வெள்ளி, 31 அக்டோபர், 2014

நிலப்படமும் நண்பனும்

      



                                     ரவி தனது கைபேசியில் இணையத்தை முடுக்கிவிட்டு பேரூந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தவன், வாகனங்கள் ஒலியெழுப்பிக் கொண்டு முன்னேற முடியாமல் வாகனநெரிசலில் இரைந்து கொண்டிருந்த கணத்தில் இடையில் புகுந்து சாலையின் எதிர்பக்கத்தை அடைந்திருந்தபோது கைபேசியின் வாட்சப் மென்பொருளில் நண்பர்கள் சில தகவல்களை பகிர்ந்திருந்தார்கள்.

         குறுஞ்செய்திகளை தன் இடது கை பெருவிரலால் விலக்கியவன், கூகுள் நிலப்படத்தை அழுத்தினான், அது இவன் நின்றுகொண்டிருப்பது வடபழனி நோக்கி செல்லும் ஆற்காடு சாலை என ஆங்கிலத்தில் காண்பித்ததோடு, அதனை அடையாளப்படுத்தும் விதமாக வான்நீல நிறத்தில் பளபளத்த அந்த பொட்டு வடிவம் குழலியின் நெற்றிப்பொட்டை நினைவுக்குள் அழைத்து வந்தது, ஒரு துளி கண்ணீரையும் விரயமாக்கியது.

        நிதானித்துக் கொண்டவன், நிலப்படத்தில் சென்று சேர வேண்டிய இடத்தில் புத்தகநிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் எழுதியதும் இவன் நிற்கும் இடத்திலிருந்து மெல்லிய கருவண்ணத்தில் பாதையை அடையாளப் படுத்தியது.

        நிலப்படத்தை துண்டிக்காமல் கைபேசியை உள்ளங்கையில் கிடை பக்கமாக வைத்துக்கொண்டு சாலையில் தொடர்ந்து நடந்தான், வானநீலப் பொட்டும் நகர்ந்து கொண்டே வந்தது.
மழைமேகங்கள் நான்கு மணியை ஆறு மணி சாயலுக்கு மாற்றியிருந்த நேரம், சாலையோரத் தேநீர் கடையில் வாழைக்காய் கடலைமாவுடன் கொதிக்கும் எண்ணையில் புணர்ந்து கொண்டிருந்ததும் இவனுக்கு குழம்பியின் மேல் உவகை ஏற்பட்டது.

       தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்தவன் பழக்கடையில் மாதுளம் பழங்களின் அடர்சிவப்பு விதைகளை பிரித்து நெகிழி கொள்கலனில் அடைத்து வைத்திருந்ததை கவனித்ததும். அந்த விதைகள் பற்களாக உருவங்கொண்டு ஓட்டமும் நடையுமாக செல்லும் நுகர்வோரை பார்த்துச் சிரித்து ஏளனம் செய்வதுபோல் இருந்தது இவனுக்கு.

      இப்போது நிலப்படத்தின் வானநீலப் பொட்டு சாலையின் வலதுபுறம் திரும்பும் தெருவின் முனையை அடைந்திருந்தது, இவனும் தான்.

      தெருவின் இடது பக்கத்தை பிடித்து நகரத்தொடங்கியவன், கைபேசியை தன் கால்சராயின் இடதுபையில் சொருகிக் கொண்டான்.வரும் சந்திப்பில் இடதுபுறம் திரும்பிய பின் முனிசாமி சாலையை அடையவேண்டுமென்பது நிலப்படத் தகவல்.

     இடதுபக்கம் திரும்பும் முன்னரே இவனுக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு வந்தது, சாலையில் இடதுபக்கம் திரும்பியதும் அமைந்திருந்த கடையில் பழச்சாறு, தேநீர், குழம்பி எல்லாம் கிடைக்கும் போல் தெரிந்தது. முட்டிக்கொண்டிருந்த மூத்திரம் கண்களை திருப்ப எதிர்புறத்தில் கட்டணக் கழிப்பிடத்தை கண்டதும் யப்பா என்று இருந்தது.

    காசு கொடுத்தாலும் மூக்கை பிடித்துக்கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும் என எண்ணிக் கொண்டான். மூச்சை விட்டும் விடாமலும் தவித்துக்கொண்டே சிறுநீரை வெளியேற்றினான். சிறுநீரகக் குப்பியின் நேர்மேல் எழுதப்பட்ட எழுத்துக்கள், எழுதியவனின் மன ஊனத்தை எள்ளி நகையாடிக் கொண்டிருந்தது இவனுக்கு கவிஞர் விக்ரமாதித்யனின்

"ஈனவும் தெரியாது
நக்கவும் தெரியாது
சில ஜென்மங்கள் இருப்பது
சொல்லமுடியுமா எதற்கென்று"


என்ற கவிதையை இந்த பொழுதில் ஞாபகப் படுத்தியது.

     மாலை நேரத்தில் குழம்பியால் கூடுதல் இன்பம் சேர்க்கப்படுவது தனி சுகம் தான், தேநீரோடு இந்த தன்மையை இவன் ஒருபோதும் உணர முடிந்ததில்லை.

     பழங்கள் மற்றும் மாச்சில் போத்தல்களுக்கு பின்னால் அமர்ந்திருந்தவரிடம் பத்து ரூபாயை கொடுத்து இரண்டு ரூபாய் சில்லறை வாங்கிக் கொண்டவன், நாவில் ஒட்டிக்கொண்ட குழம்பியின் திரைச் சுவையோடு சாலையில் நடை போட ஆரம்பித்தான். அடுத்த ஐந்து வினாடியில் முனுசாமி சாலையை அடைந்தவன், கைபேசியை உயிர்ப்பித்து புத்தக நிலையத்தின் இருப்பிடத்தை உறுதி செய்து கொண்டான். வானநீலப் பொட்டு இப்பொழுதும் இவனோடு நகர்ந்து வந்திருந்தது. வலதுபுறம் அமைந்திருந்த கட்டடத்தின் ஒரு முனையில் புத்தக நிலையத்தின் பெயர் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டு மேல்தளம் செல்லும் அடையாளம் கண்டவன், தன் கைபேசியில் இணையத்தின் தொடர்பை துண்டித்து விட்டு மேல்தளத்திற்கு படியேறினான், வானநீலப் பொட்டு தன் இருப்பை சாலையோரமே நிறுத்திக்கொண்டது.






கருத்துகள் இல்லை: