வெள்ளி, 28 ஆகஸ்ட், 2015

நவீனநகரமெனும் உலகமகா புழுகல்

நவீன நகரமாக (ஸ்மார்ட் சிட்டி) உருமாறப்போகும் நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது, இந்த கவர்ச்சியான வார்த்தை நமக்கு அளிக்கப்போவது என்ன?

நவீன திட்டங்களால் மேம்படுத்தப்படும் என செய்திகளின் வாயிலாக அறியும் வேளையில்  நடைமுறையில் இருக்கும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா எனும் கேள்வி எழுகிறது. மேலும் இத்திட்டம் மக்களின் அன்றாட வாழ்வில் ஏதும் மாற்றத்தை நிகழ்த்துமா இல்லை முகத்துச்சாயம் பூசிக்கொள்ளும் நடிகைகள் போல நகரம் தன்மீது  கட்டடங்களையும், விளக்குகளையும் அணிந்துகொண்டு அமைதியாகிவிடுமா?.

எதை மேம்படுத்தப் போகிறது அரசு சாலையில் பள்ளங்களையா? பேருந்தின் உடைந்த இருக்கையையா , துருப்பிடித்து தொங்குகின்ற ஏறும் இறங்கும் படிகளையா? இல்லை
நகரத்து சுவர்கள் அனைத்திலும் "நவீன நகரம் தந்த நமோவே அம்மாவே" என்றும்  இன்னபிற அரசியல் வியாதிகளை, சினிமா போலி புரட்சியாளனை தாங்கி ஒட்டிக்கொண்டிருக்கும் சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு தடை உருவாகுமா? அதற்கு சாத்தியமுண்டா நவீன நகரத்தில்?

இந்த செய்தியின் மறுபக்கம் வெளியாகியிருக்கும் அல்லது வெளியாகாமல் கரைந்துபோன அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க ஏதும் செய்வார்களா?

முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போல் இருப்பதை விட்டு இல்லாததை பற்றிக்கொள்ள அரசு துடிப்பதன் காரணமென்ன?

இருக்கும் திட்டங்களால் எஞ்சி கிடக்கும் ஏரியும் குளமும் சமவெளியும் காடுகளும் இத்திட்டத்தால் மூடுவிழா காண நேரிடுமோ?

தொலைநோக்கு திட்டமாக உருவாக்கப்பட்ட 4000 அணைகள் இருந்தும் தற்போது  நீருக்காக விழி பிதுங்குகிறோமே, இதே நிலை அல்லது இதைவிட மோசமான நிலை இந்த நகரத்தால் உருவாகினால் அதை எவ்விதம் ஏற்றுக்கொள்ளப் போகிறோம்?.

விவசாயத்தை ஊக்குவிக்க ஏன்  தயங்குகிறார்கள்? ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் பயிர்  மற்றும்   காய்கனிகளில் நச்சுத்தன்மை இருப்பதை சுட்டிக்காட்டுகிறதே அதைப்பற்றி அறிக்கை விடத் தயங்குகிற அரசு நவீன நகரத்தில் உருவாக்கப் போவது என்ன? நிச்சயம் விவசாயத்திற்கும் இத்திட்டத்திற்கும் நேரடி உருவாக்கத்திற்கான தொடர்பு இல்லையென்றாலும் மறைமுகமாக மிகப்பெரிய அழிவு இருக்கிறது என்பதை மறுக்க இயலாது.

இந்த நகரத்தில் மக்களின் பங்கு என்னவாக இருக்கும்? விதிமுறை மீறலை ரத்தத்தில் இறவாது கலந்தவர்கள்தான் நாம்.  ஓட்டுப்போடவும், மாநாட்டிற்கும், மறியலுக்கும் ஐநூறோ ஆயிரமோ வாங்கி நக்கிக்கொள்வதோடு அரசியல் கடமை முடிந்துவிட்டது என்ற மட்டமான எண்ணம். படித்து பட்டம் வாங்கியவர்களே இப்படி மனநோய் பிடித்துத் திரிந்தால் பட்டறிவை பாடையில் ஏற்றிவிட்ட டாஸ்மாக் பாமரனை என்ன சொல்ல?.

அரசியல் பேசுங்கள் சமுதாயம் முன்னேற முயற்சி செய்யுங்கள் என நண்பர்களிடம் கூறவிளையும் போது, சமுதாயமே வேண்டாம் வேறு ஏதேனும் பேசுங்களேன் என்று கூப்பாடு. நாளைய பிள்ளைகள்  நம்மைக் காறி உமிழும், அதிலேனும் மேனியிலுள்ள அழுக்கை சுத்தம் செய்யத் தயாராக இருப்போம். அரசை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை.

நவீனநகரம் உலகத்தரம் என்கிறார்கள், இதுவரை சந்தையில் உலாவும் உலகத்தரங்கள் நமக்கு அளித்த வாழ்வியல் நன்மை என்ன?

உலகத்தரமென்பது உலகமகாப் புழுகல் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நல்லதொரு அலசல் நண்பரே..

tamil சொன்னது…

அருமையான பதிவு பாராட்டுகள் பாண்டியன்

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான அலசல் நண்பரே...

Anandhar Kumar.R சொன்னது…

Good thought