ஞாயிறு, 13 டிசம்பர், 2020

ஒக்கிட்டுத் தாருமய்யா

சிறுவனாக இருந்த போது காதில் கேட்ட சொற்கள் பல இப்போது வழக்கில் இல்லாமலாகிவிட்டதா அல்லது இன்றைய தலைமுறை அச்சொற்களை மறந்துவிட்டனவா, இல்லை சொல்ல மறுக்கின்றதா. சில நாட்களாக "ஒக்கிடுதல்" என்ற சொல் எனக்குள் தொடர்ச்சியாக ஒலித்துக் கொண்டிருக்கிறது, பள்ளி நாட்களில் இச்சொல்லை "Repair மற்றும் பழுது பார்த்தல்" என்ற பொருளுக்கு இணையான தூய தமிழ்ச் சொல்லாக எங்கள் ஊரில் (கீழப்பாவூர்-தென்காசி மாவட்டம்) பயன்பாட்டில் இருந்தது நினைவிலிருக்கு, ஆனால் கடந்த இரண்டு மாதத்தில் அச்சொல் எங்கிருந்தும் ஒலிக்கவில்லை.

"ஓகம்" என்ற சொல்லும் ஓகப் பயிற்சியும் "யோகா" என்று வடமொழியாகி தமிழருக்கு அந்நியமான பயிற்சியாகி இன்று அவர்களின் மொழியில் நமக்கு திருப்பியளிக்கப்படுகிறது, இந்த ஓகம் என்ற சொல்லின் இடையில் "ஓ" வுக்கும் "க" வுக்கும் இடையில் "க்" சேர்த்தால் உடல் இணையும் "ஓக்கம்" என்ற சொல் உருவாவதாக கரு.ஆறுமுகத்தமிழன் அவர்கள் ஓர் பேட்டியில் சொல்லியிருந்தார், அதிலிருந்தோ என்னவோ இந்த ஒக்கிடுதல் என்ற சொல் என்னைத் துரத்துகிறது. 

இரு உடல் இணைவதை குறிக்கும் ஓக்கம் என்ற சொல்லின் வினைச் சொல்லாகவே ஒக்கிடுதல் என்று உருவாகியிருக்கும் என்பது என் எண்ணம், உடைந்த பொருளை இணைப்பது என்ற பொருளில். இது போல் நாம் இழந்து கொண்டிருக்கும் சொற்கள் அதிகம், தமிழிலிருந்து உருவான புதிய சொல் ஒன்று வாய்மொழிப் பயன்பாட்டிலிருந்தால் வரவேற்கத் துணியலாம், உதாரணத்திற்கு பழுது பார்த்தல் ஆனால் இதற்கிணையாக ரீப்பேர் என்ற சொல்லில் நாம் புழங்குவது தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற வாக்கியத்தை மெய்ப்பித்துவிடும்.

சனி, 12 டிசம்பர், 2020

ஓவியம் பழகுதல்

ஒரு கணக்காக சொல்ல வேண்டுமானால் கடந்த ஐந்து வருடங்களாக தொடர்ந்து இல்லையென்றாலும் அவ்வப்போது ஓவியம் வரைதலுக்கான பயிற்சியை செய்கிறேன், இதில் ஏற்பட்ட ஆர்வமும் உந்துதலும் இன்றுவரை அதிகரித்தே வருகிறது அடுத்து என்ன என்ற கேள்விகள் பல இருந்தாலும் ஓர் மனப் பயிற்சியாக இதைச் செய்து வருவது நிம்மதியை விளைவிக்கிறது. 
 
எப்படி இந்த வலைத்தளம் தொடங்கும் பொழுதில் வாசிப்பே இல்லாமல் வார்த்தைகளை மடக்கி மடக்கி எழுதினேனோ அதேப் போலத்தான் வரைதலுக்கான முயற்சியின் இடையில் ஓவியம் பார்த்தலை ஓர் பழக்கமாகவோ விருப்பமாகவோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை, பின் நாட்களில் வாசிப்பால் உருவான ரசனை போல, கடந்த ஒரு வருடத்தில் பலரது ஓவியங்களை பார்ப்பதையும் உணந்து கொள்வதையும் அதிகப் படுத்தினேன் இது வரைதலுக்கு பெருந்துணையாக உள்ளது, ஒரு படைப்பை ரசிகனாகவும் சக படைப்பாளியாகவும் உணர்வதற்கு இடையில் நிச்சயமாக வேறுபாடு இருக்குமென நம்புகிறேன்.

பார்க்கின்ற பொருளையோ ஆளையோ அப்படியே சித்திரமாக தீட்டி விடுவதில் சுகமிருந்தாலும் கோடுகளின் வளைவு சுழிவுகளை உணர்ந்து பொருளின் வடிவத்தை தன் கைவிரலிடுக்கிலுள்ள பென்சில் கோடுகளாக்குவதையும் அதிலுள்ள ஒயிலையும் கண்டு இன்புறுவதே கலையின் தன்மை எனக் கொள்ளலாம். இதற்கு அடிப்படையான வடிவங்களைப் பற்றி கொஞ்சம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம் அதற்கான பாதையை உருவாக்கிக் கொண்டு மெல்லப் பயணித்தாலே கைகூடிவிடும் சித்திரங்களும் கலை அனுபவங்களும், ஓவியம் பார்த்தலை பற்றியும் நிறைய பேசலாம்.

சனி, 5 டிசம்பர், 2020

புயல் காலம்

உனக்கென்ன

எனக்கென்ன

யாருக்கென்ன

மழைக்கென்ன

புயலுக்கே காலம்

செவ்வாய், 6 அக்டோபர், 2020

ஐயமடைகிறேன்

விரும்பி ஆற ஆற திளைத்து வாசித்து சுகப்பட்ட நாட்களாக சமீபத்திய பொழுதுகள் இல்லை, இன்றிலிருந்தேனும் ரகசியமாகவும் சினேகத்துடனும் சில வரிகளை சன்னமாக மனச் சன்னலுக்குள் செலுத்திவிட எண்ணி வண்ணதாசனிடம் சென்றேன், உறக்கம் பிடிக்குமா என ஐயமடைகிறேன் இவ்வரிகளின் பூவரசம்பூக் குரல் கேட்டு

சனி, 23 மே, 2020

கோபுரம் - விமலாதித்த மாமல்லன்

குருட்டு ஓவியனைப் பற்றிய சிறுகதை, வாசித்து முடித்ததும் யதார்த்தம் தொலைந்த கதையாகப்பட்டது ஆமாம் யதார்த்தத்தில் என்ன இருக்கிறது என கதையை உள்ளுக்குள் ஓட விட்டால், இதுவொரு கலைத் திருட்டு பற்றியதான கதையோ என்றும் கலை மதிப்பு என்ற கோணத்திலுமான கதையாகவும் புரிந்துகொண்ட பின். 

கண்களற்ற அவனின் கைகள் செய்யும் வித்தை ஆழ்மனத்தின் துடிப்பாக அங்கே மாயம் நிகழ வழி ஏற்படுகிறது, அந்த சிற்றூருக்கு இவன் செல்வதும் அங்குள்ள கோவில் கோபுரத்தின் எதிர்கால நிகழ்வை சித்திரமாக்கி அதற்காக அடி உதை வாங்கும் எளிய கலைஞன், இங்கு எளிய என்ற சொல்லை பயன்படுத்தவே கூச்சமாக உள்ளது, அவனது உருவகத்தை எழுதியிருக்கும் விதம் எளிமைக்கு எவ்விதத்திலும் சமமானதில்லை, மாறாக அதனினும் கீழ்மையானது. ஆனால் இவனது உள்ளம் கலையைத் தவிர தன் ஆழ்மனம் தவிர்த்த எதையும் துச்சமாக எண்ணுபவையானதா, வரைந்த அவனது கரிக்கோடுகளின் மீது வீசியெறியப்படும் காசுகளை தேவையற்றவையாகவே எண்ணி விலகிப்போகிறான், மக்களிடம் கலை பற்றிய எண்ணவோட்டம் கிஞ்சித்தும் இல்லாதது போலவே இவனுக்கும் அவர்களின் மதிப்பான பொருட்கள் மீது பற்றில்லை.

பிளவுபட்ட கோபுரத்தை வரைந்ததும் அதை அழித்துச் சென்ற கால்களிலிருந்து அவனது கரித்துண்டின் சாயம் விலக மறுக்கிறது, கதைக்குள் இதுவொரு படிமமாக பலமானதாக ஒட்டிக் கொள்கிறது, மக்கள் அவனையும் அவனது கலையையும் சிந்தனையையும் புறந்தள்ள எத்தனித்தாலும் அது விலகிவிடுவதில்லை அவர்களின் மனத்திலிருந்து, கதை முடிக்கப்படும் இடமும் இதைத் தெளிவாக நிகழ்த்துகிறது.

கோபுரத்தில் மாற்றலுக்குள்ளான சிற்பமொன்று வெளிநாட்டில்  கோட்டோவியமாகி ஏராளமான விலைக்கு விற்பனையாகிறது, இந்த ஓவியம் உருவானது எதன் விளைவு என எண்ணினால், கோபுரம் தரையில் ஓவியமாக விரிந்தபோது அதனை தங்களது ஒளிப்படக் கருவியில் நகலெடுத்த வெளிநாட்டுப் பயணிகள் முன் நிற்கிறார்கள். இந்த இடத்தில் கலைத் திருட்டிற்கான சாத்தியமிருக்குமோ எனத் தோன்றுகிறது. இருந்தும் கலைஞனை காப்பாற்றும் இடத்தில் இவர்களின் கெஞ்சலும் உடல் மொழியும் மேற்சொன்ன திருட்டு விளைவை மறுத்தாலும் அது நிகழ வேறுபல வழிகள் இருப்பதாகத்தான் புலப்படுகிறது. 

இந்த கதையின் கூறுகளை யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடிய போது, எம்.எஃப். உசேனை மதவாதிகள் துரத்தியதை அடியொற்றி எழுதியதாக ஒருவர்  குறித்துள்ளார்.

ஒரு ஓவியனைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ கதையின் போக்குக்குள் இயல்பாக நுழைந்துவிட்ட மனம் பார்வையற்றவன் எப்படி வரைகிறான் என்றும் உழன்றது, பார்வையுள்ளவனை விட இவர்கள் நுட்பமானவர்கள் என எண்ணும் பொழுது கதையின் மாயம் மெல்ல விலகப் பார்த்தாலும் விலகுவதில்லை.

திங்கள், 18 மே, 2020

ஒளியிலே தெரிவது - வாசிப்பனுபவம்

எந்த புத்தகக்காட்சியில் வாங்கியதென்று நினைவில் இல்லை, ஆனால் முதல் கதையான "சிநேகிதிகள்" கதையினை எப்பொழுதோ வாசித்தது போல உணர்வு, ஒருவேளை படித்துறையை காட்சிப் படுத்தும் வேறேதேனும் வண்ணதாசன் எழுதுயிருந்தாலும் இருக்கலாம். "கழுத்துக்கு மேல் முகம் கல்சிலையாகி விட்டதுபோலப் போய்க்கொண்டு இருக்கும்" சேதுவின் இடத்தில் என் தலையை பொருத்திப்பார்த்துக் கொண்டேன். சிநேகிதிகளால் நிரம்பிய கதை, சில நாட்கள் முன் இதுவரை சிரிக்காத முகத்தைப் பார்த்துச் சிரித்ததையும் சிரிக்காமல் கல்லாகிச் சென்றதையும் மனதில் ஓட்டியது.

"இமயமலையும் அரபிக்கடலும்" வாசிக்கத் தொடங்குமுன் தலைப்பை கண்டுகொள்ளாமல் கதைக்குள் தஞ்சமடைவது இயல்பு, பின் முதல் வார்த்தையோ ஏதேனும் காட்சி ஏற்படுத்தும் சிறு சலனமோ பக்கத்தை புரட்டி தலைப்பை அண்ணாந்து பார்க்கச் சொல்லும், இந்நிகழ்வு சிறுகதை வாசிப்பின் பொழுதில் மட்டுமே வெளிப்படும். சோதனைக்குட்பட்டது. "லெக்கு" என்ற வார்த்தையைக் கண்டதுமே ஓர் பேருணர்வு, தன் ஆழ்மனத்தில் காணாமல் கசங்கிக் கிடக்கும் காகித இடுக்குகளில் சிக்கிய ஓர் சொல், இன்று இக்கதையின் வழி தன்னை விடுவித்து கும்மாளமிட்டு குதூகலிக்கிறது. அச்சொல்லை அப்படியே கடந்துவிட விருப்பமின்றி மனைவியிடம் ஓரிரு வரிகள் புலம்பிவிட்டு புத்தகத்துக்குள் வந்தால் மனதுக்குள் பல்வேறு உரையாடல்கள் அத்தனையும் "லெக்கு"வை மையமாக வைத்து நிகழ்பவை. இரண்டு நாளுக்குப் பிறகே கையிலெடுக்கிறேன். நடைபயணத்தின் வழியில் தங்கத்திற்கு ஏற்படும் எண்ணவோட்டங்கள் அவளின் வேலை இடதத்திற்கான லெக்கை (திசையை) மறக்கடிக்கின்றன, இறுதியில் மிதிவண்டிக்காரர் தன் புழுங்கிய உடலை துடைத்துக்கொண்டே தன் பூவிழுந்த கண்ணால் அவளைக் கண்டதோடில்லாமல், அவர் செய்த சிரிப்பும் பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கியா என்ற கேள்வியும் அவளை உலுக்கிவிடுகின்றன. கதைக்கான எழுத்துகள் நிறைவடைந்த இடத்தில் அடைந்த சிறு குழப்பம், என்னடா கதையிது என்று உள்ளுக்குள் கதைத்துவிட்டு படுத்ததும், கதை அதன் போக்கில் ஒரு ஓட்டம் ஓடியதும் படக்கென கிளர்ந்தது ஓர் உணர்வு.

உறவுகளுக்குள் எத்தனை சாரங்கள், சுந்தரம் மாமாவுக்கும் அவளுக்குமான வெளிப்படையான பகிர்தலுக்கான பொழுதும், தந்தைக்கு மகளிடம் இருக்குமோர் விலகல் மனோபாவம், சரோ அத்தைக்கும் அம்மாவுக்குமுள்ள உறவால் வெளிப்படும் அளப்பரிய உணர்வு, சுந்தரம் மாமா கோடுகளை கிழித்து காகமாக்கிய பொழுதிலிருந்து பொங்கலிடும் வாசலில் கோலமிடும் வரையுள்ள கலையோடு அவருக்குள்ள உறவு, தந்தைக்கும் மாமாவுக்குமான நட்பு.
இத்தனைக்கும் மேலாக காகத்தினை கண்டதும் கா..கா..எனக் கத்தியவனுக்கும் அந்த ஓவியத்துக்குமான உறவே பேரின்பப் பெருவெள்ளம் அதில் மிதக்கும் கப்பல்களே உறவுகள்.

ஞாயிறு, 17 மே, 2020

சைகை

கடந்த ஒரு மாதமாக சைகை (Gesture) ஓவியங்கள் வரைய பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறேன், இதற்கு முன்னாலும் இப்படி முயற்சித்து சோர்வு தட்டியதும் அதை விட்டு ஓடி ஒழிந்திருக்கிறேன். அஜந்தா ஓவியப் பள்ளியில் பயிலுகையிலும் கூட கடனே எனக் கோடுகளை வரைந்து பயிற்சி மாதிரியாக அனுப்பியிருக்கிறேன், அதனளவில் அது நிறைவைத் தந்தாலும் ஒரு கற்பனைச் சித்திரத்தை வரைய சைகையை வரைந்து பழகுதல் மிக முக்கியமாகப் படுகிறது.

ஒரு முறை ஊர் செல்வதற்காக எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்த போது, தண்டவாளத்தின் மறுபுறம் அதாவது எனக்கு எதிர்புறம் பணியாளர் ஒருவர் அமர்ந்திருந்தார், அவரது நிலையான தோற்றம் வரையுதலுக்கான உந்துதலை அளித்தது என்றாலும் அவரது முகத்தைக் கடந்து கோடுகள் நீள மறுத்தன, அவரது முகம் தெளிவாகத் தெரியவில்லையானாலும் எனது எண்ணம் முழுவதும் அவரது முகத்தை வரைந்துவிடும் நோக்கத்திலேயே குவிந்திருந்தது. (அவர் அமர்ந்திருந்த காட்சியை இப்போது நினைவிலிருந்து பார்க்கிறேன் சற்று குனிந்து தன் செல்பேசியை உற்றுப் பார்க்கும் உருவம் அதோடு கையில் பணிக்கான கம்பியில்லா தொடர்புக் கருவி) சிறிது நேரத்தில் அவ்வெண்ணத்தைச் சிதறடிக்கும் வண்ணம் தண்டவாளத்தினை வண்டியொன்று ஆக்கிரமிப்பு செய்ததும் அதனை வரையத் தொடங்கினேன். ஏன் இப்படியென்றால் அந்த நாள் வரையில் முழு உடலையும் சிரத்தையோடு வரைந்து பார்த்திராத அல்லது காண விருப்பமில்லாத மனநிலை என்றோ கூறலாம். இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்.





ஓர் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஓவியக் கண்காட்சி திறந்தவெளியில் நடைபெற்றது, அதற்கு முந்தைய வருடங்களில் நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை ஆனால் அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழவில்லை. நான் சென்ற அந்த இரண்டில் முதல் ஆண்டில் ஓவியர் ஜோதி நீர்வண்ணத்தில் எல்லோர் முன்னாலும் வரைந்து காண்பித்தார், அதுவொரு நிலக்காட்சி பசுமையான நிலவெளியின் நடுவே ஒத்தையடிப்பாதையில் பெண்ணொருத்தி சிவப்புச் சேலையில் தன் வீடு நோக்கிச் செல்கிறாள், ஓவியத்தில் தூரமாக வீடும் இருந்ததாக ஞாபகம். அந்தப் பெண்ணை வரைகையில் அவர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை, ஒரு சிறு வட்டம், அதிலிருந்து கீழ் நோக்கி வளைவாக எதிரெதிர் திசையில் சீராக ஒன்றையொன்று இடையில் மோதிப் பிரியும் இரு கோடுகள் பின் வண்ணமிடுகையில் அதை அவளாக மாற்றிவிட்டார், விந்தை. இல்லையென்றால் இப்போது நினைவில் வருமா.

இன்று சைகை கோடுகளை வரைந்து கொண்டிருந்த பொழுதில் அவரின் கோடுகள் நிழலாடியது.





வியாழன், 14 மே, 2020

சங்கச் சித்திரங்கள் - வாசிப்பனுபவம்

வெகுநாட்களாகவே சங்க இலக்கியங்களை அதன் சுவையறிந்து வாசிப்பின்பம் அடைய வேண்டுமென்ற எண்ணமிருந்தது, நேரடியாகப் பொருள் புரிந்து விளங்கிக் கொள்வதைக் காட்டிலும் ஓர் அனுபவத்தின் வழி கவிதையின் இன்பத்தை அடைவது பேரின்பம். தயக்கத்துடனே "சங்கச் சித்திரங்கள்" புத்தகத்தை கையிலெடுத்தேன், மாலைப்பொழுதின் தாபத்தை ஓர் அழகான காலையில் வாசிக்கையில் தொடர்ந்து வாசிக்கும் உந்துதலை அளித்தது.

முதல் நான்கு கவிதைகளை வீட்டின் அறையிலமர்ந்து வாசித்தேன் சொல்களுக்கான விளக்கங்களை அறிவதும் புரிந்துகொள்வதுமாக வாசிப்பினிடையே சோர்வும் வந்து கதவைத் தட்டியது, நேற்று மச்சிப்படியின் அருகே நின்ற பொழுதில் உணர்ந்த குளிர்வு வாசிப்புக்கான இடமல்லவா இது என உணர்த்தியது, எப்போதும் உடற்பயிற்சிக்காக மச்சிக்கு வரும்போது உடன் தூவலும்(பேனா) ஓவியத்துக்கான ஏட்டையும் எடுத்து வருவதுண்டு, இன்று அதற்கு மாற்றாக சங்கச் சித்தரங்கள் கொண்டு வந்தேன். இருபது நிமிட கை கால் உதறலுக்குப் பின் வாசிப்பிற்காக படியில் அமர்ந்தேன். 

தென்னைமரம் போன்ற ஆனால் அதுவல்லாத பூக்கவும் காய்க்கவும் பார்த்திராத மரம் வரிசையாக நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு பின்னுள்ள ஓர் நிறுவனத்தின் சுற்றுச்சுவரருகே நிற்கிறது, காற்றில் அதன் கிளைகள் அசைவதால் கொஞ்சம் அனல் மறந்து அமரலாம், கனடாவின் அல்கான்க் காட்டினை பற்றி வாசிக்கும் போது சரசரவென்ற ஓசை கேட்டு மரத்தை நோக்கினேன், அணிலொன்று ஓலைகளுக்கிடையை நகர்ந்து வந்து நுனியில் நின்றுகொண்டு மச்சியை பார்த்துக்கொண்டே காலை உதறியது தாவுவதற்காக தவிப்பது போலத் தோன்றியது, என்னை அதுவரை கவனிக்காதது, சுற்றும் முற்றும் தலை திருப்பிய போது என்னைக் கண்டுகொண்டது "அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்" என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தோம்.
சில நாள் முன் கண்ட காணொளியில் அணிலொன்று சுவரிலிருந்து தாவி ஒருவரின் தோள் மீது பரவி அமரும் காட்சி நினைவில் வந்ததும் சில நொடி கழித்து மெல்ல கையை உயர்த்தி அழைப்பது போல் பாவனை செய்யும் முன் திசை திரும்பிச் சென்றது.




புதன், 13 மே, 2020

கதைகள் உருவாக்கும் பாதை

மூத்தவள் (ஜெபரத்திகா) நடக்க ஆரம்பிக்கும் முன்னால் நெஞ்சின் மீது படுத்துக்கொண்டு அணில் போல என் கண்களை அவதானிப்பாள், சிரித்தால் அவள் வெடித்துச் சிரிப்பாள். கி.ரா-வின் தாத்தா சொன்ன கதைகள் (தலைப்பு சரியாக நினைவில் இல்லை அதோடு இப்புத்தகம் இப்போது யாரிடம் உள்ளது என்றும் நினைவில்லை) என்ற புத்தகத்தில் மொச்சைக் கொட்டையின் வயிறு வெடிப்பது போல் ஒரு கதையின் காட்சி வரும், அதைச் சொல்லி "ட்டமார்" னு வெடிச்சிட்டுன்னு சொன்னால், உரத்தச் சிரிப்பொலி கேட்கும், பொக்கை வாய் சிரிப்பு.

வேலை முடித்து வீடடைய பத்தரைக்கு மேல் ஆகிவிடுமென்பதால், அப்போதெல்லாம் பெரும்பாலான நாட்கள் உறங்கிவிடுவாள், பள்ளி செல்லும் நாட்களில் மட்டும். அதற்குமுன் அதாவது பள்ளியில் சேரும் முன், சில இரவுகள் பன்னிரண்டு மணிவரைக்கும் நீளும் கதையாடலும் விளையாட்டுமாக, இப்போது இரு மாதமாக தொடர்ந்து வீட்டிலிருந்து பணி செய்வதால் ஒன்பதரை மணிக்குப் பாய் விரித்துவிடுவது வழக்கமாகி விட்டது. 

ஒவ்வொரு நாளும் கதைப் பேச்சிற்கு பிறகே உறக்கம் என ஆகிவிட்டது, இளையவளும் (இயல்) இந்த கதைப் பொழுதில் இணைந்துவிட்டாள் வெகு இயல்பாக இவளின் பெயருக்கேற்ப, குழந்தைகளுக்கென வாங்கிய புத்தகங்கள் பெரும்பாலானவை அதன் முகமிழந்து, பின் கை கால் என அத்தனை அங்கங்களும் அற்றுப் போயின இவள்களின் சாகசத்தால், எஞ்சியது குன்றத்தூர் பாவேந்த பள்ளியின் சில புத்தகங்கள், அவை வண்ணமும் கிறுக்கலும் பெற்று கிழிதலிலும் தோற்கவில்லை. மிஞ்சியவை சில கதைப்படங்களும் பாடல்களும்.

சில கதைகளை நானே உருவாக்கி நேரத்திற்கேற்ப கதையை நீட்டி முழக்குவேன், சலிப்பு தட்டிவிடும் பொழுதில் முதல் காட்சியை நானும் அடுத்த காட்சியை அவளுமாக மாற்றி மாற்றி உருவாக்குவோம், இந்த மாதிரியான கதை உருவாக்கலுக்கு முன் ஓரிரு குட்டிக் கதைகளை அவளுக்கு பரிசளிக்க வேண்டும், (சமயத்தில் குட்டிக் கதைகளினூடே தூக்கம் அவளை அள்ளி அணைத்துக் கொள்ளும்). அதற்கு சிறுவர்களுக்கான எழுத்தாளர் விழியன் "வாட்சப் (புலனம்)" வழியே நாள் தோறும் பதிவிடும் கதைகளையும், பாவேந்தர் பள்ளியின் முதல்வரும் கதைசொல்லியுமான ஐயா வெற்றிச்செழியன் அவர்களின் கதையாடல் வலையொளித் (யூ ட்யூப்) தொடரில் சொல்லப்படும் கதைகளையும் வாசித்தும் கேட்டும் மகள்களிடம் கடத்துகிறேன்.

இரண்டு நாட்களாக ரத்திகா கேட்கிறாள் "அப்பா இந்த சிங்கங்கத மாட்டுக்கத மீன்கத அப்றோம் காக்கா கதல்லாம் எங்கப்பா படிச்ச" 

"புத்தகத்துல தாம்டே படிச்சேன்"

"எனக்கு காமியேன்"

"அது செல்லுல இருக்குமா, கடையெல்லாம் துறந்தொடனே புத்தகமா வாங்கித்தாரேன் சரியா, இதுல எழுத்தா இருக்கு பாரு, படமே இல்ல, ச்சீ" என்று செல்லை நீட்டியதும் சிரித்துக்கொண்டே ஓடினாள். 

அப்போ இவள்கள் செல்பேசியில் எதுவுமே பார்ப்பதில்லையா எனக் கேட்டால் அதுவும் உண்டு, அதற்கான அடாவடித்தனங்களுமுண்டு. 
@

எழுத்தாளர் விழியனின் கதைகளை தினமும் வாசிக்க, உங்கள் பெயர் மற்றும் ஊர் உடன் ஒரு வாட்சப் தகவலை "90940 09092" எண்ணுக்கு அனுப்புங்கள். கதைகள் கொட்டும்.

