புதன், 15 பிப்ரவரி, 2017

ஓவிய சந்தை

ஓவியங்களுக்கான இடம் திறந்தவெளியில் அமைந்திருப்பது பெருமகிழ்ச்சியை மனதிற்குள் உருவாக்கியிருக்கின்றது. மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவிற்கு இதற்குமுன் ஒருமுறை சென்றிருக்கிறேன் அது நேரத்தை போக்குவதற்கு, கடந்த ஞாயிறன்று பொழுது ஆக்கத்திற்காக செல்ல நேர்ந்தது. ஐம்பது ஓவியர்கள் தங்களது ஓவியங்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தார்கள். ஒவ்வொருவரும் அவரவர்களுக்கான சிறப்புகளை கரிக்கோல் கோடுகளாலும், நீர் வண்ணத்திலும், எண்ணெய் வண்ணங்களிலும், காகிதத்தை வெட்டி ஒட்டியும் வெளிப்படுத்தியிருந்தனர். அங்கே ஒன்பதாம் வகுப்பு சிறுவன் வரைந்திருந்த ஓவியங்கள் வெகுசிறப்பான தோற்றங்களை ஏற்படுத்தியது, பாராட்டிவிட்டு நகர்ந்தேன்.
ஓவிய நுணுக்கங்களை கண்டடைய வரைந்து பழகுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல கலைஞர்கள் வரையும் கோடுகளை, தீட்டும் வண்ணங்களை அவதானித்தல் நமக்குள் துளி மாற்றத்தையேனும் விளைவிக்கும். ஓவியர் மணவாளன் வரைந்த உருவப்படமாகட்டும், ஓவியர் ஜோதி வரைந்த நீர்வண்ண நிலப்படமாகட்டும் வரைதலுக்கான புரிதலை ஏற்படுத்த தவறவில்லை. ஓவிய சந்தை வெறுமனே வியாபாரக்களமாக மட்டுமில்லாமல் கற்றலுக்கான விதைகளைத் தூவும் பணி பாராட்டுதலுக்குரியது வாழ்த்துகள் ஓவிய நண்பர்களே.

கருத்துகள் இல்லை: