பக்கங்கள்

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

பூங்காவின் காலை பொழுதில் சில நொடிகள்

முன் காலையில்
தூவிய மழைத்துளிகள்
காலைப் பொழுதை
அழகாக்கி யிருந்தது...!

அமிழ்தம் தவழ்ந்த
மணற் பள்ளங்கள்
சிறு குட்டையாக
உருவகப் பெற்று
அழகியலை
தோற்றுவித்திருந்தன..!

சுற்றிலும் தொந்தி கணவான்கள்
தீராது உண்டு களித்ததை
தீங்காகக் கருதி
வருடும் மெல்லிசையுடன்
நடை பழகினர் !!

முதிர் குழந்தைகள்
மூச்சுப் பயிற்சியிலும்,
அடங்கா இரைச்சலுமாய்,
பேசுவதை விரும்பியே
நடையுடன் காலத்தை
வென்று கொண்டிருந்தனர்..!

ஆதவனின் புறங் கண்டு
மலரும் நகரத்து
மொட்டு போல்
சொற்பமாய் மலர்ந்திருந்தனர்
காதலர்கள்..!

கருத்துகள் இல்லை: