பக்கங்கள்

வியாழன், 10 ஏப்ரல், 2014

அழிப்பது அழிவுக்காகத்தான்.. - சிறுகதை

எம் ஏ ஆர் கன்ஸ்ட்ரக்சன் என தங்க நிறத்தால் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள் அந்த சொகுசு நான்கு சக்கர வாகனத்தின் முன் நெற்றியில் ஒட்டப்பட்டிருந்தது. அந்த வாகனம் வருவதை பார்க்கும் போதே புரிந்து கொள்ள முடிந்தது அது புதிதாக வாங்கப்பட்டது என்றும் அதை ஒட்டி வருபவர் முறையான பயிற்சி பெறாதவர் எனவும் தெரிகிறது. வாகனம் அருகே வர வர சற்று உள்நோக்கும் போது பின் இருக்கையில் இரு சிறார்கள், ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மேலும் முன் இருக்கையிலும் ஒரு பெண் குழந்தை, இவர்கள் தன் அப்பா வாங்கியிருக்கும் புது வாகனத்தில் அமர்ந்து மகிழ்ச்சியை துள்ளலுடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.


வாகனம் அங்கிருக்கும் முட்டுச் சந்தை நெருங்கும் போது, அவர் எப்படி அதை திருப்பி செலுத்தப் போகிறார் என்பதை காண என்னையறியாமல் ஓர் ஆர்வம் தொற்றிக்கொண்டது, ஏனென்றால் அது அவ்வளவு குறுகிய முட்டுச் சந்து.

இருமுறை வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் நிறுத்த வேண்டியதாகிப்போனது, பின் தன் கடுமையான முயற்சியால் ஒரு வழியாக சந்தின் உள்ளே செலுத்தி விட்டார். சந்தில் ஊர்ந்து சென்ற வாகனம் வீட்டின் வாசற்ப்படியின் அருகே சென்று நின்றதும், தன் வீட்டிற்கு புது உறவாக புகுந்திருக்கும் அதை வரவேற்க ஆரத்தித் தட்டுடன் வந்து நிற்கும் அவரது மனைவியின் முகத்தில் எண்ணிலா மகிழ்ச்சி பொங்கியது. அந்த பெண்ணின் முகம் பார்க்கும் போது ""அன்பு என்பது செலவுகளால் சூழப்பட்ட உணர்ச்சிகளின் முடிச்சிகள் தான்"" என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.

இரவில் பணி முடித்து திரும்பும் போது மீண்டும் அந்த வாகனத்தை காண நேரிட்டது. மத்தியானம் பார்த்ததை விட அதன் உடலும் முகமும் மாறியிருந்தது. ஆம் சந்தனமும் குங்குமமும் சேர்ந்த பட்டைகளும் முன்னால் போட்டிருந்த மாலையும் தான் அதற்கு காரணம். குடும்பத்துடன் முதல் பயணமாக குலதெய்வம் கோவிலுக்கு சென்று வந்திருப்பார்களென எண்ணிக்கொண்டேன்.

அந்த வீடு கட்டும்போது வாகனம் வாங்குமளவுக்கு அவர் யோசித்திருக்க மாட்டார் என தோன்றியது,

வாகனம் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்தது.

ஒரு வார இடைவெளிக்குப்பின் பணி முடிந்து திரும்பும் போது அந்த முட்டுச்சந்தின் ஓரமாக ஒரு வாகனம் சிதைந்து கிடந்தது. யாருமற்ற இரவு என்பதால் பயம் சிறிது தொற்றிக்கொண்டது.

அருகே சென்று பார்த்தால், ஒரு வாரம் முன்பு புத்தம் புதிதாய் வளைய வந்த அதே தங்க நிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட வாகனம் யாருமில்லாமல் கிடந்தது.

சேர்ந்துவிட்ட சோகத்துடன் நகர்ந்து செல்லும் போது வழியில் நின்ற பெரியவரிடம் விசாரிக்க முயன்ற போது.
""திடீர்னு வேகமா வந்த காரு சரியா திரும்ப முடியாம சுவத்துல முட்டிகிச்சி, ஆளு குடிசிருந்தான் போல அதான் இப்பிடி ஆகிப்போச்சி""
என்று கூறிச் சென்றார்..

மனம் பல சிந்தனைக்குட்பட்டு பிதற்றிக் கொண்டே வந்தது.

அவரின் இந்த சோக நிகழ்வுக்கு காரணம் என்னவாக இருக்க முடியும்..
மது அருந்தி வாகனம் ஓட்டியதா? மதுவை ஊற்றிக்கொடுப்பது அரசு தானே, அரசு பொறுப்பேற்க வேண்டுமா?

இல்லை சுவற்றில் மோதிய வேகத்தில் சுக்கு நூறாய் உடைந்து போன தரமற்ற வாகனம் காரணமா? வாகனத்தை அங்கீகரித்த நிறுவனம் காரணமா?

இவர் பில்டர் அதாவது இடத் தரகராக இருந்து வளர்ச்சி எனும் பெயரில் விளை நிலத்தை விலைக்கு முடித்ததால் இயற்க்கை சபித்திருக்குமா?

எண்ணங்கள் சுற்றிவந்து தூக்கத்தை திசைதிருப்ப்பியது....

மறுநாள் காலை தெருவில் கால்பதித்து நடந்து முட்டுச்சந்தை அடைந்த போது ஏனோ மனது வலித்திருந்தது...

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவர்களின் மனது எவ்வளவு பாதித்திருக்கும்... ம்...

ஜெ பாண்டியன் சொன்னது…

மிகவும் வலித்திருக்கும் ..
வருகைக்கு நன்றி..