புதன், 11 ஜூன், 2014

புரட்டாசித் திங்கள்... ---- சிறுகதை

              
                     புரட்டாசி மாதத்தின் முதல் திங்கள் கிழமையின் காலை நேரம், சோம்பல் முறித்து கண் விழித்த சிவராவின் மூளையை ஏதோ நினைவுகள் குடைந்து வேறு சிந்தனைக்குள் புதைத்தது. சிவரா தான் பிறந்து வளர்ந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலை செய்ய பயணப்பட்டு ஏழு ஆண்டுகளை கடந்து விட்டது.
                    இப்போது இவன் விழித்ததும் நினைவுகள் இவனை அழைத்துச் சென்றதும் அதே கிராமத்துக்குத் தான், இதே திங்களுடன் சேர்த்து மூன்று நாட்கள் நடைபெறும் ஊர்க்கோவில் திருவிழா இந்த வருடமும் நடைபெறாமல் போனதன் ஏக்கமே அவன் நினைவுகளுக்கு காரணம்.
இந்த மூன்று தினங்களும் உறவுகளுடனும், நண்பர்களுடனும் இவன் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்கள் திரும்பவும் வராதா என்ற ஏக்கம் வெகுவாக பாதித்திருந்தது.மனது திருவிழா நாளில் உழன்று போனதால், விரித்த பாயை சுருட்ட மனமில்லாமல் நினைவுகளின் பாதையிலேயே நடை போட்டான்.
                   அந்தி சாயும் அழகான திங்கள் மாலை, கதிரவனின் சிகப்புக் கதிர்கள் வீட்டின் ஒட்டுக் கண்ணாடி வழியே சிறிது வெளிச்சத்தை தூவியிருந்தது, வெளிச்சத்தில் உலாவிக்கொண்டிருக்கும் தூசிகளின் பாதைகளை தன் விரலால் விலக்கி விட்டுக் கொண்டே அம்மாவிடம் ஐந்து ரூபாய்க்காக அடம் பிடித்துக் கொண்டிருந்தான்.
                   "ரூவால்லாம் ராத்திரி ஒங்கப்பா வந்து தருவாரு, பேசாம காப்பிய குடிச்சிட்டு கிட" ன்னு அம்மா அதட்டி விட்டு சமையல் வேலையை தொடர்ந்தாள். கோபம் வந்தால் எப்பவும் போல பேசாம வீட்ட விட்டு வெளிநடப்பு செஞ்சான் சிவரா.
                    வீட்டுக்கு வெளியில வரவும் " ஏ என்ன சிவரா பள்ளிகூடத்துக்கு லீவுட்டுட்டான்ங்க போல இனிம மூணு நாளைக்கு உன்னைய கையில புடிக்க முடியதடே" மாரி அண்ணன் சொன்னதுக்கும் பதில் ஏதும் இல்லாமலே வீட்டைக் கடந்து போனான்.
                    திருவிழாவுக்கு வரும் விருந்தினரை கவனிக்க சமையலுக்கான மளிகை சாமான் வாங்க முருகண்ணன் கடையில நல்ல கூட்டம் இருந்தது. கடைக்கு எதிர்பக்கமா இருக்க நல்லம்ம பாட்டி வீட்டு வாசல்ல கீழயிருந்து மேலனிக்கி படர்ந்து நிக்கிற கொடி மரத்தில் விழும் சூரிய ஒளியை வெறுமையோட பார்த்தபடியே நகர்ந்தான்.
                   இவனது குடும்பம் வசிக்கும் தெருவின் முனையில் இருக்கும் புளியமரத் தோப்பில், திருவிழாவிற்காக வந்திருந்த கொடராட்டினத்தில் சிறுவர்கள் உற்சாகக் களிப்பில் வட்டமடித்தனர், அருகிலேயே சிறுவர்களுக்கு அவர்கள் பழகிய இடங்களையே வேறு கோணத்தில் காட்டும் உயரமான தொட்டில் ராட்டினம் அப்போதுதான் ஆட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்ததன் இடையே உரக்க ஒலிக்கும் அம்மன் பாடல்கள் இவனது செவிகளைத் திருகின.
                    வாகனங்கள் இறைந்து கிடக்கும் அம்மன் கோவில் மைதானம் இன்று பந்தலிட்டு வாழைமரத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. புழுதியையும் வெக்கையையும் விரட்ட மண் தரையில் தண்ணீர் தெளித்து மைதானம் இரவுத் திருவிழாவுக்கு தயார் செய்யப் பட்டிருந்தது.
சாலையோரம் தேநீர் விடுதிகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கான மிட்டாய் கடைகளாக மாறியிருந்தன.
                   வழக்கமான இடங்களின் அடையாளங்கள் சிறிது மாற்றம் கண்டதாலோ என்னவோ, இவனை அறியாமல் கடந்த வருடத் திருவிழா நாட்கள் நினைவில் வந்து போனது.
                   தினசரி நாட்களில் இவனும் நண்பர்களும் சேர்ந்து பழகிக் கிடக்கும் இடம் வந்தது, நண்பன் சுடலை இவனுக்கு முன்பே வந்து அமர்ந்திருந்தான், நண்பர்கள் ஏழு பேரும் வந்தவுடன் கோவில் கொடை பற்றியும் அதைக் கொண்டாடுவதையும் சிலாகித்து பேசிக் கொண்டிருந்தனர்.
இரவு திருவிழா நேரம் நெருங்கி வந்தபோது சோறு சாப்பிட்டு விட்டு 10 மணிக்கெல்லாம் திரும்பவும் கூடுவதாக உத்தேசம்.
                 முதல் நாள் இரவில் பொதுவாக மக்கள் கூட்டம் இரண்டாம் நாளை விட குறைவாக இருக்கும். இதனால் கரகாட்டமும் வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும்.
                கோவில் திருவிழா என்றால் செவ்வாய் கிழமை காலை உணவு இட்லியாகத்தான் இருக்கும். ஏனைய நாள் இரவு உணவுகளை பார்க்கும் போது திருவிழா நாளில் பச்சை வாழை இலையில் பரிமாறப்படும் உணவில் கூட்டுப் பொறியல், அப்பளம், சாம்பார், ரசம் என்று ஒரே நேரத்தில் நாவிற்கு உருசி கொடுக்கும்.
                இரண்டாம் நாள் சாயுங்காலத்தில் அம்மன் சிலை செவ்வந்திப்பூகள், எலுமிச்சம்பழம் மாலையில் அலங்கரிக்கப்பட்டு தங்கப்பட்டுகள் அடுக்கப்பட்ட சப்பரத்தில் ஊர் வீதியில் பவனி வரும். சப்பர பவனிக்கு முன்னர் ஊர் மக்கள் வீட்டின் முன் மஞ்சள் நீர் தெளித்து, வண்ணக் கோலங்கள் வரைந்து ஒரு தெய்வீகத்தை அழைத்து வந்திருப்பார்கள்.
              ஆடி அசைந்து வரும் சப்பரம் சிவராவின் வீட்டின் முன் வந்ததும், அவனது அப்பாவும் அம்மாவும் சேர்ந்து கையிலிருக்கும் தாம்பூலத்தை பூசை செய்பவரிடம் கொடுப்பார்கள். தாம்பூலத்தில் கண் திறக்காத தேங்காய், வாழை பழம், வெத்தலை பாக்கு, பத்தி, சூடம் என பூசைக்குரிய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
              சப்பரத்தை நேர்த்தியோடு நகர்த்திச் செல்ல முன்னாலும் பின்னாலும் சிறாரும் பெரியோரும் மூங்கில் கம்பின் இணைப்பு கொண்டு இழுத்துச் செல்வார்கள்.
             நேற்று கிடைக்காத ஐந்து ரூபாய்க்கு வருந்தியவனுக்கு. இன்று இருபது ரூபாய் அப்பா கொடுத்ததில் ஏகத்துக்கும் மகிழ்ந்து போயிருந்தான்.
இரண்டாம் நாள் இரவு, மைதானம் காணாமல் போய்விட்டதோ என்று கூட தோன்றும் புதிதாய் பார்ப்போருக்கு, மக்கள் கூட்டம் வெகுவாய் பரவியிருந்தது.
             கரகாட்டகாரியின் மீதுள்ள சபலம் பெருசுகளை திறந்த பொக்கை வாயும்,புதிய வேட்டி சகிதம்  அசைய விடாமல் வைத்திருக்கும். அதே நேரம் இளசுகளில் பெண்களும் ஆண்களும் மைதானத்தின் ஓரமுள்ள கிணற்றின் இருபுறமும் பெண்கள் அமர்ந்தும் ஆண்கள் நின்று கொண்டும் பலூனை பறக்க விட்டு, பார்வைக் காதலில் வழிவது கூச்சமின்றி அரங்கேறும். அது எப்படியோ எந்த திட்டமிடலுமில்லாமல் இந்த நிகழ்வுகள் அதன் போக்கில் நிகழ்ந்து விடுகின்றன.
              பெருவாரியான இளசுகள் கரகாட்டத்தில் செவி சாய்த்துக் கொண்டே மனதை தொலைக்க மனம் தேடிக்கொண்டே நகர்ந்து கொண்டு இருப்பார்கள்.
"ஏல சுடலை உன் ஆளப் பாத்தியாடே" சிவரா கேட்கும் போது,
சுடலை சொல்வான் " அவள அப்பன்காரன் வீட்டுக்குள்ள பூட்டி வச்சிருக்காம்ல"
"சரிடே விடு நாளைக்கு மதியக் கொடைக்கு வருவால்லா அப்போ பாத்துக்கலாம்" இது சிவரா.

               பின் நள்ளிரவில் பெண்கள் நேர்த்திக்கடனுக்காக செய்த மாவிளக்கு, முளைப்பாரியை வீட்டிலிருந்து மேளதாளம், வாணவேடிக்கைகளுடன் கோவிலுக்கு அழைத்து வருவார்கள்.      இந்த இருள் சூழ் இரவில் விளக்கின் மஞ்சள் ஒளியில் மனம் விரும்பும் அவளை பார்க்கும் போது சிவரா நிற்கும் இடத்தில தேங்கித்தான் போனான்.
               புதன் கிழமை மூன்றாம் நாள், வீட்டில் ஆட்டுக் கறி சமைத்து புசித்த பின் மதிய வேளை கடைசி நாள் திருவிழா நடைபெறும். பகல் திருவிழா என்பதனால் அதிகமான பொருள் விற்பன்னர்கள் வரிசையில் இடம் பிடித்திருப்பார்கள். ஒருபுறம் கரகாட்டம் உச்சத்தில் இருக்கும் அதே நேரம், அம்மன் சன்னதி முன் முளைப்பாரி எடுத்த பெண்கள் குலவை சத்தத்துடன் கும்மிப்பாட்டு படித்து, மேளதாளம் மற்றும் இளசுகளின் ஆர்ப்பாட்டத்தோடு ஊரின் பெரிய குளத்திற்கு எடுத்துச் சென்று முளைப்பாரி கழுவும் நேர்த்திக்கடன் நிவர்த்தி செய்யப்படும். பெண்கள் சூடியிருக்கும் மல்லிகை மலர்களோடு முளைப்பாரி பூவையும் சூடியிருப்பது அவர்களை மேலும் அழகுறக் காட்டும்.
                திருவிழா முடிந்து மக்கள் வீடு திரும்பும் நேரம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் சின்ன கலவரம் இந்த வருடம் எதிர் பார்க்கா விதம் பெரிதாகிப்போகிறது.    இன்றைய இந்தக் கலவரத்தால் வரும் வருடங்களில் திருவிழா நடைபெறாமல் போய்விடும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
                நினைவுகளால் கலங்கிப்போன இந்த திங்களில் படுக்கையிலிருந்து எழ மனமின்றி தயக்கத்துடன் பணிக்குச் செல்ல தயாரான சிவரா, வெறுமையுடன் தனது இருசக்கர வாகனத்தை மிதித்து வசிக்கும் வீட்டிலிருந்து வெளியேறினான். இமை திறந்த கண்களில் ஏதோ நம்பிக்கை மட்டும் கலைந்து போகவில்லை இவனுக்கு..

1 கருத்து:

rajjeba சொன்னது…

வருகைக்கும் உயர்ந்த கருத்திற்கும் நன்றிகள் பல பாவூராரே....