புதன், 20 ஜூலை, 2016

ஆயிரம் வண்ணங்கள் - வாசிப்பு

வண்ணங்களும் கோடுகளும் அதன் நிழல்களும் என்னுள் நிகழ்த்தும் பரவசத்தை தேடித் தேடி இன்புறுவதைத் தவிர வேறொன்றும் பெரிதாக இவ்வாழ்வில் இல்லை என்றே கருதுகிறேன். இரவிற்கும் பகலுக்குமான விளிம்பில் தேங்கி நிற்கும் கருமை படர்ந்த அதிகாலையில் சூரியனின் எழுச்சியை பிரதிபலிக்கும் செந்நிற கீற்றுகள் வரைந்து வைக்கும் கோலங்கள். சுட்டெரிக்கும் வெள்ளை வெயில். வெள்ளை மேகம். மழைக்காலத்து மாலைநேர இருள் என வானம் காட்டும் பேரழகை தூரிகையில் எழுத உள்ளத்தில் எழும் கிளர்ச்சி நிலை. இம்மனநிலையை எங்கேனும் தேங்கிப்போய்விடாது நகர்த்திக்கொண்டிருக்கும் எழுத்துக்களை வாசிக்க கிடைக்கும் பொழுதுகளின் இனிமை அளப்பரியது.

எஸ்.ராமகிருஷ்ணனின் கதைமொழியை வாசித்ததைவிட கட்டுரைகளை அதிகமாக உள்வாங்கியிருக்கிறேன். எனதருமை டால்ஸ்டாய், கூழாங்கற்கள் பேசுகின்றன, துணையெழுத்து இவற்றோடு அப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருக்கிறது எனும் சிறுகதை தொகுப்பு. இப்பொழுது ஆயிரம் வண்ணங்கள் எனும் நுண்கலைகள் பற்றிய கட்டுரைத் தொகுப்பும் சேர்ந்திருக்கிறது.

ஓவியங்களை ஓவியர்களைப்பற்றின புத்தகங்கள் திரைப்படங்கள் வாசிக்க பார்க்க கிடைக்குமா என்ற பேராவலுடன் இணையத்தில் தேடும் பொழுதுகளில் வகை வகையாக அணிவகுத்து நிற்கும் இணைப்புகளில் குழம்பிப்போன தருணங்கள் பல. அதிலும் சில சமயம் வெற்றி பெற்று வான்காவின் ஆவணப்படம் இரண்டு பார்த்திருக்கிறேன். இக்கட்டுரைகளின் இடையிடையே இவர் சில நாவல்கள் மற்றும் திரைப்படம் பற்றியும் பேசியிருப்பது உவகை.

1 கருத்து:

'பரிவை' சே.குமார் சொன்னது…

நல்லதொரு புத்தகம் பற்றிய பகிர்வுக்கு நன்றி