ஞாயிறு, 18 மே, 2025

அக்கா குருவி 21

நாங்கள் 
அடுக்கி வைத்து 
வாழ்வு நல்கிய செங்கற்கள் 
நொறுங்கிக் கிடக்கின்றன
 
இடிபாடுகளுக்குள் 
எங்கள் 
ஆட்காட்டி விரலை
தேடிக் கொண்டிருக்கிறோம்



புதன், 14 மே, 2025

யார் கையில் அதிகாரமளிக்கிறோம்

நேற்று மதியம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, ஏன் என்று தெரியவில்லை மாலை வரையில் மீளவில்லை. மடிக்கணினி மின்சாரம் தீர்ந்து உறங்கிவிட்டது. பழுது நீக்க கொடுத்திருந்த ஈருருளியை எடுத்து வருவதற்காக வெளியேறினேன். தெருவைக் கடந்து சாலையை அடையும் போது போக்குவரத்து நெருக்கடி. இடது பக்கம் குடிசை வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டிருந்தது. மக்கள் அவரவர் வீட்டில் இடிபாடுகளுக்கிடையே சோர்ந்து அமர்ந்திருந்தனர்.

அவர்களின் நாளை என்னவாகும் என்ற‌ அதிர்வோடு நடந்தேன். இவர்களுக்கு இடம் ஏதும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. முன்பொருமுறை அப்பகுதியில் கடைகளை இடிக்கத் தொடங்கியதும் மக்கள் போராட்டம் செய்தனர், வீடுகளை கை வைக்கவில்லை இப்போது வீடுகள் மொத்தமும் தரைமட்டம். ஆனாலும் இன்று காலையில் இடிந்த பகுதியில் அடுப்பு எரிந்தது, இன்னும் யாரையேனும் நம்பி உள்ளனரா எனப் புரியவில்லை.

இரு வாரத்திற்கு முன்பு பல்லாவரம் குன்றத்தூர் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது செய்தியாக வந்தது. தொடர்ந்து அனகாபுத்தூரில் போராட்டம் நடந்ததாகவும் செய்தி. இந்தப்பக்கம் குன்றத்தூரில் அப்படி ஏதும் போராட்டம் நடந்ததாகத் தெரியவில்லை. பொதுவாக இப்பகுதியில் நடக்கும் நிகழ்வுகளில் காணக்கிடைக்கும் அரசியல் முகங்களை இரண்டு நாளாக எங்கும் காணவில்லை. நாம் யார் கையில் அதிகாரத்தைக் கொடுக்கிறோம்...




திங்கள், 12 மே, 2025

மிதிவண்டி

குன்றத்தூரில் உள்ள தமிழ்நாடு மிதிவண்டிக் கடையில் மூத்தவளுக்காக குட்டி வண்டி ஒன்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினோம். நான், ரத்திகா மற்றும் இயல் மூவரும் சென்றோம். மிதிவண்டியை வாங்கி ஈருருளியின் பின்னால் கட்டிய போது இயல் தனக்கும் ஒன்று வேண்டுமென அழத் தொடங்கி விட்டாள். இன்னொரு நாள் வாங்கலாம் என்று சொன்ன பிறகும் அழுகையுடன் வீடடைந்தோம்.

நாற்பத்தைந்து நாட்களுக்குள் ஒரு முறை இலவயமாக பழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற அதியற்புதமான வாய்ப்பும் வழங்கப்பட்டது. 

சில மாதங்களில் வண்டி ஓட்டுகையில் சங்கிலி தானாகக் கழன்று கழன்று தொந்தரவுக்கு உள்ளானது. இரு நாட்கள் பார்த்துவிட்டு ஒருநாள் மாலையில் அதனை ஒக்கிடுவதற்காக ஈருருளியில் எடுத்துச் சென்றேன். அங்கே வெளியில் இருக்கும் பழுது நீக்குபவர் பார்த்துவிட்டு கண்ணாடி அறைக்குள்ளிருப்பவரிடம் சென்று கூறியதும் அவர் புதிய சங்கிலி மாற்றவேண்டும் செய்யலாமா என்றதும் விலையை கேட்டுவிட்டுச் சரியென்றேன்.

பின்னர் இன்னும் சில மாதங்களில் மீண்டும் அதே தொந்தரவுக்கு உள்ளானது. என்னடா இது என்று மனம் ஊரிலிருந்த எனது மிதிவண்டியில் சுற்ற ஆரம்பித்தது ஒருமுறை பின் பக்கச் சக்கரத்தில் கல் வெட்டியதால் அங்கங்கே ஏற்பட்டிருந்த பிளவுகளால் மேல் ரப்பர் பகுதியை மாற்றியதும் நிறைய முறை ஓட்டை விழுந்ததால் உள்ளிருக்கும் ரப்பர் குழாயினையும் மாற்றியதும் நினைவில் ஊடாடியது. சங்கிலி மாற்றியது வரலாற்றில் இல்லை என்பது விளங்கியது.

மீண்டும் அந்தச் சங்கிலியை மாற்ற நேர்ந்தது. அடுத்த சில நாட்களில் அதே போல் கழன்று விழுந்தது. இந்தமுறை திசை மாறினேன். நாங்கள் இருக்கும் பகுதி குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் வருமென்றாலும், அடையாற்றுப் பாலத்தைத் தாண்டியதும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனகாபுத்தூர் தான் மிக அருகாமை நகரம். 

பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் மிதிவண்டிகள் நிறைந்த தூசி படிந்த ஒரு கடை, பாதாளச் சாக்கடைப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் புழுதியை நன்றாகப் பூசிக் கொண்டு மாலை வெயிலுக்கு பழுப்பு நிறத்தை வெளிப்படுத்தியது. மிதிவண்டியை உருட்டிக் கொண்டே சென்றேன். பிரச்சினையை சொன்னதும் கண்ணாடியை உயர்த்தி வண்டியை கவனித்தவர், சில நிமிடங்களில் சங்கிலியின் ஒரு பல்லை மட்டும் கழற்றிவிட்டு பின்னர் இணைத்து மாட்டிவிட்டார் இன்று வரை ஓடுகிறது.