வியாழன், 23 ஏப்ரல், 2026

வேடனும் காகமும்

ஒரு ஊர்ல ஒரு வேடன் இருந்தானாம். வேட்டைக்குப் போய்விட்டு ஊருக்குள்ள வந்தானாம். ஊர்ல பறவைகளையே காங்கலையாம். ஊர் மக்கள்கிட்ட கேட்டானாம் "என்ன பறவைங்க எதையுமே காங்கல"ன்னு. 

மக்கள் எல்லாரும் சொன்னாங்களாம் "நீ தான் எல்லா காட்டுல உள்ள பறவைங்களையும் வேட்டையாடிட்ட, ஊர்ல உள்ள பறவைங்களையும் வேட்டையாடிடுவன்னு பயந்துகிட்டு எல்லா பறவையும் வெளியூருக்குப் போயிட்டு".

அதுக்கு வேடன் சொன்னானாம் "நான் தான் ஊர்ல உள்ள பறவைங்களை வேட்டையாட மாட்டேன்னு உங்களுக்குத் தெரியுமே"

சொல்லிட்டு அரச மரத்தடியில போயி படுத்துக் கிடந்தானாம். அப்போ மரத்துல காக்கா ஒண்ணு வந்து உக்காந்து கா...கா... ன்னு கூப்பிட்டுதாம். வேடன் அந்தக் காக்காவ "பக்கத்துல வா" அப்படின்னு கூப்பிட்டானாம். அதுவும் வந்ததாம்.

எங்க உன்னோட நண்பர்களைக் காணோம்னு கேட்டானாம்.

அவங்க எல்லாரும் உனக்குப் பயந்து வெளியூருக்குப் போயிட்டாங்கன்னு சொல்லிச்சாம் காகம்.

நீ மட்டும் ஏன் போகவில்லைன்னு கேட்டானாம் வேடன்.

ஊர்ல உள்ள பறவையைத்தான் நீ வேட்டையாட மாட்டியே அதான் துணிவா இங்கயே இருக்கேன். அப்படின்னு சொல்லிச்சாம் காகம்.

அப்போ வேடன் சொன்னானாம் உன்னோட நண்பர்கள் கிட்டையும் இதச் சொல்லியிருக்கலாம்லா என்றானாம்.

அதுக்கு காக்கா சொல்லிச்சாம் எல்லார் கிட்டையும் சொன்னேன் ஆனால் அவங்க யாருமே கேக்காம பறந்து போய்ட்டாங்க.

அப்படியா அப்போ உன்னோட நானும் வாரேன் அவங்களை இப்பவே கூட்டிட்டு வந்துருவோம்னு வேடன் சொன்னானாம்.

உன்னைய பார்த்தா அவங்க எல்லாரும் பயந்து இன்னும் தொலைவா போயிருவாங்க. அதனால நீ ஒரு கடிதம் எழுதித் தா அதைக் கொண்டு போய் காமிச்சி அவங்களை கூட்டிட்டு வாரேன்னு காகம் சொல்லிச்சாம்.

வேடனும் கடிதம் எழுதிக் கொடுத்தானாம் அதைக் கொண்டு போய் தன்னோட நண்பர்களை கூட்டிட்டு வந்ததாம் காகம்.

எல்லாப் பறவைகளையும் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சியா இருந்ததாம். இனிமே எந்தப் பறவையையும் வேட்டையாட மாட்டேன்னு பறவைங்ககிட்டையும் மக்கள்கிட்டையும் சொன்னானாம்.

கருத்துகள் இல்லை: