வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

வாடகை மானுடம்

 ஒரு மாலையில் தெருவாசல் ஓரம் குழந்தைகளோடு இறகுப் பந்து விளையாடிவிட்டு உட்செல்ல எத்தனிக்கையில் இருசக்கர வண்டியில் பின்னாலிருந்தவர் இறங்கி வந்து இந்த பகுதியில் இடம் எவ்வளவு போகிறது என்றார். சரியாகத் தெரியவில்லை ஆனால் விளம்பரங்களை பார்க்கையில் நான்காயிரத்து ஐநூறு கிட்ட ஒரு சதுர அடி இருக்கலாம் என்றேன். எவ்வளவு ஆண்டாக இங்கே இருக்கீங்க என்றதும் எட்டு எனச் சொன்னேன், எட்டு ஆண்டுகளா வாடகை வீட்டுலயா என்று எடை போட்டார். இப்போது வண்டியை ஓட்டி வந்தவர் இறங்கினார் அவரது பையனாக இருக்கலாம் எனத் தோன்றியது, சாலையோரம் கட்டடங்களை இடித்திருக்கிறார்களே எதற்காக என்றார், சாலை விரிவாக்கம் என்று கூறுகிறார்கள் ஆனால் உறுதியாக தெரியவில்லை என்றதும். பின்னாலிருந்தவர் இடத்தோட விலை கூடுமா என்றார், மின்ன இருந்ததுக்கும் இப்போதைக்குமே கூடியிருக்கு என புன்னகை உதிர்த்து ஆனால் தெரியவில்லை என்று உட்புகுந்தேன்.


நாங்கள் இங்கு குன்றத்தூரிலிருந்து பல்லாவரம் போகும் பாதையில் உள்ள மணிகண்டன் நகருக்கு வந்த புதிதில் இப்போது குடியிருக்கும் வீட்டுக்குப் பின்புறத்தில் பெரியதொரு தோல் தொழிற்சாலை இருந்தது அதன் சுற்றுப்புறச் சுவரை அடுத்து சாலையோரம் மக்கள் பல தலைமுறைகளாக குடிசையில் வாழ்கிறார்கள். இந்த இடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு "கம்பெனி" என்றே பெயர். சில ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் இழுத்து மூடப்பட்டது, மக்கள் குடியிருப்புக்கள் மணிகண்டன் நகரில் அதிகமானதால் இத்தொழிற்சாலை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பது அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது.


சில மாதங்களுக்கு முன்பு "G square" என்ற வீட்டு மனைகள் விற்கும் நிறுவனம் இந்த இடத்தினை மனைகளாக மாற்றி விற்கத் தொடங்கியது, அதிலிருந்து சில நாட்களில் சாலையோரம் உள்ள குடியிருப்புக்களை அகற்றுவதற்கு காவலர்கள் துணையாக பெருத்த ஊர்திகள் வந்து முதலில் கடைகளை மட்டும் அகற்றிவிட்டு அடுத்த வாரத்தில் வீடுகள் அகற்றப்படும் என எச்சரித்துச் சென்றிருக்கிறார்கள், இதற்கான காரணம் சாலை விரிவாக்கம் என்று கூறுகிறார்கள் ஆனால் பல்லாவரம் தொடங்கி குன்றத்தூர் வரை நீளும் இச்சாலையில் வேறெங்கும் இடிக்க முனைப்பு காட்டாமல், ஏன் எதிர் பக்கம் ஒரு நூலளவு கூட கை வைக்காமல் குறிப்பிட்ட இப்பகுதியை அப்புறப்படுத்துவதில் மட்டும் அரசு அக்கரை காட்டுவது மக்களுக்கு வினாக்களை ஏற்படுத்தியது. உண்மையில் அரசுதான் இதற்கு காரணமா என போராட்டமும் வினாக்களுமாக ஒவ்வொரு நாளும் விடியல் கொள்கிறது.

இன்னொன்று சொல்லவேண்டும், இந்த சாலையோர கட்டிடங்கள் இடிக்கத் தொடங்கிய மறுநாள் அடையாறு கரையோரம் இருந்த தென்னத்தோப்பு மொட்டையடிக்கப்பட்டு முழித்துக் கொண்டிருக்கிறது.

சிலர் அடையாறு எங்க குன்றத்தூருக்கு வந்ததுன்னு கேக்கலாம், இந்த ஆற்றின் தலை செம்பரம்பாக்கம் ஏரி, அங்கிருந்து வெளியேரும் நீர் இவ்வழி வந்து சென்னைக்குள் சென்று கடலில் கலக்கிறது. அனகாபுத்தூர் குன்றத்தூர் இடையே எல்லை போல் ஓடும் இவ்வாற்றைக் கடக்க தரைப்பாலம் ஒன்றிருக்கிறது, பாலத்திற்கு இந்தப்பக்கம் குன்றத்தூர் காஞ்சிபுர மாவட்டத்தில் அடங்கும், அந்தப் பக்கம் அனகாபுத்தூர் செங்கல்பட்டு மாவட்டம்.


கருத்துகள் இல்லை: