ஞாயிறு, 17 மே, 2020

சைகை

கடந்த ஒரு மாதமாக சைகை (Gesture) ஓவியங்கள் வரைய பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறேன், இதற்கு முன்னாலும் இப்படி முயற்சித்து சோர்வு தட்டியதும் அதை விட்டு ஓடி ஒழிந்திருக்கிறேன். அஜந்தா ஓவியப் பள்ளியில் பயிலுகையிலும் கூட கடனே எனக் கோடுகளை வரைந்து பயிற்சி மாதிரியாக அனுப்பியிருக்கிறேன், அதனளவில் அது நிறைவைத் தந்தாலும் ஒரு கற்பனைச் சித்திரத்தை வரைய சைகையை வரைந்து பழகுதல் மிக முக்கியமாகப் படுகிறது.

ஒரு முறை ஊர் செல்வதற்காக எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்த போது, தண்டவாளத்தின் மறுபுறம் அதாவது எனக்கு எதிர்புறம் பணியாளர் ஒருவர் அமர்ந்திருந்தார், அவரது நிலையான தோற்றம் வரையுதலுக்கான உந்துதலை அளித்தது என்றாலும் அவரது முகத்தைக் கடந்து கோடுகள் நீள மறுத்தன, அவரது முகம் தெளிவாகத் தெரியவில்லையானாலும் எனது எண்ணம் முழுவதும் அவரது முகத்தை வரைந்துவிடும் நோக்கத்திலேயே குவிந்திருந்தது. (அவர் அமர்ந்திருந்த காட்சியை இப்போது நினைவிலிருந்து பார்க்கிறேன் சற்று குனிந்து தன் செல்பேசியை உற்றுப் பார்க்கும் உருவம் அதோடு கையில் பணிக்கான கம்பியில்லா தொடர்புக் கருவி) சிறிது நேரத்தில் அவ்வெண்ணத்தைச் சிதறடிக்கும் வண்ணம் தண்டவாளத்தினை வண்டியொன்று ஆக்கிரமிப்பு செய்ததும் அதனை வரையத் தொடங்கினேன். ஏன் இப்படியென்றால் அந்த நாள் வரையில் முழு உடலையும் சிரத்தையோடு வரைந்து பார்த்திராத அல்லது காண விருப்பமில்லாத மனநிலை என்றோ கூறலாம். இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்.





ஓர் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஓவியக் கண்காட்சி திறந்தவெளியில் நடைபெற்றது, அதற்கு முந்தைய வருடங்களில் நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை ஆனால் அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழவில்லை. நான் சென்ற அந்த இரண்டில் முதல் ஆண்டில் ஓவியர் ஜோதி நீர்வண்ணத்தில் எல்லோர் முன்னாலும் வரைந்து காண்பித்தார், அதுவொரு நிலக்காட்சி பசுமையான நிலவெளியின் நடுவே ஒத்தையடிப்பாதையில் பெண்ணொருத்தி சிவப்புச் சேலையில் தன் வீடு நோக்கிச் செல்கிறாள், ஓவியத்தில் தூரமாக வீடும் இருந்ததாக ஞாபகம். அந்தப் பெண்ணை வரைகையில் அவர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை, ஒரு சிறு வட்டம், அதிலிருந்து கீழ் நோக்கி வளைவாக எதிரெதிர் திசையில் சீராக ஒன்றையொன்று இடையில் மோதிப் பிரியும் இரு கோடுகள் பின் வண்ணமிடுகையில் அதை அவளாக மாற்றிவிட்டார், விந்தை. இல்லையென்றால் இப்போது நினைவில் வருமா.

இன்று சைகை கோடுகளை வரைந்து கொண்டிருந்த பொழுதில் அவரின் கோடுகள் நிழலாடியது.





கருத்துகள் இல்லை: