முறையான வாரங்கால் அமைப்பு கிடையாது, (சி.எம்.டி.ஏ எதை வைத்து வீடுகட்ட அனுமதிக்கிறதோ? பணம்தானே என ஒருகுரல் ஒலிக்கிறது) அந்தந்த வீட்டின் அருகிலிருக்கும் காலி மனை எனக்கூறப்படும் முன்னாள் குளமோ விளைநிலமோ சாக்கடைக்குளமாக நவீன மாற்றமடைந்திருக்கிறது. தற்போது காந்தி சாலை எனப்படும் பிரதான சாலை மட்டும் சாக்கடைக் கால்வாய் அமைத்து பல்லாவரம் சாலையின் ஓரமாக காவல் மையத்தின் பின்புறமாக சென்று அடையாறு ஆற்றினில் தன்னை இணைத்துக்கொள்கிறது, அடடா!! என்னவொரு திட்டம். புல்லரிக்கிறது.

அடுத்தது, இந்த பகுதியின் அடுக்ககங்களின் கழிப்பறை கழிவுகள் மாதமொரு முறையேனும் வெளியேற்றவேண்டிய கட்டாய நிலை இல்லையென்றால் ?! மூடிக்கொள்ள வேண்டியது மூக்கை மட்டுமல்ல. இந்த மலநீர் எங்கே போகிறது? பெரிய வேலையெல்லாம் இல்லை, குத்தகைக்காரன்கள் லாரியில் பிடித்ததை அப்படியே ஆற்றில் திறந்துவிட்டு விட்டு அடுத்த அடுக்ககத்தின் வாசலில் பணியினை தொடரமுடியும். இதை மறைமுகமாக அவர்கள் செய்யவில்லை மிகவெளிப்படையாக செய்கிறார்கள் கற்றறிந்த மூடர் கூட்டம் "சொசைட்டி" என்ற பெயரில் கைதட்டி கும்மாளமடிக்கிறது.

திங்கள், 6 மார்ச், 2017

உறக்கத்திற்கு முன் அவள்

நான் இரவுப் பணியிலிருக்கும்போது இவ்வளவு தொந்தரவு கொடுப்பதில்லை என்றே கூறுகிறாள். கடந்த ஒருவாரமாக காலையில் பணி என்பதனால் இரவில் தூக்கம் ஒருபக்கம் இழுக்க மகளின் கெஞ்சும், அழும் குரல் மற்றொரு பக்கம் இழுக்கும்.

இப்பொழுது யாரைக்கண்டாலும் "அம்ம..அம்மே..அம்மே" தான் அப்பாவும் அம்மாவும் அம்மையே.

அவளுக்கு முடியைக் கண்டால் ஏற்படும் உற்சாகம் வேறெப்பொழுதும் ஏற்படுவதில்லை, அம்மாவின் முடி மனைவியின் முடியென வாய்புக்கிடைக்கும் போதெல்லாம் தலைவலிக்க இழுத்துவிட்டு சிரிப்பாள். அரிசிப்பல்கள் அங்கலாய்க்கும். இப்பொழுது சில நாட்களாக கடிக்கத் தொடங்கியிருக்கிறாள். அவளுக்கு தெரிகிறது அம்மா, அப்பா, அப்பாம்மை, சித்தப்பாவை மட்டுமே கடிக்க வேண்டுமென்று, பக்கத்து வீட்டு ஆட்களை அப்படிச் செய்வதில்லை. கடித்தலும் இழுத்தலும் தொடர்ந்தால் எப்படி கண் அயர்வது, மனைவி கடுப்பாகி பிடரியில் இரண்டு அடி கொடுக்கவும் "ங்கே...ங்கே..ங்கே" தான், பிறகென்ன கையில் தூக்கிக்கொண்டதும் அமைதி. நமக்கென்ன தூக்கம் கெட்டால் வாசிப்பு.

ஆரம்பத்தில் (பத்தாவது மாதத்தில்) அதாவது இரண்டு மாதங்கள் முன்பு வரை கி.ரா-வின் "சிறுவர் நாடோடிக்கதைகளை" வாசிப்பதுண்டு. முதலில் வெறுமனே வாசித்துவிடும் பொழுது அவளிடம் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை, வழக்கம்போல் பார்த்தாள் கையிலிருக்கும் புத்தகத்தையும் முகத்தையும். பின்பக்க அட்டையிலிருந்த கோட்டோவிய யானையை காண்பித்து "டிங்..டிங்..டிங்.." என ராகமிழுக்கவும் மெல்ல சிரிப்பு. ஒவ்வொரு கதையின் இடையிடையே "யான வருது...டிங்..டிங்..டிங் யான வருது" என அதற்கு சம்பந்தமில்லாமல் கூறி யானை போல நடந்து காண்பித்தால் மீண்டும் சிரிப்பு.

கதையையே ஒரு சலனப்படம் போலவும் நாடகம் போலவும் நிகழ்த்திக்காட்டினால் என்னவென சிறு பொறி விழவும். மொச்சக்கொட்டை வயிறுமுட்ட சாப்பிட்டு வெடித்தகதை, சுண்டவத்தல் கதை, வாலுபோயி கத்தி வந்த கதைகளையெல்லாம் சின்னச்சின்ன முக பாவங்களோடு செய்து காட்டியதும் குலுங்கிக்குலுங்கி சிரித்தாள். அவ்வளவுதாள் இப்பொழுது தூங்குவதற்கு முன் கழனியூரன் தொகுத்திருக்கும் "தாத்தா பாட்டி சொன்ன கதைகள்" புத்தகத்தின் கதைகளை வாசித்தும் உடல் பாவனைகளோடு இயங்கியும் காண்பிப்பதில் உறக்கச்சிரித்து பின் உறங்கச்செல்கிறாள். அன்பு மகள்.

கதைகளை வாசித்து முடிப்பதை விட அனுபவிக்க பழக வேண்டும். பழகுவோம் பழக்குவோம்.