பக்கங்கள்

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

கனவுகளை வரைந்தவன்


கனவுகளின் கீற்றினை ஓவியமாக்கிய மீயதார்த்தவாதி "சல்வோடார் டாலி"யை காகிதத்தில் கரிக்கோல் கொண்டு வடித்தது.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

அப்படியாண்ணே

என்ன தம்பி பிள்ள நல்லா வளந்துட்டா போலுக்கு, பள்ளியோடத்துல கிள்ளியோடத்துல சேத்துவிடலாம்லா

இப்பதாம்ணே ஒன்றரை வயசாவுது

அது சரிப்பா இந்த "ஃப்ளே ஸ்கூல்"ங்கானுவள அதுல கிதுல

ஃப்ளே ஸ்கூல்னா என்னண்ணே

அதுவந்துடே ஏதோ "கலர் டே"வாம் அன்னைக்கி மாத்திரம் எல்லா பிள்ளியளும் ஒரே கலருல சட்ட போட்டுக்கிட்டு போறதும் கேக் வெட்டி பொறந்தநாள் கொண்டாடுததும் மாதிரி தெரியுதுப்பா.

ஓகோ அப்படியாண்ணேன்...

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

கனவுராட்டினம் - படைப்பாளிக்கொரு கடிதம்

வணக்கம் மாதவன்,

எனக்கு கனவுகளை பிடிக்கும் அதைக்கண்ட அன்றைய பொழுது எப்படி குதூகலமாக இருக்குமோ அப்படித்தான் உணர்ந்தேன் கனவுராட்டினம் வாசிக்கும் போதும். புதினம் தொடங்கியதும் எடுக்கும் வேகம் அது முடியும் வரை குறையவேயில்லாமல் ஊடாடுகிறது, வழுக்கிக்கொண்டோடுகிறது.
ஒரு புதினம் வாசிப்பவனின் உள்ளத்தையும் எண்ணத்தையும் என்ன செய்யவேண்டுமோ அதைத் தாராளமாக செய்கிறது.

இறுதியில் சுந்தர் என்பவன் அவனே அல்ல வேறொருவன் என நம்பவைக்கப்படும் பொழுதில் வாசிப்பின் இடையே புனைவை அசைபோட்டபோது தோன்றிய இரண்டு வரிகளை மீண்டும் ஒருமுறை உச்சரித்தேன். 

"இந்த இருக்கையில் நான் இல்லை எனது கனவு இருக்கிறது அதேயிருக்கையில் எதிரில் அவர் எனும் அவரது கனவு இங்கு இருக்கை என்பது யாருடைய கனவு."

வாழ்த்துகள் மாதவன் தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியில் "2o11" என அச்சாகியிருக்கிறது அது "2011" ஆக இருக்குமோ என்ற கற்பனையில் இரண்டுக்கும் அனுப்பியிருக்கிறேன் அது உங்களைச்சேருமா இல்லை நீங்களே ஒரு கற்பனை உருவமா என எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்..... 
ஜெ.பாண்டியன்
PANDIANINPAKKANGAL.BLOGSPOT.COM

இதை பதிவிடும் பொழுதில் "2011" என முடியும் மின்னஞ்சல் தவறு என பதில் வந்துவிட்டது.

வியாழன், 27 ஜூலை, 2017

சித்திரங்களில் விசித்திரங்கள் - வாசிப்பு

வெர்மரின் ஓவியங்கள் பற்றிய கட்டுரையை வாசிக்கும்முன் "Girl with s pearl earring" திரைப்படம் பார்த்துவிட்டு சிறு குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன்.
http://pandianinpakkangal.blogspot.com/2017/07/Girl-With-A-Pearl-Earring.html?m=1

பிக்காசோ, லியோனார்டோ, பால் காகின், செசான், ஃப்ரைடா, வான்கா, ரெம்ராண்ட், டாலி என ஓவியர்களை அறிமுகம் செய்து அவர்களின் ஓவியங்கள் வழி பிறந்த திரைச்சித்திரங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் ஒளியினையும் ஓவியங்களை பற்றியுமான பரிதல்களுக்கு உதவுகிறது.

இந்திய ஓவியர்களின் வாழ்வில் எம்.எஃப் உசேனின் வாழ்கை புத்தகமாக வந்திருக்கிறது. அதுபோல் இன்னும் எத்தனையெத்தனை ஓவியர்களோ அவர்களை அறியவும் சமகாலத்தைய படைப்புகளையும் அறிந்துகொள்ள மறைவான உந்துதலை அளிக்கிறது புத்தகம்.

திங்கள், 24 ஜூலை, 2017

ஊரோடு ஒத்து வாழாதே சிலநேரங்கள் மட்டும்

இன்று திங்கள் கிழமை வார விடுமுறைக்குப்பின் அலுவலகத்தின் நெடியடிக்கத் துவங்கும் நாள், வீட்டில் தொடர் நாடகங்களின் பேயாட்டம் மட்டுமே பிரதானம் பிக்பாஸ் என்றால் அது என்ன என கேட்பவர்கள் தான் அம்மாவும் மனைவியும் திரைப்பட நடிகர்களை அதிகம் அறியாத அம்மா அதை பார்பதற்கு ஆவல் கொள்ளமாட்டாள் என்பது ஒருபக்கமிருந்தாலும் பக்கத்துவீட்டு அக்காள்கள் அந்நிகழ்ச்சி பற்றி இன்னும் ஏதும் பேசவில்லை என்று நினைக்கிறேன் இல்லையென்றால் என்னிடம் கேட்டிருக்க வாய்ப்புண்டு. என்னிடம் கேட்டால் மட்டும் என்ன சொல்ல முடியும்.

ஆனால் அலுவலகத்தில் அப்படியல்ல தொடர்ந்த விவாதங்கள், போதாததிற்கு யூடியூப் காணொளிகள் சத்தம் என அரக்கப்பரக்கிறார்கள். அநேகமா பல "session" உருவாக வாய்ப்பிருக்கிறது.

"ஊரோடு ஒத்து வாழ்" என்பது அனைத்திற்கும் பொருந்துவதில்லையாதலால் வெகுமக்கள் ஊடகத்தோடு (தேவையற்றவையோடு மட்டும்) ஒன்றாமல் இருப்பது வாழ்வை எளிய புன்னகையோடு கடந்துபோக உதவும்.

எங்க வாத்தியார்

எங்களுக்கு பள்ளியில் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் சந்தானம் அவர்களின் உருவப்படம் பென்சிலால் தீட்டியது. ஊர் கீழப்பாவூர்,  திருநெல்வேலி மாவட்டம்.

சனி, 15 ஜூலை, 2017

சிறுநீரின் நிறம்

டச்சு நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஜோகான்ஸ் வீர்மீர் பற்றிய திரைப்படம் "Girl with a Pearl Earring" இது அவர் வரைந்த ஓவியத்தின் தலைப்புமாகும்.

படத்தின் ஒளிப்பதிவே ஓவியம் போல விரிந்து தொடர்ந்தது, பணிப்பெண் "க்ரீட்" ஓவியரின் வீட்டில் வேலைசெய்ய புறப்படுவதில் கதை தொடங்குகிறது. அவளின் தந்தையும் ஓவியராக இருந்து பின் பார்வை இழந்தவர் அதனால் ஓவிய நுட்பங்களை அறிந்தவளாக இருக்கிறாள். ஒரு காட்சியில் வீர்மீரின் ஓவிய அறையினை சுத்தம் செய்யச் செல்லுமுன் அவரது மனைவியிடம் சாளரத்தின் கண்ணாடிகளை துடைக்கவேண்டுமா எனக்கேட்கிறாள், நிச்சயமாக இதிலென்ன கேள்வி என பதில்வருகிறது. எந்த சலனமுமின்றி க்ரீட் சொல்கிறாள் "அதனால் வெளிச்சம் மாறுபடலாம்" என்று, சிலிர்ப்பை உண்டாக்கியது அந்த சொல்.

க்ரீட் கண்ணாடியினை துடைத்துக் கொண்டிருப்பதை காணும் வீர்மீரின் பார்வையில் அடுத்த ஓவியத்திற்கான பொருள் கிடைத்துவிட்டதெனும் ஆர்வம். அவளை சில நொடி நிற்கவைத்து பின் போகச்சொல்கிறான். ஓவியம் மெல்ல மெல்ல மெருகேருகையில் அவளுக்கு அதனை காணும் வாய்ப்பு கிட்டுகிறது. அக்காட்சியில் ஒளிநிழல்களை பற்றி ஓவியன் விவரிப்பதை கவனிக்கிறாள் ஆனால் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை என்பதை அவதானித்தவுடன் சாளரத்தை திறந்து வான்மேகத்தைக் காட்டி அதன் நிறத்தைக் கேட்டவுடன் முதலில் "வெள்ளை" என்கிறாள் பின் அதை மறுத்து சில நொடி பார்வைக்குப்பின் "மஞ்சள், ஊதா, சாம்பல், மேகங்களில் வண்ணங்கள் உள்ளன" என்கிறாள், புன்னகையோடு புரிந்ததா என அவன் கேட்கவும் மேகத்திரள்கள் திரையில் விரிகிறது.
படத்தின் இருபதாவது நிமிடத்தில் வரும் விருந்துக்காட்சியில் வீர்மீரின் ஓவியமொன்று முதல்முறையாக காட்சிப்படுத்துகிறார்கள் அதை விமர்சிக்கும் மற்றொருவர் அதிலுள்ள நிறத்தினை பார்த்து "இந்திய மஞ்ச"ளா என்று கேட்கிறான் ஆமாம் என்ற பதிலுக்குப்பின் தொடர்கிறான் "மாவிலைகளை மட்டுமே உண்ட பசுவின் சிறுநீர் நிறம்".

வெள்ளி, 14 ஜூலை, 2017

அவளுக்கு தலைவலி

"வாரயிறுதியில் என்ன செய்றீங்க" என்பது உரையாடலின் போது இரண்டாவது கேள்வியாக இருந்தது, முதல் கேள்விக்குள் புகுவது காலவிரையம் எனப்படுவதால் இங்கிருந்தே கதைக்க விரும்புகிறேன். வெளியில் செல்லும் பழக்கமிருந்தாலும் வீட்டில் உறவுகளை விட்டுவிட்டுச் செல்வதற்கு மனதொப்பாததால் வாசிப்பும் வரைதலுமே வழக்கமாகியிருக்கிறது மாறாக உறவுகள் ஊர் சென்றுவிட்டால் வீட்டிலிருக்கும் அவசியமில்லாமல் போவதும் உண்மையே.

உங்க மனைவி எதுவுமே சொல்வதில்லையா என்றவள் (அவள் என்பவள் அலுவலக தோழி) கேட்டதற்கு,  சொல்லாமலில்லை என்பதைத்தவிர சொல்வதற்கு நிறைய இருந்தும் கூறவிருப்பில்லாமல் நழுவினேன்.
நானும் வாசிப்பேன் தெரியுமா என்றவள் தொடர்ந்தபோது ரமணிச்சந்திரனையும் ராஜேஷ்குமாரையும் கடந்து வேறொரு எழுத்தாளரையும் பற்றி பேசவில்லை. நாவல் ஏதாவது இருந்தால் கொடுங்களேன் வாசித்துப் பார்க்கிறேன் என்றதும் சுஜாதாவின் எழுத்துக்களை கொடுக்கலாமென்றால் புத்தகம் தற்போது கைவசமில்லை, ஆதலால் வைரமுத்துவின் "வில்லோடு வா நிலவே" புதினம் நினைவிற்கு வந்தது.

வீடடைந்தபின் அதோடு "தண்ணீர்" புதினத்தையும் சேர்த்து பைக்குள் வைத்துவிட்டேன். தண்ணீர் குறைந்த பக்கங்கள் என்பதாலும் அதிகம் குழப்பாத எழுத்தாகையாலும் அத்தேர்வு.
 
வைரமுத்துவா இவரோடது புரியாதே (இவருடையதே புரியாதா என்றெண்ணி அசோகமித்திரனை வெளியிலெடுக்கவில்லை), வேறெதுவுமிருக்கா, அசோகமித்திரனை கொடுத்தேன். பின்னட்டையை பார்த்துவிட்டு "ஓ.. இவருதானா" என்றிழுத்தாள் குரலை.

அவ்வாரயிறுதிக்கு பின் இரண்டு நாள் கழித்து தண்ணீரை வந்தவேகத்தில் மேசை மீது வைத்தவள் "மொக்கையா" இருக்கு என்றாள்.

ஏன்?

தண்ணீர் பிரச்சனையை பற்றியே உரையாடுகிறார்கள் என்றவளிடம் எத்தனை பக்கங்கங்கள் வாசித்தாய் எனக்கேட்டதற்கு தொண்டையிலிருந்தொரு ஓசையெழுப்பிச் சிரித்தாள். மாலை காஃபி நேரத்தில் கூறினேன் "இப்பொழுது வேண்டாம் ஓரளவு பழக்கம் ஏற்பட்டதும் தண்ணீரை வாசித்துப்பார்". தலையை மேலும் கீழும் அசைத்து ம்ம் என்றொலித்தாள்.

நேற்று தலைவலி என்று புலம்பியவளிடம் அடுத்த இருக்கை நண்பர் இரவு திறன்பேசி பார்ப்பதை குறைக்க அறிவுருத்தினார். அவள் "இன்னைக்கு போய் இவரு குடுத்த புத்தகத்த படிக்கணும், தன்னால தூக்கம் வந்துரும்" என்றாள்.

வியாழன், 15 ஜூன், 2017

செவ்வாய், 13 ஜூன், 2017

காகித மனிதர்கள்

புதினங்களை வாழ்கையை தோண்டிப்பார்க்கும் மண்வெட்டி எனலாம். அதேபோல் மனிதர்களுடனான உரையாடல்கள் கலைந்துகிடக்கும் வாசிப்பின் பக்கங்களை அடுக்கிவைக்கும் அலமாரியாகக் கொள்ளலாமா?

"காகித மனிதர்கள்" பிரபஞ்சன் எழுத்தாக்கத்தில் வாசித்த முதல் புதினம், கதை. பல்கலைக்கழகங்களில் நடைபெறும் அரசியல் ஊழல்களையும் பெண்களை சீரழிக்கும் ஆசிரியர்களையும் பற்றிய கதையாடல். இதை வாசித்து மூன்று வருடங்களிருக்கும். மறக்கவியலாத மனித உருவங்களைப்பற்றியதும் அண்ணா நூலகம் செல்ல ஆரம்பித்த நாட்களில் வாசித்ததிலும் முக்கியமான புதினங்களில் இதுவுமொன்று, அதனாலேயே அலுவலக நண்பர் ஒருவரோடு உரையாடிய ("இத்தனை வருட அனுபவமிருந்தும் ஏன் ஒரு பட்டப்படிப்பை கற்காமல் திரிகிறாய், பதவி உயர்வுக்கு அது தேவையென யாருமே உன்னிடம் இதுவரை கூறியதில்லையா." "யாராவது கூறியும் கூறாமலும் அதைப்பற்றிய எண்ணங்கள் தீவிரமடையும் பொழுது மட்டும் இணையத்தில் சில பல்கலையின் பக்கங்களை படித்துவிட்டு கைவிடுவது வழக்கமாகிவிட்டது."  "எனக்குத்தெரிந்த ஆளொருவர் இருக்கிறார் தேர்வு நாளன்று சென்று திரும்பினால் போதும் மற்றவை அவரது கைகளில் (பணமும் பரீட்சைத்தாளும்), மற்றொரு நண்பரிடம் "நாம பணங்குடுக்க போல பொண்ணுங்கல்லாம் படு உசாரு" என்றார்) பின் அக்கதையின் பக்கங்கள் எழுத்துக்கள் அல்லாத காட்சி உருவங்களாக வந்து போயின.

புதினம் வெளிவந்தது எண்பதுகளில் என்று நினைக்கிறேன். காலமும் கல்வியும் நம்மை எந்த அளவீட்டில் மாற்றியிருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது, இன்றைய உண்மை நிலை என்னவாக இருக்குமோ (ஒரு மனிதனின் உரையாடலில் முடிவுக்கு வரவியலாதல்லவா, அது அவரின் புனைவுப் பேச்சாகக்கூட இருக்கலாம்)இப்படித்தான் இருக்குமென்றால் யாரை குறை கூறுவது.

படைப்பாக்கத்தில் எதிர்குரல்

"Piss Christ" என்றொரு புகைப்படம் 1987-ல் "சமகால கலைக்கான தென்கிழக்கு மையம்"வழங்கிய "மெய்நிகர் கலை" விருதினை ஓவியரும் புகைப்படக்கலைஞருமான ஆன்ட்ரஸ் செரனோ என்ற அமெரிக்கருக்கு வழங்கியிருக்கிறது.

இந்த புகைப்படத்திற்கான மூலப்பொருட்கள்தான் முக்கிய பங்கு வகிப்பவை, படத்திற்கான பெயரை வெளிப்படையாக வைத்து அதற்கான விளக்கத்தையும் முன்வைத்திருப்பது சிறப்பான எதிர்ப்புக்குரலாகவே கருதவேண்டும். தான் சார்ந்த சமயம் வணிக நோக்கில் சீரழிக்கப்பட்டதை விமர்சிக்கவே இப்படிச்செய்ததாக கூறியிருக்கிறார்.

கண்ணாடிக்குடுவையில் தனது மூத்திரத்தை நிரப்பியவர், அதனுள் இயேசுவை அரைந்த சிறிய சிலுவை ஒன்றை மூழ்கடிக்கச்செய்து படமெடுத்திருக்கிறார். விளக்கமோ சரியான தலைப்போ இல்லாமல் போயிருந்தால் தங்கமாக தகதகக்கும் கிறிஸ்துவாக மாறியிருக்க வாய்ப்புண்டு.

திங்கள், 12 ஜூன், 2017

நாய்களோடு

இரண்டு வாரத்திற்கு முன் நாயொன்று தொலைவிலிருந்து ஓடிவந்து குரைத்துக்கொண்டே பக்கவாட்டில் நடந்துகொண்டிருந்தது, பாய்ந்து கடிக்க எத்தனித்தால் எதிர்க்கமுடியும் என்ற நம்பிக்கையோடு வலது கையின் விரல்களை மடக்கி தாக்குதலுக்கு தயாராக இருப்பதுபோன்ற பாவனையோடு (உள்ளுக்குள்ள பயமா இருந்தது வேற) நடந்துகொண்டிருந்தேன், அது வளர்க்கப்படும் வீடு வந்ததும் சற்று வேகமாக நடந்த நாய் எனக்கு முன்னால் தோன்றி கூர்மையான பற்களோடு அடுத்தகட்டத்திற்குத் தன்னை தயார் படுத்தியது. (எங்கள் வீட்டில் வளர்த்த நாயும், அதற்குமுன் நாயைக் கண்டால் பயந்து ஓடியதும் நொடியில் நினைவுப்படமாக ஓடியது). சாலையின் எதிர்ப்பக்கம் சென்று கல்லை எடுக்கலாம் என குனிந்தபோது கற்குவியலுக்கு மேலொரு நாய் நாக்கில் எச்சில் வடிய குத்தவைத்து உட்கார்ந்திருந்தது. (கல்லை மறந்துவிட்டு நிமிர்ந்தேன்) வழிமறித்த நாய் அதன் விட்டு எல்லையை கடந்ததும் விலகிப்போய்விட்டது. இதன் குரைப்பொலி கேட்டு நாங்கள் வசிக்கும் தெருமுனையில் ஏழு நாய்கள் தெருமுனைக் கூட்டத்தில் சொற்பொழிவு கேட்பவை போல உட்கார்ந்திருந்தவை  ஒவ்வொன்றாக என்னை நோக்கி நகர ஆரம்பித்தன. மெல்ல நடந்து (பயத்தோடத்தான். ஓடுனா கடிக்கும்னு தெரியாதா!) கடந்ததும் அதனதன் இடத்திற்குச்சென்று அமர்ந்துகொண்டன அடுத்த உருவத்திற்கான எதிர்பார்ப்பில்.

இணைப்பிலிருக்கும் பதிவில் நாய்களின் ஓவியங்கள் பற்றி வாசித்ததும் நினைவிலோடியதில் சில....
https://minnambalam.com/k/2017/06/10/1497033010

சனி, 3 ஜூன், 2017

பாகீரதியின் மதியம் - வாசிப்பு

கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கி வந்ததிலிருந்து தினமும் புத்தக அலமாரியை திறக்கும் பொழுதெல்லாம் இந்த புத்தகத்தை எப்படி வாசிக்கப்போகிறோம் என்ற பேரச்சம் மனதில் உருண்டோடும் அதற்கு அதன் தடித்த உருவமே காரணம். அதிலிருந்து சில வாரங்களுக்குப்பின் ஒரு பின்மதியத்தின் புழுக்கம் அடங்காத வேளையில் (முந்தைய இரவுதான் யோசனை எழுந்தது இப்புத்தகத்தை முதல் பக்கத்திலிருந்து வாசிக்கத் துவங்கக்கூடாதென்று) புரட்டியபோது சிக்கியவொரு பக்கத்திலிருந்து தொடங்கினேன், எதிர்பாராதவிதமாக பாகீரதி வாசுதேவனின் நண்பனிடம் ஜெமினியின் மூன்று ஓவியங்களையும் அதன் வண்ணங்களையும் பற்றிய விவரணைகளை அடுக்கும் காட்சி வாசிக்கக்கிடைத்தது.

வெகுநாட்களுக்குப் பிறகே அதனை முதலிலிருந்தே வாசித்துவிடுவது என்ற முடிவுக்கு வந்து தொடங்கி இன்று முடிக்கும்வரை வேறொரு புத்தகத்தை (பத்திரிக்கைகள் தவிர்த்து) கையிலெடுக்கவில்லை. காரணம் கனவு, அதற்குள் மிதக்கும் காட்சிகள். என்மகளும் இப்பொழுது அத்தையென்ற சொல்லை அழுத்தமாக உச்சரிக்கத்தொடங்கியிருப்பதனால் அட்டைப்பட ஓவியப்பெண் அவளுக்கு அத்தையாகிவிட்டாள் (அப்பழுக்கற்ற அம்முகம் வாஞ்சையோடு வாசிக்க அழைப்பதுபோன்றதொரு தொனி), படத்தை தொடுவதும் அப்பாவை பார்ப்பதும் மெல்லச்சிரித்து "அத்த" என்பதும்.

புதினத்துக்குள் வரலாறும் சமூகநீதிக்கான விவாதங்களும் வாசிப்பிற்கான தூண்டுதலும் ஓவியத்திற்கான பரந்த வெளியும் மிதந்து கொண்டிருக்கிறது.

துரையின் அறைக்குள்ளிருக்கும் ஓவியநூல்களை வாசிக்க ஜெமினிக்கு அனுமதி கிடைத்தபோது ஏற்பட்ட கிளுகிளுப்பு , ஓவியம் பற்றி பாகீரதி அவளின் மனவோட்டத்திற்கேற்ப வெவ்வேறு தருணங்களில் விவரணைகள் செய்வதெல்லாம் கிளர்த்திவிட்டிருக்கும் எண்ணவோட்டங்களை எப்படி விவரிப்பதெனத் தெரியவில்லை.

பாகீரதியை கதைசொல்லி எங்கே செல்ல அனுமதித்திருக்கிறாரென்று தெரியவில்லை ஆனால் ஜெமினியின் சித்திரங்கள் மதுரையில் ஒட்டடை விழுந்த பூட்டிய அவளின் வீட்டினுள்தான் இருக்கிறது.

வெள்ளி, 2 ஜூன், 2017

அரூபங்களின் வெளி

அரூப ஓவியங்களை அணுகுவதில் சில மனத்தடையுண்டு, களைத்துபோகும் கண்களும் மனமும் அவற்றை வெற்றுக்கோடுகளாகவும் வண்ணங்களாகவும் ஒதுக்கிவிட்டு தத்ரூபத்துக்குள் பதுங்கிக்கொள்ளும். சமீபத்தில் சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்திற்கு நண்பன் தங்கராசாவுடன் சென்றபோது பணிக்கரின் ஓவியங்களோடு பிற படைப்பாளிகளின் ஓவியங்களையும் காண வாய்த்தது. பணிக்கரின் ஓவியமொன்றில் வரையப்பட்டிருந்த குறியீடுகளை கண்ட நாங்கள் இதற்கொவ்வொன்றுக்கும் ஓர் விளக்கமுள்ளவை என்ற ரீதியில் கடந்துபோனோம். அவ்வோவியம் பற்றிய கட்டுரையொன்றை வாசித்தபோது அக்குறியீடுகள் மரபின் தொடர்ச்சியாகவும் மொழியின் ஆதியெழுத்தாகவும் அறியக் கிடைத்தது. இப்படி யாரேனும் எழுதிக்கொண்டிருக்கும் தேவை தமிழுலகத்துத்தின் முக்கிய தேவை.

எதாவதொரு உருவம் எங்கு சென்றாலும் பின்தொடர்வது போன்றதொரு மாயவிளைவு மனதளவில் அல்லது கண்ணளவில் தோன்றிக்கொண்டேயிருக்கும். தினமும், இல்லை... எப்பவாவது உடற்பயிற்சி செய்யும் பொழுதில் சுவரை நோக்கி நின்றுகொண்டு இயங்குவது வழக்கம். சுவற்றின் பளபளப்பை மீறி துருத்திக்கொண்டு நிற்கும் பொடிப்பொடி மண்கற்கள் புள்ளிகளாக மாறியும் சிறுசிறு வெடிப்புகள் கோடுகளாக உருவகம் கொண்டு வெளிப்படுத்தும் அல்லது உணரவைக்கும் சித்திரங்களை கண்ணால் வரைந்துகொண்டேயிருக்கலாம். இப்படி பல தருணங்கள். அலுவலக கழிப்பறையில் சிறுநீர்கழிக்கையில் அந்த "Tiles" பார்த்தால் அதில் நீளும் குழையும் வண்ணங்கள். சிதைந்துபோன சாலைகளை நிற்கும் பேருந்தின் சாளரம் வழி சந்தித்தல். வண்ணப்பூச்சிகள் உதிர்ந்துபோன பேருந்து இருக்கை, வீட்டுச்சுவர், மேம்பாலச்சுவர், பழங்கோவிலில் சிற்பம் தவிர்த்த கற்தூண் புள்ளிகள் கலவிக்குப்பின்னான போர்வையின் சுருக்குகள், மட்டையால் வெள்ளையடிக்கப்பட்ட சுவரில் ஒட்டிக்கொண்டிருக்கும் அதன் துரும்புகள் என நம்மோடு அருகிலிருப்பவை இவையே மேற்சொன்ன மாயவிளைவு. இதுதான்  அரூபங்களின் கிடக்கையா? இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.
அரூபம் மட்டுமே நவீனமா? நிச்சயமாக இருக்காது என்றே முன்னகர்வோம்.

தற்போது வெகுநாளாக வாசித்துக்கொண்டேயிருக்கும் "பாகீரதியின் மதியம்" புதினத்தின் பல பகுதிகளில் ஓவியங்களையும் வண்ணங்களையும் பற்றி சிந்திக்கும் முறையினை விவாதிக்கும் அனுபவம் நிறைந்திருக்கிறது. இதைப்பற்றி வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

திங்கள், 22 மே, 2017

தூக்கத்தை தேடுகிறவள்

அவள் தூக்கத்தை தேடி அலைகிறாள்... அழுகிறாள்... நானொரு கதைசொல்லியாகி அதற்கான பாதையை வடிவமைக்க எத்தனிக்கிறேன்.

வியாழன், 18 மே, 2017

அசையும்

அனலுக்கு அப்பாலும்
அசையத்தான் செய்கின்றன
மரக்கிளைகள்

புதன், 17 மே, 2017

காவலர் நண்பனாகியவர்களுக்கு

மேல்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் (2002-2004) போது காவலர் நண்பன் (FRIENDS OF POLICE) எனும் பதவி அல்லது வெற்று வார்த்தை வெகு பிரபலமாக இருந்தது. ஊர்பக்கம் இந்த பட்டத்துடன் திரிபவனுக்கு பள்ளியில் சக மாணவர்களிடையே தன்னை தெனாவட்டாக காட்டும் எண்ணமிருக்கும், அதேபோல் அக்குழுவில் அங்கம் வகிப்பது சிலருக்கு ஏக்கமாக மாறி மனதில் தேங்கி நிற்கும். காவலர்களோடு நண்பர்களாக உலாவுவது எம்மாதிரியான அனுபவத்தை அவர்களுக்கு வழங்கியிருக்கும் என்றெல்லாம் தெரியவில்லை (ஒருவேளை அவர்களில் யாரேனும் இந்த பதிவை வாசிக்க நேர்ந்தால் அனுபவங்களை பகிரலாம்), ஆனால் வென்னிமலை முருகன் கோவில் திருவிழாவுக்கு குடும்பத்தோடு கூட்டத்தினிடையே ஊர்ந்து போகும் பொழுதில் சாலை நடுவே நின்று "இப்படிப்போ ...அப்படிப்போ" என்று கையில் சிறு கம்புடன் பாதசாரிகளுக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் அவர்களின் இரவுப்பணி மற்றும் குடும்பத்திலிருந்து விட்டு விடுதலையாகி நிற்கும் அனுபவம் தனக்கு இல்லையேயென்று காவலர் நண்பனாக இல்லாதவனுக்கு ஏற்படும் தாகம் கச்சேரியில் பாடும் குத்துப்பாட்டோடு அடங்கிப்போகும் என்பது தனி. ஒருமுறை நண்பன் ஒருவனை காவலர் ஒருவர் "படிக்கும்போது இங்கலாம் யாம்ல வாரிய" என திட்டியதாக யாரோ ஒரு நண்பன் கூறியதாக நினைவு.

நண்பனொருவன் தனது அக்காவின் திருமண வாழ்த்துச் சுவரொட்டியில் பெயருக்கு பின்னால் "FRIENDS OF POLICE" என ஆங்கிலத்தில் போட்டுக் கொண்டபின் பலரும் அதுபோன்ற நிகழ்வை கற்பனை செய்யத் தொடங்கியது உச்சபட்சம்.

