தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன்
இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

கவிதையாக எழுதி வடிக்க
ஓவியமுன்னை உற்றுகையில்
எழுதுகோலின் மைவழி இறங்க மறுத்த
வார்த்தைகள் உன் விரலிடுக்கில்
சிக்கிக்கொண்டு சந்தத்தோடு
ஏளனம் செய்ய இசைகிறாய்..
ஓரப் புன்னகையில் விழும்
கதுப்புக் குழியில் தேங்கிப்போனவனை
மலர்விழிப் பார்வையில்
மதியிழக்கச் செய்து
மல்லி மலரை முழுமதியுன்
கருங்குழல் சூட
கள்ள விழியால் கபடம் செய்கிறாய்..
விழியில் வீழ்ந்து தூரம்
நிற்க கடவாமல்
நெருங்க விழைந்தவனை
பூக்கள் நிறைந்த கூடையோடு
வாசல்புறம் அடிவைத்து
பாத மணிகளினோசையில்
பரிதவிக்கச் செய்கிறாய்..
இனிநான் விலகி நிற்க
மறுக்குமுன் புன்முறுவலை..
அழைக்கும் விழிகளை ஏற்று
மெய்யான ரகசியம் இனி என் விழிகளுக்கு...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விரும்பிய தலைப்பிற்கான கவிதை:
செயலற்ற வார்த்தைக் கூட்டம்
நீண்ட பட்டைச்சாலையில்
பாதம் பதிக்கும் முதல் சிறுபொழுதிலும்
சாலையின் உறவை முறிக்கும்
நான்காம் சிறுபொழுதிலுமென
சாலையோரம் மலங் கழிப்பவனாகவும்
பச்சை போத்தலில் நீராகாரம் உறிஞ்சுபவனாகவும்
ஊர்வாரியில் கிடக்கும்
ஆகாரப் பொட்டலம் திரட்டுபவனாகவும்
அலைந்து திரியும்
நெகிழிப் பையை கால் சட்டையாக அணிந்தவனுக்கு
கந்தலான மேல்சட்டை மட்டும்
எவரோ கொடுத்திருக்க வேண்டும்
இல்லை அவனே குப்பையிலிருந்து
உருவியிருக்க வேண்டும்
கடந்த ஒரு ஆண்டாய்
இந்த ஐந்து பர்லாங்கு தொலைவில்
திரிபவன்; சில நேரங்களில் மட்டும்
குன்றின் திசை நோக்கி
வேற்று மொழியில் கதைக்கிறான்
அந்த குமரனுக்கு இது புரிந்திருக்கவில்லை போல
இன்றும் அதே நெகிழிப்பையும்
போத்தலுமாக திரிபவனுக்கு
இந்த வார்த்தைக் கூட்டத்தாலும்
இந்த வார்த்தைக் கூட்டத்தாலும்
எந்த பயனுமிருக்கப் போவதில்லை....