"ஏம்ப்பா, எதுக்குப்பா கிருட்ணர் நரகாசுரன கொன்னாரு அதுக்குத்தான் கொண்டடுதோம்னு அம்ம சொல்லுது. ஆனா நீ பொய் கதைன்னு சொன்னலாப்பா." இந்த உரையாடல் கடந்த ஒரு கிழமையாக உலாவிக் கொண்டிருக்கிறது வீட்டில்.
ஏன் கொண்டாடுதோம்னு தெரியாது, நரகாசுரன் என்ற அரக்கன் கொல்லப்பட்ட நாளை அவனே வெடி வெடித்துக் கொண்டாடச் சொன்னதாக கதை சொல்வார்கள். அப்பா வாங்கித் தரும் வெடிகளை ஓட்டின் மீது வெயிலிலோ விறகடுப்பின் கதகதப்பிலோ காயவைத்து வெடிப்பது வழக்கம். அன்றைய காலை மட்டும் அதிகாலையாக இருக்கும் தெருவெங்கும் வாசலில் கோலங்கள், கோலமிடத் தெரியாத அம்மையிருக்கும் எங்கள் வீட்டில் பக்கத்து வீட்டு அக்காள்கள் கோலமிடுவது வழக்கம். வீட்டு பக்கம் வராத தாத்தா தீபாவளிக்கு மட்டும் வருவார் சாராய வாசனையோடு, ஒருமுறை பாம்பு ஊர்ந்து போகும் பட்டாசு வாங்கித் தந்த நினைவு, எதிர் வீட்டுச் சுவற்றையொட்டிக் கிடக்கும் நீட்டக் கல்லில் அமர்ந்து கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிடுவார். அவரின் இறப்புக்குப் பிறகு தீபாவளி அன்று உணவுப் படையலிட்டு அப்பா கண்கலங்குவார், தனியாக நினைவு நாளெல்லாம் கிடையாது.
"ஏம்ப்பா, அம்ம அப்படிச் சொல்லுது, ஆனா நீ அத பொய்யின்னு சொல்லுத."
தீபாவளி பற்றி நிறையச் செய்திகள், கதைகள் உலவுதுடா. பழங்காலத்தில் பூச்சிகளை வயல்வெளிகளிலிருந்து துரத்திவதற்காக வெடி பயன்படுத்தியதாக ஒரு புத்தகத்தில் படித்த நினைவிருக்கு.
"அப்போ வெடி அந்த காலத்துலயே கண்டுபிடிச்சிட்டாவளா!"
அம்மன் கோவில் திருவிழாக்களும் தீபாவளியும் அடுத்தடுத்து வரக்கூடியவை. ஊர் அம்மன் கோவில் திருவிழாவின் போது, வெடி வெடிப்பதற்கென்று சிறு வண்டியொன்று வைத்திருப்பார்கள், அதில் குழல் வடிவில் வரிசையான அமைப்புகள் இருக்கும் அதனுள் வெடிமருந்தை இறுக்கமாகத் திணித்து வெடி உருவாக்குவார்கள். பற்றவைக்கும் போது அதிகப்படியான ஒலியில் அதிர்ந்து சிறுவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கும். வானவேடிக்கையென்றால் ஒரு நான்கு தென்னங்குச்சிகளின் முனையில் வெடி இணைக்கப்பட்டிருக்கும், அந்த வெடியில் திரி இருக்காது, கயிற்றின் முனையில் தணல் ஏற்படுத்தி வாயால் ஊதி ஊதி வெடியை பற்றவைத்து வான் நோக்கி வீசி எறிவார்கள், இதற்கு தனித் திறமை வேண்டும் நானும் வெடிக்கிறேன் என்று பற்றவைத்ததும் பதறிப்போய் அங்குமிங்கும் வீசி எறிந்தவர்கள் உண்டு.
தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த புராணக்கதைகள் எழுத்துக்களாகவும் சொற்களாகவும் உலா வருகிறதே தவிர வட இந்தியாவைப் போல வெறுப்பைக் கக்கும் நாடகத்தன்மைக்குள் செல்லவில்லை. ராம நவமிக்கு அதாவது தசரா என்ற பெயரில் ராமன் ராவணனை அழித்தொளிக்கும் கதையினை உண்மை நிகழ்வுபோல அரங்கேற்றம் செய்கிறார்கள் ஆண்டுதோறும், ஆனால் அதே தசரா திருவிழாவின் போது இங்கே தென் தமிழகத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறும், குறிப்பாக முத்தாரம்மன் கோவில்கள். குலசை முத்தாரம்மன் கோவிலில் என்ன நடைமுறையென்று தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊர் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் ராமனுக்கு பட்டாபிசேகம் செய்யும் சாமியாட்ட நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது இது எதன் தொடர்ச்சி என்று அறிய ஆர்வம் அவ்வப்போது மேலிடுகிறது.
அதேபோல் தீபாவளிக்கும் அரக்கனை அழித்தொழிக்கும் நிகழ்வுக் காணொளிகள் கண்ணில் படுகிறது. இந்த அழித்தொழிக்கும் மனப்பான்மை ஏன் இன்னும் வடக்கர்களின் மனங்களில் இருந்து அகலவில்லை என்பதற்கு வரலாற்று உளவியல் காரணமாக இருக்கலாம்.
பள்ளியில் வெடிக்கமாட்டோம் வெடிக்கமாட்டோம் என பாடல் பாடிவிட்டு ஏன் வெடிக்க ஆர்வம் காட்டுகிறாய் மகளே என்றால், "இன்னைக்கு ஒருநாள்தாம்ப்பா வாங்கித்தாப்பா" எனும் அவள்களின் மழலையை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. "அப்பா கவிதா, கிசோர் ரெண்டுபேரும் தீபாளிக்கு நம்ம வீட்டுக்கு வாராங்களாம். நாஞ்சொல்லிட்டேம்ப்பா, மணிகண்டன் நகருக்கு பேருந்துல வரணும் அங்க அபூர்வா கடை இருக்கும், நாங்க வந்து உங்க ரெண்டுபேரையும் கூப்பிட்டுகிடுதோம்னு சொல்லிடேம்ப்பா, என்னைய தீபாளி அன்னைக்கு அங்க பஸ்டாப்புக்கு கூட்டிட்டு போவியா".
போவம்டா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக