புதன், 20 மே, 2015

பதாகை பக்கிரிகள்

வளர்சியின் பாதையில் மூழ்கிப்போன அந்த ஓட்டுவீட்டின் எஞ்சியிருந்த சுவரில், அரசியல் தலைவர் ஒருவரின் உருவத்திற்கான கோடுகளை வரைந்து கொண்டிருந்தார். வேகத்தடை உயர எழுப்பி பின் அமர்த்தும் போதும், இறங்கிச் சென்று அவரது கோடுகளின் நுணுக்கங்களை கவனிக்க வேண்டுமெனத் தோன்றியது.

பள்ளியில் படிக்கும் போது படிப்பு எதற்காக, பாடம் எதற்காக என்று எரிச்சலுற்றிருப்போம், வளர்ந்து இந்த வயதில் வேலை எதற்காக, சம்பளம் எதற்காக என நினைக்க வைக்கிறது கலைகளின் மீதுள்ள அவதானிப்பும், ஆர்வமும். ஆனால் கலைகளை வளர்க்கவும் காசு வேண்டும் என்பது தான் நடைமுறை. இந்த கோடுகளையும் வண்ணங்களையும் குழைத்து இவர் உருவாக்கும் முகம் காசுக்காக மட்டுமே என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு மனமும் பேருந்தும் பல பள்ளங்களில் விழுந்தும் எழுந்தும் பம்மலைக் கடந்து ஊர்ந்து கொண்டிருந்தது.

இரண்டு நாள் கூட்ட நெரிசலில் படத்தின் அடுத்தடுத்த கோணங்களை பார்க்க முடியாமல் போனது வருத்தம் தான். மூன்றாம் நாள் முடிவடைந்திருந்தது. தலைவனை மூன்று கோணத்திலும், இரு பக்கத்தின் ஓரத்தில் வேறு வேறு இரு உருவங்கள், அதில் ஒருவர் இந்த தொகுதியின் ச.ம.உ, கிட்டத்தட்ட இருபத்தினான்கு பற்களும் தெரியுமளவு சிரித்துக் கொண்டிருந்தார். இவரது தலைவரை போலவே இவரும் செயல்படாத ச.ம.உ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

ஒன்றரை வருடத்திற்கும் மேலாக இந்த குன்றத்தூர்-பல்லாவரம் சாலையில் பயணித்து வருகிறேன். மேடு பள்ளங்கள் மிக அதிகமான ஒழுங்கற்ற சாலை, மழை பெய்தால் சாலையும் சாக்கடைதான். சில மாதங்களாக தண்ணீர் குழாய் பதிக்கிறேன் என்று சாலை மேலும் பலத்த சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கான அனுமதி கிடைத்தது 2009-ஆம் வருடம், செயல்படுத்தப் படுவதோ 2015-ஆம் வருடம் என ஒரு தகவல் வேறு, மக்கள் பிரச்சனையெல்லாம் மயிறு போலத்தான் இவர்களுக்கு. தன் மகளின் திருமணத்திற்கு வீட்டிலிருந்து விமான நிலையம் வரை தலைவனை வரவேற்க பதாகைகள் வைக்கத் தெரியும், ஆனால் பாமரனின் நிலையை புரிந்துகொள்ளத் தெரியாது, தெரியாதா இல்லை தெரியாதது போல நடிக்கிறார்களா?.

இதே கட்சியை சேர்ந்த நண்பர் ஒருவரிடம் பேசியபோது, இங்கு நடப்பது வேறு ஆட்சி நாங்கள் வெறும் ச.ம.உ ஆக இருந்து எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறோம் என்றார். கட்சியின் தலைவரும் இதே வாதத்தைத் தான் முன் வைக்கிறார், “சட்டமன்றம் போனால் மட்டும் பேச விடுவார்களா” என்று பத்திரிக்கை கூட்டத்தில் கதைக்கிறார். பொது இடத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவான பதில் உரைக்க வார்த்தைகள் அற்றவர், சட்டமன்றத்தில் மட்டும் என்ன சாதித்துவிட முடியும் ?!.

வெறும் வண்ணங்களையும், எழுத்துப் பதாகைகளையும் கொண்டே அரசியல் பிழைப்பு செய்யலாம் என இவர்கள் இருக்கிறார்கள், நாமளும் அப்படித்தான் இருக்கிறோமா? 



3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ம்... பெயருக்கேற்றது போல் இங்கு எங்கும் கல்லே...!

ஊமைக்கனவுகள் சொன்னது…

சமூக அவலங்களை உங்கள் அனுபவங்களோடு இணைத்து மொழிப்படுத்தும் விதம் ஆச்சரியம் அளிக்கிறது .

தொடர்கிறேன்.


நன்றி

KILLERGEE Devakottai சொன்னது…


தவறுகளின் தொடக்கம் மக்களிடமே நண்பரே.... அயோக்கியன் என்று தெரிந்தே மக்கள் மீண்டும் அவர்களுக்கே வாக்களிப்பது குற்றமில்லையா ? கேட்டால் எல்லோருமே அப்படித்தான் என்று சாக்கு போக்கு