ஞாயிறு, 27 நவம்பர், 2016

கியூபா சோசலிச நாடா?

கியூபாவை புகழ்ந்து உச்சி முகர்கிறார்கள். பிடல் காஸ்ட்ரோவையோ கியூபாவையோ பற்றி அதிகமாக வாசித்து எதையும் அறிந்துகொள்ளவில்லை, ஆனால் சோசலிசம் என்றவொரு கோட்பாடு மனிதத்தன்மைகளை உள்வாங்கியதாகவே இருக்குமென்ற பொதுவான கருத்தை ஏற்றுக்கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இலங்கைக்கு ஆதரவாக கியூபா உலகநாடுகளுக்கு முன்னிலையில் வாக்களித்தபோது வெங்கட் சாமிநாதன் கூறுயதுபோல சோசலிசம் கம்யூனிசம் என்பதை எண்ணும்போது சிரிப்புத்தான் வருகின்றது. நன்றாக உச்சி முகருங்கள் பக்கம் பக்கமாக எழுதுங்கள்.

புதன், 23 நவம்பர், 2016

ஓவியங்களை வாசித்தல்

எம்.எஃப்.உசேனின் வரலாற்று நூல் (ஓவியர் புகழேந்தி எழுதியது) வாசித்த போது அவரது பிறப்பு முதல் இறுதிவரையில் அவரின் படைப்புகள் உருவானதன் பின்னணியையும் எவ்விதமான விளைவுகள் அவரது ஓவியங்களில் வெளிப்பட்டன என்பதனையும் விரிவாகச் சொல்லியிருந்தார். இங்கு மேற்கத்திய ஓவிய பாணியை பின்பற்றி பெரும்பாலானோர் வரைகையில், இந்திய ஓவியங்கள் உருவமற்று இருக்கவே முடியாது என்ற வரையறைக்குள் ஓவியத்தினை வரைந்ததாக படித்த ஞாபகம்.

இன்று சி.சிவராமமூர்த்தி எழுதி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்திய ஓவியம் என்ற புத்தகம் வாசித்து முடித்துவிட்டேன் ஒருவழியாக!.

ஓவிய நூல்கள், ஓவியன், காட்சிக்கூடங்கள், திறனாய்வு விதிகளென துவங்கியவர் தொடர்ந்து கி.மு2-ம் நூற்றாண்டிலிருந்து சமகாலத்துவரையிலான ஓவியக்கலையின் வளர்ச்சி ஆட்சிகள் மாற மாற ஒன்றிலிருந்து மற்றொன்று கலையை உள்வாங்கி பரிணாமம் பெற்றதை குறிப்பிட்ட காலகட்டத்தை வைத்து விளக்கியிருக்கிறார் சாதவாகனாரில் துவங்கி சமகாலம் வரை.

மேற்கத்திய கலைப்பண்புகளான பதிவு நவிற்சி (Impressionist), எதிர்மறை நவிற்சி (Futurist), கோணவடிவு நவிற்சி (Cubist), அடிமன கனவு இயல்பு நவிற்சி (Surrealist) ஆகியவற்றால் ஓவியர்கள் மரபிலிருந்து விலகி பிழைப்புவாதிகளாகிவிட்டதாக கவலையுறுகிறார்.

இன்னும் ஓவியம் பற்றிய நூல்களை தேடிக்கொண்டிருக்கிறேன், நூல்கள் பரிந்துரை செய்யுங்கள் அன்பர்களே.

திங்கள், 7 நவம்பர், 2016

கி.ரா தாத்தா

தாத்தா வீட்டில் கோயில் திருவிழாவென்றால் பெரியம்மை, சித்தி மகன்களெல்லாம் ஒன்றுகூடி களித்திருக்க கிடைக்கும் அனேக நாட்களில் ஒன்று. எனக்கு விவரம் தெரிந்தபின் தாத்தாவோ வளத்தம்மையோ அப்பாம்மையோ கதைசொல்லியதாக நினைவில் இல்லை அதற்காக குறைபட்டுக்கொள்ளவில்லை. அதேபோல் பெரும்பாலான வாசகர்கள் எழுத்தாளர்கள் கூறுவதுபோல சாம்புவையோ அம்புலிமாமாவையோ வாசித்ததுமில்லை இவர்களையெல்லாம் என் நண்பன் பாலாவும் அருணும் சொல்லக்கேட்டிருக்கிறேன், அதன்பின் தான் அறிந்தும் கொண்டேன். அப்போதெல்லாம் எண்ணிக்கொள்வதுண்டு கீழப்பாவூரைவிட குறும்பலாப்பேரியில் இலக்கிய பரிச்சயம் அதிகம் என்று, என்னை வாசிப்பிற்குள் உசுப்பி விட்டதும் இவர்கள்தாம்.

ஆனால் பாருங்கள் வீட்டிலுள்ள பெண்களின் பேச்சிலிருக்கும் இலக்கியத்தை தெரு இலக்கியம் ஆக கருதிக்கொள்ளலாம். ஆமாம் உலக இலக்கியமிருக்கும் போது இது கூடாதா. இவர்கள் பேசுவதை காதுகொடுத்தால் போதும் துக்கம் துயரம், காமம் களவு, பிறப்பு இறப்பு என பலவகைப்பட்ட கதைகள் கைகளில் உருளும் பீடியிலைக்குள் சுருட்டி வைக்கப்படும் எஞ்சியது நம் காதுகளுக்கு.

திருவிழா இரவின் பொழுதில் நாங்கள் கதை பகிர்ந்துகொள்வோம் கதைமுடியுமுன் தூங்கிப்போவது வேறு. கி.ரா வின் சிறுவர்களுக்கான நாடோடிக்கதைகள் வாசித்தபோது எனக்கு இந்த இரவுகள்தான் நிழலாடியது. சுண்டைக்கா கதையெல்லாம் பேசிப்பேசிச் சிரித்த கதை. அத்தொகுப்பிலுள்ள கதைகள் பெரும்பாலானவை எங்கள் சிறுவயதில் புழக்கத்திலிருந்தவை. போன வாரம் நூலகத்தில் கிடைத்த கி.ராவின் நாள்குறிப்பிலிருந்து தொகுப்பை வாசித்து முடித்தேன். எத்தனை கதைகள் அதன் மனிதர்கள், இலக்கிய நிகழ்வுகள். சிற்சில விமர்சனங்கள் என ஒரு தாத்தாவைப்போல பகிர்ந்து பேசுகிறார். ஆமாம் எனக்கு அவர் கதைசொல்லி தாத்தாவாகவே தெரிகிறார்.

வியாழன், 3 நவம்பர், 2016

கொசுவோடு வாழ்வு

அன்று காலையில் எழுந்ததுமே குழந்தையை காண்பித்து "இங்க பாருங்க பிள்ள மூஞ்சி கை காலெல்லாம் திட்டுத்திட்டா ரத்தம் பூத்துக் கெடக்கு, இதுக்கு எதாவது செய்யுங்களேன்" என்றாள். நான் மட்டும் என்ன செய்துவிட முடியும். டிஸ்கவரி தொலைக்காட்சிக் காரனே முடிவு செய்து காட்சிப்படம் வெளியிட்டுவிட்டான். உலகத்து மனிதர்களுக்கு கொசு தான் முதல் எதிரியென்று.


கடைகளில் கிடைக்கக்கூடிய ரசாயன கொசுவிரட்டி மீது பத்தாம் வகுப்பு படிக்கும் போதே நம்பிக்கையிழக்கச் செய்துவிட்டார் அய்யாத்துரை வாத்தியார். அதையும் மீறி மின் கொசுவிரட்டி பற்றவைத்து மூச்சுத்திணறியபின் விட்டெறிந்ததுதான், அத்தோடு முழுக்கு.

வேப்பிலையெண்ணைய் விளக்கும் போட்டுப்பாத்தாச்சி, சாளரம் வலைகளால் சூழப்பட்டுவிட்டது. இருந்தும் என்ன பயன். இனி ரியல் எஸ்டேட் காரன் கொசுத்தொல்லையில்லாத வீடு என்று விற்பனை செய்ய வாய்ப்பு உண்டு. இல்லையென்றால் வீடளவுக்கு கொசுவலை வாங்கி போர்த்திவிட வேண்டியதுதான். அறையை குளிரூட்டும் சாதனமிருந்தால் கொசு வராது என்கிறார்கள், அது மென் விசம்.


காலையில் இவள் இப்படிச் சொன்னதும், அம்மா சொல்வாள் "அஞ்சி மணிவாக்குல கதவ அடச்சிட்டு, ஏழுமணிக்கு பிறவு திறந்தா செத்தேங் கொசு வராமயிருக்கும், ஆனா நீயெங்க நாஞ்சொல்லுதத கேக்க". இது சோதனை செய்யப்பட்டிருக்கிறது எங்கள் வீட்டில். இந்த இரண்டு மணிநேரம்தான் கொசுக்கள் தொகுதி பங்கீடுகளுக்கு பிறகு அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் பதுங்கிக்கொள்ளும் போலும். என்ன மாயயதார்த்தமோ.!