சென்னையிலும் இதுபோன்ற சிலரை காவலர்களோடு இரவிலும் பகலிலும் பார்க்கலாம். இரவில் பணிமுடிந்து பன்னிரண்டு மணிக்கு வீடுதிரும்பும் போது அனகாபுத்தூரையும் குன்றத்தூரையும் இணைக்கும் அடையாற்று பாலத்தில் ஒரு ஓரமாக காவல்துறை வாகனமொன்று நாள் தவராமல் காவல்!? நிற்பதை காணயியலும், அவர்களோடு காவல் உடையில்லாமல் அதிகபட்சம் இரண்டு பேர் கையில் லத்தியோடு பாலத்தின் நடுவே முன்னும் பின்னும் நகர்ந்து வாகன கண்காணிப்பில் இருப்பதுண்டு. சரக்கு வாகனங்கள் அதிகமாக போகவரயிருக்கும் சாலையது.

சரக்கு லாரியொன்றை வழிமறித்து லத்தி வைத்திருக்கும் காவல் நண்பன்?! அவ்வோட்டுனரிடமிருந்து இருபது ரூபாய் தாளை வாங்குவது எங்களுக்கு தெளிவான காட்சியாகியது அன்று இரவு. நாங்கள் வந்த வாகன ஓட்டுனரிடம் கேட்டபோது "பிச்சக்கார நாயிங்க, ஆனா நல்ல துட்டுண்ணா இவனுங்களுக்கு, எத்துன லாரி போவும் வரும்... லாரிகாரங்க இவனுங்களுக்கு பிச்ச போடவை பத்து பத்தா மாத்தி வச்சிக்கறது, இருவதுக்குமேல எவனும் குடுக்கமாட்டான்" என்றார்.

இன்று சர்தார் பட்டேல் சாலையோரம் வேளச்சேரி பிரதான சாலையருகில் சென்றபோது அப்படியொரு நண்பர்/ன் போர்வெல் லாரியொன்றை ஓரமாக ஒதுக்கி பின் நகர்ந்துசெல்ல கட்டளையிட்டுவிட்டு சற்றே தொலைவில் நின்ற போக்குவரத்து காவலரிடம் சென்றபோது, அவர் "இந்த நேரத்துல அந்த வண்டிக்கு அனுமதி கிடையாது, ஃபைன் போடனும்டா" என்று அவன் தோளில் தட்டினார். கையை அவர்கையில் திணித்தான் சுருட்டிய நூறுக்கும் குறைவில்லாத தாள்கள் கைமாறின, பார்த்துக்கொண்டே கடந்து வந்தேன். வேறென்ன. உங்கள் நண்பன்.

திங்கள், 8 மே, 2017

குழம்பிய வண்ணம்

நவீன ஓவியத்தை புரிந்துகொள்ள இருக்கும் வேட்கை அவ்வகை சித்திரங்களை காண்கையில் மனம் களைத்து இதுவென்னடா? என்ற சலிப்பான எண்ணம் உருவாகிவிடுவது தவிர்க்கயியலாதது. பழைய பாணி சித்திரங்களை எளிதாக புரிந்துகொள்வாயோ என்று கேட்டால் இல்லை. ஆனால் நமது பழைய வகைகள் ஒருவகையில் புராணக்கதைகளின் தொடர்புடனேயே இயங்கி வந்திருப்பதால் ஓரளவு அனுமானிக்க இயலும் என்றே கருதவேண்டியுள்ளது. தமிழக ஓவியங்கள் ஓர் வரலாறு புத்தகம் வாசிக்கத்தொடங்கிய பொழுதில் தோன்றியதென்னவோ நமக்கருகிலிருக்கும் ஓவியங்களை வெறுமனே வாசிப்பில் கடப்பதால் அறிகிறேன் என்று பிழை செய்வதே சரியாகிப்போகும். கொஞ்சம் அதிகமாகவே பயணப்பட வேண்டும்.

இதற்கிடையில்தான் மேற்கத்திய ஓவியங்களையும் ஓவியர்களையும் அறிந்து கொண்டாலென்ன என எண்ணம் மெல்ல சிதறுகிறது. அங்கே போனால் இசங்களை சுமந்துகொண்டு மேதைகள் பல மேற்கிலேயிருக்கிறோம் என்ற தொனியில் வரலாறு வெகு பின்னாலிருந்து முன்னோக்கு நகர்கிறது. இருந்தும் எம்.எஃப்.உசைன் பற்றி வாசிக்கையில் அறிமுகமான ரெம்ப்ராண்ட் நோக்கி கவனம் போனது. அவரது டைட்டஸின் உருவப்பட ஓவியத்தை பார்த்தபோது வண்ணங்களும் உணர்ச்சியும் எதையோ கிளரிவிட்டது. அதைப்பற்றி ஓரிரு வரிகள் எழுதிப் பதிவு போட்டிருக்கிறேன்.

இதெல்லாம் வேண்டாம் தமிழக ஓவியர்களை பற்றி தேடலாமென்று பெருக்கெடுத்த அவாவில், இணையத்தில் தஞ்சமடைந்தபோது விக்கிபீடியா கொஞ்சம் தகவலை கொடுக்கிறது (ஆங்கிலத்தில் தமிழக ஓவியர்கள் பற்றி விக்கி பக்கமே இல்லை எனத்தெரிகிறது! தெரிந்தால் பகிரவும்), "நவீன ஓவியம்" தமிழிலேயே தேடினால் கிடைத்தது யாவரும்.காம் இணையதளத்தில் ஜிவ.கரிகாலன் எழுதும் ஓவியம் பற்றிய தொடர். அதே போல் சில நாட்களுக்கு முன்பிருந்து ஓவிங்கள் பற்றி எழுதத் தொடங்கியிருக்கிறார் ஓவியர்.கணபதி சுப்ரமணியம்.

ஓவியம் பற்றிய தேடலுக்கு சரியான பாதையொன்று அமையப்பெறும் என நம்புவோம்.

கொஞ்சம் குழப்பமான பதிவுதான் என்பதை ஒத்துக்கிடுதேன்.

வெள்ளி, 5 மே, 2017

சாப்டீங்களா பாண்டியன்

பாண்டியன் எப்படி இருக்கீங்க, சாப்டீங்களா!, நான் சாப்பிடவேயில்லங்க, வாய் "ஸ்மெல்லடிக்குதா" என்று வழக்கம்போல கேட்டுவிட்டு அருகிலமர்ந்தார். உங்க அணியில (Team) வேறயாருமே உதவி பண்ணமாட்டேங்காங்க பாண்டியன், நீங்க ரொம்ப சூப்பர்ங்க (Super). சரி வேறென்ன என்பதுபோல மெல்ல புன்னகைத்து மின்னஞ்சலொன்றை உற்றுநோக்கினேன்.

நீங்க கிறிஸ்டியனா பாண்டியன் என்றார், எத்தனையாவது தடவையாக இப்படி கேட்கிறார் என்பது ஞாபகத்திலில்லை. இல்லை என்றபின்னும் சர்ச்செல்லாம் போவிங்களா என்றொரு கேள்வி.

எப்பவாச்சும் நண்பர்களோடு போனதுண்டு.

உங்க அப்பா பேரு எப்பேர்பட்டது தெரியுமா பாண்டியன். எனக்கோ ஆச்சரியம், அடடா என்பதுபோல உள்மனம் உரைப்பது கண்களில் தெரிந்ததோ என்னவோ. தெரிந்திருக்கும். அவரது கதையை சொல்லத் தொடங்கிய இரண்டாவது காட்சியில் பின்னிருந்து ஒரு குரல் உரக்கச் சிரித்து, "நல்லா படம் ஓட்றீங்களே" என்றதும் எனக்குள்ளும் சிரிப்பு. உடனே அவர் ரத்தினம்னா என்னன்னு தெரியுமாங்க ரத்தினம்ங்க என தொடரும் முன்னர் எங்களணித் தலைவர் அவரை தேனீர் சாப்பிட அழைத்தார், மனது இவரை நோக்கி புன்னகைத்தது.

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

டைட்டஸின் உருவப்படம்

எம்.எஃப்.உசைன் வரலாற்றை வாசித்துக்கொண்டிருந்தபோது ரெம்ப்ராண்ட் எனும் ஓவியனை கண்டடைந்தேன். இணையத்தில் துழாவிய பொழுது அவனது வாழ்வினை காட்சிப்படுத்தும் திரைப்படம் வழி புரிந்துகொள்ளத் துவங்கினேன். பின்னொருநாள் "Portrait of Titus" என்ற ஓவியத்தை கவனித்தபோது அவனை பின்தொடர முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

இந்த டைட்டஸ் ஓவியத்தில் வரையப்பட்டிருக்கும் சிறுவன் ரெம்ப்ராண்டின் மகன். வரையப்பட்ட காலம் 1655, பாடப்புத்தகத்தின் மீது பேனாவுடனான கையின் பெருவிரலை கன்னத்தில் நிறுத்தி, அகன்ற தன் கண்களை நினைவின் ஆழத்தை உற்று நோக்கும் பாவனையில் அமர்ந்திருக்கிறான்.


தன்னையும் ஓவியனாக நிலை நிறுத்திக்கொள்ள விரும்பிய மகனை அவன் தாய் "உன் தகப்பனைப்போல் சீரழியாதே" என்பது போன்றதொரு காட்சி திரைப்படத்தில் வரும்.  1658-ல் டைட்டஸ் இறந்து போகிறான் அதற்கடுத்த வருடம் ரெம்ப்ராண்டும் இறக்கிறார். 

செவ்வாய், 21 மார்ச், 2017

அடையாற்றில் மலப்புரட்சி

2015 நவம்பரில் வெள்ளம் வந்தபோது வீட்டின் வெளிக்கதவைத் தாண்டி உள்வரவில்லை. சாலையிலிறங்கி முட்டு அளவு ஆழத்தில் நடந்து சென்று வேடிக்கைப்பார்த்தோம். அனகாபுத்தூர் ஆற்றுப்பாலத்தை நெருங்க முடியாத அளவு வெள்ளம். பாலத்தில் நீரில் நிந்தி வந்த எருமைகள் நீரின் போக்கில் நிலைகொள்ள இயலாமல் அடித்துச்சென்றதை உச்சென்று ஒலியெழுப்பி வருந்திக்கொண்டோம். பின் இரண்டாவது வெள்ளம் வந்தபோதைய நிகழ்வுகள் ஒரு நாவலுக்கான அடித்தளம். எப்போது எழுதித் தீர்க்கப்படுமோ தெரியவில்லை.

மழைக்குப்பிறகும் நான்கைந்து நாளாக வெள்ளம் பாலத்திலிருந்து சற்று கீழிறங்கி நெழிந்து சுழிந்து ஓடியதும், நாயொன்று வேடிக்கைப்பார்த்தவர்களை ஏளனப்பார்வையோடு ஒய்யாரமாக நீரில் நகர்ந்துபோனதும் வேடிக்கை மனிதர்களுக்கு உளக்கிளர்ச்சியை உண்டு பண்ணியிருக்க வேண்டும். மொத்தமாக இரைந்தார்கள்.

அந்தப்பக்கம் தினமும் கடந்துபோக தலைப்பட்டிருப்பதால் அருகிலுள்ள கம்பெனிக் கழிவுகள் கலந்த சாக்கடை நீரின் ஓட்டத்தை கண்டு மனம் வெதும்ப வேண்டியுள்ளது. ஆறும் குளமும் குப்பை மேடாகும் கொடுங்கோல் ஆட்சி வேறெதும் நாட்டில் உண்டா எனத்தெரியவில்லை. ஊருக்குள் மீண்டும் பன்றிகள் அட்டகாசம் என வாட்சப்பில் பகிரும் நண்பர்களை எண்ணி நகைப்பதைத்தவிர என்ன செய்ய. தூய்மை இந்தியாவென்று கழிப்பறை கட்ட எத்தனிக்கும் அரசு, கழிப்பறையில் கக்கா இருப்பதையே முன்னேற்றம் என நம்ப வைக்க விளம்பரம் செய்யும் அதே அரசு, அங்கே ஆழ்கிடங்கில் தேங்கியொழுகும் மலநீரை என்ன செய்ய வேண்டுமென அறிவுறுத்துகிறது? அதனை முறைப்படுத்தி எரிவாயு எடுக்க வக்கற்ற அரசு விவசாய நிலங்களை குறிவைத்து தாக்க எத்தனிப்பது ஏன்?

நாங்கள் தற்போது வசிக்கும் பகுதி குன்றத்தூரின் கிழக்கு எல்லை, அடையாறு ஆற்றுப்போக்கிற்கு அரை கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது. இங்கு எந்த தெருவிலும் முறையான வாரங்கால் அமைப்பு கிடையாது, (சி.எம்.டி.ஏ எதை வைத்து வீடுகட்ட அனுமதிக்கிறதோ? பணம்தானே என ஒருகுரல் ஒலிக்கிறது) அந்தந்த வீட்டின் அருகிலிருக்கும் காலி மனை எனக்கூறப்படும் முன்னாள் குளமோ விளைநிலமோ சாக்கடைக்குளமாக நவீன மாற்றமடைந்திருக்கிறது. தற்போது காந்தி சாலை எனப்படும் பிரதான சாலை மட்டும் சாக்கடைக் கால்வாய் அமைத்து பல்லாவரம் சாலையின் ஓரமாக காவல் மையத்தின் பின்புறமாக சென்று அடையாறு ஆற்றினில் தன்னை இணைத்துக்கொள்கிறது, அடடா!! என்னவொரு திட்டம். புல்லரிக்கிறது.

அடுத்தது, இந்த பகுதியின் அடுக்ககங்களின் கழிப்பறை கழிவுகள் மாதமொரு முறையேனும் வெளியேற்றவேண்டிய கட்டாய நிலை இல்லையென்றால் ?! மூடிக்கொள்ள வேண்டியது மூக்கை மட்டுமல்ல. இந்த மலநீர் எங்கே போகிறது? பெரிய வேலையெல்லாம் இல்லை, குத்தகைக்காரன்கள் லாரியில் பிடித்ததை அப்படியே ஆற்றில் திறந்துவிட்டு விட்டு அடுத்த அடுக்ககத்தின் வாசலில் பணியினை தொடரமுடியும். இதை மறைமுகமாக அவர்கள் செய்யவில்லை மிகவெளிப்படையாக செய்கிறார்கள் கற்றறிந்த மூடர் கூட்டம் "சொசைட்டி" என்ற பெயரில் கைதட்டி கும்மாளமடிக்கிறது.

திங்கள், 6 மார்ச், 2017

உறக்கத்திற்கு முன் அவள்

நான் இரவுப் பணியிலிருக்கும்போது இவ்வளவு தொந்தரவு கொடுப்பதில்லை என்றே கூறுகிறாள். கடந்த ஒருவாரமாக காலையில் பணி என்பதனால் இரவில் தூக்கம் ஒருபக்கம் இழுக்க மகளின் கெஞ்சும், அழும் குரல் மற்றொரு பக்கம் இழுக்கும்.

இப்பொழுது யாரைக்கண்டாலும் "அம்ம..அம்மே..அம்மே" தான் அப்பாவும் அம்மாவும் அம்மையே.

அவளுக்கு முடியைக் கண்டால் ஏற்படும் உற்சாகம் வேறெப்பொழுதும் ஏற்படுவதில்லை, அம்மாவின் முடி மனைவியின் முடியென வாய்புக்கிடைக்கும் போதெல்லாம் தலைவலிக்க இழுத்துவிட்டு சிரிப்பாள். அரிசிப்பல்கள் அங்கலாய்க்கும். இப்பொழுது சில நாட்களாக கடிக்கத் தொடங்கியிருக்கிறாள். அவளுக்கு தெரிகிறது அம்மா, அப்பா, அப்பாம்மை, சித்தப்பாவை மட்டுமே கடிக்க வேண்டுமென்று, பக்கத்து வீட்டு ஆட்களை அப்படிச் செய்வதில்லை. கடித்தலும் இழுத்தலும் தொடர்ந்தால் எப்படி கண் அயர்வது, மனைவி கடுப்பாகி பிடரியில் இரண்டு அடி கொடுக்கவும் "ங்கே...ங்கே..ங்கே" தான், பிறகென்ன கையில் தூக்கிக்கொண்டதும் அமைதி. நமக்கென்ன தூக்கம் கெட்டால் வாசிப்பு.

ஆரம்பத்தில் (பத்தாவது மாதத்தில்) அதாவது இரண்டு மாதங்கள் முன்பு வரை கி.ரா-வின் "சிறுவர் நாடோடிக்கதைகளை" வாசிப்பதுண்டு. முதலில் வெறுமனே வாசித்துவிடும் பொழுது அவளிடம் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை, வழக்கம்போல் பார்த்தாள் கையிலிருக்கும் புத்தகத்தையும் முகத்தையும். பின்பக்க அட்டையிலிருந்த கோட்டோவிய யானையை காண்பித்து "டிங்..டிங்..டிங்.." என ராகமிழுக்கவும் மெல்ல சிரிப்பு. ஒவ்வொரு கதையின் இடையிடையே "யான வருது...டிங்..டிங்..டிங் யான வருது" என அதற்கு சம்பந்தமில்லாமல் கூறி யானை போல நடந்து காண்பித்தால் மீண்டும் சிரிப்பு.

கதையையே ஒரு சலனப்படம் போலவும் நாடகம் போலவும் நிகழ்த்திக்காட்டினால் என்னவென சிறு பொறி விழவும். மொச்சக்கொட்டை வயிறுமுட்ட சாப்பிட்டு வெடித்தகதை, சுண்டவத்தல் கதை, வாலுபோயி கத்தி வந்த கதைகளையெல்லாம் சின்னச்சின்ன முக பாவங்களோடு செய்து காட்டியதும் குலுங்கிக்குலுங்கி சிரித்தாள். அவ்வளவுதாள் இப்பொழுது தூங்குவதற்கு முன் கழனியூரன் தொகுத்திருக்கும் "தாத்தா பாட்டி சொன்ன கதைகள்" புத்தகத்தின் கதைகளை வாசித்தும் உடல் பாவனைகளோடு இயங்கியும் காண்பிப்பதில் உறக்கச்சிரித்து பின் உறங்கச்செல்கிறாள். அன்பு மகள்.

கதைகளை வாசித்து முடிப்பதை விட அனுபவிக்க பழக வேண்டும். பழகுவோம் பழக்குவோம்.