ஐயா வெற்றிச் செழியன் அவர்ளுடைய கதையாடல் தொகுப்பில் இதுவரை இருபத்தியாறு கதைகள் வந்துவிட்டது, அதற்காக சொடுக்குங்கள் https://www.youtube.com/playlist?list=PLh6l104YXvxLkFyFG3NECtykhyqX99DgU

கதைகள் ஒலிக்கட்டும்

சனி, 9 மே, 2020

நினைவுகளின் சுவட்டில்

அங்கங்கே வெங்கட் சாமிநாதன் அவர்களின் சில கட்டுரைகளையும், கலைவெளிப் பயணங்கள் எனும் கட்டுரைத் தொகுப்பை மட்டுமே வாசித்திருந்தாலும், அதிலிருந்த கருது பொருள் மற்றும் மாற்றுச் சிந்தனை  வியப்பிலாழ்த்தியது உண்மை. 

இந்த தன் வரலாற்று நூலை வாசிக்க இருமுறை கையிலெடுத்து ஒருவரி கூட வாசிக்காமல் அலமாரியில் வைத்துவிட்டு, சென்ற வாரம் மீண்டும் எடுத்தேன் சிற்பி தனபால் அவர்களின் தன்வரலாறு வாசிப்பிற்கு பிறகு, அதற்கும் இதற்கும் கலை சார்பு இருக்குமென்ற கருதுதலே இப்போது வாசிக்கத் தொடங்கியதன் காரணமென எண்ணத் தோன்றுகிறது.

முன்னும் பின்னுமாக காட்சி சித்தரிப்புகளைக் கொண்ட அவரின் வாழ்வு நாவலுக்குரிய தன்மையில் இருந்ததாகப்பட்டது, அதனாலோ என்னவோ தொடர்ந்து வாசிக்க அதன் போக்கில் உள்ளிழுத்துக் கொண்டது. சுதந்திரத்துக்கு முன் மற்றும் பின்னான காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளோடு ஊடோடி வாழ்ந்த இவ்வாளுமையின் ஓட்டம் சுவாரசியமும் வலியும் மிக்கதாகவுள்ளது. ஒரு காலகட்டத்தின் பயணங்கள் எத்தகையதாக இருந்தது என்பதை வாசிக்கையில் அக்காலத்திற்கான ஆவணமாகவும் இப்படைப்பை கொண்டாட முடியும்.

சனி, 25 ஏப்ரல், 2020

பால் பால்

மனிதர்கள் ஏன் பால்... பால் என்று பித்தர்கள் போல அலைகிறார்கள் எனத் தோணும் அவ்வப்போது.  பிறப்பிலிருந்து கல்லூரி காலம் வரை ஊரிலிருந்த பொழுதுகளில், காலையிலெழுந்ததும் செல்லத்துரை பெரியப்பா வீட்டுக்குச் சென்று கால் பாதங்களின் இடுக்கிலுள்ள பானையில் தயிரை  மத்து கொண்டு வெண்ணையை பிரித்தெடுக்கும் பெரியம்மையிடம் நூறு மில்லி பால் வாங்கி வருவேன். கருப்பட்டி காப்பியை வெண்மையாக்க பாலை கொஞ்சமாக ஊற்றித் தருவாள் எங்கள் அம்மை. தேநீர் கடைகளில் பாலாகிய வென்னீரில் காப்பிக்கொட்டை வடிநீர் அல்லது தேயிலைத் தண்ணீரை சிறிது கலந்து குடிக்கத்தரும் பழக்கமுண்டு இது முற்றிலும் வீட்டுப் பழக்கத்திற்கு எதிர்மறையானது. இம்முறையிலான கடைப் பழக்கம் திருமணம் போன்ற மற்றைய விழாக்களின் போதும் புழக்கத்தில் இருந்தது.

நகரத்து வீடுகளில் 2011-ம் ஆண்டு வரை காப்பியோ தேநீரோ அருந்தியதில்லை அல்லது நினைவிலிருக்கும் படியான அளவில் எண்ணிக்கையில்லாமல் இருக்கலாம், பின் அக்கா வீடுகளிலும் இம்மாதிரியான கடைப்பழக்கம் லிட்டர் கணக்கில் பால் புழங்குதல் எல்லாம் நிகழ்ந்தது. அலுவலகத்தில் பால் பற்றிய பேச்சு எழும் போது எந்த நிறுவனத்தின் பால் சிறந்தது என்று கேள்வி வரும், பாலை கொழுப்பு நீக்கியது, மிதமான கொழுப்புடையது, கொதிக்க வைத்தது என வகை வகையாகப் பிரித்து விற்பனை செய்யும் அரசினுடைய வழியே தவறென்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். இதில் சிறந்தது எதுவென எங்கிருந்து கூறுவது. அப்படின்னா பாலுக்கு என்ன செய்வீங்க, இப்போதான் தெருவில் நேரடியாக வந்து விற்கிறார்களே அதை வாங்கலாமே என இன்னொரு கேள்வி வரும் "அய்யா பால் வேண்டவே வேண்டாங்க" என்றால் அப்போ கால்சியத்துக்கு என்ன பண்ணுவீங்கம்பாறு இன்னொருத்தர், பாலில் மட்டுமே கால்சியம் இருக்குன்னு யாராவது சொல்லியிருக்காங்களா. இப்படியே போகும் பாலுக்கான பாடு. காலையில் வாயிலிருந்து வரும் கெட்ட வாடையின் மிகுதிக்கு காரணம் நுரை ததும்பும் பால் தான் என அதை வாங்குவதை நிறுத்தியுள்ளான் நண்பனொருவன், ஆய்வுக்குரியது.

கடந்த ஞாயிறன்று நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் சென்று வர அனுமதியளிக்கும் வகையில் விதிமுறைகளோடு நீல நிற அட்டையொன்று வழங்கப்பட்டது, வாங்கிக்கொண்டு வரும் வழியில் பின்னாலிருந்து வந்த தனிக்குரலொன்று கேட்டுத் திரும்பினேன் , புதன் கிழமையும் சனிக்கிழமையும் மட்டும் காலையிலிருந்து மதியம் வரை ஒருவர் மட்டும் வெளியில வரலாம்னு சொல்லுதாங்க அப்படின்னா தினமும் கடைக்குச் சென்று பால் வாங்குதவங்க என்ன செய்வாங்கன்னாரு. இதுவெல்லாம் ஒருமாதிரி ஒருத்தரையொருத்தர் திருப்தியடைய வைக்கும் சம்பிரதாயங்கள் மற்றபடி பக்கத்துக் கடைகளுக்கு நாம போய் வரலாம்னுதான் நினைக்கிறேன் என்றதும், கடைக்காரன் சொன்ன நேரத்துக்குத்தான் வரணும் இல்லன்னா பொருள் கிடையாதென்றுச் சொன்னால் என்ன செய்ய முடியும் என்றார், நல்ல கேள்வி என்ன நடக்குன்னு பாப்போமென்று சொல்லிவிட்டு பிரியும் தெருவில் வலப்பக்கம் நானும் நேராக அவரும் நடந்தோம். பொருட்கள் தட்டுப்பாடு அதிகமாகும் போது அவர் விருப்பம் போல் விலையை அதிகரிக்கும் கடைக்காரர் இந்த நேரத்திற்கு மட்டும் தான் பொருள் தருவேன் என்று சொல்லிவிடுவாரா என்ன.

முந்தாநாள் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானதும், எங்கள் பகுதிக்கான வாசல்கள் அத்தனையும் இரும்புத் தட்டிகளால் அடைத்துப் பூட்டப்பட்டன. தட்டியின் ஓரம் உள்ள இடைவெளியில் பால் வாங்கலாமென பெரியவர் ஒருவர் தெருவில் விசாரிப்போரிடம் நேற்று காலையில் கூறிச் சென்றார். தெருவில் பிரிந்து போனவரின் எண்ணம் என்னவாக இருக்குமென எண்ணிப் பார்க்கிறேன், நேற்றுவரை இருந்த அனுமதி கூட இன்றில்லை நாளை என்னவாகிப் போகுமோ. இதோ நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு.


ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

இது யாருடைய வகுப்பறை - வாசிப்பு


எப்பவுமே புதினம் வாசிக்கயிலதான் நினைவுகளின் பக்கம் ஓடியோடி மனம் துள்ளிக் குதிக்கும், ஆனால் அதற்கு நேர்மாறாக இது யாருடைய வகுப்பறை?” என்ற தலைப்புடைய கல்வி சார்ந்த இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நினைவுகளை முன்காட்டி வியக்க வைக்கிறது. எவருக்கும் மகிழ்வான இக்கட்டான நிகழ்வுகளை உள்ளடக்கிய காலமாக அவர்களுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் இருக்கும். அந்த சூழ்நிலையில் என்னோடிருந்த முகங்கள், ஆசிரியராகட்டும் அல்லது உடன் படித்த நண்பர்களாகட்டும் அவர்களோடு மானசீகமாக உரையாடியபடியே வாசித்துக் கொண்டிருந்தேன்.




நமது இன்றைய கல்விச் சூழலை புரிந்துகொள்ள அதன் தோற்றம் முதல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு கல்விக் குழுவின் செயல்பாடுகளையும் உள்ளடக்கி, பல்வேறு கல்வியலாளர்கள் முன்வைத்த கருத்தியல்கள், ஆசிரிய மாணவ உறவுகளின் இன்றைய தேவையென சிறப்பான குழந்தை/மாணவ மைய கல்விக்கான தீர்வை நோக்கி பயணிக்கிறது நூல். மிகப்பெரிய உரையாடலுக்கான களம் கல்வி என்பதை உள்வங்கிக் கொள்ள உதவும் நூல்.


நுலாசிரியர்: ஆயிசா இரா.நடராசன்




சனி, 11 ஏப்ரல், 2020

கொரோனா காலம்


கடந்த வருடம் சனவரியில் வாங்கிய ஏ3 அளவிலான 50 பக்கங்களைக் கொண்ட ஒவிய ஏட்டினை போன வாரம்தான் முழுவதுமாக பயன்படுத்தி முடித்தேன். எவ்வளவு குறைவாக வரைந்திருக்கிறேன் என எண்ணிக் கொண்டிருகிறேன். சென்ற வாரம் வாட்சப்-ல் ஒவியம் வரைய நண்பர்களை அவர்களது படங்களை அனுப்பக் கோரியும் முதல் ஐந்து படங்கள் கரிக்கோல் ஓவியமாக்கப்படும் என்ற நிலைத்தகவல் ஒன்றை பதிவிட்டேன், அதன் படி முதல் ஐந்து படங்களை வரைந்து ஏட்டினை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டேன்.

மார்ச் மாதம் அவசரப் பயணமாக ஊருக்குச் செல்கையில் புதிதாக வாங்கிய ஏ4 அளவும் 50-பக்கங்களும் கொண்ட ஏட்டினை தொடர்வண்டியிலிருந்த சில முகங்களை கோடுகளால் கிறுக்கினேன். இதோ பாதி புத்தகத்தினை கிறுக்கித் தள்ளிவிட்டேன் இவை சொற்பமே ஆனாலும் என்னைப் பொறுத்தவரையில் சிறப்பானதும் கூட, ஊரடங்கு முடியுமுன் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன், அப்படியாகிவிட்டால் நீர்வண்ண ஓவியம் வரையும் காகிதங்களையும் தூரிகைகளையும் கையிலெடுக்க வேண்டியதுதான், ஆனால் அது அத்தனை எளிதல்ல இரு சிறு பெண்களை வைத்துக்கொண்டு, வண்ணங்கள் அவர்களை ஈர்த்துவிடும்.

பேரமைதியில் வாசிக்க ஏதுவான சூழலை காலையில் ஏற்படுத்திக் கொண்டு குழந்தைகளின் விடியலுக்கு முன் சில பக்கங்களை வாசித்துவிட முடியும், அப்படிச் சில நூல்களை இந்த நாட்களில் வாசித்து முடித்திருக்கிறேன். கடந்த வருடம் என்ன என்ன வாசித்தேன் என எந்த பட்டியலும் வரிசைப் படுத்தவில்லை ஆனால் இந்த வருடம் அப்படியில்லாமல் கொஞ்சம் தீவிரமாகவே தலைப்புகளை “GOODREADS” உதவியோடு வரிசை படுத்தி வருகிறேன், எனக்கென்னவோ இந்த வருடம் புனைவுகளை நோக்கியே மனம் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது, என்னை சுய பரிசோதனை செய்ய ஏற்ற காலமாக இந்த வருடத்தை பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன். இத்தோடு அமேசான் கிண்டில் செயலி வழியாகவும் சில நூல்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழ் எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை இலவசமாக பதிவிறக்க அனுமதியளிக்கிறார்கள் அல்லது இப்பொழுதுதான் எனது கண்களுக்கு அகப்பட்டிருக்கிறது, எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் இதற்கு முழுமுதற் காரணம் என அவரது முகநூல் பதிவுகளால் அறிய முடிகிறது.

எழுத்தாளர் செல்வேந்திரன் எழுதியிருக்கும் வாசிப்பது எப்படி என்ற புத்தகத்தை நேற்று தொடங்கி இன்று நியாவிலைக் கடையில் பொருட்கள் வாங்க தனிமனித இடைவெளி விட்டு நின்று கொண்டிருக்கையில் இப்புத்தகத்தின் பெரும் பகுதியை கிண்டிலில் வாசித்து விட்டேன், மாலையில் குழந்தைகள் மச்சிக்கு சென்று விளையாடும் நேரத்தில் மீதமிருந்த பக்கங்களையும் முடித்துவிட்டேன், இன்னும் நிறைய புத்தகங்களை கிண்டில் நூலகத்தில் பதிவிறக்கியும் விட்டேன். இனி வாசிக்கும் பசியோடு இருப்பதைத் தவிர வேறென்ன.

வியாழன், 5 மார்ச், 2020

ஒட்டகம் கேட்ட இசை - வாசிப்பு

எழுத்துகளின் வழி கிடைக்கும் அனுபவங்களே வாசிப்பின் அடிநாதம் என எண்ணும் மனநிலை வரப்பெற்ற எனக்கு இத்தொகுப்பிலுள்ள அத்தனை கட்டுரைகளுமே பெரியதொரு அனுபவத்தை, நினைவு மீட்டலை, கற்றலுக்கான முன் ஏற்பாட்டை வழங்கியிருக்கின்றன. தேடலின் பாதையில் இளைப்பாறலுக்கிடையே கிட்டும் சக மனிதனின் நட்பு போல.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

குருவி மடம் - கசாரா

ஒட்டகம் கேட்ட இசை எனும் பாவண்ணனின் அனுபவக் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். குருவி மடம் என்ற கட்டுரை காட்டுக்கே அழைத்துப் போனது. சில ஆண்டுகளுக்கு முன் மகாராட்டிரத்தில் உள்ள கசாரா எனும் பகுதிக்கு தொடர்வண்டி பயணம் மேற்கொண்டு அங்குள்ள பள்ளத்தாக்கை கண்டு பிரமித்து நின்றதை நினைவில் அசைபோட வைத்ததோடு, இன்று காலை எழுந்ததும் இக்கோடுகளையும் கிறுக்க வைத்தது.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

இரவு- வாசிப்பினிடையே

வாசிப்பு எதற்கென்று கேட்டால் அதுவொரு தேடுதலுக்கானது எதைப்பற்றிய தேடல் என்பது வாசகனின் எண்ண ஓட்டத்தை பொருத்து மாறுபடக்கூடியது.  மிகச்சாதாரணமான மனிதனுக்கு தன் சுற்றத்தை நேசிக்க ரசிக்கத் தெரிந்தவனுக்கு தன் எதிரே புதிராக இருக்குமொன்றை அதாவது பெயர் அறியாத மலரினை அறிய முற்படுவதுபோலவும் நவீன ஓவியத்தின் உள்ளொளியை உணர்வதும் போலவுமான தேடல். தொழில் காரணமாக கேரளம் செல்லும் சரவணன் காயலுக்கு அருகிலுள்ள ஒரு புதிரான வீட்டு மனிதர்களை அறிய முயல்வதே தேடலின் தொடக்கம் அது இரவைப் பற்றிய தேடலாக தொடர்கிறது. ஓவியர் முகர்ஜி அறிமுகமாகும் இடத்தில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஓவியம் வரைய வேண்டுமென்ற எண்ணம் பீரிட்டு எழுகிறது.

நவீன ஓவியங்களை புரிந்துகொள்ள நவீன இலக்கியங்கள் வழிகோலும் என்பதை பிறழ்வின்றி நிகழ்த்திப்போகிறது இப்புதினம். ஒரு கீற்றிலிருந்து தொடக்கம் கொள்ளும் ஓவியம் பார்வையாளனை அடையும் பொழுதில் கீற்றுகளின் கோர்வையாகவும் உருவங்களை மீறி தனித்தெரியும் கோடுகளாகவும் சிதைந்து போவது நவீனத்தின் ஓட்டம். இரவுக்கும் பகலுக்குமான இடைவெளி எந்த வண்ணத்தால் கோடு கிழிக்கப்படும் அதுவொரு சாம்பல் நிறத்தினை ஒத்ததாக இருக்குமா

புதன், 19 பிப்ரவரி, 2020

முகங்கள்

9:55 இருக்கும் ஞாயிறன்று யாருமில்லா அரைவட்ட திறந்தவெளி அரங்கினைக் கடந்து சென்று, அமர்ந்து வரைய தோதான இடம் தேடிய பொழுதில் உதட்டை மென்று கொண்டிருந்த  ஜோடியொன்று கண்ணில் பட்டது, ஓரிரு அலை கோடுகளை மனதில் கிறுக்கிவிட்டு மணிக்கூண்டு அருகேயிருந்த இருக்கையில் செல்லில் எதையோ வெறித்துக் கொண்டிருந்த சிறுவனின் எதிர் பக்கமாக சென்று அமர்ந்தேன். இலைகளற்ற காய்ந்த காய்கள் தொங்கிக் கொண்டிருந்த மரம், தன்னை வரையச் சொல்வதுபோல் இருந்தது, மெல்ல சிரிக்க முயற்சித்த போது ஏதோவொரு பெயரைக் கூறி இருமுறை உரக்க அழைத்தபின் அச்சிறுவன் தலையை நிமிர்த்தியதும் இன்னொரு சுற்று போய் வருகிறேன் எனக் கூறி நகர்ந்தது அக்குரல், தலையை ஆட்டிவிட்டு தன் நிலையை அடைந்தான் இவன்.

மணிக்கூண்டு எதிரே தெரியும் மரங்களுக்கிடையிலான கோபுரத்தை வரையத் தொடங்கினேன், மனம் ஒருங்கிணையவில்லை.
பின் பக்கம் திரும்பி கூண்டை நோக்கினேன் கோடுகளை நீட்டும் பொழுதில் பின்பக்கம்ல் நாயொன்று "வவ்..வவ்" என்றது, கூண்டு அருகேயிருந்தும் எதிர் ஒலி வந்த பிறகுதான் அங்கும் நாய் இருப்பதை கவனித்தேன். குரைப்புக்கு நடுவே கோடுகளை நீட்டி மடக்கினேன், முடிக்கும் தருவாயில் சரவணன் அண்ணனும் வருணும் திறந்தவெளி அரங்குக்குள் வந்துவிட்டனர். அவர்கள் அருகே சென்று நலம் விசாரிப்புகளுக்குப் பின் வருண் அவரைப் பார்த்து வரைய ஏதுவாக அமர்ந்தார் நானும் பென்சிலையும் தாளையும் எடுக்கவும் "ஓ நீங்களும் வரையுரீங்களா" எனச் சொல்லி சற்று திரும்பி இருவருக்கும் ஏற்றதொரு கோணத்தில் தன்னை இருத்திக் கொண்டார், கீற்றுகளை உருவாக்கிய பொழுதில் நான்கு பெண்கள் அருகில் வந்து அவர்களை வரைந்து தர முடியுமா எனக்கேட்கவும், ஆளுக்கொருவராக இரண்டு பேர் எங்கள் எதிரே புன்னகையோடு காத்திருக்க, சற்று பதட்டத்துடனே அவளின் வலது காதுக்கு மேலுள்ள முடியிலிருந்து கிறுக்குகையில் ஓரப் பார்வையில் வருணின் பலகையைப் பார்த்தேன், அவரது தொடக்கம் வேறொரு கோணம். முதல் முறையாக அறியாததொரு முகத்தை நேரடியாக வரையும் நடுக்கம் இருக்கத்தான் செய்தது மனதளவில்.  இடையில் சிறு குழந்தையொன்று அவளது தந்தையுடன் வந்து மழலையுரையாடி கொஞ்சம் வரைந்துவிட்டும் சென்றாள்.
இடையில் முகேசும், சிறீநாத்தும் எங்களோடு சேர்ந்து கொண்டனர், இவர்களின் வேகம் ஆச்சரியமாகயிருந்தது. சரவணன் அண்ணன் முகேஷ் தீட்டிய நீர்வண்ண மோனலிசா ஓவியத்தை பற்றியும், கல்லூரி அனுபவத்தை பற்றியும்  அவரோடு உரையாடிய கணம் சிறப்பானதாயிருந்தது. முகம் வரைதலிலுள்ள நுணுக்கங்களை இவர்களோடு வருணும் சேர்ந்து பகிர்ந்து கொண்ட விதம் இத்தனை நாளாக இப்படியொரு தொடர்பற்றுப் போய்விட்டோமே என எண்ண வைத்தது.

வருணின் கீற்றுகள்

குழு மற்றும் வரைய முன்வந்த நான்கு முகங்கள்


அன்றைய பொழுதினை முடித்துக் கொண்டு காஃபி அருந்த சென்ற போது ராஜா முருகனும் எங்களோடு இணைந்து கொண்டார். பேச்சுகளுக்கிடையே முகேசின் வாழ்க்கை இன்னல்களையும், வரைதல் சார்ந்த அவரது தேடலும் புரிதலும் வியப்பும் ஆச்சரியமுமாக தொடர்ந்தது. இது தொடர வேண்டும்.

சனி, 15 பிப்ரவரி, 2020

இரயில் பயணத்தில்

எந்தவொரு பயணத்திலும் புத்தகமும், ஓவியம் வரையும் புத்தகமும் இன்றி பயணம் சாத்தியமாவதில்லை. வரைகிறோமா வாசிக்கிறோமா என்பதையெல்லாம் வெறும் கேள்வியாக சுருக்கிவிட்டு பயணித்தால் நிச்சயம் ஒரு தருணம் அமையும் வாசிக்கவோ வரையவோ.

கடந்த டிசம்பரில் ஊர் சென்ற போது முன்பதிவு செய்த படுக்கைகள் உறுதி ஆகவில்லை, ஆர்.ஏ.சி-ல் நின்றுவிட்டது எங்களை படுக்க விடாமல், தென்காசியில் இறங்கும் இருவரில் ஒருவர், குழந்தைகளைக் கண்டதும் அவரது படுக்கையை விட்டுத்தந்தார். சன்னலோரம் கீழ் படுக்கையில் அவளும் இயலும் தூங்க, நானும் ரத்திகாவும் மேலே நிலை கொண்டோம். விளக்குகள் எங்கள் பகுதியில் அணைபட்டாலும், அருகில் ஒளிர்ந்தது வரையும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது.






கல்லூரி மாணவர்களாக இருந்திருக்கக்கூடும், பேச்சும் விளையாட்டுமாக விளக்கை அணையாமல் பார்த்துக் கொண்டார்கள், அவர்களில் ஒருவனை வரையத் தொடங்கினேன். பக்கவாட்டில் மேல் படுக்கையில் அமர்ந்திருந்த, எங்களுக்கு இடம் கொடுத்தவர் எட்டி எட்டிப் பார்த்தார். அவரையும் வரைந்தேன், ரத்திகாவும் சில கோடுகளை கிறுக்கினாள். புத்தகத்தை பார்க்கக் கேட்டார், கொடுத்துவிட்டு அந்த பெட்டி முழுவதும் நோட்டமிட்டேன், நான் கோடுகளாக்கவே வந்தவர்கள் போல சிலர் நின்று கொண்டிருந்தனர். பின் சில நொடிகளில் விளக்கு துயிலடைந்தது.


சனவரி 26 அன்று ஞாயிரோவியம் குழுவோடு என்னை இணைத்துக் கொண்டேன். அண்ணா நகர் கோபுர பூங்காவில் ஒன்று கூடி வரைந்து கலையினை தேடிக் கண்டடையும் ஓர் வினோத விளையாட்டு. ஓவியர் ஜெயக்குமார் அன்றைய நாளை சிறப்பு செய்தார் அவரது கலை பற்றிய உரையாடலை சிறு குறிப்பாக முன்னரே எழுதியிருந்தேன்.

கடந்த ஞாயிரன்று கொஞ்சம் சீக்கிரமாக சென்று விட்டதால், தனியாக அமர்ந்து மரத்தினையும் அதனருகிலிருந்த ஒருவரையும் வரைந்து கொண்டிருந்தேன், ராஜேஷ் என்றொரு நண்பர் வந்தமர்ந்து கலை பற்றி உரையாடவும். பின் சில நேரத்தில் சரவணனும், வருணும் வந்து சேர்ந்தனர். தொடர்ச்சியாக பிற ஓவியர்களும் வந்தமரவும், ஓவியர் முனுசாமி அவர்களும் கலந்து கொண்டு உரையாடினார்கள். சிலருக்கு வெறுப்புண்டு, வரைவதற்காக ஒன்று கூடினால், தொடர் பேச்சுகள் அதை உருவாக்கத்தானே செய்யும்.

பெண் ஓவியம்

செவ்வாய், 28 ஜனவரி, 2020

இது அத்திகாவாப்பா!!

தூக்கம் வருகிறதென்று சொன்ன ரத்திகா அருகில் வந்தாள்,

இது என்னதுப்பா
ஓவியம்

இது யாருப்பா
சும்மா ஒரு உருவம்

இது யாருப்பா இயலா
ஆமாண்டா!

அப்போ நான் எங்கப்பா
உன்னைய வரையட்டுமா, இப்பிடி- உக்காரு

கொய்யாபழஞ் சாப்ட்டு வாய கழிவிட்டு- வாரேன்ன
சரி வா

அப்பா வந்துட்டேன்
இந்த இருக்கைல உக்காரு

கட்டிலில் தூவலும் (பேனாவும்) தாள்களும் கொண்டு நானிருக்க, எதிரே இருக்கையில் அவள். நான்கு வயதைக் கடந்தவள் முதன்முறையாக என் கோடுகளுக்கு உயிர் கொடுக்க அமர்ந்தாள்.
இதோ சில நிமிடங்களில் அவள் போன்ற உருவத்தை வரைந்துவிட்டேன். பார்த்தவள், புன்னகைத்துவிட்டு செல்பேசி கேட்டாள்.

உச்சரிப்பில் இன்னும் "ர" சரியாக வராத இளையவள் இயல் வந்தாள்!!

இது அத்திகாவாப்பா!!
ஆமாண்டா

திங்கள், 27 ஜனவரி, 2020

ஞாயிரோவியம்

சரவணன் சித்திரக்காரன் ஒருங்கிணைக்கும் ஞாயிரோவியம் குழு சந்திக்கத் தொடங்கி ஒருசில மாதங்களாகிவிட்டாலும் நேற்றுதான் காலம் வசப்பட்டது எனக்கு, அவர்களுடன் குழுமியிருக்க. அண்ணா நகர் கோபுர (டவர்) பூங்காவில் நிகழும் இச்சந்திப்பில் சிறப்பு அழைப்பாளராக ஓவியர் ஜே.கே வந்தமர்ந்து கலந்துரையாடினார்.

கலை சார்ந்து எத்தனையோ துறை இருக்க ஓவியங்களை உருவாக்கி அகமகிழ்ந்து கிடப்போருக்கான தளமாக இக்குழுச் செயல்பாடு தொடர ஏதுவான சிறப்பான கருத்துகளை ஜேகே வழங்கினார். ஒரு நாளைக்கு ஐம்பதுக்கும் குறையாமல் ஓவியங்களாக வரைந்து வருபவர் அடுக்கி வைத்த காகிதங்களெல்லாம் கலைப்பொருளாகி காட்சியளித்தது. இது அவரது தொடக்க காலம் முதல் தான் பழக்கிக் கொண்டதாகச் சொல்லும் திறன் வேறு எவரும் கொண்டிருப்பாரா எனத் தெரியவில்லை. நேற்று மட்டும் அச்சில மணிநேரத்தில் வரைந்து காண்பித்தவை அதிகம். 

வரையும் பரப்பின் வெளியை எப்படி தன் கட்டுக்குள் வைத்து முழு பரப்பையும் தனக்கானதாக மாற்றிக் கண் காணாததை கைகொண்டு கோடுகளால் அழகாக்கும் நுணுக்கத்தை அவர் பகிர்ந்ததும் எனக்குள் ஓர் திறப்பை அடைந்த உணர்வு. என்ன வரைகிறோம் எனத் தெரியாமல், தொடங்கி வரையும் பொழுது கிடைக்கும் பேரானந்தமே கலையாகிறது என்ற அவரது சொல்லிற்கு மறுப்பில்லை, கலை என்பது வெளிப்படுத்துவது அல்ல உணர்வது எனும் நோக்கில் புரிந்து கொண்டு முன்னகர்வோம்.

இங்கு எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது, உணர்வது மட்டுமே கலையென்றால் வரையாமல் எழுதாமல் பேசாமல் ஒரு படைப்பை எண்ணியெண்ணி இருப்பதும் கலையா, தேடுவோம்.

ஓவிய நிகழ்விவை சிறப்பாக ஒருங்கிணைப்பு செய்யும் சித்திரக்காரன் அண்ணனுக்கு வாழ்த்துகள்.

வெள்ளி, 24 ஜனவரி, 2020

நட்சத்திரவாசிகள் - வாசிப்பனுபவம்

கார்த்திக்-ன் டொரினா, நட்சத்திரவாசிகள் இரண்டுமே இந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் வாங்கினேன். எனக்கென்னவோ நாவலை முதலில் வாசிக்கலாம் என்றே எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது, அப்படித்தான் பொங்கல் விடுமுறைக்கு கையோடு அழைத்துச்சென்றேன் நட்சத்திரவாசிகளை. விடுமுறையில் தொடர்ச்சியாக வாசிக்க இயலாததால் அதற்குப் பிறகான மூன்று நாட்களின் சில மணிநேரங்களை எடுத்துக்கொண்டு வாசித்து முடித்தேன்.

மிக இயல்பாக ராமசுப்பு அறிமுகமாகிறார், கற்பனைக்கு எல்லை உண்டா என்றெல்லாம் வியாக்கியானம் செய்ய விரும்பவில்லை, ஆள் புகவியலாத இடத்துக்குள் எப்படி அந்த "ஸ்விகி" வண்டிக்காரன் புகுந்து போயிருப்பான் என வாசிப்பில் ஒரு நிமிடம் அப்புகவியலாத இடத்துக்குள் சென்று மீண்டு, புனைவிலும் ஒரு நியாயம் வேண்டாமா என்றெண்ணிக் கடந்தால். தகவல் தொழில்நுட்பத் துறை சாராதவர்களை அதிகம் குழப்பாமல் அதன் அக புற உலகினை வெளிப்படுத்தக்கூடிய எழுத்து, அத்தோடு சில வார்த்தைகளுக்கான விளக்கங்களை கொடுத்திருப்பது புரியாமையை தவிர்க்க ஏதுவாக உள்ளது. பேப்பர் போடுதல் என்ற சொல்லைக் கண்டதும் கூடுதலாக சில தடவைகள் அதை வாசித்துப் பார்த்தேன், இந்த "போடு" எனும் சொல்லை தமிழன் வாயில் இத்தனை அழுத்தமாக பதித்தது எது என்ற கேள்வியை எனக்குள் அடிக்கடி கேட்டுக்கொள்வதுண்டு, இப்படி ஒரு சில சொற்கள் மட்டும் அன்றாடத்தில் தவிர்க்க இயலாமல் பிறவார்த்தையோடு ஒட்டாக பயன்படுத்துவது நமது சொல் வறட்சி என்றே கருத வேண்டியிருக்கிறது. "கோபாலும்" "சி"யும் என எழுதியிருக்கும் வார்த்தைகளுக்கு சிறு விளக்கம் கொடுத்திருக்கலாம், இந்த மென்பொருள் பற்றி அறியாதவர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு, கோபாலை மனிதர் என நினைத்து வாசித்துவிட்டேன் முதலில், பின் சிரித்து மீண்டேன்.

பொதுவாக அலுவலகங்களில் காவலாளிகளாக இருப்பவர்களின் உலகம் பெரும் வியப்புகளைக் கொண்டவை, அவர்களின் வேலை நேரம் மற்றும் பணிச் சூழல் அலுப்பையும் மனச் சிதைவையும் தரக்கூடியவையாகவே இருக்கும், அப்படியான ஓர் மனிதரிலிருந்து கதையை தொடங்கியதே இப்புதினத்திற்கு சிறப்பை அளிக்கிறது. அலுவலகத்திற்குள் நுழைந்ததும் முதலில் பார்வையில் விழுவது அவர்களின் கண்களே. இவர்களின் உலகுக்குள் அதிகம் பயணிக்காமல் ஒரு முக்கிய நிகழ்வோடும் அறிமுகத்தோடும் ராமசுப்புவின் கனத்த பொழுதை முடித்துக்கொண்டு மற்றவர்களின் உரையாடல்களுக்குள் நெருடலின்றி நம்மை அழைத்துப்போகிறது கதையின் பாங்கு.

ஆர்.கே மற்றும் அர்ச்சனா இடையிலான உரையாடல் நுனிப்புல் மேய்ச்சலாக அவர்களின் மேல்நிலையிலும் கீழ்நிலையிலும் பணி செய்பவர்களை விமர்சனம் செய்து கொண்டு, அவளின் டிவோர்சியா என்ற ஒற்றை வார்த்தை அவர்களது பேச்சினை மடை மாற்றி உணர்வுப்பூர்வமானதாக்கி, குடும்ப வாழ்வின் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும் காரணிகளை மீரா நித்திலனின் உறவு வழியே நமக்குள் கடத்திவிடுகிறார் கதைசொல்லி கார்த்திக். நாவல் தொடர்கதை போல இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதனால் அத்தியாயத்திற்கு அத்தியாயம் காட்சியும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள், ஆனாலும் இவற்றிற்கிடையேயுள்ள தொடர்பில் எவ்வித குழப்பமுமின்றி எல்லா தரப்பு மனிதர்களையும் கதைக்குள் இழுத்துவர விரும்புவது போல புரிந்துகொண்டு தொடர்ந்து வாசிக்கலாம். அப்படித்தான் பள்ளி முடித்த கையோடு உதவித்தொகையோடும் பட்ட மேற்படிப்போடும் வேலையில் சேரும் விமலும் ராக்கேஷும் கதைக்குள் வருகிறார்கள், இவர்கள் புனைவின் போக்கில் என்னவாக மாறி நிற்பார்கள் என எண்ணிக் கனக்கிறது மனம். ஆனால் இவர்கள் கதையில் வெறும் குறியீடுகளாக மாறி நிற்பதாகப் படுகிறது. நாவலின் போக்கில் இவர்களின் தோற்றம் கல்வி மற்றும் மொழி சார்ந்த சமகாலத்தின் கோட்பாடுகளை  கேள்விக்குட்படுத்தி ஒதுங்கி நிற்கிறது.

நவீனம் அல்லது தொழில்நுட்பம் ஏற்படுத்தியிருக்கும் அவசர வாழ்க்கை முறைக்கு மிக முக்கியமான பங்களிப்பது செல்பேசியும் அதன் அழைப்புகளும், இவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் மனச்சிதைவை உண்டாக்கும் வல்லமை கொண்டவை, இச்சிக்கலை மிக சாதுர்யமாக தன் வாக்கியத்தில் உருமாற்றியிருப்பது வாசிப்பை உயிர்ப்புடன் நகர்த்துகிறது. "மனது வகுப்பில் தங்கவில்லை. வராத நேரத்தில் வந்த அழைப்பு. சீட்டுக்கட்டு விளையாட்டில் தேர்ந்தவனின் கைகளிலிருந்து பறக்கும் சீட்டுக்களைப் போல அவன் மனம் அந்தச் சிறுகணத்தில் வாழ்வில் சாத்தியமாகக்கூடிய அத்தனை துயரங்களையும் காட்சி காட்சியாக உருவி வீசியது" என்பதில் இக்காலகட்டத்தின் அதிர்வுக்குள்ளாக்கும் உளச்சிக்கலை காட்சிப் படுத்தியிருப்பது வெகு இயல்பாக நம்மை கதைக்குள் இழுத்துப் போகிறது.

இப்பணி சார்ந்த உட்கட்டமைப்புகளை, அதன் ஒவ்வொரு நிலையிலும் செயல்புரியக்கூடிய மனிதர்களைப் பற்றிய அவதானிப்பும் பண்புகளும் மிக இயல்பாக கூறப்பட்டிருப்பது அவர்களின் வாழ்வை புரிந்து கொள்ள போதுமானதாக இருக்கிறது. நேர மேலாண்மையில் இத்தொழிலில் பணி செய்வோரில் எவ்வளவு பேர் பின் தங்குகிறார்கள் என்பதை குறிப்பிட்டுச் சொல்லியிருப்பது மிகவும் கவனத்திற்குரியது, குறிப்பாக வேலையை ஒதுக்கிவிட்டு விளையாடுவதும், சமூக வலைதளங்களில்  பொழுதை கழிப்பதும் அல்லது வேலைகளுக்கிடையிலேயே (அப்படியும் ஆட்களுண்டு, ஒருவேளை காதில் பாடலோ வசனமோ ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டுமென மரபின் வழி, காடு கழனியில் வேலை செய்த நாட்டுப்புற மக்களின் பாடலிலும் பேச்சிலுமிருந்து நமக்குள் கடத்தப்பட்டிருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது) செல்பேசியில் படம் பார்ப்பதும், பாடல் கேட்பதும்,  இயல்பாக மாறியிருக்கிறது, ஒரு நாளில் எத்தனை முறை நமது விரல்கள் செல்பேசியை தடவிக் கொடுக்கின்றன என எண்ணிப் பார்த்தால் இது விளங்க வாய்ப்பிருக்கிறது. இதுவொரு பொது நோயாகவும் மாறியிருப்பது வருந்தத்தக்கது.

ஒருவன் எவ்வளவு திறமையுடன் வேலை செய்தாலும் அதை பிறர் கண்பட குறிப்பாக மேலாளர்கள் கண்ணுக்கு காட்சிக்குட்படுத்த வேண்டியிருப்பதன் மேனாமினிக்கித்தனம், பணியில் போலிகளை உருவாக்கும் வல்லமை கொண்டதாகப் படுகிறது. நிறுவனத் தலைமையிடம் தனது பணி முன்னேற்றத்தையும், தன் மதிப்பிடுதலிலும் அதன் வழி வழங்கப்படும் நிதி அதிகரிப்பையும் பற்றி எவ்வளவு கேள்விகளை தலைமையின் முன் வைத்தாலும் அதற்கு உரியது போன்ற விளக்கத்தை மட்டும் பதிலாக அவர்கள் எடுத்துரைப்பதை அறிந்த நித்திலனுக்கு இருக்கும் மனநிலையை பெரும்பாலானோரிடத்தில் உருவாக்கி வைத்திருப்பதில் பெருநிறுவனங்கள் வெற்றியடைந்திருக்கின்றன என்றே கருத வேண்டியிருக்கிறது. பார்கவி போன்றோர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்படும் பொழுது அவளிடமிருந்து வெளிப்படும் ஆத்திரம் ஒவ்வொருவரிடத்திலும் ஏதேனும் ஒரு காரணத்திற்காக அழுந்திக் கிடக்கும், சிலர் சாஜூவைப் போல கணக்கிடல்கள் மூலம் ஆத்திரங்களை ஆரப்போடுவதுண்டு. அதே பொழுதில் அந்நிறுவனங்கள் பணியாளர்களுக்காக சில திட்டமிடல்களைச் செய்கிறார்கள், அதை சரிவர பயன்படுத்தி குறிப்பிட்ட வெற்றியை அடையவும் வாய்ப்பளிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு ஆங்கில மொழித்திறன் வகுப்புகள், இதர தொழில்நுட்பம் சார்ந்த தகுதி மேம்பாட்டுக்குரிய பயிற்சிகள்.

சத்தியமூர்த்தியின் பழைய அலுவலகத்திலிருந்த பிள்ளையார் தற்போது சாய்பாபாவாக மாறியிருப்பதை பகடி செய்திருப்பது போன்ற சில காட்சிகளை நுட்பமாக அணுகவேண்டியிருக்கிறது. அதற்கிடையே "அவளால் வேலையை விட முடியவில்லை. குழந்தையை டே-கேரில் விட முடிந்தது" என்பது சினிமாத்தனமான வாசகமாக இருந்தாலும் அவ்வளவு எளிதாக கடந்து விட இயலாத இக்காலத்தின் மாற்றம். டீக்கடை பையனிடம் சிட்டையில் தான் கடனாக வாங்கிய பணத்தினை சாஜூ குறித்துக்கொள்ளச் சொல்லும் பொழுதில் "ஐ.டி வேலைய விட்டுட்டு பிரியாணி விக்கிறோம்" எனச் சொல்லி அலுவலகத்திற்கு முன் பிரியாணி விற்ற இருவர் நினைவில் வந்தார்கள். மணியின் கடை அரசாங்கத்தால் இடித்து நொறுக்கப்படுகிறது, காலம் யாரையும் ஓரிடத்தில் நிரந்தரமாக்கி அழகு பார்க்க எண்ணுவதில்லை மாறாக அது தன் நீண்ட தும்பிக்கையால் எல்லோரையும் அசைத்துப் பார்க்கிறது.

இத்துறைசார் மக்களுக்கு "ஆன்சைட்" (வெளிநாடு) செல்லும் கனவு தவிர்க்க இயலாமல் ஒட்டிக்கொள்வது, அதன் மாயத்தோற்றத்தை, மாற்றமற்ற ஒற்றைச் சுழல் தன்மையினை விவேக்கின் உரையாடல்கள் வழி மிக யதார்த்தமாக புனைந்திருக்கிறார் கார்த்திக். எல்லோரும் ஏதோவொரு நிர்பந்தம் காரணமாகவே இத்துறையில் நீடித்திருப்பதாகத் தோற்றமளிப்பது போல ஓர் பிம்பம், அது உண்மைதானா? அதேநேரத்தில் அர்ப்பணிப்போடு வேலை செய்பவர்களை அரவணைக்கத் தவறுகிறதோ பெருநிறுவனங்களின் வேலைப் பண்பாடு, விவாதத்திற்குரியதாக தெரிகிறது. எத்தனை பயிற்சிகள் எடுத்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல், இனி நீ தேவையில்லை என உமிழ்ந்துவிடும் சாத்தியக்கூறுகள் இங்கே அதிகம். இந்த பரமபத விளையாட்டில் சிக்காத ஆளேயில்லை என்பதை  தெளிவாக உணர்த்தியிருக்கிறார் நாவலாசிரியர். பிச்சைமணிக்கு இவர்களின் மீதிருக்கும் பார்வை அல்லது கருத்து எவ்வளவு உண்மையும் கரிசனமும் கொண்டதாக உள்ளது.

நாவலின் வடிவத்தை மிகச் சிறப்பாக கையாண்டிருக்கிறார் கார்த்திக், உதாரணத்திற்கு,  முப்பத்தியாறாவது அத்தியாயத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பிச்சைமணியோடு இரண்டாவது அத்தியாயத்தை முடிச்சிட்டிருப்பது. கடைசி அத்தியாயம் வாசிக்கும் பொழுதில் அது நம்மை முதல் அத்தியாயத்திற்கு அழைத்துச் செல்வதில் இருக்கும் சுழற்சி.

வாழ்வின் நிலையற்ற தன்மையின் காட்சிப் பொருளாகி நிற்கும் அத்தனை மனிதர்களும், இறுதியில் கனத்த அழுத்தத்தை மனிதில் இருத்துகிறார்கள்.