எதிர்பாராத பொழுதில் கண்ணில் பட்டது லலித் கலை கழகத்தில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியின் ஒளிப்படங்கள். அஸ்விதா கலைக்கூடம் நிகழ்த்தும் இந்த குழு ஓவியக் கண்காட்சியில் ஐந்து ஓவியர்கள் அவர்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். சிலருக்கு விருந்து, சிலருக்கு மருந்து, சிலருக்கு பரந்து/பறந்து என்று பெரிய பெரிய ஓவியங்கள். ஏனென்று தெரியவில்லை வழக்கமாக உள்ளே இருக்கும் கருப்பு இருக்கைகள் வெளியே அமர்த்தப் பட்டிருந்தன. கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற கண்காட்சியின் போது நிதானமாக அமர்ந்து ரசித்து வந்தோம். இந்த முறை அக்கொடுப்பினை இல்லை.
பசிஸ்ட் குமார்
எல்லாமே அளவில் பெரியதான ஓவியங்கள் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டாலும் மீண்டுமொருமுறை வலியுறுத்த வேண்டியுள்ளது. இரண்டு கித்தான்கள் ஒன்றாக இணைத்து வைக்கப்பட்டிருந்தது, பார்வையாளருக்கு வலது பக்கம் மார்பளவு வரை வரையப்பட்ட மனிதமுகம் பின்புலத்தில் பச்சையும் வானமும் பரந்திருந்தது இடதுபக்க கித்தானில் அதன் தொடர்ச்சியான நிலப்பரப்போடு கல் தூண் போன்ற அமைப்பு, மனிதனும் இந்த கல்லும் ஒன்று என்று எண்ணிக் கடந்து போனேன். அடுத்து இன்னொரு மனிதன் படுத்திருக்கும் தோரணையில் அவன் மீது வெயில் மேலோட்டமாக படர்ந்திருக்கிறது. அடடா என்று சற்று பின்வாங்கிப் பார்க்க வைத்தது இரண்டு நிலப்பரப்பு ஓவியங்களும்.
மற்றொரு ஓவியம் ஒரு கனவுச் சித்திரம் போல இருந்தது. மனித உருவிலிருக்கும் மரக்கட்டையின் கண்ணாடிப் பிம்பம், அதில் மணல் பரப்பும் தொடு வானமும், ஓவியத்தின் பின்புலமும் மணற்பரப்பு மற்றும் தொடுவானம். நினைவிலிருந்து எழுதுவதால் அது கடல் பரப்பா அல்லது தொடுவானமா என்று இப்போது சற்று குழப்பமாக இருக்கிறது. கண்ணாடி இருக்கும் மர அலமாரியின் மேல் ஆணுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், சிகரெட், கவிழ்ந்து கிடக்கும் தேநீர் கோப்பை, கீழுள்ள அலமாரியில் இருக்கும் பிள்ளையார், பரந்து சென்று விழுந்து கொண்டிருக்கும் தாள், தூரத்து குப்பைகள். சிறந்த ஆழ்மன வெளிப்பாடுடைய ஓவியம். இதனை கண்டு திரும்பிய போது அந்த மார்பளவு மனிதமுகத்தின் கண்ணில் கல் தூணைப் பார்த்தேன்.மாயம்.
நிதி அகர்வால்
வண்ணக் கிறுக்கல்கள், குழந்தைத்தனம், துடிப்புமிக்க வேகம், கனவு என விரியும் இன்னொரு படைப்பாளி.
பருல் குப்தா
கோடுகள் வடிவங்கள் செய்யும் மாயத்தை நீர்வண்ணத்தில் பிசிறில்லாமல் அழகான வடிவமைப்பாக, கொஞ்சம் பொறுமையாக நின்று ரசித்தால் மாய வெளிக்கான திறப்பாக அமையும் ஓவியங்கள் இவருடையது. சில வினாடிகள் பார்த்துவிட்டு கதை கட்டுவது அதற்கு உண்மையாக இருக்க இயலாத தன்மையையே வெளிப்படுத்தும்.
பெனிதா பெர்சியாள்
இயற்கையின் பயணம், தனக்கு கிடைத்த மரம், கல், ஈசலின் இறகு, மண், என சுற்றியுள்ளவைகளைக் கவனிக்கும் தன்மையும் அதனை படைப்பாக்கத்திற்காக எடுத்துக் கொள்வதும் நாம் இன்னும் இயற்கையோடுதான் இருக்கிறோம் என்பதை எடுத்து இயம்புவது போலுள்ளது இவரது படைப்புகள். மரங்கள் தான் புத்தகம் என்பதனை தனது அலமாரியிலுள்ள சிலையாகிப் போன புத்தகங்களைக் கொண்டு நமக்கு ஏதேனும் மறைமுகமாக உரைக்கிறாரா இல்லை அதிலுள்ள பெயர்களும் அவை அடுக்கியிருக்கும் வரிசைகளும் ஏதேனும் சொல்ல முயற்சிக்கின்றனவா என்பதை வாசிக்க இன்னும் பொழுது வேண்டும்.
நீரஜ் படேல்
மின் பொருட்களிலுள்ள அட்டையின் இணைப்புக் கோடுகள் போன்ற வடிவமைப்புள்ள ஓவியங்கள், வடிவங்களை ஒருங்கிணைப்பு செய்து பார்வை விசித்திரத்தை வழங்கும் படைப்புகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக