காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஆறு

 இன்று காலை எழுந்ததும் சாரல் பொசுங்கி தெரு மெல்ல தன் மீது நீர் மொட்டுக்களை கோலத்தின் புள்ளியாக்கி பரப்பியிருந்தது பார்வையில் விழவும் வெளியே செல்ல மனமின்றி வாசிக்கலாம் என மூன்றாவது வரியில் இருந்தபோது மூடிவிட்டு நடக்கப் போய்விட்டு வந்ததும் ஒரு கையளவுள்ள வரைவுத்தாளில் எதிரேயிருக்கும் புங்க மரத்தைக் கண்டேன்.


படம் ஒன்றை கண்டு வரைந்தது இவ்வம்மாவும் இக்குழந்தையும்.

கொரோனா முடக்கத்திற்கு பிறகு இரு ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணாநகர் கோபுரப் பூங்காவிற்கு (tower park என்று சொல்வார்கள்) சென்று ஆசானும் நானும் நேற்று வரைந்தோம். இது என்னுடைய பங்களிப்பு. 

கடந்த பதிவில் எண்ணெய் ஓவியம் வரையத் தொடங்கி விட்டதாக பதிவிட்டிருந்தேன் அதன் அடுத்தடுத்த படிநிலையில் நேற்று வரையிலான படம். கோட்டு வரைவுக்குப் பின் முதல் நிலை வண்ணமிடுதலை நேரலையில் முகநூலில் காண்பித்திருந்தேன். அதற்கான சுட்டி https://m.facebook.com/story.php?story_fbid=757354832152752&id=100000025390787

இன்று காலையில் கொஞ்சம் வரைந்திருந்தேன், நாளை இதன் அடுத்த கட்டத்தினை பகிர்கிறேன். 



திங்கள், 17 மே, 2021

ஒளிநிழலின் மாயம்

 மொத்தம் ஆறு மணி நேரம், மூன்று நாளாக மெல்ல மெல்ல சிக்கிய பொழுதில் வரைந்து முடித்தேன் இந்த வாரத்திற்கான ஓவியர் ரெம்ப்ரான்டினுடைய தன்னுருவப் படம். எந்த வண்ணம் பயன்படுத்துவது என்ற குழப்பம் இருந்து கொண்டேயிருந்தது, நீர் வண்ணமா, எண்ணெய் வண்ணமா, அக்ரிலிக் வண்ணமா என்ற பெரும் யோசனைக்குப் பின் அக்ரிலிக் பயன்படுத்தலாம் என்ற முடிவில் ஏற்கனவே வெள்ளை ப்ரைமர் அடித்து தயாரக வைத்திருந்த பெரிய அளவு கெட்டி அட்டைத் தாளில் அடிப்படை கோடுகளை வரைந்ததும், சிவப்பில் வெள்ளை கலந்தால் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தை துரத்தியடித்தது அப்படியொரு கலவையை பூசத் தொடங்கியதும், பிறகு தான் மஞ்சளை வெள்ளையுடன் கலந்து பரப்பினால் ஓரளவு ஏற்கக்கூடிய வண்ணத்தை காண முடிந்தது, இப்போது வைத்திருக்கும் பன்னிரண்டு வகை சிறுசிறு வண்ணக் குழல்கள் போதாது, முதன்மை வண்ணங்கள் அதிகமாக தேவை என்பதை. உணர்த்தியது.


பதினேழாம் நூற்றாண்டின் முக்கிய ஓவியர்களில் ஹாலந்தைச் சேர்ந்த ரெம்ப்ரான்ட் மிகவும் கவனிக்கத் தக்கவர், இவரது ஒளி நிழல் சார்ந்த உருவப்படங்களை மேலோட்டமாகக் காண்கையில் குறிப்பிட்ட வண்ணங்களுக்குள் அடக்கிவிடும் கண்கள் அதை நெருங்கி அணுகும் போது, இவரது தூரிகையின் தீற்றல் காட்டும் வண்ணங்களை கண்டு மனம் பூரிப்படையச் செய்கிறது. மனிதர்களை அவர்கள் சார்ந்த சூழல்களை வரைவதை விரும்பிச் செய்தவர். 


இவரது வாழ்வையும் படைப்புருவாக்கத்தையும் திரைப்படமாகக் காண கீழுள்ள தொடுப்பில் சென்று காணலாம்.

https://archive.org/details/Rembrandt

ரெம்ரான்ட் பற்றி சிறு காணொளிகள் தொகுப்பு

https://youtu.be/xxn6dAp1DuU



திங்கள், 10 மே, 2021

ஓவியர் ஆதிமூலம்

சிறுபிள்ளையில் எவருக்குமே உள்ள தன்மையோடு கையில் கிடைக்கும் எழுது பொருள் வழியே கோடுகளை கிறுக்கும் தனது ஆர்வத்தை அடுத்தடுத்து நகர்த்தும் எண்ணத்தில் மளிகைக் கடையை புறந்தள்ளி சென்னைக்கு பயணித்தவர் ஓவியர் ஆதிமூலம். பி.எஸ். செட்டியார் என்பவரது வழிகாட்டலில் சிற்பி தனபால் அவர்களை அடைகிறார். இவரது வழிகாட்டலில் ஓவியக் கல்லூரிக்குள் நுழையும் ஓவியர், பயிலும் காலத்திலேயே தனக்கென தனி பாணியை உருவாக்கி அதில் தொடர் பயணம் செய்தது போல புரிந்துகொள்ள முடிகிறது.

கோட்டுச்சித்திரங்களில் இவர் நிகழ்த்தியிருக்கும் நிழல் ஒளியில் கிட்டும் அதிகமான இருளுக்குள் மிளிரும் ஒளி, ஓவியத்தை காணும் பொழுதில் உள்ளிழுத்து நகரவிடாமல் செய்துவிடுகிறது. தத்ரூபமான படங்கள் தீட்டியிருக்கிறாரா எனத் தேடியதில் ஒரு பெண்ணின் முகம் தவிர்த்து எதுவும் கிடைக்கவில்லை. கோடுகளிலிருந்து வண்ணக் கலவை புரியும் அரூப ஓவிய முறைக்குள் சென்று தனது படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். இவரது சில படைப்புகளை "ஆதிமூலம் அழியாக் கோடுகள்" என்ற புத்தகத்தில் வெவ்வேறு ஆளுமைகளின் கட்டுரைகளோடும், பத்திரிக்கைகளில்  வெளிவந்த இவரது பேட்டிகளோடும் வெளியிட்டிருக்கிறார்கள்.

பயிற்சிக்காக இவரது இரண்டு ஓவியங்களை வரைந்து பார்த்ததில் இதுவரை செல்ல மறுத்த இருளுக்குள் சென்று மீண்ட உற்சாகமொன்று தோளில் செல்லமாக தட்டிவிட்டது.

காணொளி வடிவில்