நீலிக் கதையை நவீனமாக்கி படம் உருவக்கியிருக்கிறார்கள். இதற்கு முன்னரும் இதேபோன்ற கதைகள் திரைப்படம் ஆகியிருக்கலாம் தெரியவில்லை.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சென்று திரும்பும் பொழுது காந்தாரா படம் என்ன கதை என்ற உரையாடல் எழுந்த போது, அந்த படம் குல தேவதைகளை பற்றியது என்று நீண்டது. மேற்சொன்ன நீலிக்கதையை "லோகா"வில் பார்த்ததும். என்ன இது எல்லாம் கிராமத்து தேவதைகளை உள்ளடக்கிய கதையாக வருகிறதே ஆனால் தமிழில் ஏன் அப்படியொன்று இன்னும் நிகழவில்லை என்றொரு கேள்வி தொற்றிக்கொண்டது.
தமிழில் ஏகபட்ட அம்மன் கதைகள் இதற்கு முன் வந்திருந்தாலும், நம்மிடமுள்ள நாட்டுப்புறக் கதைகளும் வில்லுப்பாட்டுக் கதைகளும் சாமியாட்டக் கதைகளும் இன்னும் திரையில் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான "பைசன் (காள மாடன்)" திரைப்படத்தில் மாடசாமியும் சாமியாட்டமும் ஒரு குறியீடாக வருகிறது. என்னைப் பொருத்தவரையில் ஊர் திருவிழாக்களில் நடைபெறும் சாமியாட்டம் என்பதுவும் நிகழ்த்துக் கலை சார்ந்ததே. "சின்னத்தாயி" திரைப்படத்தில் வரும் "கோட்டைய விட்டு... வேட்டைக்குப் போகும்... சுடல மாட சாமி..." பாடல் காட்சி அதற்கு ஒரு சாட்சி. எந்த முன்னோட்டமுமின்றி ஆண்டுக்கு ஒருமுறை இரவு ஆட்டமாக பல காலமாகத் தொடரும் இந்த கலை பற்றிய ஆச்சரியம் என்றும் அடங்கப் போவதில்லை.
"ஜமா" திரைப்படமும் தமிழ்த் திரைக்கு மிக முக்கியமான படம். அவர்களின் வாழ்வியல், எப்படி அவர்களுக்கான குழு உருவாகிறது அதிலுள்ள அரசியல் என மிக அற்புதமாக வடிவமைக்கப் பட்ட காவியம்.
இது போன்ற முயற்சிகள் ஒவ்வொரு வட்டாரத்திலுமுள்ள கலைஞர்களின் கலைகள் நவீனத் தமிழ் திரையில் வெளிப்பட வேண்டும் என்பது அவா.