பக்கங்கள்

திங்கள், 6 ஜனவரி, 2014

பெரியகுளத்துச் செல்வி..

குற்றால மலையூற்றின்
அடிவாரத்தில்
அமையா விடிலும்
இத்திரு நன்னீரை
தன்னுடல் போர்த்திக்கொள்ளும்
பரந்த மேனியுடையாள் !

தன் சுற்றும்
பசுமையுடல் பரப்பி
பாட்டளிகளின் பசிதீர்க்கும்
அன்னப் பயிர்க்கெல்லாம்
நன்னீர்
கொடையளிப் பவளாம் !

தன்னுடல் சூடு தணியாப்
பொழுதும்
ஊரார் உடல் குளிர்வித்து
உள மகிழ்பவளாம் !
..போதாதென
பசிபோக்க மீனையும்
பிரசவிப்பவளாம்  !

வட்டக் கிணறு
வெட்டுக் கிணறு
சாஸ்த்தா கோவில்
கரம்பக் கிடங்கு
கண்மாய்  யென
பன் முகங்களும்
உளனவே இவளுக்கு !

சிவந்த
மாலை வேளையில்
கரைதனில் இளங்காதலர்கள்
புரியும் காவியத்தை
பூங்காற்றுடன் இரண்டற கலந்து
வீசச் செய்பவளாம் !

மனித வாழ்வின்
மகத்தான வரம்
மரணம் !
ஊரார் விட்டுப் பிரியுமுன்
ஓர் உயிரையெனும்
தனதாக்கிக் கொள்பவளும்
இவள்தானே !

நன்னீர் உடை களைந்தாலும்
ஊற்றில்
உதிரம் உதிர்த்து உயிர்
காப்பதிலும்
இவளன்றி வேறொருவர்
உளரோ !!


கரையோரம் கடைவிரித்து
வஞ்சகம் விளையாதிருங்கள்
மலட்டு நீரை
மண்ட விட்டு மண்ணை
மலடாக்காதீர்கள்...
பஞ்சம் பரவாமலிருக்கும்..

நம் மகள் யிவள் !
நம் அன்னை யிவள் !
நம் பாட்டி யிவள் !
நம் மூதாட்டி யிவள் !

நம் கீழ்ப்பாவூருக்கு
கொடை வழங்கும்
நூற்றாண்டு கல்லணை கொண்ட
பெரிய குளத்துச் செல்வி யிவளுக்கு
நிகர் வேறொருவர்
இலவே !!

--ஜெ.பா

கருத்துகள் இல்லை: