வியாழன், 25 ஜூலை, 2024

அக்கா குருவி 5




ரயிலுக்கு முன் 
ரயில் பூச்சியின் பெயர் 
என்னவாக இருந்திருக்கும் 
-----
சிற்பங்களுக்கு 
இடையிடையே மலர்கள் 
எப்போது அவை 
மகிழ்ச்சிக்கானதாக மாறியிருக்கும் 
----
ஒரு கண் 
மறு கண் 
இரண்டுமானது 
மூன்றாம் கண் மற்றும் 
ஒன்றரைக் கண்ணிற்கும் இடமுண்டு 
இரட்டைக் கண் கூட இருக்கிறது போலும் 
----


செவ்வாய், 2 ஜூலை, 2024

க்ளிக்

புகைப்படங்களின் ஆரம்ப கால வரலாற்றில் தொடங்கி எப்படி ஒரு ஒளிப்படக்கருவி செயல் படுகிறது, காட்சி எவ்வாறு படமாக இக்கருவி உதவியுடன் பதிவு செய்யப்படுகிறது, அதிலுள்ள அனைத்து பாகங்கள் மற்றும் குவியாடிகளின் வகைகள் என ஒளிப்பட நுட்பங்களை விரிவாக அலசி எவரும் எளிதாக புரிந்து கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது "க்ளிக்" புத்தகம்.

ஒளி குவியாடியின் வழியே புகுந்து செல்லும் அளவைப் பொறுத்து கிடைக்கும் படங்களுக்கான அளவீடுகள் பற்றி வாசிக்க வாசிக்க நானும் ஒளிப்படக் கலைஞன் ஆகிவிடலாம் என்ற ஆர்வத்தை விதைக்கிறது. ஒளியினைப் பயன்படுத்தி அவர் வரைந்த ஓவியம் புதிதாகவும் வியப்பளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அழகுணர்ச்சி கொண்ட கட்டமைப்பை உருவாக்க ஓவிய வாசிப்பின் அவசியத்தை உணர்த்தி அதற்கான விதிகளை வரையறை செய்து கொடுத்திருப்பது கற்றலின் பெருவெளி. இத்தனை ஆண்டுகள் இந்த புத்தகத்தை வாசிக்காமல் வைத்தது பெருந்தவறு என்பதை உணர்ந்த தருணம். இப்புத்தகத்தை எழுதியதற்கு ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி பாராட்ட வேண்டும்!!