பக்கங்கள்

திங்கள், 15 ஜூன், 2015

பொறியியலில் எந்த படிப்பு சிறந்தது

பொறியியலில் எந்த படிப்பு சிறந்தது எனக் கேட்டாள், “எந்த படிப்பு என்பதை விட மூளையின் சிறப்பு முக்கியம்” என்று சொன்னதும் சிரித்தாள்.

சென்ற வாரம் உறவினர் ஒருவர் திருமணத்துக்காக கீழப்பாவூருக்கு (பிறந்து வளர்ந்த ஊர்) சென்றிருந்தேன், எதை எதையோ பேசிக் கொண்டிருந்தோம். இடையில் கல்வி பற்றி பேச்சி வந்தபோது எனது கட்டுரை ஒன்றை வாசிக்கக் கொடுத்தேன். இணையதளத்தை தேடிச்சென்று படிக்குமளவு நேரமில்லாத உழைப்பாளிகளை இப்படித்தான் வாசிக்க வைக்க வேண்டியிருக்கிறது. வாசித்துவிட்டு அதைப் பற்றி எதுவுமே கூறாமல். அவரது உறவினர் தன் மகனை பதினொன்றாம் வகுப்பு படிக்க வைக்க நாமக்கல் அனுப்ப இருப்பதாகவும், அதற்காக ஒன்றறை லட்சம் பணம் செலவழித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

எதற்காக நாமக்கல் என்றேன், “அவன டாக்டராக்க” என்றார். சிரித்தேன். அவர் புரிந்துகொண்டு “படிக்க பிள்ள எங்கருந்தாலும் படிக்கும் மாப்ள” என்றார். இது உண்மைதான் எங்கே படிப்பது என்ன படிப்பது என்பதை விட, நமது ஆர்வமும், சிந்தனையும்தான் ஒருசேர பயணப்பட வேண்டும். சரியாகச் சொல்லவேண்டும் என்றால் மருத்துவம் படித்து விட்டு, எதற்காக படித்தோமெனத் தெரியாமல் பிறருக்கு உதவவும் முடியாமல், தனக்கும் எந்த பயனும் இல்லாமல் பெயருக்கு பின்னால் மூன்று நான்கு ஆங்கில எழுத்துக்களை மட்டும் பொறித்துக்கொண்டு தேமே என்று இருக்கிறார்கள். பொறியியலில் மேற்ப்படிப்பையும் முடித்துவிட்டு கடன் அட்டையை வீடு வீடாகவும், அலுவலகம் அலுவலகமாகவும் கூவிக் கூவி விற்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனால் நாமக்கல்லில் படித்தால் என்ன நாராயணபுரத்தில் படித்தால் என்ன படிக்க புள்ள எங்க இருந்தாலும் படிக்கும்.

இலவசமாக கண்டமாய்ப் போகும் மின்சாதனப் பொருட்களை கொடுக்கும் அரசு, மக்களுக்கு நல்லறிவு புகட்டும் புத்தகங்களை கொடுக்கலாம். சீறமைக்கப்படாத கல்வி முறையையும், நூலகத்தை திருமண மண்டபமாக மாற்றத் துடிக்கும் அரசு இதைச்செய்யும் என்று நினைப்பது பாமரத்தனம்.

என் கதைக்கு வருவோம், நான் பொறியியல் பட்டயப் படிப்பில் சேர்வது மட்டும்தான் என் விருப்பமாக இருந்தது, மின்னணுவியல் படிப்பதெல்லாம் எனது குறிக்கோளல்ல. எதையாவது படிக்க வேண்டும் அதுவும் அந்தக் கல்லூரியிலேயே படிக்க வேண்டும், மூன்று வருடத்தில் வேலைக்கு செல்லவேண்டும் என்பது மட்டும்தான் எனது நோக்கமாக இருந்தது. இரண்டாம் வருடத்திலிருந்து மின்னணு ஆர்வம் தொற்றிக் கொண்டது நெசம்.

முதல் வருடத்தின் அந்த இயற்பியல் வகுப்பு ஆரம்பிக்கும் முதல் நொடிவரை மின்விசிறியிலிருந்து வருவது செயற்கையாக உருவாகிவரும் காற்று என்றுதான் என்னளவில் தெரியும். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் படித்தவன் என்பதையும் நான் இங்கே கூறவேண்டும். மின் விசிறி காற்றை குவியப்படுத்திக் கொடுக்கும் ஒரு சாதனம் என்பதைத் தவிர, வேறு எந்த மகத்தான சாதனையையும் செய்வதில்லை என்பதை புரிய வைத்தார் அவர். இதை புரியவேறு வைக்க வேண்டுமா என்று நீங்கள் கேட்டால், உங்களைவிட நான் மக்கு என புரிந்து கொள்ளவும். மின்னணுவியல் என்பது இயற்பியலின் சொற்பமான ஒரு பகுதி என இரண்டாம் வருடத்தில் நான் புரிந்துணர்ந்தபோதுதான், அறிவியலை அறியாமையிலேயே கற்றிருக்கிறேன் என வெட்கினேன். 

காலம் பொன் போன்றதென்றால் கல்வி கண் போன்றது.

சாதிக்க வேண்டும் சம்பாதிக்கவும் வேண்டுமென ஆர்வமிருப்பவர்கள் அறிவியல் படிப்பினை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

அம்மா உணவகத்தில் சாம்பார் சாதம் சாப்பிட வேண்டுமென்று ஆசையிருந்தால் அரசாங்கத்தின் மாமன் மச்சான்கள் திறந்து வைத்திருக்கும் பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. 

நான் எங்க சோறு திங்கேன்னு கேக்கியளா .. வீட்லதான்…
5 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நல்லதொரு அலசல் நண்பரே...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உணர்ந்து இவ்வாறு பகிர்ந்து கொண்டதே பெரிய விசயம்...

தொடர்க... வாழ்த்துகள்...

சேக்காளி சொன்னது…

//மூன்று வருடத்தில் வேலைக்கு செல்லவேண்டும்//
ஒங்கூர்ல பொறியியல் படிப்பு மூணு வருசந்தானா. இது தெரியாம அக்கா மவன நாலு வருசஞ் சொல்லிக் குடுக்க கல்லூரில சே(ர்)த்துப்புட்டோமய்யா.

Pandiaraj Jebarathinam சொன்னது…

நான் படித்தது பொறியியல் பட்டய (Diploma ) படிப்பு தோழரே?
மேலும் பொறியியல் பட்டப்படிப்பு நான்கு வருடம்தான் அதில் எந்த மாற்றமும் இல்லை வருத்தப்பட வேண்டாம்.

சேக்காளி சொன்னது…

//நான் படித்தது பொறியியல் பட்டய (Diploma ) படிப்பு தோழரே? //
இப்பமும் நாந்தான் அவுட்டா!