வரைகலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரைகலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 மார்ச், 2026

வதம் செய்வோம் வேங்கைகளே


எழுத்துக்களை விட ஓவியங்களின் வழியே வாசிக்கும் பொழுதில் தான் காமிக்ஸ் மேலும் ஆர்வமுள்ளதாகவும் தேடலுக்கு உரியதாகவும் மாற்றம் கொள்கிறது. இது ஜப்பானில் ஒரு சிற்றரசருக்கு கீழ் உள்ள சாமுராய் பற்றிய கதை.

டெட்சுவோவின் பயணத்தில் காடுகளும் மலைகளும் சமவெளிகளும் கோடுகளாக பயணிப்பது என்னையும் காட்சிக்குள் இழுத்துக் கொண்டது. முழுக்க முழுக்க கோட்டோவிய முறையில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள் உண்மையிலேயே மிரட்டுகின்றன. ஒவ்வொரு சட்டகத்தையும் பொறுமையாக உள்வாங்க உள்ளே கற்பனைக் கோடுகள் கட்டியணைக்கின்றன.

செவ்வாய், 2 ஜூலை, 2024

க்ளிக்

புகைப்படங்களின் ஆரம்ப கால வரலாற்றில் தொடங்கி எப்படி ஒரு ஒளிப்படக்கருவி செயல் படுகிறது, காட்சி எவ்வாறு படமாக இக்கருவி உதவியுடன் பதிவு செய்யப்படுகிறது, அதிலுள்ள அனைத்து பாகங்கள் மற்றும் குவியாடிகளின் வகைகள் என ஒளிப்பட நுட்பங்களை விரிவாக அலசி எவரும் எளிதாக புரிந்து கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது "க்ளிக்" புத்தகம்.

ஒளி குவியாடியின் வழியே புகுந்து செல்லும் அளவைப் பொறுத்து கிடைக்கும் படங்களுக்கான அளவீடுகள் பற்றி வாசிக்க வாசிக்க நானும் ஒளிப்படக் கலைஞன் ஆகிவிடலாம் என்ற ஆர்வத்தை விதைக்கிறது. ஒளியினைப் பயன்படுத்தி அவர் வரைந்த ஓவியம் புதிதாகவும் வியப்பளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அழகுணர்ச்சி கொண்ட கட்டமைப்பை உருவாக்க ஓவிய வாசிப்பின் அவசியத்தை உணர்த்தி அதற்கான விதிகளை வரையறை செய்து கொடுத்திருப்பது கற்றலின் பெருவெளி. இத்தனை ஆண்டுகள் இந்த புத்தகத்தை வாசிக்காமல் வைத்தது பெருந்தவறு என்பதை உணர்ந்த தருணம். இப்புத்தகத்தை எழுதியதற்கு ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி பாராட்ட வேண்டும்!!




வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

முகங்(கலை)தல்



 கலை அப்படின்னா என்ன அதுவொரு மாய உலகமா எளிதில் எட்டி விடாதா தொலை தூரத்தில் உள்ளதா, எது கலைப் படைப்பு எதனால் அது கலைப் படைப்பாகிறது, எது அழகு எதனால் அது அழகு , எந்த இடத்தில் கலை உருவாகிறது யார் உருவாக்குகிறார்கள் என பலதரப்பு கேள்விகள் நம்மைச் சூழலாம் அல்லது இவை எதுவும் என்னவென்றே அறியாது ஒதுங்கி நிற்கலாம் அப்படி நிற்பதில் கூட கலைக்கான செயல்பாடு எதாவது இருக்குமானால் இருக்கலாம் அதை அறியாததால் என்னவென்றே தெரியாததால் அது காற்றில் கலந்து விடுகிறது அந்த காற்றை எல்லாருமே உள்ளிழுப்பதால் யாருக்காவது அதாவது கலை பற்றிய தேடலில் வானத்தைப் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கும் உயிரான ஒன்று அதை இழுத்துக் கொள்வதால் ஒரு புன்னகையில் அக்காற்றை வெளியிடுகிறது அல்லது வேக வேகமாக தாளை எடுத்து எதையும் எழுதவோ வரையவோ துணியாமல் மீண்டும் வானத்தையே பார்க்கத் தொடங்கினால் வேரொரு உயிர் தூரிகையால் வண்ணங்களை குதப்பி அப்புகிறது என்னவென்று கேட்டால் தெரியவில்லை என உரத்துச் சிரிக்கிறது வேறு சில அவ்வுயிரியை நவீனம் என்கிறது. நவீனம் பெருங் குழப்பமடைந்து ஆமாம் ஆமாம் என்று தான் தெரியவில்லை புரியவில்லை எனச் சொன்ன வண்ணங்களுக்கு புது மொழி பெயர்ப்பு செய்கிறது, ஆமாம் எழுத்தைத் தானே மொழி பெயர்ப்பார்கள் இதுயென்ன ஓவியத்தையும் பெயர்க்கிறது. கலை என்பதற்கு வடிவம் எதுவுமில்லை அதுவொரு உணர்ச்சிக் கடல் அது எந்த உயிருக்கும் உண்டு இன்னாருக்கு உண்டு இன்னாருக்கு இல்லை என்று எதுவுமேயில்லை. வரைவதும் எழுதுவது இசைப்பதும் நடிப்பதும் ஆடுவதும் மட்டுமே கலையா. கனவிலும் உணர்வுண்டு கழிப்பறையிலும் உணர்வுண்டு என மேம்போக்காக சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் பொது உயிரிகளிடம் பேசும் போது முகஞ்சுழிக்கக் கூடுமாகையால் இன்னும் கொஞ்சம் விளக்கியும் விலக்கியும் கூறவேண்டியதாகிப் போகிறது. அந்த உயிரி வரைந்த கரிக்கோல் ஓவியத்தை இரண்டு நாள் கழித்து பார்த்துவிட்டு இதை ஏன் வரைந்தேன் என நொந்தது, மீண்டும் ஒரிரு மாதம் கழித்து அதே ஓவியத்தை பார்த்ததும் அதிலுள்ள கோடுகளெல்லாம் தெரிந்தது அட இந்தக் கோடு எவ்வளவு ஒயிலாக திசை மாறுகிறது என்றெல்லாம் தனக்குத் தானே கேட்டுவிட்டு இணையத்தின் ஊடாக சில ஓவியங்களை பார்க்கிறது அங்கேயும் கோடுகளை மேய்கிறது, அப்பாடா என்று இன்னும் சில முகங்களை கோடுகளாக்குகிறது. ஆமாம் எது கலை எது அழகு எது படைப்பு.







புதன், 17 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஏழும் புத்தகங்களும்

ஒவ்வொரு நாளும் வேறு வேறு ஓவிய வகைமைகளை வரைந்து பார்க்க வேண்டுமென்று நேற்று காலையில் ஒரு எண்ணம் விரிவடைந்தது. முகம், முழு உருவம், நோக்குநிலையில் காணும் பொருளை அல்லது இடத்தை வரைவது, அரை மணி நேரத்தில் ஒரு வண்ண ஓவியம் என ஒரு நாளுக்கு ஒன்று என வரைந்து பார்க்கலாம்.

முகத்தை படம் பார்த்து வரைந்துவிடலாம். கற்பனையிலும் அதேபோல வரைந்து விடலாமே என்று தான் மனத்தில் தோன்றும், ஆனால் உண்மை அப்படியிருப்பதில்லை, கண் மூக்கு வாய் காது தாடை நெற்றி என வரைந்து விட்டாலும் அதை முப்பரிமாண எல்லைக்குள் இழுத்துச் செல்லவும் பயிற்சி வேண்டும். இதற்கு மனித முகம் மற்றும் உருவ அமைப்புகள் குறித்த ஓரளவு புரிதல் இருக்க வேண்டும். எல்லாம் இருப்பது போல் இருந்தாலும் அதிலொரு மேதமை வடிவத்தை உருவக்கத் தேவையான அடிப்படை புரிதலை அடைய வேண்டும், அதற்கான தினப் பயிற்சியாக ஒளி நிழல் பிரித்து முப்பரிமாணத்தை குறுகிய கோடுகளில் அழைத்துவரும் முயற்சி.

நேற்று வரைந்த இவ்விரண்டு முகங்களும் கற்பனை முகங்கள் மற்றும் சில அடிப்படை புரிதலுக்கு என்னை ஆட்படுத்திக் கொண்டு ஒளி நிழல் பிரித்துப் பார்த்தேன், அவ்வளவு துல்லியமாக வரவில்லையென்றாலும் சுமாராகவும் வரவில்லை என்பதே எனது எண்ணம். இதே முறையினை வண்ணத்திலும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.





இப்பதிவு எழுதும் சில நிமிடம் முன் வரைந்தது, போன வாரம் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்த போது எதேச்சையாக ஒரு கருப்பு தூவல் (பேனா) கண்ணில் பட்டது (Goldex என்று அதன் மீது எழுதியிருக்கிறது, இதுவரை பார்த்திராத கேள்விப் படாத நிறுவனம்), எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருக்கிறது படம் வரைவதற்கு. எங்கள் வீட்டு அலமாரியில் ஓவியங்களை வைக்க இடம் கொடுத்து கட்டிலில் காத்திருக்கும் கனவான்கள் இப்புத்தகங்கள். தடித்த புத்தகங்களுள் பாகீரதியின் மதியம் மனதுக்கு மிக நெருக்கமான புதினம். பக்கங்கள் அதிகமானாலும் அது கொடுக்கும் பயணம் பேரானந்தம்.



வெள்ளி, 5 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஐந்து இயலோடு

 இன்று இயல் (இளைய மகள்) பள்ளிக்குச் செல்லாததால் தானும் வரைவேன் என தூவலை (பேனா என்று சொன்னால், இல்லப்பா இது தூவல் என்பாள் தமிழில்) எடுத்துக் கொண்டாள், உருவப்படம் ஒன்றை தினந்தோறும் வரைவது போல தொடங்கினேன், அவளும் அதையே வரைவேன் என ஒவ்வொரு கோடாக என்னோடு வந்தாள்.

அவளுக்கு அது சோர்வை தந்தவுடன், எனக்கு பிடித்ததாக வரையலாம்பா என்றவளிடம் நாய் குட்டி வரையலாம் என்று ஒரு பஞ்சு போல் இருந்த குட்டியை தேர்வு செய்து, தொடங்கினோம், என்னப்பா உனக்கு வரையவே தெரியல, என்னைய பாரு அழகா வரஞ்சிருக்கேன் என்று சிரித்தாள். படம் பார்த்து வரைய வேண்டாம் என முடிவு செய்து வலது பக்கமிருக்கும் இரு சின்ன உருவங்கள் அவள் கண்களை மூடிக் கொண்டு வரைந்தவை. இன்னொரு படம் இருவரும் கண்களை மூடி வரையலாமா என்று கேட்டதும் குதூகலமானாள்.


அடுத்த பக்கத்தில் முதலில் அவளும் பின் நானும் கண்களை மூடி வரைந்து பார்த்தோம். அவள் வரைந்ததன் பக்கம் பெயர் எழுதச் சொன்னதும் இயல் என எழுதிய பின் நான் வரைந்ததன் மேல் என்னுடைய பெயரையும் அவளே "பா" வுக்கு துணைக் கால் உண்டாப்பா என ஒவ்வொரு எழுத்தையும் கேட்டு எழுதினாள்.




வியாழன், 4 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு நான்கும் - கல்வியும்

 பொதுவாக நாம் எல்லோரிடமுமே (அரசியல் கட்சியின் பக்தர்கள் தவிர்த்து) அரசாங்கம் பற்றிய ஒவ்வாமையும், அரசின் திட்டங்களை பெற்றுக் கொள்வதிலிருந்து ஒதுங்கும் தன்மையும் இருக்கும். அரசாங்கப் பள்ளியில் படிப்பதற்கு பணம் கட்டத் தேவையில்லையாமே என்று ஒருவர் கேட்டதும் எனக்கு பரிதாபமாக இருந்தது அவரின் நிலையை எண்ணி, இது ஒவ்வாமையில்லை முற்றிலுமாக அறியாமை, அவ்விடம் விட்டு அவர் கிளம்பும் போது அவரது இரு சக்கர வாகனத்தில் காவல் என ஆங்கிலத்தில் எழுதியிருந்ததை கவனித்தேன், பரிதாபம் மேலும் கூடிவிட்டது. இப்பாது அரசு பள்ளிகளில் குழந்தைகள் சேர்வதற்குச் சென்றால் நேரடியாக ஆங்கில வழி வகுப்பிலேயே அமர்த்தி விடுவார்கள் என்றே தோன்றுகிறது, இரு வருடம் முன்னர் ஆங்கில வழியில் அரசு உதவி பெறும் நான் படித்த பள்ளியில் படிக்கும் நண்பனின் மகள் புத்தகத்தை காணும் போது அதிர்ச்சி, ஆங்கிலத்தில் இருப்பதை இப்பிள்ளைகள் வாசிக்க தமிழை ஆங்கிலத்தில் அச்சிட்டிருந்தார்கள், இது என்னடா நம் பிள்ளைகளுக்கு வந்த சோதனை என்று மனம் புழுங்கியது.

இப்பாது அதே போன்ற புத்தகம் கிடைக்குமா என இணையத்தில் தேடிப் பார்க்கிறேன் கிடைக்கவில்லை. நேரடி வகுப்பில் கொடுத்திருக்கிறார்களா எனக் கேட்டுப் பார்க்க வேண்டும்.




நேற்று ஒரு எண்ணெய் வண்ண ஓவியம் தொடங்கியிருக்கிறேன், அதன் முதல் கோட்டு வரைவு கீழே.

தொடர்ந்து இதன் அடுத்தடுத்த வரைவுகளை பகிர்கிறேன்.



செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு -2ம் கொஞ்சம் வாசிப்பும்

நேற்றைய தொடர்ச்சியாக இன்றைய பதினைந்து நிமிட கோட்டு வரைவுகள்.

முகத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க இயலாது என எண்ணிக் கொண்டேயிருந்தது மனது, முழு உருவம் வரைவதில் இன்னும் சிக்கல் இருக்கிறது.




இப்போது ஒரு எண்ணெய் வண்ண ஓவியமொன்றும் வரைந்து கொண்டிருக்கிறேன், அதன் முதல் கோட்டு வரைவும் நிறமும் சரவணன் அண்ணன் (ஆசான்) முடித்துவிட்டு, என்னிடம் அதன் அடுத்த அடுக்கினை வரையச் சொல்லி கொடுத்து மாதம் இரண்டிருக்கும், இன்னும் அப்படத்திலுள்ள தெப்பத்தின் தாமரைகளை வரைய வரைய மாற்றிக் கொண்டேயிருக்கிறேன் முடிந்தபாடில்லை, இந்த வாரத்திற்குள் முடிக்க வேண்டும். இந்த ஓவிய அனுபவம் பற்றி கொஞ்சம் எழுத வேண்டும் என எண்ணமுள்ளது.


வாசிப்பு: போன வாரம் இறுதியில் தொடங்கிய புத்தகம் "கூவம் நதிக் கரையினிலே" பத்திரிக்கையாளர் அல்லது எழுத்தாளர் சோ எழுதியது, அரசியல் நையாண்டி இதுபோல் யாராலும் எழுத இயலுமா என்று தெரியவில்லை. தமிழக இந்திய கட்சிகளையும் திரைப்படம் உருவாகும் விதத்தையும் எள்ளி நகையாடியிருப்பது வாசிக்க வேடிக்கையாகவுள்ளது. துக்ளக் பத்திரிக்கை ரசிகர்களை படு பயங்கரமாக சிரிக்க வைத்திருப்பார் போலத் தெரிகிறது.

திங்கள், 1 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு

ஒவ்வொரு நாளும் எதையாவது வரைய வேண்டுமென்று இருந்தாலும் தொடர் பயிற்சியாக எதையாவது செய்ய வேண்டுமென்று அவ்வப்போது மனதில் எழுதும் போதெல்லாம் அது ஓரிரு நாளில் ஆழ் மனதுக்குள் சென்று படிந்து கொள்ளும்.
இனி...

அதிகப்படியாக பதினைந்து நிமிடத்தில் ஒரு கோட்டு வரைவை முயன்று பார்க்க வேண்டும், இந்த வரைவை மூன்று வகையாக பிரித்து வரையலாம். முதலில் முழு மனித உருவம் இரண்டு அதன் சரியான அளவில் வரைய வேண்டும் (ஒவ்வொரு பதினைந்து நிம்மிடத்திற்கும் ஒரு படம் என்று எண்ணியிருந்தேன், இன்று வரைந்து பார்த்த போது இரண்டையும் இந்த குறிப்பிட்ட நேரத்தில் வரைந்து விட முடிந்தது), அடுத்த பதினைந்து நிமிடத்தில் அப்படங்களை மெருகேற்ற முயற்சி செய்து பார்க்கலாம்.

இரண்டாவது முகம், எவருடைய முகமாகவும் இருக்கலாம் அதே 15 நிமிட நேரத்தில் முடிக்க வேண்டும். மூன்றாவது ஒரு கோட்டு வரைவு சுற்றியுள்ள எதையேனும் நேரடியாக கண்டு வரைதல். இன்று அடுத்தடுத்து வரைய நேர்ந்ததால் கொஞ்சம் பொறுமை இழந்தது போலத் தெரிந்தது, நாளை சற்று இடைவெளி விட்டு வரையலாம் என்று எண்ணுகிறேன்.

இதனால் என்ன பயன் என்பதையும், தோன்றும் எண்ணங்களையும் குறித்து எழுத முயற்சிக்கிறேன்.



வியாழன், 28 ஏப்ரல், 2022

ஓவியம் தொப்புள் கொடி உறவு

 எல்லாருமே வரையக் கூடியவர்கள் தான் ஆனால் அதைத் தொடர்வதில்லை, வரைதல் என்பது தொப்புள் கொடி உறவு போல நம்மாடு பிணைந்து இருப்பதுதான் என்றாலும் அந்த இணைப்பு பற்றிய சிந்தனை நம்மில் பலரிடம் மறைந்து ஒழிந்து கொள்வதுண்டு. சிலருக்கு அதைப் பற்றிய எண்ண ஓட்டங்கள் ஏதேனும் ஒரு வடிவில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். வெளிப்படுதல் என்பது பெரிய பெரிய ஓவியங்கள் தீட்டுவதோ அதை காட்சிக்கு வைத்து பெயர் அறியச் செய்வதோ அல்ல. யாரிடமோ அலைபேசியில் பேசும் பொழுதில் எவ்வித புற அழுத்தமும் இன்றி காகிதமொன்றில் கிறுக்குவது கூட ஒரு வகையான வெளிப்பாடு என்றே கருதலாம்.

இந்த கிறுக்கல்கள் அளிக்கும் நம்பிக்கை வரைதல் நோக்கிய அடுத்த தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லலாம் அல்லது இப்படி கிறுக்குவதே ஒருவித வெளிப்பாடாகி அதில் பல்வேறு முயற்சியை அலைபேசியில் பேசாத  வேறொரு தனிமை பொழுதில் உருவாக்கிப் பார்க்கும் எண்ணமும் ஏற்படலாம். இதற்கு எல்லையில்லை.

ஒருவேளை அடுத்த கட்ட நகர்வு ஒன்று அமைய நேருமானால் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை எப்படி மதிப்பீடு செய்வது, எப்படி வரையத் தொடங்குவது என்ற கேள்விகள் எழும். இதற்கு ஒரே விடை முறையாக ஒரு ஆசானிடம் பயிற்சி பெற்றுக் கொள்வதேயாகும். இன்றைய காலம் நமக்கு அள்ளிக் கொடுக்கும் தகவல்கள் ஏராளம், அவையெல்லாம் முறையாக ஒழுங்கு படுத்தப் படுமானால் அதைவிடப் பெரிய ஆசான் இருக்க இயலாது,  ஆனால் இவ்விடம் நமது பலகீனம் ஆற்றல் மிக்கதாக ஆகிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பதால் பலம் வலுவிழந்து விடலாம்.

செவ்வாய், 29 மார்ச், 2022

வலி - விமலாதித்த மாமல்லன்

ஒரு சிறுவனின் பார்வையில், அவனுடைய சென்னையிலுள்ள தாத்தாவை காணப் போகும் பயணத்தை எண்ணி குதூகலித்து தன் பக்கத்து வீட்டு அக்காவிடமும் தன் நண்பனிடமும் பகிர்ந்து மகிழ்பவனுக்கு அப்பாவிடமும் அம்மாவிடமும் அக்குதூகலத்தை காணாதது கண்டு வியப்பிற்கும், தனக்குள் எழாத அல்லது எழுந்த விசாரணைக்கும் பதிலாக தனது தாத்தாவை காண்பதே கதையின் முடிச்சு.

பயணம் என்றதும் சிறுவர்களுக்கு ஏற்படும் குதூகலமும், அதனை தனது பக்கத்து வீட்டு உறவுகளுக்கு தெரிவித்து பெருமையடித்துக் கொள்வது. சன்னல் வழியாக நண்பன் வீட்டை எட்டிப் பார்ப்பதும், அக்காவிடமான உரையாடலும் அவள் அன்பின் வெளிப்பாடாக இவனுக்கு கிடைக்கும் முத்தமென அழகியல் வடிவங்களுக்கு அப்பால் தலைப்பை சுமந்து நடக்கும் கதை எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் வலி சிறுகதை. 

இதற்கு பிறகு அச்சிறுவன் தனது தாத்தா பற்றிய பிம்பத்தை எப்படி மறு கட்டமைப்பு செய்வான்அத்தை பற்றிய எண்ணங்களை எப்படி வடித்துக் கொள்வான் என்பதில் மனம் சற்று மௌனித்துக் கிடக்கிறது.






ஞாயிறு, 12 டிசம்பர், 2021

இரு கண்கள்

நேற்றைய வகுப்பில் எதிர்பாராத விதமாக ஒரு கருப்பு வெள்ளையில் பெண் ஓவியம் வரைய பயிற்சி சொல்லித் தரத் தொடங்கினார் ஆசான். காலதாமதமாக இணைந்ததால் வேக வேகமாக கருப்பு மசியினால் அளவுகளை குறித்துவிட்டு அவரைப் பின் தொடர வேண்டியிருந்தது. சமயத்தில் நம்மையும் அறியாமல் கீறப்படும் கோடுகள் சற்று சிறப்பாகவே வந்துவிடுவதுண்டு. ஓரளவு திருப்தி தரக்கூடிய அளவுகளை குறித்திருந்ததால் அடுத்து ஒளி நிழல் பிரிக்க அவ்வளவு கடினம் தெரியவில்லை, இருந்தாலும் படத்தின் சிறு பகுதியை வரைய இடமில்லாமல் போனது வருத்தம். இருப்பதை ஒழுங்காக்கிக் கொள்வது என்ற எண்ணத்தில் தொடர்ந்ததும் அவரோடு சேர்ந்தே வரைய முடிந்தது.



              நேற்று அவர் கூறியதற்கிணங்க பின்புலத்தில் என்ன வரையலாம் என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. கோயில் தூண், படிக்கட்டு, செடி என கட்டங்கள் விரிந்தாலும் வெறுமனே இலைகளை தீட்டி பின் இரு செம்பருத்திப் பூவினை வரைந்து விடலாம் என்று மதியம் அமர்ந்து முடித்ததும். அடுத்ததாக கண் மூக்கு வாய் இவற்றையெல்லாம் தனித்தனியாக வரைந்து பழக வேண்டுமெனெத்  தோன்றியது, அடுத்த வாரத்தில் இதைச் செய்து பார்க்க வேண்டும்.



இது தவிர நோக்கு முறையில் எதையேனும் செய்தாக வேண்டும் என்பதில் இந்த வாரம் எனது கையை அக்ரிலிக் வண்ணத்தில் வரைந்து பார்த்தது கீழே.


ஞாயிறு, 5 டிசம்பர், 2021

முடிவு முடியாதது

                             இந்த வாரமும் வண்ணத்தை பயன்படுத்தி ஏதேனும் செய்தேனா என்றால், ஆம் கொஞ்சம் முயற்சித்திருக்கிறேன் என்றே பார்க்க முடிகிறது. போன வார வகுப்பில் மாட்டு வண்டியை மையமாக வைத்து ஓவிய படைப்பு ஒன்றை உருவாக்க வேண்டிய சவால், மாட்டையும் வண்டியையும் வரையும் வரை அதற்கப்பால் என்ன வரைந்து முழுமையாக்குவது என்பது மனதில் ஓடிக் கொண்டிருந்தாலும், வண்ணம் பற்றிய பயம் வேறு தொற்றிக் கொண்டது. மாட்டின் வண்ணம் வெள்ளையா, மஞ்சள் அல்லது பச்சை கலந்த வெள்ளையா என ஊடாடிய மனது வண்ணத்தில் கை வைத்ததும் மஞ்சளை தெரிவு செய்து வெள்ளையில் குறைவான அளவு கலந்து பூசத் தொடங்கியதும் இதுவல்ல சரியான வண்ணம், ஒருமுறை இதை பூசிவிட்டு பின் மாற்றிக் கொள்ளலாம், இதுவும் அதுவும் கலந்து நிறைவான நிறங்கள் வந்து சேரும் என்றொரு எண்ணம்.


                 அன்றைய வகுப்பிலேயே முடிக்க இயலவில்லை மறுநாள் காலையில் நேரம் ஒதுக்கி முடிக்க இயன்றது. அத்தனை துல்லியமாக வரவில்லையென்றாலும் பரவாயில்லை ஓரளவு வண்ணத்தில் படம் தெளிவாக வந்தது மகிழ்ச்சிதான்.

                 கடந்த வாரம் சொன்னது போல தொடர்ந்து தினமொரு உருவப் படங்களை வரைகிறேன், இது நேரடியாக தூவல் (பேனா) கொண்டு வரைவதால் கோடு பற்றிய பயம் தெளியத்தொடங்குகிறது, ஆரம்பத்தில் இப்படி தினந்தோறும் ஏதேனும் பொருளைப் பார்த்து நேரடியாக வரையும் பொழுதில் ஒற்றைக் கோட்டை பயன்படுத்தாமல் பல கீறல்களுக்கு பின்னே படத்தை நிறைவு செய்திருப்பேன் (https://pandianinpakkangal.blogspot.com/2021/11/Oviyangal.html). பொருள் பார்த்து வரைவதை தினப் பயிற்சியாக செய்து வந்தது இப்போது உருவப் படம் வரைவதால் நின்று போய்விட்டது, ஆனால் நிறுத்துவது நல்லதல்ல என ஒரு சிறு பொறி தட்டியது இந்த வார நாட்களில், தொடர்ந்து இதையும் சேர்த்தே செய்ய வேண்டும்.






                      வாரம் ஒரு முகமாவது வண்ணத்தில் தீட்டி பார்ப்பது நல்ல பயிற்சியாக இருக்கும், இது மிக மிக சொற்பமான எண்ணிக்கை (எண்ணிக்கை என்று சொல்லவே கூச்சமாக இருக்கிறது), அதிகரிக்க வேண்டும். நேற்று எதுவும் சிறப்பாக வரைந்து விட முடியவில்லை இன்று முடித்த ஓவியத்திற்கான அடிப்படை கோடுகளைத் தவிர. மழை நாட்களில் வெளியில் செல்ல இயலாமல் போனதால் பல்லாவரம் பூங்காவுக்கு கட்டாயம் செல்ல வேண்டிய நிலைக்கு குழந்தைகள் தள்ளியதால் அங்கு சென்று சில கிறுக்கல்கள் மட்டுமே வாய்த்தது.




                     இன்று மதியம் அமர்ந்து தோராயமாக நான்கு மணி நேரத்தில் தீட்டி முடித்த பெண்ணின் முக ஓவியம் தொடக்கத்தில் தடுமாறவைத்தது, வேறென்ன வண்ணம் தான் பூச்சாண்டி காட்டுகிறது. ஆனால் முதல் முறை பூசும் பொழுது இருந்த கலக்கம் இரண்டாவது முறையில்லை. சோதனைதானே எல்லாம் என்ற எண்ணம் தொடர்ந்து நிறங்களை குழப்பி அப்பிவிடச் சொன்னது, போதுமைய்யா கரிக்கோல் மட்டுமே பயன்படுத்தி வரைந்து விட்டு போயிரலாமென இன்றும் தோன்றியதில் வியப்பேதுமில்லை, ஆனால் அதற்காக விட்டு விட முடியுமா. தூரிகையை கீழே வைத்து விட்டு தூரமாக சென்று சில நிமிடம் பார்த்துவிட்டு பின் வரைய உட்கார்ந்ததும் தூரிகை நிறங்களை பரப்புவதை கவனிக்கத் தொடங்கி ரசனை வளரத்தொடங்கியது. முடிவு முடியாதது.

அக்ரிலிக் ஓவியம் (Acrylic Painting)


வரும் வாரம் முதல் ஒரு ஓவியரை பற்றிய சிறு குறிப்பையும் அவர்களது ஓவியம் தரும் அனுபவத்தையும் பகிரலாம் என்றிருக்கிறேன்.

ஞாயிறு, 28 நவம்பர், 2021

வண்ணங்களை அப்பிக்கொள்ளுதல்

இந்த வருடத்தின் ஆரம்பம் தொட்டு ஆசானின் பயிற்சி போக நானாக தீட்டிய வண்ண ஓவியம் என்பது மிகக் குறைவு.

இருமுறை எண்ணெய் வண்ணங் கொண்டு வரையத் தொடங்கியதை முடிக்க இயலவில்லை. இதனாலோ என்னவோ மனம் அக்ரிலிக் பக்கம் தாவிச் சென்றது. வாரம் ஒரு வண்ண ஓவியமாவது வரைய வேண்டுமென முடிவெடுத்து ஒரிரு மாதங்கள் ஆனாலும், அதற்கான வேளை கிட்டியது கடந்த வாரத்தில் தான்.




ஒரு ஆரஞ்சுப் பழத்தை மேசையில் வைத்து நேரடியாக வரைந்து பார்க்கலாம் என்று தொடங்கினேன். அதிக நேரம் செல் அல்லது கணினியில் பார்த்து வரையும் போது இருக்கும் கண் சோர்வு நேரடி நோக்கு முறையில் இருப்பதில்லை, மேலும் ஓளி நிழல் வேறுபாட்டையும் நன்கு உணரமுடிகிறது. சில நாட்களுக்கு முன் இயல் அவளுடைய காலணியை வரைந்து தரும் படி கோரினாள். எதிர்பார்த்திராத அளவு வண்ணங்களும் வடிவமும் வெளிப்பட்ட விதம் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது, அனேகமாக அன்றுதான் வாரம் ஒருமுறையாவது நேரடியாக பொருளைப் பார்த்து வரையலாம் என்றொரு எண்ணம் என்னுள் விழுந்திருக்க வேண்டும்.




பின்னொரு நாள் நண்பர் ஓவியர் கோபி, ஓவிய வகுப்புக் குழுவில் நேரடியாக பொருள் ஒன்றை பார்த்து தூவல் (Pen) கொண்டு தினமும் வரையும் படங்களை பகிர்ந்திருந்தார். அவரோடு இணைந்து வரைந்ததை கடந்த பதிவில் (https://pandianinpakkangal.blogspot.com/2021/11/Oviyangal.html) பகிர்ந்திருக்கிறேன். இப்போது தினமும் ஒரு முழு மனித உருவப் படம் வரைந்து கொண்டிருக்கிறோம்.




நேற்று ஒரு மனித முகத்தை அக்ரிலிக் வண்ணத்தில் வரைய முயற்சி செய்து அதன் பின் கைவிட்டு விட்டேன், இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்து தீட்டினால் சரியாக வந்திருக்க வாய்ப்பிருந்தது தான் என்றாலும் எனக்கு மனமில்லை அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு. மூன்று நாள் முன் ஏற்கனவே கரிக்கோல் கொண்டு வரைந்த குழந்தையின் படத்தினில் வண்ணங்களை அப்பி விடலாம் என்று மதியம் ஆரம்பித்தேன். முகத்தின் சரியான தோல் நிறத்தை அடைவது அவ்வளவு எளிதானதில்லை என்பதே ஒரு சில வண்ணக் கலப்பில் சோர்வடையச் செய்துவிடுவதுண்டு. "எண்ணெய் வண்ணத்தை கையாள்வதே தனித்திறமை தான் அதற்கு நிறைய வண்ணங்கள் பற்றிய புரிதல் வேண்டுமென" ஆசான் சொன்னது அடிக்கடி வண்ணக்கலவை செய்யும் பொழுதில் நினைவுக்கு வரும், இதுவரை இரண்டு படங்களை முடிக்க இயலாமல் ஒதுக்கியிருக்கிறேன், அழிவிற்கு அப்பாலே ஆக்கங்கள் என்றொரு சொல்லடுகிறது மனதில்.




இந்த குழந்தையின் முகத்திலும் ஒளிப்படத்தில் உள்ளது போன்ற நிறத்தை தீட்ட இயலவில்லை, ஆனாலும் ஒளி நிழல் பிரித்து  வண்ணங்களை அப்பியிருந்தது ஓரளவு நிம்மதியையும் அடுத்த படத்திற்கான உற்சாகத்தையும் அளித்திருக்கிறது.

திங்கள், 17 மே, 2021

ஒளிநிழலின் மாயம்

 மொத்தம் ஆறு மணி நேரம், மூன்று நாளாக மெல்ல மெல்ல சிக்கிய பொழுதில் வரைந்து முடித்தேன் இந்த வாரத்திற்கான ஓவியர் ரெம்ப்ரான்டினுடைய தன்னுருவப் படம். எந்த வண்ணம் பயன்படுத்துவது என்ற குழப்பம் இருந்து கொண்டேயிருந்தது, நீர் வண்ணமா, எண்ணெய் வண்ணமா, அக்ரிலிக் வண்ணமா என்ற பெரும் யோசனைக்குப் பின் அக்ரிலிக் பயன்படுத்தலாம் என்ற முடிவில் ஏற்கனவே வெள்ளை ப்ரைமர் அடித்து தயாரக வைத்திருந்த பெரிய அளவு கெட்டி அட்டைத் தாளில் அடிப்படை கோடுகளை வரைந்ததும், சிவப்பில் வெள்ளை கலந்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தை துரத்தியடித்தது அப்படியொரு கலவையை பூசத் தொடங்கியதும், பிறகு தான் மஞ்சளை வெள்ளையுடன் கலந்து பரப்பினால் ஓரளவு ஏற்கக்கூடிய வண்ணத்தை காண முடிந்தது, இப்போது வைத்திருக்கும் பன்னிரண்டு வகை சிறுசிறு வண்ணக் குழல்கள் போதாது, முதன்மை வண்ணங்கள் அதிகமாக தேவை என்பதை. உணர்த்தியது.


பதினேழாம் நூற்றாண்டின் முக்கிய ஓவியர்களில் ஹாலந்தைச் சேர்ந்த ரெம்ப்ரான்ட் மிகவும் கவனிக்கத் தக்கவர், இவரது ஒளி நிழல் சார்ந்த உருவப்படங்களை மேலோட்டமாகக் காண்கையில் குறிப்பிட்ட வண்ணங்களுக்குள் அடக்கிவிடும் கண்கள் அதை நெருங்கி அணுகும் போது, இவரது தூரிகையின் தீற்றல் காட்டும் வண்ணங்களை கண்டு மனம் பூரிப்படையச் செய்கிறது. மனிதர்களை அவர்கள் சார்ந்த சூழல்களை வரைவதை விரும்பிச் செய்தவர். 


இவரது வாழ்வையும் படைப்புருவாக்கத்தையும் திரைப்படமாகக் காண கீழுள்ள தொடுப்பில் சென்று காணலாம்.

https://archive.org/details/Rembrandt

ரெம்ரான்ட் பற்றி சிறு காணொளிகள் தொகுப்பு

https://youtu.be/xxn6dAp1DuU



திங்கள், 10 மே, 2021

ஓவியர் ஆதிமூலம்

சிறுபிள்ளையில் எவருக்குமே உள்ள தன்மையோடு கையில் கிடைக்கும் எழுது பொருள் வழியே கோடுகளை கிறுக்கும் தனது ஆர்வத்தை அடுத்தடுத்து நகர்த்தும் எண்ணத்தில் மளிகைக் கடையை புறந்தள்ளி சென்னைக்கு பயணித்தவர் ஓவியர் ஆதிமூலம். பி.எஸ். செட்டியார் என்பவரது வழிகாட்டலில் சிற்பி தனபால் அவர்களை அடைகிறார். இவரது வழிகாட்டலில் ஓவியக் கல்லூரிக்குள் நுழையும் ஓவியர், பயிலும் காலத்திலேயே தனக்கென தனி பாணியை உருவாக்கி அதில் தொடர் பயணம் செய்தது போல புரிந்துகொள்ள முடிகிறது.

கோட்டுச்சித்திரங்களில் இவர் நிகழ்த்தியிருக்கும் நிழல் ஒளியில் கிட்டும் அதிகமான இருளுக்குள் மிளிரும் ஒளி, ஓவியத்தை காணும் பொழுதில் உள்ளிழுத்து நகரவிடாமல் செய்துவிடுகிறது. தத்ரூபமான படங்கள் தீட்டியிருக்கிறாரா எனத் தேடியதில் ஒரு பெண்ணின் முகம் தவிர்த்து எதுவும் கிடைக்கவில்லை. கோடுகளிலிருந்து வண்ணக் கலவை புரியும் அரூப ஓவிய முறைக்குள் சென்று தனது படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். இவரது சில படைப்புகளை "ஆதிமூலம் அழியாக் கோடுகள்" என்ற புத்தகத்தில் வெவ்வேறு ஆளுமைகளின் கட்டுரைகளோடும், பத்திரிக்கைகளில்  வெளிவந்த இவரது பேட்டிகளோடும் வெளியிட்டிருக்கிறார்கள்.

பயிற்சிக்காக இவரது இரண்டு ஓவியங்களை வரைந்து பார்த்ததில் இதுவரை செல்ல மறுத்த இருளுக்குள் சென்று மீண்ட உற்சாகமொன்று தோளில் செல்லமாக தட்டிவிட்டது.

காணொளி வடிவில்


சனி, 23 மே, 2020

கோபுரம் - விமலாதித்த மாமல்லன்

குருட்டு ஓவியனைப் பற்றிய சிறுகதை, வாசித்து முடித்ததும் யதார்த்தம் தொலைந்த கதையாகப்பட்டது ஆமாம் யதார்த்தத்தில் என்ன இருக்கிறது என கதையை உள்ளுக்குள் ஓட விட்டால், இதுவொரு கலைத் திருட்டு பற்றியதான கதையோ என்றும் கலை மதிப்பு என்ற கோணத்திலுமான கதையாகவும் புரிந்துகொண்ட பின். 

கண்களற்ற அவனின் கைகள் செய்யும் வித்தை ஆழ்மனத்தின் துடிப்பாக அங்கே மாயம் நிகழ வழி ஏற்படுகிறது, அந்த சிற்றூருக்கு இவன் செல்வதும் அங்குள்ள கோவில் கோபுரத்தின் எதிர்கால நிகழ்வை சித்திரமாக்கி அதற்காக அடி உதை வாங்கும் எளிய கலைஞன், இங்கு எளிய என்ற சொல்லை பயன்படுத்தவே கூச்சமாக உள்ளது, அவனது உருவகத்தை எழுதியிருக்கும் விதம் எளிமைக்கு எவ்விதத்திலும் சமமானதில்லை, மாறாக அதனினும் கீழ்மையானது. ஆனால் இவனது உள்ளம் கலையைத் தவிர தன் ஆழ்மனம் தவிர்த்த எதையும் துச்சமாக எண்ணுபவையானதா, வரைந்த அவனது கரிக்கோடுகளின் மீது வீசியெறியப்படும் காசுகளை தேவையற்றவையாகவே எண்ணி விலகிப்போகிறான், மக்களிடம் கலை பற்றிய எண்ணவோட்டம் கிஞ்சித்தும் இல்லாதது போலவே இவனுக்கும் அவர்களின் மதிப்பான பொருட்கள் மீது பற்றில்லை.

பிளவுபட்ட கோபுரத்தை வரைந்ததும் அதை அழித்துச் சென்ற கால்களிலிருந்து அவனது கரித்துண்டின் சாயம் விலக மறுக்கிறது, கதைக்குள் இதுவொரு படிமமாக பலமானதாக ஒட்டிக் கொள்கிறது, மக்கள் அவனையும் அவனது கலையையும் சிந்தனையையும் புறந்தள்ள எத்தனித்தாலும் அது விலகிவிடுவதில்லை அவர்களின் மனத்திலிருந்து, கதை முடிக்கப்படும் இடமும் இதைத் தெளிவாக நிகழ்த்துகிறது.

கோபுரத்தில் மாற்றலுக்குள்ளான சிற்பமொன்று வெளிநாட்டில்  கோட்டோவியமாகி ஏராளமான விலைக்கு விற்பனையாகிறது, இந்த ஓவியம் உருவானது எதன் விளைவு என எண்ணினால், கோபுரம் தரையில் ஓவியமாக விரிந்தபோது அதனை தங்களது ஒளிப்படக் கருவியில் நகலெடுத்த வெளிநாட்டுப் பயணிகள் முன் நிற்கிறார்கள். இந்த இடத்தில் கலைத் திருட்டிற்கான சாத்தியமிருக்குமோ எனத் தோன்றுகிறது. இருந்தும் கலைஞனை காப்பாற்றும் இடத்தில் இவர்களின் கெஞ்சலும் உடல் மொழியும் மேற்சொன்ன திருட்டு விளைவை மறுத்தாலும் அது நிகழ வேறுபல வழிகள் இருப்பதாகத்தான் புலப்படுகிறது. 

இந்த கதையின் கூறுகளை யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடிய போது, எம்.எஃப். உசேனை மதவாதிகள் துரத்தியதை அடியொற்றி எழுதியதாக ஒருவர்  குறித்துள்ளார்.

ஒரு ஓவியனைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ கதையின் போக்குக்குள் இயல்பாக நுழைந்துவிட்ட மனம் பார்வையற்றவன் எப்படி வரைகிறான் என்றும் உழன்றது, பார்வையுள்ளவனை விட இவர்கள் நுட்பமானவர்கள் என எண்ணும் பொழுது கதையின் மாயம் மெல்ல விலகப் பார்த்தாலும் விலகுவதில்லை.

ஞாயிறு, 17 மே, 2020

சைகை

கடந்த ஒரு மாதமாக சைகை (Gesture) ஓவியங்கள் வரைய பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறேன், இதற்கு முன்னாலும் இப்படி முயற்சித்து சோர்வு தட்டியதும் அதை விட்டு ஓடி ஒழிந்திருக்கிறேன். அஜந்தா ஓவியப் பள்ளியில் பயிலுகையிலும் கூட கடனே எனக் கோடுகளை வரைந்து பயிற்சி மாதிரியாக அனுப்பியிருக்கிறேன், அதனளவில் அது நிறைவைத் தந்தாலும் ஒரு கற்பனைச் சித்திரத்தை வரைய சைகையை வரைந்து பழகுதல் மிக முக்கியமாகப் படுகிறது.

ஒரு முறை ஊர் செல்வதற்காக எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்த போது, தண்டவாளத்தின் மறுபுறம் அதாவது எனக்கு எதிர்புறம் பணியாளர் ஒருவர் அமர்ந்திருந்தார், அவரது நிலையான தோற்றம் வரையுதலுக்கான உந்துதலை அளித்தது என்றாலும் அவரது முகத்தைக் கடந்து கோடுகள் நீள மறுத்தன, அவரது முகம் தெளிவாகத் தெரியவில்லையானாலும் எனது எண்ணம் முழுவதும் அவரது முகத்தை வரைந்துவிடும் நோக்கத்திலேயே குவிந்திருந்தது. (அவர் அமர்ந்திருந்த காட்சியை இப்போது நினைவிலிருந்து பார்க்கிறேன் சற்று குனிந்து தன் செல்பேசியை உற்றுப் பார்க்கும் உருவம் அதோடு கையில் பணிக்கான கம்பியில்லா தொடர்புக் கருவி) சிறிது நேரத்தில் அவ்வெண்ணத்தைச் சிதறடிக்கும் வண்ணம் தண்டவாளத்தினை வண்டியொன்று ஆக்கிரமிப்பு செய்ததும் அதனை வரையத் தொடங்கினேன். ஏன் இப்படியென்றால் அந்த நாள் வரையில் முழு உடலையும் சிரத்தையோடு வரைந்து பார்த்திராத அல்லது காண விருப்பமில்லாத மனநிலை என்றோ கூறலாம். இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்.





ஓர் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஓவியக் கண்காட்சி திறந்தவெளியில் நடைபெற்றது, அதற்கு முந்தைய வருடங்களில் நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை ஆனால் அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழவில்லை. நான் சென்ற அந்த இரண்டில் முதல் ஆண்டில் ஓவியர் ஜோதி நீர்வண்ணத்தில் எல்லோர் முன்னாலும் வரைந்து காண்பித்தார், அதுவொரு நிலக்காட்சி பசுமையான நிலவெளியின் நடுவே ஒத்தையடிப்பாதையில் பெண்ணொருத்தி சிவப்புச் சேலையில் தன் வீடு நோக்கிச் செல்கிறாள், ஓவியத்தில் தூரமாக வீடும் இருந்ததாக ஞாபகம். அந்தப் பெண்ணை வரைகையில் அவர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை, ஒரு சிறு வட்டம், அதிலிருந்து கீழ் நோக்கி வளைவாக எதிரெதிர் திசையில் சீராக ஒன்றையொன்று இடையில் மோதிப் பிரியும் இரு கோடுகள் பின் வண்ணமிடுகையில் அதை அவளாக மாற்றிவிட்டார், விந்தை. இல்லையென்றால் இப்போது நினைவில் வருமா.

இன்று சைகை கோடுகளை வரைந்து கொண்டிருந்த பொழுதில் அவரின் கோடுகள் நிழலாடியது.





சனி, 11 ஏப்ரல், 2020

கொரோனா காலம்


கடந்த வருடம் சனவரியில் வாங்கிய ஏ3 அளவிலான 50 பக்கங்களைக் கொண்ட ஒவிய ஏட்டினை போன வாரம்தான் முழுவதுமாக பயன்படுத்தி முடித்தேன். எவ்வளவு குறைவாக வரைந்திருக்கிறேன் என எண்ணிக் கொண்டிருகிறேன். சென்ற வாரம் வாட்சப்-ல் ஒவியம் வரைய நண்பர்களை அவர்களது படங்களை அனுப்பக் கோரியும் முதல் ஐந்து படங்கள் கரிக்கோல் ஓவியமாக்கப்படும் என்ற நிலைத்தகவல் ஒன்றை பதிவிட்டேன், அதன் படி முதல் ஐந்து படங்களை வரைந்து ஏட்டினை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டேன்.

மார்ச் மாதம் அவசரப் பயணமாக ஊருக்குச் செல்கையில் புதிதாக வாங்கிய ஏ4 அளவும் 50-பக்கங்களும் கொண்ட ஏட்டினை தொடர்வண்டியிலிருந்த சில முகங்களை கோடுகளால் கிறுக்கினேன். இதோ பாதி புத்தகத்தினை கிறுக்கித் தள்ளிவிட்டேன் இவை சொற்பமே ஆனாலும் என்னைப் பொறுத்தவரையில் சிறப்பானதும் கூட, ஊரடங்கு முடியுமுன் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன், அப்படியாகிவிட்டால் நீர்வண்ண ஓவியம் வரையும் காகிதங்களையும் தூரிகைகளையும் கையிலெடுக்க வேண்டியதுதான், ஆனால் அது அத்தனை எளிதல்ல இரு சிறு பெண்களை வைத்துக்கொண்டு, வண்ணங்கள் அவர்களை ஈர்த்துவிடும்.

பேரமைதியில் வாசிக்க ஏதுவான சூழலை காலையில் ஏற்படுத்திக் கொண்டு குழந்தைகளின் விடியலுக்கு முன் சில பக்கங்களை வாசித்துவிட முடியும், அப்படிச் சில நூல்களை இந்த நாட்களில் வாசித்து முடித்திருக்கிறேன். கடந்த வருடம் என்ன என்ன வாசித்தேன் என எந்த பட்டியலும் வரிசைப் படுத்தவில்லை ஆனால் இந்த வருடம் அப்படியில்லாமல் கொஞ்சம் தீவிரமாகவே தலைப்புகளை “GOODREADS” உதவியோடு வரிசை படுத்தி வருகிறேன், எனக்கென்னவோ இந்த வருடம் புனைவுகளை நோக்கியே மனம் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது, என்னை சுய பரிசோதனை செய்ய ஏற்ற காலமாக இந்த வருடத்தை பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன். இத்தோடு அமேசான் கிண்டில் செயலி வழியாகவும் சில நூல்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழ் எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை இலவசமாக பதிவிறக்க அனுமதியளிக்கிறார்கள் அல்லது இப்பொழுதுதான் எனது கண்களுக்கு அகப்பட்டிருக்கிறது, எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் இதற்கு முழுமுதற் காரணம் என அவரது முகநூல் பதிவுகளால் அறிய முடிகிறது.

எழுத்தாளர் செல்வேந்திரன் எழுதியிருக்கும் வாசிப்பது எப்படி என்ற புத்தகத்தை நேற்று தொடங்கி இன்று நியாவிலைக் கடையில் பொருட்கள் வாங்க தனிமனித இடைவெளி விட்டு நின்று கொண்டிருக்கையில் இப்புத்தகத்தின் பெரும் பகுதியை கிண்டிலில் வாசித்து விட்டேன், மாலையில் குழந்தைகள் மச்சிக்கு சென்று விளையாடும் நேரத்தில் மீதமிருந்த பக்கங்களையும் முடித்துவிட்டேன், இன்னும் நிறைய புத்தகங்களை கிண்டில் நூலகத்தில் பதிவிறக்கியும் விட்டேன். இனி வாசிக்கும் பசியோடு இருப்பதைத் தவிர வேறென்ன.