சனி, 10 ஜனவரி, 2015

விளக்குமாறு...

வீட்டில் என்னோட அலமாரிக்கு மட்டும் நேற்றே போகி கொண்டாடப்பட்டது, ஆம் அதுவும் அம்மாவின் வற்புறுத்தலால்.

மதிய உணவுக்கு பிறகு அலமாரியில் இருந்த (என் கண்களுக்கு ஒழுங்காகத்தான் இருந்தது) துணிகளையும் இதர பொருள்களையும் கீழே எடுத்து வைத்ததும், தூக்க கலக்கத்தில் இருந்த நான் ஒருமனதோடு ஒழுங்கு படுத்த தொடங்கினேன். (இரவு வேலை என்பதால் பகல் தூக்கம்).

"இந்த பேங்குத் தாளெல்லாத்தயும் இங்க கொண்டாந்து வச்சிருக்கான், குப்ப மாதிரி கிடக்கு.. ஒழுங்கு மருவாதையா வேண்டாததத் தூர எடுத்துப்போடு" எனக் கூறியவள்.  மளிகை, புத்தகம் வாங்கிய ரசீதுகளை தரையில் வைத்துவிட்டு, மறுபடியும் "ஒரே குப்பையாத்தான் கிடக்கு" எனக் கூறினாள்.

அடியில் கிடந்த மற்ற தூசிகளை வெளித்தள்ளிவிட்டு பென்சில்களை பார்த்தவள் "இதுயென்ன சின்ன பிள்ளிய மாதிரி பென்சில வாங்கி வச்சிருக்க" என்றாள்.

"படம் வரைததுக்காவ வாங்கி வச்சிருக்கேன்,  சின்ன பிள்ளிய மட்டுந்தான் வாங்கி வைக்குமோ? " என்று அமைதியானேன்.

" வர வர இந்த புத்தகம் மட்டும் கூடிக்கிட்டே போவுது" என்று அமர்ந்தவளை.

வம்புக்கு இழுக்கும் விதமாக

"நாளைக்கு ரெண்டு புத்தகம் வாங்கிட்டு வருவேன்" என்றேன் 

"ஆஆ..ங்...புத்தகம் வாங்குவானாம்லா புத்தகம்" என்றாள்

"புத்தகத் திருவிழா நடக்குதுலா, போய் வாங்கணும்" 

"அது எங்க நடக்கு"

அம்மாவுக்கு சென்னைல அண்ணன் அக்கா வீட்டை தவிர வேறு இடம் தெரியாது, நான் வேறு எங்கும் அவளை கூட்டிச் சென்றதில்லை என்பதுதான் உண்மை. எப்படி இடத்தை பற்றி விளக்குவது என்று யோசித்து விட்டு "அண்ணா சாலையில நடக்கு, நீயும் வேணும்னா வா" என்றேன்.

"வேணும்னா வா.. வாம் "லா ", கூட்டிகிட்டு போனா வருவேன்" என்றாள்

"உன்னைய ஞாயிற்றி கிழம கூட்டிகிட்டு போறேன்" என்றதும் எதுவும் கூறாமல் நகர்ந்து விட்டாள்.

மாலையில் இந்த பதிவை எழுதும் போது அருகில் நின்று பார்த்தவள் 

" என்னத்த எழுதுத" என்றாள்

"கத எழுதுதேன்"

"விளக்குமாறு.... கத எழுதுதானாம் லா  கத " விளக்குமாறை மட்டும் அழுத்திக் கூறிவிட்டு சமையலறைக்கு போய் விட்டாள்.

சில நிமிடம் கழித்து வந்தவள் அனுசரணையோடு " யாருக்கு அனுப்புவ" என்றாள்.

நான் சிரித்துக்கொண்டே மனதுக்குள் நினைத்தேன், நிச்சயமாக அம்மாவை புத்தகத் திருவிழாவுக்கு கூட்டிச்செல்ல வேண்டுமென்று.

வியாழன், 8 ஜனவரி, 2015

திரையுலக சாபம்

                           இப்பொழுதெல்லாம் திரைப்படம் பார்ப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டேன், தொலைக்காட்சியிலும் சரி திரையரங்கிலும் சரி. வெறும் பொழுதுபோக்குதான் திரைப்படங்கள்  என உருவாக்கப்பட்டிருக்கும் சூழலில் இப்படியான பொழுதுபோக்கு தேவையில்லையென்றே நினைக்கத் தோன்றுகிறது.

                            கவிஞர் ஒருவர் அவரது புத்தகத்தில் எழுதியிருப்பார், பொழுதுபோக்கு எனும் சொல்லையே தமிழிலிருந்தே உடைத்தெரிய வேண்டும், மாறாக பொழுதாக்கம் என்ற சொல்லை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, அவர் வேறுயாருமல்ல திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து அவர்கள்தான். பொழுதுபோக்கு படங்களுக்கு இவர் பாடல் எழுதினாலும் இந்தக் கூற்றிலிருக்கும் கருத்தை தவிர்க்க இயலாது.

                            இப்படியான திரைப்படங்களிலிருந்து விலகியிருக்க, பொழுதாக்கத்தை உறுதி செய்ய புத்தக வாசிப்பு பெரும் பங்களிக்கிறது. மேலும் இந்த காலத்தில் திரைப்படத்தின் விமர்சனங்கள் அநியாயத்திற்கு எழுதப்படுகின்றன அதுவே நமக்கு ஒரு முடிவையும் கொடுத்து விடுகிறது.

                            தங்கமீன்கள் வெளிவந்த பிறகு இயக்குனர் ராம் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டி ஒன்றை காண நேரிட்டது. பேட்டியின் இடையே ராம் கூறுவார் ''வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் ஒரு முழுநீள காமெடிப்படம் என்றுதான் அனைவரும் புரிந்து வைத்திருக்கிரோம், ஆனால் அதில் காட்டப்படும் சாதிய அடையாளங்கள், சாதிக்காகவும் கௌரவத்துக்காகவும் தான் அடிக்க கூட விரும்பாத மகளை கொலை செய்து விட்டதாகக் கூறி ஊராரை நம்ப வைத்துவிட்டு, மகளையும் மருமகனையும் மறைமுகமாக வாழவைத்துக் கொண்டிருப்பார் அப்பா. இந்த படத்தை நாம் குறை சொல்ல முடியாது''.
                             நிச்சயமாக இப்படியான கோணத்தில் யோசிக்குமளவுக்கு வசனமோ காட்சிப் படுத்தலோ படத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நீங்களெல்லாம் என்ன நினைக்கிறீர்கள்?. அது காமெடிப்படந்தான. (நகைச்சுவை என்று கூட சொல்ல முடியாதுதான்) எனக்கு சினிமா அறிவெல்லாம் கிடையவே கிடையாது. மேலும் ராம் எனக்கு மிகவும் பிடித்தமான இயக்குனர்.

                              ஆனந்த விகடனில் சில வாரங்களுக்கு முன் கமல் அளித்த பேட்டியில், ''கம்பரும் இராமயணத்தை காப்பியடித்திருக்கிறார், சினிமாவில் காப்பியடித்தால் என்ன என்பதுபோலவும், கலைஞர்கள் கற்று கொள்ளும் வரையில் காப்பியடிக்கத்தான் செய்வார்கள், திறமை வந்ததும் திமிர் வந்துவிடும், பின் விட்டுவிடுவார்கள்'' எனக் கூறினார். ஏதோ ஜனநாயக உரிமைபோல பேசுகிறார். கமலின் பெரும்பாலான படங்களும் எனக்கு பிடித்தமானவை.

                              ஒரு நம்பிக்கையில் சென்ற வாரம் கயல் படம் பார்த்தேன், தொடக்கத்தில் வரும் வசனங்கள் படம் எதையோ ஆழமாக சொல்லப்போவதாக இருந்தது.. ஆனால் ப்ச்... காதல்தான் எனது கழுத்தை இறுக்கியது.
                              நாயகனையும் நாயகியையும் சபலத்தோடு ரசித்துக் கடப்பதுதான் தமிழ் ரசிக ரசிகைகளுக்கு திரையுலக சாபம்.......

                                

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

வாசிப்பு 2014

                      கடந்த வருடம் வாசிப்பை பொறுத்தளவில் என்னை துரத்தி துரத்தி வாசிக்க வைத்தது இந்த எழுத்துக்கள். வாசித்த புத்தகங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதன் சிறிய நோக்கம் தான் இந்த பதிவு.


1) அறியப்படாத தமிழகம்                                        -  தொ.பரமசிவன்
2) இன்னொரு தேசிய கீதம்                                     -  வைரமுத்து
3) எனது பழைய பனையோலையிலிருந்து    -  வைரமுத்து
4) சிற்பியே உன்னை செதுக்குகிறேன்               -  வைரமுத்து
5) கூழாங்கற்கள் பேசுகின்றன                              -  எஸ்.ராமகிருஷ்ணன்
6) எனதருமை டால்ஸ்டாய்                                   -  எஸ்.ராமகிருஷ்ணன்
7) கேள்விக்குறி                                                            -  எஸ்.ராமகிருஷ்ணன்
8) பாதிராஜ்ஜியம்                                                         -  சுஜாதா
9) காற்றின் கையெழுத்து                                         -  பழநி பாரதி
10) ஒரு புளியமரத்தின் கதை                                 -  சுந்தர ராமசாமி
11) இன்னொரு கேலிச்சித்திரம்                             -  கல்யாண்ஜி
12) ஒரு சிறு இசை                                                       -  வண்ணதாசன்
13) பொன்னியின் செல்வன்                                     -  கல்கி
14) தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை                   -  அ.முத்துலிங்கம்
15) ஒருமனிதன் ஒருவீடு ஒருஉலகம்               -  ஜெயகாந்தன்


தற்பொழுது வாசிப்பில்

1) தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள்                  -  பிரபஞ்சன்
2) அக்கா (சிறுகதைகள்)                                            -  அ.முத்துலிங்கம்
3) அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்த்து  -  எஸ்.ராமகிருஷ்ணன்
4) கிளிநொச்சி                                                                -  தீபச்செல்வன்



இந்த வருடம் வாசிக்க விரும்புவது

1) காடு                    -  ஜெயமோகன்
2) சிறுகதைகள்   -  புதுமைபித்தன்



                       -------------------------------------------------------------------------------------

                      எனக்குள் எழும் கேள்விகளுக்கும், குழப்பங்களுக்கும் விடை கொடுத்துக் கொண்டிருக்கும் எழுத்துக்களுக்கு, என்னாலான சிறு சிறு படைப்புகள் மூலம் நன்றியோடு ஆலிங்கனம் செய்ய வேண்டும்.

                     பதிவுலக நண்பர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.