ஒவ்வொரு விவசாய நிலமும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருப்பது போல் கடலிலும் பல பண்புகள் நிறந்த பகுதிகள் இருப்பதை இந்த நூல் வாசிப்பிற்கு பிறகே அறிதலுக்குள்ளாகிறது. கடலில் மிதப்பது படகு அல்லது கப்பல் என்பதைக் கடந்து அதன் உண்மையான பெயர்கள் புலப்படவும் கடலோடிகளின் வாழ்வைப் புரிந்து கொள்ளவும், கடல் வாணிபத்தில் கொழிக்கும் மனிதர்களையும், இலங்கை ராணுவம் ஏன் கடல் எல்லை தாண்டியதாக தமிழர்களைச் சுடுகிறது, கச்சத்தீவை ஏன் இலங்கை ஈர்த்துக் கொண்டது, தமிழ் நிலத்திற்கும் இலங்கைக்குமுள்ள ஆதி உறவு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் நிலமும் கொண்டிருக்கும் வெவ்வேறு பண்புகளை உணர்ந்து கொள்ளவும் மிகப் பெரும் உந்துதலை வழங்குகிறது இந்நூல்.
கடல் புறத்தில் சுற்றுலாவை மேம்படுத்தினால் கிடைக்கும் பொருளாதாரத்தில் அங்கிருக்கும் பெரும் சுரண்டல் ஆலைகளை இல்லாமல் ஆக்கிவிடலாம் எனும் கடலோடியின் குரலை கேட்பாரில்லை என்றே தோன்றுகிறது.
எங்கிருந்து நம் நிலங்களுக்கான விடுதலையை சுய பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும் என எண்ணும் போது நமது கல்வி முறையில் உரிய மாற்றங்களைச் செய்யாமல் இது சாத்தியமில்லை, எப்படி ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்த பண்பிருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு அந்தந்தப் பண்பிற்கேற்ற பள்ளிக் கல்வியை ஊக்குவிக்கவும் உருவாக்கவும் வேண்டும். ஆனால் நாம் ஒற்றை கல்விக் கொள்கை எனும் சுருக்கும் கயிற்றில் தொங்கத் தொடங்கிவிட்டோம்.
கொற்கை புதினம் வெளியான நாள்முதல் அதை எப்படியும் வாங்கி வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் போதெல்லாம் அதன் விலை மீது மாறாத பயமொன்றை சுமந்து கொண்டிருந்தேன். அந்தச் சுமையை புறந்தள்ளி வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் நிற்கிறேன்.