பக்கங்கள்

புதன், 17 ஜூன், 2015

புதுமைப்பித்தனை நாடலாம்.

    புதுமைப்பித்தனின் சாமியாரும் குழந்தையும் சீடையும் என்ற சிறுகதைத் தொகுப்பு, விகடன் வெளியீட்டில் வந்தது. அவர் சிறுகதை எழுத ஆரம்பித்தால் ஒரே மூச்சில் எழுதி முடித்துவிடுவார் என்று படித்திருக்கிறேன். இந்த தொகுப்பில் துன்பக்கேணி எனும் அவரது சிறந்த கதையொன்று இருக்கிறது.

அவர் எனக்கு அறிமுகமானது துன்பக்கேணி கதைத் தலைப்பின் மூலம்தான், நான் கதைகள் வாசிக்க ஆரம்பித்த போது சுஜாத்தாவைத் தவிர வேறு எந்த எழுத்தாளரையும் அறிந்திராமல் இருந்தேன். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் ஆனவர்தான் புதுமைப்பித்தன்.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தை முன்னிருத்துகிறது, திருநெல்வேலிக்காரர் எனத் தெரிந்தபிறகு கூடுதல் மகிழ்ச்சி.

துன்பக்கேணி என்ற வார்த்தை அல்லது தலைப்பு அறிமுகமானதிலிருந்து சரியாக ஒருவருடத்திற்கு பிறகுதான் அந்த கதையை அண்ணா நூலகத்தில் வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரது எழுத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் , கதையின் ஆரம்பத்தில் கிராமத்தின் நில வர்ணணை அமையும்போது தடுமாற்றம் ஏற்பட்டது உண்மை. கதையின் போக்கு இலங்கையின் தேயிலைத் தோட்டத்திற்கு வேலைக்குச்சென்ற தமிழக மக்களின் வாழ்வியல் துன்பங்களில் நகரும் போது ஏற்பட்ட வலியும், அவர்களின் மாறாத தொடரும் நிலையும்  மனதை பிசைந்தது.

கதை வாசிப்பின் இடை இடையே பரதேசி படக்காட்சிகள் ஒத்திருந்ததை உணரமுடிந்தது. படக்குழுவினர் இந்தக் கதையை வாசித்திருக்க கூடும்.

இரண்டாவது முறை வாசிக்கும் பொழுதில் அதிக சிக்கல் இல்லாமல் இருந்தாலும், இருந்தது. அவரது பெரும்பாலான கதைகளில் இதை உணரமுடிந்தது, என்னளவில்.

இன்று காஞ்சனை என்ற கதையை இரண்டாவது முறையாக வாசித்தேன், காஞ்சனை தொண்டையில் சிக்கிக் கொண்டிருக்கும் போதுதான் இதை எழுதினேன். அளவான கேலி, மன ஓட்டம், இருட்டில் தொலைந்துபோகத் துடிக்கும் மனதோடு, எழுத்தாளனின் பிழைப்புவாதம், தற்புகழ்ச்சி அத்தனையையும் பேசுகிறார். தன் மனைவி சோரம் போகிறாள் என்ற மனக்கஷ்டத்தை யாரிடம் சொல்வது என்ற ஏக்கம், மனைவியை காப்பாற்ற வெளிப்படுத்தும் மனோபாவம். இத்தோடு சரித்திர சாசனங்கள் என்ற ஆங்கிலப் புத்தகம் வாசிக்கும் போது திகில் ஏற்படுத்துகிறார்.

இந்த ஆம்பிளைகளே இப்படித்தான் என்று அவரது மனைவி கூறுவதற்கு, என்ன பதில் சொல்ல என்று முடிக்கிறார் கதையை.

கதையில் புதுமையை கற்றுக்கொள்ள புதுமைப்பித்தனை நாடலாம்.

4 கருத்துகள்:

KILLERGEE Devakottai சொன்னது…


நானும் அவரின் சில கதைகள் படித்திருக்கிறேன்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நாடலாம் உண்மை...

Chellapandian cpn சொன்னது…

புதுமைப்பித்தனை வாசித்தால் ரசிக்கலாம், நிறையவே படிக்கலாம்.

ஊமைக்கனவுகள். சொன்னது…

வாழ்த்துகள் நண்பரே!

இது ஒரு பெருநகர்வு.

கல்கியில் இருந்தும் சாண்டில்யனில் இருந்தும் சுஜாதாவில் இருந்தும் பாலகுமாரனில் இருந்தும், நகர்ந்து புதுமைப்பித்தனைப் படித்தல்.

சிறுகதையின் பல்வேறு சாத்தியக் கூறுகளை நாற்பதுகளிலேயே முயன்று பார்த்தவன் அவன்.

தனக்கே உரிய அங்கதமும் நகைச்சுவையுமாய் கை பிடித்துக் காட்டிப்போகும் சாகசம் புரியும் அவன் எழுத்துகள்.

பொம்மைக்குள் உயிர்க்காற்றை ஊதும் எழுத்து.

நன்றி.