மனித முகங்கள் வட்டம், நீள்வட்டம், கட்டம் என தோற்றங்கள் உடையவை, குறிப்பிட்ட இனங்களுக்கென்று தனித்துவமான வடிவங்கள் இருப்பதை "மனித இனங்கள்" என்ற புத்தகத்தில் வகைப்படுத்தியிருக்கிறார்கள். நாம் இன்று முகம் வரைந்து பழக இருக்கிறோம், அதற்கான பொது வடிவமாக வட்ட வடிவத்தைத் தேர்ந்தெடுத்து பயணிப்போம்.
எப்பொழுதுமே வரையும் பொழுது அளவுகோல், வட்டமிடும் கருவி அல்லது வளையல் போன்றவைகளை பயன்படுத்த வேண்டாம். கரிக்கோல் கொண்டு கையால் வரைந்து பழகுவதை விட அழகு வேறேதுமில்லை.
(நான்காம் வகுப்பு படிக்கும் போது அறிவியல் குறிப்பேட்டில் இடது பக்கம் கோடு இல்லாமல் படம் வரைவதற்காக ஒதுக்கியிருப்பார்கள். பல்லாரி வரைவதற்கான வீட்டுப் பாடத்தை முடிக்க செல்வி சித்தியை அணுகியதும் அவரது வளையலை கழற்றி வட்டமிட்டு வரைந்து தந்தது அரைகுறையாக நினைவில் இருக்கிறது. அதற்குப் பிறகு அந்த குறிப்பேட்டில் என்னென்ன வரைந்தேன் அல்லது வரைந்தார் என்பது துளியும் நினைவில் இல்லை.)
முதலில் வட்டம் ஒன்று வரைந்து கொள்வோம். வட்டம் அல்லது சிறிது நீள்வட்டமாகவும் இருக்கலாம்.
கண் வரைவதற்காக சிறு சிறு நீள் வட்டங்களை வரைந்து கொள்வோம். (சிலருக்கு இந்த வட்டம் நீள்வட்டங்களுக்கான அளவு, இடைவெளி எவ்வளவு என்ற வினா எழலாம், அதைப் பற்றி பின்னர் விரிவாகப் பார்க்கலாம்.)
மூக்குப் பகுதிக்கு சிறு வளைவுக் கோடு மற்றும் வாய் வரைவதற்கு ஒரு நீள்வட்டம், குறிப்பிட்ட இடைவெளி விட்டு படத்தில் உள்ளவாறு வரைந்து கொள்வோம்.
கண்களுக்காக வரைந்த நீள்வட்டத்திற்குள் கருவிழி வட்ட வடிவில் வரைந்த பின்னர். கண்ணுக்கு மேல் புருவங்களையும் வரைந்து விடுவோம்.
மூக்கினை அடையாளப்படுத்த வளைவுக் கோடு வரைய வேண்டும்.
உதட்டிற்காக வரைந்த நீள்வட்டத்தில், மேல் உதட்டிற்கு ஆங்கில "M" வடிவில் வரைந்துவிட்டு கீழ் பகுதியில் அரை வட்டத்தினை மேலும் அழகாக வரைந்து கொள்வோம்.
இருபக்கமும் காது வரைவதற்கு ஏற்றால் போல அரை வட்டங்களை வரைந்து தொடர்வோம்.
இருபாலினத்தின் முகமும் ஒரே வடிவத்தில் இருந்தாலும் சில மாறுதலுக்கு உட்படும் பொழுதில் பெண்ணாகவோ ஆணாகவோ மாற்றம் அடைகிறது. இந்த முகத்தை பெண்ணாக உருவகப் படுத்த முடிவெடுத்து தலை முடி வரைய இருபுறமும் வளைவுக் கோடுகள் வரைவோம். (இன்னொரு நாளில் ஆண் படம் ஒன்று வரைந்து பார்க்கலாம்)
தலை முடிக்காக மேல் பகுதியில் வளைவுக் கோடுகளை அரை வட்டம் போன்ற தோற்றத்தில் வரைந்துவிட்டு அதன் இருபக்கமும் அரைவட்ட வடிவில் சடை மாட்டி வரையலாம்.
அந்தச் சடை மாட்டியிலிருந்து முடியினைத் தொங்க விட இருபுறமும் வளைவுக் கோடுகள் வரைய வேண்டும்.
கழுத்துப் பகுதியைக் குறிக்க தாடைப் பகுதிக்கு கீழே இருபக்கமும் கோடு வரைந்து விடுவோம்.
கண்ணின் கருவிழியினை கோடுகளால் நிரப்பிக் கொள்ளவும். அதோடு புருவத்திற்கும் சேர்த்து வரைந்து கொள்வோம்.
பொதுவாக மேலுதடு இருட்டாகவும் கீழுதடு சற்று வெளிச்சமுள்ளதாகவும் வரைந்து கொள்ளலாம். (முகத்தில் இருள் வெளிச்சம் எப்படி பிரிப்பது என்பது ஆர்வத்தைத் தூண்டக்கூடியது, அதைப் பற்றி பின்னர் விரிவாகப் பேசலாம்.)
மூக்கின் வாளைவுக் கோடுகளை இங்கு சற்று சரி செய்து கொள்வோம்.
இப்போது தலை முடிக்கு பொறுமையாக வளைவுக் கோடுகளை வரைவோம்.
கம்மல், வட்டம் மற்றும் வளைவுக் கோடுகளை பயன்படுத்தி அழகாக வரைந்து விட்டு கழுத்துக்குக் கீழே சட்டைக்கான தோற்றத்தைக் கோடுகளால் உருவாக்குவோம்.
இறுதியில் பொட்டு வைத்து அழகாக்கிடுவோம்..
இது குழந்தைகள் பெரியவர்கள் யார் வேண்டுமானாலும் பயிற்சி செய்யக்கூடியது, உங்களுக்கோ குழந்தைகளுக்கோ ஏதேனும் வினாக்கள் இருப்பின் பின்னூட்டத்திலோ கீழ்கண்ட மின்னஞ்சலுக்கோ அனுப்பி வைக்கலாம்.
மின்னஞ்சல்: rajjeba@gmail.com
WhatsApp 9087151072
கற்பனை வெளி:
கடந்த பதிவில்:
கோடு என்ற சொல்லுக்கு எப்படி அந்த பெயர் வந்திருக்கும் என வினா எழும்பியதும் அதற்கான மூலத்தைத் தேட முயற்சித்தேன், ஒரு கற்பனை சிந்தனைக்கு எட்டியது. ஒரு சிறுவனிடம் அது பற்றிக் கேட்டதும், கோட்டிற்கு கோடே கோடு எனப் பெயர் வைத்திருக்கும் என்று சொன்னான். அடடா என்றிருந்தது.
கற்பனை: கோடு என்ற சொல்லை பிரித்து எழுதிப் பார்த்தால் க்+ஓ=கோ+டு=கோடு
இது சரியான பிரித்தெழுதலா என்று ஏதேனும் தமிழ் சான்றோரிடம் கேட்டறிய வேண்டும்.
இந்தப் பதிவில்: கோடு என்ற சொல்லுக்கு இணையாக வேறு சொற்கள் தமிழில் இருக்குமா. தேடிப் பார்ப்போம். உங்களுக்குத் தெரிந்தால் மேற்கண்ட மின்னஞ்சலுக்கு உறுதியாக அனுப்பி வையுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக