பக்கங்கள்

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

கோடை விடுமுறையில் ஒருநாள்....!!


ஊதா மை நிரப்பி
தேர்வுத் தாள் பார்த்த
எழுது கோலில்...
வாழைக் கரை பிழிந்தளந்து
நண்பனின் சட்டையில்
நட் பெழுதி வைக்கும் நாள்

கோடை விடுமுறையின் தொடக்க நாள்........
ஊத்தப் பல்லு
உற்சாகத் தோடு
உண்ண மறக்கும்
காலைப் பொழுதில்
கோலி யடித்தும்
பம்பரம் சுத்தியும்
ஓடித் திரிந்தே
நீளும் பொழுதுகள்....

உச்சி வெயில்
வெக்கை அறியாமல்
தோட்டஞ் செல்ல
துள்ளல் நடையில்
தூரம் போவோம்
அப்பாம்மையின் வழி தொடர்ந்தே...

ஆங்கே!!
நிழல் பரப்பி
விரிந்திருக்கும்
வேப்ப மரம்
வெக்கை தணித்து
வியர்வை துடைக்கும்...

வேப்பம் பூ
உதிர்ந்து கிடக்கும்
மண் நிலத்தில்..
மஞ்சள் வண்ணக்
கனியும் கிடக்கும்..
ஆம்! கனி கிடக்கும்..
தாகம் தீர்க்கும்
திகட்டாச் சுவை
தரும் வேப்பம் பழம்
கிடக்கும்..!!

இன்றோ .....
நகரத்துப் பாட்டிகள்
எங்கழைத்துப் போவார்கள்
தன் பேரனை
வேப்பம் பழச்சுவை அறிய...
கசந்து நிற்கும்
நகர வாழ்வில்....?

கருத்துகள் இல்லை: