ஞாயிறு, 8 டிசம்பர், 2024

அக்கா குருவி 13

காக்கையின் 
சிறு இறகு உதிர்ந்த 
நீர் தெளித்த 
வாசலைக் கடக்கும் 
இரு கால்கள் 

சனி, 23 நவம்பர், 2024

காலவெளி - வாசிப்பு

வாசிப்பின் வழியில் மீண்டும் வந்தடைந்து மேலோங்கிய ஓவியம் பற்றி அறிந்து கொள்ளவும் வரைந்து பழகவும் தொடங்கிய போது எழுத்தாளர் வா.மணிகண்டனின் நிசப்தம் இணையதளத்தில் ஓவியர்களுக்கான காலவெளி நூல் அறிமுகம் கிடைத்தது அப்போதும் அதற்கு சில ஆண்டுகள் கழித்த பிறகும் தேடியபோது புத்தகம் கிடைக்கவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு எழுத்தாளர் விட்டல்ராவ்-க்கு விளக்கு விருது வழங்கப்படுவதாக முகநூலில் வாசித்ததும் தேடினேன் அமேசானில் இருந்தது ஆனால் பனுவல் புத்தகக் கடையில் வீட்டுக்கு அனுப்பும் செலவையும் சேர்த்து அதைவிட குறைந்த விலையில் வாங்க முடிந்தது.

கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு நால்வர் குழுவாகச் செயல்பட்டு ஓவியக் காட்சிகள் வைத்தவர்கள் பிரிந்து போகிறார்கள். சக்கரவர்த்தி பிரிவுக்குப் பின்னர் கனடா சென்றுவிடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடி குழுவை மீட்டெடுக்கும் முயற்சியின் பொழுதில் சக்கரவர்த்தி வெளிநாட்டில் இருப்பதால் அவரது படைப்பு மட்டும் தவிர்க்கப்படுகிறது. அதற்கு ரூடால்ப் ஒரு காரண்மாக இருக்கிறான். பிரசன்னன் தன்னிடம் தெரிவித்திருந்தால் செனாய் வாசிப்பவன் ஓவியத்தை தந்து உதவியிருப்பேன் என ஒரு கட்டத்தில் தெரிவிக்கிறான்.

ஓவியன் தன் படைப்புக்குள் பயணிப்பது அதற்கான கருவையும், வண்ணங்களையும் தெரிவு செய்வது, நீர்வண்ணமா எண்ணெய் வண்ணமா, சிற்பமா என படைப்பாளிகளின் மனநிலையை சித்திரம் வடிக்கும் எழுத்து. இந்த புனைவு முன் பின் என மாறி மாறி வருவதனாலும், சக்கரவர்த்தியின் ஓவியம் சிந்தியாவின் ஆங்கிலோ-இந்திய வீட்டினுள் நுழைவதை இருவேறு கோணத்தில் நம் மனக்காட்சிக்கு விருந்தாக்குவது வாசிப்பின்பத்தை பெருக்குகிறது. வரவேற்பறையை தாண்டும் போது அந்த ஆங்கிலோ-இந்திய வீட்டை பற்றி விவரித்துச் செல்வதும், அவர்களது நேற்றைய மற்றும் நாளைய திசைகளைப் பற்றிய கவலையில்லாத வாழ்க்கை சக்கரவர்த்தியின் பார்வையில் விவரித்துச் செல்வது அந்த வாழ்க்கை முறையை அறியாத என்னைப் போன்றோருக்கு புதியது. பொதுவாக அவர்களுக்கு பல்லாவரத்திலும் ராயபுரத்திலும் உறவுகள் இருப்பதையும் கவனப் படுத்தியிருக்கிறார்.

பல்லாவரம் மலையை கடக்கும் போதெல்லாம் எனது மனதில் ஒரு ஏக்கம் தழுவிக் கொள்ளும், எப்போது இந்த மலையிலிருந்து நகரத்தை பார்க்கப் போகிறாம், திரிசூல மலையிலிருந்து வானூர்தி நிலையத்தை பார்க்கப் போகிறோம் என்று. இந்தப் புனைவில் வரும் ஓவியக் குழு பல்லாவரம் மலைக்கு நேரடியாக பார்த்து வரையும் பயிற்சிக்காக செல்வதை வாசித்ததும் ஏக்கம் அதிதீவிரமாக பரவியது.

ஒவ்வோரு ஓவியருக்குமுள்ள தனித்தனி குணநலங்களை விரிவாக அலசி ஆராய்வது இயல்பாகவும் இப்போதைய ஓவியர்கள் இதனை வாசிப்பதன் மூலம் தங்களது எண்ணங்களை இந்த அனுபவத்தின் வழியே செதுக்கிக் கொள்ள இயலும். சக்கரவர்த்தியின் படைப்பாளுமை, தர்மன் மற்றும் முருகேசனின் ஓவிய விற்பனை விளம்பரம் சார்ந்த அணுகுமுறை, உன்னி கிருஷ்ணனின் படைப்புத்திறன், வராகமூர்த்தியின் விமர்சன எதிர்பார்ப்பு, ஓவியத்திற்கு சட்டம் அமைப்பதுவும் விற்பனைக்கும் துணையாக நிற்கும் மதன்லால் போன்றவர்கள் பற்றி ஒரு கண்காட்சிக்கான தயாரிப்பின் பின்னணியில் எழுத்தாண்டிருப்பது எந்த தொய்வுமில்லாத வாசிப்பனுவத்தை வழங்கக்கூடியதாகவும் உள்ளது.

இப்போது அருங்காட்சியகம் அந்த கால கட்டத்தில் அரும் பொருட்காட்சியகம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது, அந்தச் சூழலுக்குள் இப்போது சென்று வருவது நூற்றாண்டு கடந்த கலைப் படைப்புகளோடு உரையாடுவது போன்ற தோற்றத்தையும் மன நிறைவையும் தரக் கூடியது. ஏன் இங்குள்ள தேசிய காட்சிக் கூடத்தின் ஒரு பகுதியை தற்கால ஓவியர்கள் படைப்புகளை காட்சிப் படுத்துவதற்கென ஒதுக்க இந்த அரசு ஆவன செய்ய வேண்டுமென மனது அடித்துக்கொள்ளும். இங்குள்ள நடன அரங்கம் இப்புதினம் நிகழும் காலத்தில் காட்சிக் கூடமாக செயல்பட்டதென்பது வியப்பை அளித்தது.

சக்கரவர்த்தி மற்றும் உன்னி கிருஷ்ணன் இருவரது படைப்பாக்கம் குறித்து விவரிக்கும் அளவுக்கு மற்ற இருவர் பற்றி அவ்வளவாக உள்ளார்ந்து  98 ஆவது பக்கம் வரை சொல்லவில்லை என்று நினைக்கிறேன் இல்லை நான் ஏதேனும் தவர விட்டுவிட்டேனா என்று தெரியவில்லை. உன்னியின் வண்ணங்கள் அடுத்தடுத்த கண்காட்சியில் வெம்மையிலிருந்து குளிர் நிறங்களுக்கு மாறிவருவதும், சக்கரவர்த்தி போர் சூழலால் சிங் வெள்ளை எண்ணெய் வண்ணம் கிடைக்காமல் அந்த வகைமையை விட்டுவிட்டு முழுவதும் வேறு பாணியை கைகொள்கிறார். இவரின் படைப்பு உக்கிரத்தை முழுவதுமாக விவரிக்காமலேயே அதன் தன்மையை உணரும் வடிவில் எழுத்து கைகூடியிருப்பது சிறப்பாக எண்ணத் தோன்றுகிறது.


ஞாயிறு, 10 நவம்பர், 2024

அக்கா குருவி 12

 பட்டத்தின் வால் 

அறுந்து விழுவது போன்ற மாயத்தில்

தங்களை விடுவித்துப் பறந்தன

கிழக்கில் வெளிச்சமில்லா

காலையில் 

ஞாயிறு, 3 நவம்பர், 2024

Manifestoes In The open Air - ஓவியக் கண்காட்சி

                எதிர்பாராத பொழுதில் கண்ணில் பட்டது லலித் கலை கழகத்தில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியின் ஒளிப்படங்கள். அஸ்விதா கலைக்கூடம் நிகழ்த்தும் இந்த குழு ஓவியக் கண்காட்சியில் ஐந்து ஓவியர்கள் அவர்களது படைப்புகளை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். சிலருக்கு விருந்து, சிலருக்கு மருந்து, சிலருக்கு பரந்து/பறந்து என்று பெரிய பெரிய ஓவியங்கள். ஏனென்று தெரியவில்லை வழக்கமாக உள்ளே இருக்கும் கருப்பு இருக்கைகள் வெளியே அமர்த்தப் பட்டிருந்தன. கடந்த இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற கண்காட்சியின் போது நிதானமாக அமர்ந்து ரசித்து வந்தோம். இந்த முறை அக்கொடுப்பினை இல்லை.

பசிஸ்ட் குமார்
எல்லாமே அளவில் பெரியதான ஓவியங்கள் என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டாலும் மீண்டுமொருமுறை வலியுறுத்த வேண்டியுள்ளது. இரண்டு கித்தான்கள் ஒன்றாக இணைத்து வைக்கப்பட்டிருந்தது, பார்வையாளருக்கு வலது பக்கம் மார்பளவு வரை வரையப்பட்ட மனிதமுகம் பின்புலத்தில் பச்சையும் வானமும் பரந்திருந்தது இடதுபக்க கித்தானில் அதன் தொடர்ச்சியான நிலப்பரப்போடு கல் தூண் போன்ற அமைப்பு, மனிதனும் இந்த கல்லும் ஒன்று என்று எண்ணிக் கடந்து போனேன். அடுத்து இன்னொரு மனிதன் படுத்திருக்கும் தோரணையில் அவன் மீது வெயில் மேலோட்டமாக படர்ந்திருக்கிறது. அடடா என்று சற்று பின்வாங்கிப் பார்க்க வைத்தது இரண்டு நிலப்பரப்பு ஓவியங்களும்.

மற்றொரு ஓவியம் ஒரு கனவுச் சித்திரம் போல இருந்தது. மனித உருவிலிருக்கும் மரக்கட்டையின் கண்ணாடிப் பிம்பம், அதில் மணல் பரப்பும் தொடு வானமும், ஓவியத்தின் பின்புலமும் மணற்பரப்பு மற்றும் தொடுவானம். நினைவிலிருந்து எழுதுவதால் அது கடல் பரப்பா அல்லது தொடுவானமா என்று இப்போது சற்று குழப்பமாக இருக்கிறது. கண்ணாடி இருக்கும் மர அலமாரியின் மேல் ஆணுக்குத் தேவையான அலங்காரப் பொருட்கள், சிகரெட், கவிழ்ந்து கிடக்கும் தேநீர் கோப்பை, கீழுள்ள அலமாரியில் இருக்கும் பிள்ளையார், பரந்து சென்று விழுந்து கொண்டிருக்கும் தாள், தூரத்து குப்பைகள். சிறந்த ஆழ்மன வெளிப்பாடுடைய ஓவியம். இதனை கண்டு திரும்பிய போது அந்த மார்பளவு மனிதமுகத்தின் கண்ணில் கல் தூணைப் பார்த்தேன்.மாயம்.

நிதி அகர்வால்
வண்ணக் கிறுக்கல்கள், குழந்தைத்தனம், துடிப்புமிக்க வேகம், கனவு என விரியும் இன்னொரு படைப்பாளி.

பருல் குப்தா
கோடுகள் வடிவங்கள் செய்யும் மாயத்தை நீர்வண்ணத்தில் பிசிறில்லாமல் அழகான வடிவமைப்பாக, கொஞ்சம் பொறுமையாக நின்று ரசித்தால் மாய வெளிக்கான திறப்பாக அமையும் ஓவியங்கள் இவருடையது. சில வினாடிகள் பார்த்துவிட்டு கதை கட்டுவது அதற்கு உண்மையாக இருக்க இயலாத தன்மையையே வெளிப்படுத்தும்.

பெனிதா பெர்சியாள்
இயற்கையின் பயணம், தனக்கு கிடைத்த மரம், கல், ஈசலின் இறகு, மண், என சுற்றியுள்ளவைகளைக் கவனிக்கும் தன்மையும் அதனை படைப்பாக்கத்திற்காக எடுத்துக் கொள்வதும் நாம் இன்னும் இயற்கையோடுதான் இருக்கிறோம் என்பதை எடுத்து இயம்புவது போலுள்ளது இவரது படைப்புகள். மரங்கள் தான் புத்தகம் என்பதனை தனது அலமாரியிலுள்ள சிலையாகிப் போன புத்தகங்களைக் கொண்டு நமக்கு ஏதேனும் மறைமுகமாக உரைக்கிறாரா இல்லை அதிலுள்ள பெயர்களும் அவை அடுக்கியிருக்கும் வரிசைகளும் ஏதேனும் சொல்ல முயற்சிக்கின்றனவா என்பதை வாசிக்க இன்னும் பொழுது வேண்டும்.

நீரஜ் படேல்
மின் பொருட்களிலுள்ள அட்டையின் இணைப்புக் கோடுகள் போன்ற வடிவமைப்புள்ள ஓவியங்கள், வடிவங்களை ஒருங்கிணைப்பு செய்து பார்வை விசித்திரத்தை வழங்கும் படைப்புகள்.




ஒளியின் கண் - 2












வியாழன், 31 அக்டோபர், 2024

இது தீபாவளிக் கதையல்ல

எல்லோருக்கும் தீபாவளி வருகிறது. 
"ஏம்ப்பா, எதுக்குப்பா கிருட்ணர் நரகாசுரன கொன்னாரு அதுக்குத்தான் கொண்டடுதோம்னு அம்ம சொல்லுது. ஆனா நீ பொய் கதைன்னு சொன்னலாப்பா." இந்த உரையாடல் கடந்த ஒரு கிழமையாக உலாவிக் கொண்டிருக்கிறது வீட்டில்.

ஏன் கொண்டாடுதோம்னு தெரியாது, நரகாசுரன் என்ற அரக்கன் கொல்லப்பட்ட நாளை அவனே வெடி வெடித்துக் கொண்டாடச் சொன்னதாக கதை சொல்வார்கள். அப்பா வாங்கித் தரும் வெடிகளை ஓட்டின் மீது வெயிலிலோ விறகடுப்பின் கதகதப்பிலோ காயவைத்து வெடிப்பது வழக்கம். அன்றைய காலை மட்டும் அதிகாலையாக இருக்கும் தெருவெங்கும் வாசலில் கோலங்கள், கோலமிடத் தெரியாத அம்மையிருக்கும் எங்கள் வீட்டில் பக்கத்து வீட்டு அக்காள்கள் கோலமிடுவது வழக்கம். வீட்டு பக்கம் வராத தாத்தா தீபாவளிக்கு மட்டும் வருவார் சாராய வாசனையோடு, ஒருமுறை பாம்பு ஊர்ந்து போகும் பட்டாசு வாங்கித் தந்த நினைவு, எதிர் வீட்டுச் சுவற்றையொட்டிக் கிடக்கும் நீட்டக் கல்லில் அமர்ந்து கொஞ்ச நேரத்தில் கிளம்பிவிடுவார். அவரின் இறப்புக்குப் பிறகு தீபாவளி அன்று உணவுப் படையலிட்டு அப்பா கண்கலங்குவார், தனியாக நினைவு நாளெல்லாம் கிடையாது.

இங்கே சென்னை வந்தபிறகு தீபாவளி நோன்பு என்பதைக் கேள்விப் படுகிறோம். இதுயென்ன புதுசா, தீபாவளின்னாலே விடியக்காலைல நாலு மணிக்கெல்லாம் எந்திச்சி கறிக்கடைக்கு போய் ஆட்டுடல் பாகங்களை எடைபோட்டு வந்ததும் தான் தொடங்கும். ஆனால் தீபாவளிக்கு இறைச்சிக் கறி சாப்பிட மாட்டோம்னு ஒரு ஆளு சொன்னா இன்னொருத்தரு எதுவுமே சாப்பிட மாட்டோம்னு சொல்லுதாங்க. இது புதுக்கதைதான் எனக்கு.

"ஏம்ப்பா, அம்ம அப்படிச் சொல்லுது, ஆனா நீ அத பொய்யின்னு சொல்லுத."

தீபாவளி பற்றி நிறையச் செய்திகள், கதைகள் உலவுதுடா. பழங்காலத்தில் பூச்சிகளை வயல்வெளிகளிலிருந்து துரத்திவதற்காக வெடி பயன்படுத்தியதாக ஒரு புத்தகத்தில் படித்த நினைவிருக்கு. 

"அப்போ வெடி அந்த காலத்துலயே கண்டுபிடிச்சிட்டாவளா!"

அம்மன் கோவில் திருவிழாக்களும் தீபாவளியும் அடுத்தடுத்து வரக்கூடியவை. ஊர் அம்மன் கோவில் திருவிழாவின் போது, வெடி வெடிப்பதற்கென்று சிறு வண்டியொன்று வைத்திருப்பார்கள், அதில் குழல் வடிவில் வரிசையான அமைப்புகள் இருக்கும் அதனுள் வெடிமருந்தை இறுக்கமாகத் திணித்து வெடி உருவாக்குவார்கள். பற்றவைக்கும் போது அதிகப்படியான ஒலியில் அதிர்ந்து சிறுவர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கும். வானவேடிக்கையென்றால் ஒரு நான்கு தென்னங்குச்சிகளின் முனையில் வெடி இணைக்கப்பட்டிருக்கும், அந்த வெடியில் திரி இருக்காது, கயிற்றின் முனையில் தணல் ஏற்படுத்தி வாயால் ஊதி ஊதி வெடியை பற்றவைத்து வான் நோக்கி வீசி எறிவார்கள், இதற்கு தனித் திறமை வேண்டும் நானும் வெடிக்கிறேன் என்று பற்றவைத்ததும் பதறிப்போய் அங்குமிங்கும் வீசி எறிந்தவர்கள் உண்டு.

தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த புராணக்கதைகள் எழுத்துக்களாகவும் சொற்களாகவும் உலா வருகிறதே தவிர வட இந்தியாவைப் போல வெறுப்பைக் கக்கும் நாடகத்தன்மைக்குள் செல்லவில்லை. ராம நவமிக்கு அதாவது தசரா என்ற பெயரில் ராமன் ராவணனை அழித்தொளிக்கும் கதையினை உண்மை நிகழ்வுபோல அரங்கேற்றம் செய்கிறார்கள் ஆண்டுதோறும், ஆனால் அதே தசரா திருவிழாவின் போது இங்கே தென் தமிழகத்தில் அம்மன் கோவில் திருவிழாக்கள் நடைபெறும், குறிப்பாக முத்தாரம்மன் கோவில்கள். குலசை முத்தாரம்மன்  கோவிலில் என்ன நடைமுறையென்று தெரியவில்லை. ஆனால் எங்கள் ஊர் முத்தாரம்மன் கோவில் திருவிழாவில் ராமனுக்கு பட்டாபிசேகம் செய்யும் சாமியாட்ட நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது இது எதன் தொடர்ச்சி என்று அறிய ஆர்வம் அவ்வப்போது மேலிடுகிறது.

அதேபோல் தீபாவளிக்கும் அரக்கனை அழித்தொழிக்கும் நிகழ்வுக் காணொளிகள் கண்ணில் படுகிறது. இந்த அழித்தொழிக்கும் மனப்பான்மை ஏன் இன்னும் வடக்கர்களின் மனங்களில் இருந்து அகலவில்லை என்பதற்கு வரலாற்று உளவியல் காரணமாக இருக்கலாம்.

பள்ளியில் வெடிக்கமாட்டோம் வெடிக்கமாட்டோம் என பாடல் பாடிவிட்டு ஏன் வெடிக்க ஆர்வம் காட்டுகிறாய் மகளே என்றால், "இன்னைக்கு ஒருநாள்தாம்ப்பா வாங்கித்தாப்பா" எனும் அவள்களின் மழலையை பகைத்துக் கொள்ள விரும்புவதில்லை. "அப்பா கவிதா, கிசோர் ரெண்டுபேரும் தீபாளிக்கு நம்ம வீட்டுக்கு வாராங்களாம். நாஞ்சொல்லிட்டேம்ப்பா, மணிகண்டன் நகருக்கு பேருந்துல வரணும் அங்க அபூர்வா கடை இருக்கும், நாங்க வந்து உங்க ரெண்டுபேரையும் கூப்பிட்டுகிடுதோம்னு சொல்லிடேம்ப்பா, என்னைய தீபாளி அன்னைக்கு அங்க பஸ்டாப்புக்கு கூட்டிட்டு போவியா".

போவம்டா!


புதன், 16 அக்டோபர், 2024

அக்கா குருவி 11

வெள்ளையில் 
கறுப்பு புள்ளியிட்ட நாய் 
தெருமுனை நின்ற மற்றதன் மீது 
முன்னங்காலை பரப்ப எத்தனித்தது பிடித்திருந்த நரைத்த பெண்
கயிற்றை வெட்கச் சிரிப்புடன் இழுத்தாள் 
எதிரில் நின்ற மரத்தின் 
இலை கிளைகளிடையே வெயில் 
தரையைத் தழுவியதும் அழகாகயிருந்தது 


சனி, 12 அக்டோபர், 2024

தினமலர் எனும் விசம்

வீட்டில் செய்தித் தாள் வாங்கத் தொடங்கிய போது தினமணி நாளிதழை தேர்வு செய்தேன். பிறகு நாவலூரில் பணிக்குச் சென்ற இடத்தில் தமிழ் இந்து வாசிக்கக் கிடைத்தது, ஆர்வமூட்டும் கட்டுரைகள், ஒவ்வொரு நாளும் சிறப்பிதழ் என நன்றாக பழக்கமானது வாசிப்பு. வீட்டிலும் மாற்றிவிட்டேன். இங்குமங்கும் பயணித்தது வாசிப்பு.

நாளடைவில் சில சொற்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்காமல் அப்படியே ஒலிக்கச் செய்து அச்சிட்டார்கள் தமிழ் இந்து நாளிதழில். உதாரணத்திற்கு "Seminar, conference" போன்ற ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழ் எழுத்துக்களால் எழுதத் துவங்கியதை ஏற்றுக் கொள்ள இயலாமல் மீண்டும் தினமணிக்கு மாறினேன்.

இன்று தேநீர் கடையில் எதிரில் இருந்தவர் வாசித்த செய்தித் தாளில் "செகண்ட் ப்ரன்ட் பேஜ்" என்று எழுதியிருந்தது. தினமலர் எனும் விசம்.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2024

அணைத்துக் கொண்ட முகம்

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாலையில் மதனந்தபுரம் சுற்றியுள்ள பூங்காக்களில் மனித முகங்களை பார்த்து வரைந்து கொடுப்பது எனது வழக்கம். எங்களது ஓவிய மாஸ்டர் நடத்தும் ஓவிய வகுப்பிற்காக (SARAA ART CLASS) வரைவதனால் இதற்கென்று கட்டணம் எதுவும் வாங்குவதில்லை. 

நேற்றொரு பூங்காவில் சிறுவன் ஒருவன் வரைவதற்காக அமரும் முன், இவன் ஒழுங்கா உக்காருவானான்னு தெரியல எனச் சொல்லிக் கொண்டே உட்கார்ந்தார் அவனது அப்பா. ஒரு இடம் பாராமல் அவனது உடலும் பார்வையும் துடித்துக் கொண்டிருந்தது, எப்படியோ வரைந்து முடித்து விட்டேன். அவனிடம் கொடுத்ததும் அருகில் வந்து உங்களை ஒரு முறை "hug" பண்ணிக்கட்டுமா என்று கேட்டதும் அணைத்துக் கொண்டேன்.

அவனை படம் பிடிக்காமல் விட்டுவிட்டேன்.
இப்படம் மற்றும் காணொளிஅதற்கு முந்தைய வாரங்களில் வேறு பூங்காவில் வரைந்த போது எடுத்தது.






செவ்வாய், 17 செப்டம்பர், 2024

அக்கா குருவி 10

 அலை

எழுதுகிறது சிம்பொனி 

அதன் மீது கொஞ்சம் 

ஒளியாய் நான் 

சனி, 14 செப்டம்பர், 2024

பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி - உதவி தேவை

மழலையர் வகுப்பு தொடங்கி ஐந்தாவது வகுப்பு வரையிலான மாணவர்கள் சென்னை குன்றத்தூரில் உள்ள பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியில் பயின்று வருகின்றனர். ஒவ்வொரு நாளும் பாடநூல்களோடு திருக்குறள் மற்றும் கலை வகுப்புகளும் நடத்தி குழந்தைகளின் அறிவாற்றலையும் படைப்பாற்றலையும் மெருகேற்ற சிறப்பான முறையில் கல்வி அளிக்கப்படுகிறது.

இப்பள்ளியில் பயிலும் பெரும்பான்மை மாணவர்கள் கட்டணச் சலுகையுடனே பயில்கின்றனர். மற்றைய மாணவர்களின் கல்விக் கட்டணம், நன்கொடையாளர்களின் உதவியுடன் தொடர்ந்து திறம்பட நிர்வகித்து வருகிறார் பள்ளியின் முதல்வர் வெற்றிச் செழியன். பள்ளியின் மேம்பாட்டிற்குத் தேவையான உதவிகள் வழங்க விரும்பும் நண்பர்கள் பள்ளியை நேரடியாகத் தொடர்பு கொண்டு உதவ வேண்டுகிறேன். நன்றி 

பள்ளியின் பெயர்: பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளி
இடம்: குன்றத்தூர், சென்னை 
பள்ளியின் முதல்வர்: திரு. வெற்றிச் செழியன் 
தொடர்பு எண்: 98409 77343
பள்ளியின் முகநூல் பக்கம்: https://www.facebook.com/paaventharthamizhpalli?mibextid=ZbWKwL



சனி, 7 செப்டம்பர், 2024

அக்கா குருவி 9

உங்கள் 
அன்பும் கருணையும் 
சிறப்புக்குரியது தான் 
மாச்சில் இட்டு 
பெற்றெடுப்பவைகளை 
தெருவில் விடும்
இப்போதைய உங்களை 
என்ன செய்வது 

ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

அக்கா குருவி 8

தொடர் வண்டி 
என்னை நகர்த்துகிறது 
உடன் மலை இருக்கிறது 
தூரமில்லாத தூரத்தில் 
மலைக்கு அப்பாலும் 
யாரோ ஒருவரை 
நகர்த்தக் கூடிய 
தொடர் வண்டி இருக்கக்கூடும் 

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

அக்கா குருவி 7

மரத்தடி வானம் 
கிளைகளுக்கிடை வானம் 

கூவுவது பறவை
பறவையாகிறது கிளை

பகலுடல் வாழாதது
இரவுடலுக்கு 
ஒன்றிலிரு வாழ்க்கை 












வியாழன், 29 ஆகஸ்ட், 2024

ஓவியக் கண்காட்சி - Art infinity

சென்னையில் ஓவியம் சார்ந்து இயங்கக்கூடிய எவருக்கும் பரிச்சயமானது லலித் கலா அகாடமி. வார நாட்களில் எப்போதும் அங்கே கலைஞர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தங்கள் சிந்தனைகளுக்கு புற வடிவம் உருவாக்குவதில் முனைப்புடன் செயல்படும் ஓவியர்கள் பலரையும் கண்டு உரையாட இயலும். 

சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கண்காட்சிக் கூடத்தில் இந்த ஆண்டு தொடர்ச்சியாக பல ஓவியர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய "Art Infinity" என்ற ஓவியக் கண்காட்சியில் எழுபது ஓவியர்களின் கலைப் படைப்புகள் காட்சிக்கு விருந்தாகிறது. கலவையான பல வகைப்பட்ட யதார்த்தம் முதல் அரூப ஓவியங்கள் வரை கண்களுக்கும் மனத்திற்கும் இன்பத்தையும் மனித இயக்கத்திற்கு உந்துதலாகவும் விளங்கும் படைப்புகள். நண்பர்கள் வாய்ப்பிருந்தால் கண்டுகளிக்கலாம்.