திங்கள், 30 ஜூன், 2025

ஓவியர் மாற்கு - I Saw I share | ஓவியக் கண்காட்சி

எனக்கு ஏன் கோடுகளை இவ்வளவு தீவிரமாக பிடிக்கிறது எனும் கேள்வி அடிக்கடி எழும்.
இதுவரையில், நேற்று வரையில் ஓவியர் மாற்கு அவர்களது கோடுகளை இணைய வழியில் கண்டு காட்சியிலிருந்து விலகாத கண்களைக் கொண்டிருந்தவனுக்கு இன்று அந்தக் கோடுகளை நேரில் காணும் நற்பேறு கிடைத்தது. ஆசான் சரவணன் அண்ணனுடன் க்ரீம்ஸ் சாலை லலித் கலா கலைக்கூடத்திற்குச் சென்றிருந்தேன்.

தனியாகச் சென்றிருந்தால் அவரது கோடுகளுக்கு பின்னாலிருந்த உழைப்பையும் அவை வெளிப்படுவதற்கான மூலத்தையும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது அன்பும் பிறருக்கு கற்றளிக்கும் நோக்கமும் முறையும் பாடமாக அமைந்தது. ஒவ்வொரு படைப்பும் நின்று அமர்ந்து பார்த்து கண்களால் கட்டியணைத்து உரையாட வேண்டியவை. நேரத்தினால் நகர இயலாமல் நகர்ந்து வந்தோம். 

சூலை 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது, ஒவ்வொரு ஓவியமும் சன்னலோர இருக்கை, பயணத்தில் இளைப்பாருங்கள்!





ஞாயிறு, 18 மே, 2025

அக்கா குருவி 21

நாங்கள் 
அடுக்கி வைத்து 
வாழ்வு நல்கிய செங்கற்கள் 
நொறுங்கிக் கிடக்கின்றன
 
இடிபாடுகளுக்குள் 
எங்கள் 
ஆட்காட்டி விரலை
தேடிக் கொண்டிருக்கிறோம்



புதன், 14 மே, 2025

யார் கையில் அதிகாரமளிக்கிறோம்

நேற்று மதியம் வீட்டில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது, ஏன் என்று தெரியவில்லை மாலை வரையில் மீளவில்லை. மடிக்கணினி மின்சாரம் தீர்ந்து உறங்கிவிட்டது. பழுது நீக்க கொடுத்திருந்த ஈருருளியை எடுத்து வருவதற்காக வெளியேறினேன். தெருவைக் கடந்து சாலையை அடையும் போது போக்குவரத்து நெருக்கடி. இடது பக்கம் குடிசை வீடுகள் இடித்து நொறுக்கப்பட்டிருந்தது. மக்கள் அவரவர் வீட்டில் இடிபாடுகளுக்கிடையே சோர்ந்து அமர்ந்திருந்தனர்.

அவர்களின் நாளை என்னவாகும் என்ற‌ அதிர்வோடு நடந்தேன். இவர்களுக்கு இடம் ஏதும் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளதா எனத் தெரியவில்லை. முன்பொருமுறை அப்பகுதியில் கடைகளை இடிக்கத் தொடங்கியதும் மக்கள் போராட்டம் செய்தனர், வீடுகளை கை வைக்கவில்லை இப்போது வீடுகள் மொத்தமும் தரைமட்டம். ஆனாலும் இன்று காலையில் இடிந்த பகுதியில் அடுப்பு எரிந்தது, இன்னும் யாரையேனும் நம்பி உள்ளனரா எனப் புரியவில்லை.

இரு வாரத்திற்கு முன்பு பல்லாவரம் குன்றத்தூர் சாலை நான்கு வழிச் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பது செய்தியாக வந்தது. தொடர்ந்து அனகாபுத்தூரில் போராட்டம் நடந்ததாகவும் செய்தி. இந்தப்பக்கம் குன்றத்தூரில் அப்படி ஏதும் போராட்டம் நடந்ததாகத் தெரியவில்லை. பொதுவாக இப்பகுதியில் நடக்கும் நிகழ்வுகளில் காணக்கிடைக்கும் அரசியல் முகங்களை இரண்டு நாளாக எங்கும் காணவில்லை. நாம் யார் கையில் அதிகாரத்தைக் கொடுக்கிறோம்...




திங்கள், 12 மே, 2025

மிதிவண்டி

குன்றத்தூரில் உள்ள தமிழ்நாடு மிதிவண்டிக் கடையில் மூத்தவளுக்காக குட்டி வண்டி ஒன்றை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினோம். நான், ரத்திகா மற்றும் இயல் மூவரும் சென்றோம். மிதிவண்டியை வாங்கி ஈருருளியின் பின்னால் கட்டிய போது இயல் தனக்கும் ஒன்று வேண்டுமென அழத் தொடங்கி விட்டாள். இன்னொரு நாள் வாங்கலாம் என்று சொன்ன பிறகும் அழுகையுடன் வீடடைந்தோம்.

நாற்பத்தைந்து நாட்களுக்குள் ஒரு முறை இலவயமாக பழுது பார்த்துக் கொள்ளலாம் என்ற அதியற்புதமான வாய்ப்பும் வழங்கப்பட்டது. 

சில மாதங்களில் வண்டி ஓட்டுகையில் சங்கிலி தானாகக் கழன்று கழன்று தொந்தரவுக்கு உள்ளானது. இரு நாட்கள் பார்த்துவிட்டு ஒருநாள் மாலையில் அதனை ஒக்கிடுவதற்காக ஈருருளியில் எடுத்துச் சென்றேன். அங்கே வெளியில் இருக்கும் பழுது நீக்குபவர் பார்த்துவிட்டு கண்ணாடி அறைக்குள்ளிருப்பவரிடம் சென்று கூறியதும் அவர் புதிய சங்கிலி மாற்றவேண்டும் செய்யலாமா என்றதும் விலையை கேட்டுவிட்டுச் சரியென்றேன்.

பின்னர் இன்னும் சில மாதங்களில் மீண்டும் அதே தொந்தரவுக்கு உள்ளானது. என்னடா இது என்று மனம் ஊரிலிருந்த எனது மிதிவண்டியில் சுற்ற ஆரம்பித்தது ஒருமுறை பின் பக்கச் சக்கரத்தில் கல் வெட்டியதால் அங்கங்கே ஏற்பட்டிருந்த பிளவுகளால் மேல் ரப்பர் பகுதியை மாற்றியதும் நிறைய முறை ஓட்டை விழுந்ததால் உள்ளிருக்கும் ரப்பர் குழாயினையும் மாற்றியதும் நினைவில் ஊடாடியது. சங்கிலி மாற்றியது வரலாற்றில் இல்லை என்பது விளங்கியது.

மீண்டும் அந்தச் சங்கிலியை மாற்ற நேர்ந்தது. அடுத்த சில நாட்களில் அதே போல் கழன்று விழுந்தது. இந்தமுறை திசை மாறினேன். நாங்கள் இருக்கும் பகுதி குன்றத்தூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் வருமென்றாலும், அடையாற்றுப் பாலத்தைத் தாண்டியதும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனகாபுத்தூர் தான் மிக அருகாமை நகரம். 

பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் மிதிவண்டிகள் நிறைந்த தூசி படிந்த ஒரு கடை, பாதாளச் சாக்கடைப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் புழுதியை நன்றாகப் பூசிக் கொண்டு மாலை வெயிலுக்கு பழுப்பு நிறத்தை வெளிப்படுத்தியது. மிதிவண்டியை உருட்டிக் கொண்டே சென்றேன். பிரச்சினையை சொன்னதும் கண்ணாடியை உயர்த்தி வண்டியை கவனித்தவர், சில நிமிடங்களில் சங்கிலியின் ஒரு பல்லை மட்டும் கழற்றிவிட்டு பின்னர் இணைத்து மாட்டிவிட்டார் இன்று வரை ஓடுகிறது.

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

அக்கா குருவி 20

மெல்ல 
அணைக்கிறது
முரண்பட்டுச் சிரிக்கிறேன் 
தழுவுகிறது
அணைத்துக் கொள்கிறோம் 
உறவாடுகிறோம் 
தத்தித் தாவுகிறோம் 

சிறுவனொருவன் 
நுரையைக் கையில் அள்ளி 
தாண்டுகிறான் 

என்னைப் புரட்டி எறிகிறது
இப்போது
அலையைச் சுவைக்கிறேன் 

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

அக்கா குருவி 19

திரைப்படம் பார்க்க தனது கைக்குழந்தையுடன் வந்திருந்தாள்
அரங்கம் இருள் சூழவும்
குழந்தை சிணுங்கியது
கைப்பையினுள் 
துழாவி திறன் பேசியை எடுத்து 
"யூடியூப்" திறந்தாள்
குழந்தை தன் பூவிரல்களால் ஒளியைத் தடவி
சிணுங்கலை துடைத்தது
நாவினைத் தேடி ஒழுகியோடியது
பால்

திங்கள், 24 மார்ச், 2025

அக்கா குருவி 18

ராசபாளையத்தில் 
தொடரியின் முகம் பார்த்திருந்தேன் 
"தென்காசி ஆ"
என்றது வடக்கத்திய குரல் 
"வரும் 
சங்கரங்கோயில் கடயநல்லூர் தாண்டி" 
என்றது தெக்கத்திக் குரல் 
இரவு 
நெருப்பை கையிலேந்த தொடங்கியது 

சனி, 22 மார்ச், 2025

எது மகிழ்ச்சி

யாருக்கு எது மகிழ்ச்சி அதற்கான அளவீடு என்ன இந்த அளவீடுகளை உறுதி செய்வது யார் போன்ற வினாக்கள் தொடர்ந்து இன்று மனதில் அசைகிறது.

குண்டுமழை பொழியும் இசுரேல் நாடு மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்திலும் தீவிரவாதம் தழைத்தோங்குவதாகச் சொல்லப்படும் அல்லது காட்டப்படும் பாகிஸ்தான் இந்தியாவைவிட முன்னிலையில் அதாவது நூற்றியொன்பதாவது இடத்திலும் உள்ளது. பட்டியலில் மொத்தம் உள்ள நூற்றி நாற்பத்தேழு நாடுகளில் இந்தியா நூற்றிப்பதினெட்டாம் இடம் பெற்று மகிழ்ச்சியில் பின்தங்கியுள்ளது. எது மகிழ்ச்சி அதற்கான அளவீடு என்ன என்ற வினாக்கள் மீண்டும் துரத்துகின்றது. 

சமூகவலைத்தளங்களில் காணொளிகள் பகிர்வதிலும் பார்ப்பதிலும் இந்தியர்கள் உலக அரங்கில் முதலிடம். இத்தனையும் மகிழ்ச்சிக்காக செய்யாமல் எதற்காக என்ன நோக்கத்திற்காக அரங்கேறுகிறது மன அழுத்தத்திற்காகவா. ஒருவேளை இருக்கலாம். தெரிந்தோ தெரியாமலோ நாம் கணினியாகிக் கொண்டிருக்கிறோம் என்பது உண்மை.

ஒரு பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறதென்றால் திரைப்படப் பாடல்கள் ஓரளவு இடம்பெறும், முற்றிலும் அதற்கு இடமளிக்காத பள்ளி பாராட்டுக்குரியது. 

இன்று மாலை மூன்று மணி தொடங்கி இரவு ஏழு முப்பது மணிக்கு அந்தப் பகுதியில் இருந்து கிளம்பும் வரையிலும் மதனந்தபுரம் நாராயணா பள்ளியில் தொடர்ந்து திரைப்படப் பாடல்கள் மிகையொலியில் கத்திக் கொண்டிருக்க பள்ளி மாணவ மாணவிகளின் உயர் ஒலிப்பில் கூப்பாடுகளும் ஆட்டங்களும். யாருக்காக இந்நிகழ்வு பணம் கட்டும் பெற்றோர் மகிழ்விற்காகவா இல்லை கல்வி என்ற பெயரில் ஆண்டு முழுவதும் நசுக்கிய பிஞ்சு மனங்களை அவ்வப்போது இப்படி வேண்டாயிசையில் அனலூட்டி குளிர்விக்கவா. பள்ளி என்ன சொல்லிக் கொடுக்கிறது பெற்றோர் என்ன அறிவுடன் இங்கே கல்விக்காக தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள் அனைத்து தனியார் பள்ளிகளும் இப்படித்தான் இயங்குகின்றனவா ஒருவேளை இதுதான் மகிழ்ச்சியா என்ற வினாவும் துரத்துகிறது.

செவ்வாய், 18 மார்ச், 2025

ஒளியின் கண்கள் 9

திருவான்மியூர் தொடர்வண்டி நிலையப் பூங்காவில் "Chennai Photo Binnale"-ன் ஒரு பகுதியாக நடைபெற்ற புகைப்படக் கண்காட்சி..



வியாழன், 13 மார்ச், 2025

செயற்கையின் ஈரமின்மை

இந்து தமிழ் நாளிதழில் வியாழக்கிழமை தோறும் எழுத்தாளர் கலாப்ரியா எழுதும் பாற்கடல் தொடர் வாசிப்பிற்கு இனியதும் அன்புமானது.

இத்தொடருக்காக பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவின் ஓவியங்கள் எப்போதும் முகம் சுழிக்க வைக்கும். இன்று வெளியான "வாசனை தாத்தா" கட்டுரைக்கு அச்சிடப்பட்டிருக்கும் படம் கழுத்தை அறுப்பது போலுள்ளது.

இறக்கும் தருவாயில் உள்ள முதியவருக்கு எந்த ஊரில் இப்படி வாயில் நீரூற்றுவார்கள் என்று விளங்கவில்லை. இப்படியொரு காட்சியை கண்டிருக்காத சிலர் இந்த கட்டுரை வாசிப்பிற்கு படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தவறான புரிதலுக்கு வழிவகுக்குமா இல்லையா. பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டியது பத்திரிக்கை மற்றும் எழுத்தாளரின் அடிப்படை அறம் என்பதனை இவர்கள் உணரவேண்டும்.

வியாழன், 27 பிப்ரவரி, 2025

அக்கா குருவி 16

 ஈரமில்லா 

செயற்கை நுண்ணறிவின் எச்சத்தில் 

கோடு கிழித்து 

கையொப்பமிடும் விரல்கள் 

திங்கள், 17 பிப்ரவரி, 2025

அந்த முகம்

கண்ணை கசக்கி என்னைப் பார்ப்பதை தவிர்க்க முகத்தை அங்குமிங்கும் அசைத்த சின்னஞ்சிறு குழந்தையை படம் வரைவதற்கு எதிரே தனியாக அமர வைப்பது கடினம் மேலும் முகம் வரைவதற்கு ஏற்ற கோணமாக பார்வை அமையாது என்பதனால் பெற்றோர் மடியில் வைத்துக் கொள்ளவது சரியாக இருக்குமென்று "மடியில வச்சிக்கிடுங்க" என்ற பின்னும் அவள் கண் கசக்கும் நாடகம் தொடர்ந்தது. உடனே அவளது தந்தை எனக்குப் பின்னால் நின்று திறன் பேசியில் காணொளி (அனேகமாக யூ ட்யூப்) ஒளிப்பித்தார், அவளது கை அடங்கிவிட்டது இரு கண்களும் ஒளியை பிரதிபலித்தது. உள்ளே அனல் பரவவும் வரைய முடியாது எனக் கூறிவிடலாம் என மனம் போனாலும் கோடுகள் வெறிகொண்டு கீறலுக்குள்ளானது. இப்படியொன்று மீண்டும் நிகழும் எனில் அடுத்த முறையேனும் சொல்லிவிட வேண்டும். 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2025

குன்றத்தூர் முருகா

அப்பனே முருகா 

என்னடா 

உன் சாலையிலும் படியிலும் 
தலைகள் 
கண்டேன் இல்லை கால்களை 
ஓரம் வழிகண்டு 
தார்ச் சாலையில் குன்றேறினேன் 
அவசர ஊர்தியிரண்டு கண்டேன் 
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி 
கடந்து வந்தேன் 
உன் 
திருமேனி காண 
வழியில் அடி தேய 
நெருக்குகிறது உடல்கள்
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி 
விலகி
பின்புறம் சென்றேன் 
சமோசாக்களுக்கும் போண்டாக்களுக்கும் 
மயில் றெக்கைகளுக்கும் 
இடையில் 
வேண்டுதல் பொங்கலும் 
புளிச்சோறும் நிறை கைகள் 
தெப்பம் காண மனம் கொள்ளாமல் 
நகர்ந்த பொழுதில் 
மகள் அடுக்கிய கல்வீட்டை
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி 
தீபத்தின் புகை கடந்து 
உன் அண்ணனைக் கண்டோம் 
அவன் ஏன் வெளியில் இருக்கிறான் 
என்ற மகளின் வில்லங்க வினாவிற்கு 
நேற்று விடையளித்த நினைவோடு 
திருநீறு கொண்டு படியிறங்கினேன் 
முட்டிக்காலில் படியேறிய பெண்ணையும் 
உதட்டுச்சாயத்தைத் தழுவி வந்த 
அரோகராக்களையும் 
வியர்வை வேடிக்கைப் பார்ப்பதை 
நீயும் கண்டிருப்பாய் என்றெண்ணி 
விடைபெறுகிறேன்