பள்ளிக்கூடத்தில் ஏதேனும் விழா நடைபெற்றால் அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் அந்நிகழ்வை மீண்டும் நிகழ்த்திப் பார்ப்பது மகள்களின் வழக்கமான விளையாட்டு. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு ஆண்டும் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் உணவுத்திருவிழா முடிந்த பின்னர் அங்கே அரங்கில் வைக்கப்பட்ட உளுந்து உருண்டை, கன்னலமிழ்து, இட்டலி, கம்பு அடை, பால் பணியாரம் போன்ற மேலும் பல உணவுகளின் பெயர்களைத் தாள்களில் தனித்தனியாக எழுதி வரிசையாக இடைவெளி விட்டு அடுக்கி வைத்துவிட்டு ஒவ்வொரு உணவுக்கும் முன் இருவரும் மாறி மாறி உட்கார்ந்து "இந்த உணவு வாங்கிக்கோங்க, இது உடம்புக்கு ரொம்ப நல்லது, நாங்க வீட்லயே சமைத்தது, சுவையா இருக்கும் வாங்கி சாப்பிட்டு பாருங்க, ஒரு வில்லை கொடுத்தா போதும்" என்று விளையாட்டு தொடரும்.
நேற்றிலிருந்து இவள்கள் கட்டியிருக்கும் அட்டை வீட்டிற்குள் இருந்து "உங்களுக்கு என்ன வேண்டும், French Fry இருக்கு, Maggi இருக்கு அப்புறம் புரோட்டா இருக்கு, இது அறுபது ரூபா, முப்பது ரூபா" என்று குரல் வருகிறது. இரு நாட்களுக்கு முன்னர் பெரியவள் ஆறாவது படிக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் Food Festival நடத்தியிருக்கிறார்கள். அது இப்படி விளையாட்டாகத் தொடர்கிறது.
எப்போதும் விளையாட்டு விளையாட்டாக முடிவதில்லை அதுவொரு பண்பை அந்த ஆட்டம் ஆடுபவர்களுக்குள் கடத்துகிறது என்பதை நான் நம்புகிறேன். மேற்சொன்ன இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிவோம், எது நன்மையை அளிக்கிறது எது தீமையை அளிக்கிறது என்பதையும் அறிவோம்.
நாம் குழந்தைகளுக்கு என்ன அறிமுகப் படுத்துகிறோம் ஏன் அறிமுகப் படுத்துகிறோம் என்ற சின்ன புரிதலேனும் எல்லோரிடமும் இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக