நெடு நாட்களாக
எதிர்பார்த்திருந்த பிற்பகல் வேளை
கரு மேகங்களுக்கும்
கருப்பை வெறுக்கும் வெண்மேகத்திற்கும்
இடையே உருவங்களைத் தேடி
தொலைந்து கொண்டிருந்தேன்
இல்லை
சிதறிப் போயிருந்தேன்
பருவம் வந்த
பசுவொன்று வெண்மேகத்திரளில்
ஒளிந்து கொண்டிருந்தது...
யார்மீதோ
அதீத கோபத்தில்
குதிரையொன்று கருமேக
உருவத்தில் பாய்ச்சலுக்கு
தயாரானது...
இப்படி
உருவங்களைத் தேடி கிறுக்கு
பிடித்தவன் போல்
கண்களை மேய விட்டிருக்கிறேன்..
சிந்திய தண்ணீரில்
மானையும் மயிலையும்
உள்ளங்கையில்
குழைத்து வைத்த சீயக்காயில்
மணல் மேட்டையும்
பிய்ந்துபோன
சுண்ணாம்பு பட்டைச் சுவரில்
தெரியும் உருவத்தை
நண்பனிடம் உரிமையோடு
அடித்துக் கூறும்போதே
நிறைந்து கொண்டிருக்கும்
போத்தலில் வெண்குமிழ்கள்
சேர்ந்து செதுக்கிவைத்த
சிலைகளையும் சிலாகித்திருப்பேன்..
நித்திரையில்
முகமறியா வரும்
உருவத்தையும் நிசத்தில்
தேடிக் கொண்டே
மறைந்து போன
முகங்களின் உருவத்தை
மற்றொரு முகத்தில்
தேடிக் கொண்டிருக்கிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக