புதன், 14 ஜனவரி, 2026

எத்தனை கோணம் எத்தனை பார்வை - ஓவியர் ஜெயகுமார்

தனது ஓவியப் பயணத்திற்கு எழுத்தாளர் ஜெயகாந்தனுடனான நட்பு எவ்வளவு உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை ஓவியர் ஜெயகுமார் கட்டுரைகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுத்துவதிலிருந்தே உணர்ந்துகொள்ள முடிகிறது. இவரது கோட்டோவியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரையில் ஏன் இவர் வண்ணங்களுக்கு வருவதற்கு இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டார் என்பதை எண்ணிப் புழுங்கும் கவிஞர் ரவி சுப்பிரமணியின் சொற்களில் தேங்கி நின்று அவரது ஓவியங்களை வாசித்துப் பார்த்தேன். ஓவியங்களில் ஊடாக ஓடிக் களிக்கும் கோடுகள் தான் வடிவங்களையும் அதை நோக்கும் பாதைகளையும் உள்வாங்க உதவுகிறது வண்ணங்கள் குறியீட்டுத் தன்மையுடன் வேறொரு பரிமாணத்தை நமக்கு வழங்குகிறது. 

ஊர்வலம் சிறுகதையில் ஒரு உவமை "தனது மனைவியின் உடம்பிலிருந்து அவளது உயிரை தனியே பிரித்து அகழ்ந்தெடுத்து அதையே ஒளியாக பக்கத்தே வைத்தது போல் தோன்றியது அவருக்கு" இதை வாசிக்கையில் இவரது கவிதை மனம் பயணம் செய்து லயிக்கும் திசையில் நடந்து பார்ப்பது அழகாக இருந்தது. இரண்டொருமுறை வாசித்தப் பிறகு "தனியே பிரித்து...அதையே" என்ற சொற்கள் அவ்விடத்தில் தேவையில்லையோ என்று எனக்குத் தோன்றியது. 

ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் "அன்று பெய்த மழையில்" திரைப்படத்தில் கலை இயக்குனராக உடன் இணைந்து பணியாற்றும் போது சில்க் சுமிதாவின் தன்னை தீவிரமாக விரும்பும் குணத்தை வெளிப்படுத்துவற்காக நடிகையை நேரடியாக பார்த்து வரைந்து படத்தில் பயன்படுத்தியதை அறிந்துகொண்டதும் அப்படத்தை வலையொளியில் (YouTube) தேடிப் பார்த்தால் இப்படியொரு வயது வந்தோருக்கான படம் வந்திருப்பதை கொஞ்சம் வியப்புடன் கண்டு கண் நகர்ந்தது அந்த ஓவியத்திற்கான தருணத்தைப் பார்த்ததும் நிறுத்திக் கோடுகளில் கண் பதித்தேன் வண்ணங்கள் தெளிவாக இல்லாததால் அதிக கவனம் செலுத்த இயலவில்லை. 

ஓவியர் திரு.ஜெயகுமார் அவர்களை சந்திக்கும் ஒவ்வொரு பொழுதும் படைப்பு உருவாக்கம் பற்றிய அறிதலுக்கான வழியையும் உள்ளார்ந்த ஆற்றலையும் பெற்றுக் கொண்டேயிருப்போம். இப்போது அவரது "எத்தனை கோணம் - எத்தனை பார்வை" நூலை வாசிக்கும் போது கலை சார்ந்து அவருக்குள் விளைந்த வகைமைகளை எண்ணிப் பார்ப்பதும் அதனை மூலமாகக் கொண்டு கணக்கற்று விரியும் நமது புரிதல் படிநிலைகளும் பேரனுபவமாக உள்ளது. தனது கலை நுட்பங்களை வெளிப்படுத்த அவர் இன்னும் பல நூல்கள் படைக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: