வியாழன், 28 ஆகஸ்ட், 2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

தீபாவளித் திருநாளை முன்னிட்டு

ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014

                              https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgRqSyEuCIdk_pDU55guK_dGnbK39l4WDpJVSoBMDwW_7N_NgL_RFhhugYDjgDqbOUw1FaoLJDiut1s4ADLFo_-tbRa6HWwMOIcS6jDHlLA2jiyzHNkanHceYklXPVr1IapC4WLKsg6SSHG/s1600/Untitled-3+copy.jpg

கவிதையாக எழுதி வடிக்க
ஓவியமுன்னை உற்றுகையில்
எழுதுகோலின் மைவழி இறங்க மறுத்த
வார்த்தைகள் உன் விரலிடுக்கில்
சிக்கிக்கொண்டு சந்தத்தோடு
ஏளனம் செய்ய இசைகிறாய்..

ஓரப் புன்னகையில் விழும்
கதுப்புக் குழியில் தேங்கிப்போனவனை
மலர்விழிப் பார்வையில்
மதியிழக்கச் செய்து
மல்லி மலரை முழுமதியுன்
கருங்குழல் சூட
கள்ள விழியால் கபடம் செய்கிறாய்..

விழியில் வீழ்ந்து தூரம்
நிற்க கடவாமல்
நெருங்க விழைந்தவனை
பூக்கள் நிறைந்த கூடையோடு
வாசல்புறம் அடிவைத்து
பாத மணிகளினோசையில்
பரிதவிக்கச் செய்கிறாய்..

இனிநான் விலகி நிற்க
  மறுக்குமுன் புன்முறுவலை..
அழைக்கும் விழிகளை ஏற்று
      மெய்யான ரகசியம் இனி என் விழிகளுக்கு...
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

விரும்பிய தலைப்பிற்கான கவிதை:

செயலற்ற வார்த்தைக் கூட்டம்

நீண்ட பட்டைச்சாலையில்
பாதம் பதிக்கும் முதல் சிறுபொழுதிலும்
சாலையின் உறவை முறிக்கும்
நான்காம் சிறுபொழுதிலுமென
சாலையோரம் மலங் கழிப்பவனாகவும்
பச்சை போத்தலில் நீராகாரம் உறிஞ்சுபவனாகவும்
ஊர்வாரியில் கிடக்கும்
ஆகாரப் பொட்டலம் திரட்டுபவனாகவும்
அலைந்து திரியும்
நெகிழிப் பையை கால் சட்டையாக அணிந்தவனுக்கு
கந்தலான மேல்சட்டை மட்டும்
எவரோ கொடுத்திருக்க வேண்டும்
இல்லை அவனே குப்பையிலிருந்து
உருவியிருக்க வேண்டும்
கடந்த ஒரு ஆண்டாய்
இந்த ஐந்து பர்லாங்கு தொலைவில்
திரிபவன்; சில நேரங்களில் மட்டும்
குன்றின் திசை நோக்கி
வேற்று மொழியில் கதைக்கிறான்
அந்த குமரனுக்கு இது புரிந்திருக்கவில்லை போல
இன்றும் அதே நெகிழிப்பையும்
போத்தலுமாக திரிபவனுக்கு
இந்த வார்த்தைக் கூட்டத்தாலும் 
எந்த பயனுமிருக்கப் போவதில்லை....

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

ஒரு புளியமரத்தின் கதை - சுந்தரராமசாமி

        

          ஒரு புளியமரத்தின் கதை எனும் நாவல் சுந்தரராமசாமி அவர்களால் எழுதப்பட்டது,நாவல் உலகில் இந்திய அளவில் நேரடியாக கீப்று மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட முதல் நூல்.

           புளியமரத்தை மையப்படுத்தி அதன் சுற்றில் ஏற்படும் வளர்ச்சியின் மாற்றங்களையும்   நடைபெரும் நிகழ்வுகளையும் அழகுடன் கூறிச்செல்கிறது,
நாவலில் வரும் தாமோதர ஆசானை அறிவுடன் ரசிக்க முடிந்தது  அவர் போன்ற கதை சொல்லியொருவர் நமக்கு கிடைக்கவில்லை எனும் ஆதங்கம் அவர் கதை சொல்லும் பொழுதிலெல்லாம் வந்து சென்றதை தவிர்க்க இயலவில்லை. அதேபோல் அவருக்கு பிரியமான யாழ்பாணம் சுருட்டு வெற்றிலை வாங்கிக்கொண்டு கதை கேட்க வரும் சிறுவர்களை வாசிக்கையில், எனது தாத்தாவுக்கு பீடியும் அஞ்ஞால் அலுப்பு மருந்தும் வாங்கிச்செல்வது நினைவில் வந்து போவதையும் தவிர்க்க முடியவில்லை.

           குளத்தின் மையத்தில் சிறு தீவுபோல காட்சிதரும் புளியமரம்
நிலத்திற்கு இடம்பெயர்ந்ததை ஆசான் கூறும் மகாராசாக் கதை மூலம் தெரிந்து கொள்ளமுடிந்தது. செல்லம்மாள் மரக்கிளையில் தூக்கிலிட்டுக் கொண்டது,மகாராசா கால்பந்து பார்த்து கண்ணீர் விட்ட கதையென
ஆசானின் ஒவ்வொரு கதையின் மூலம் புளியமரத்தின் மற்றும் புளிக்குளம் ஊரின் வரலாறையும் தெரிந்து கொள்ள முடிந்தது.

           நகரமயமாக்கலின் ஆரம்பமாக காத்தாடிமரங்கள் அளிக்கப்பட்டு பூங்கா உருவானதும், புளியமரத்தை சுற்றி கடைகள் கிளை விரித்ததும்,
சாதி மத வேறுபாட்டிலும், துரோகங்களிலும் அரசியல் காழ்புணர்ச்சியிலும் மௌனசாட்சியாய் நிற்கும் புளியமரத்தை மையங்கொண்டு மனிதர்கள் பிளவு படுவதை சுட்டிக்காட்டி இந்த நாவல் அற்புத இலக்கியமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

           தமிழ் இலக்கியத்தின் மைல்கல் என கூறப்படும் இந்நாவல் வாசிப்பவர் மனத்தில் நிச்சயம் சிறுதாக்கத்தை ஏற்படுத்திவிடும்....

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

சேர்க்கையின் கவிதை

சற்று நீண்ட
பச்சைவண்ணச் இலைபெற்ற
அந்தச் செடியில்
மலர்ந்திருக்கும்
மஞ்சள் மலரின் பெயர்
எனக்குத் தெரிய வாய்ப்பில்லை
மாலை நேரத்தை
மேற்குதிசை மடிந்து சொல்லும்
அதன் சூல்களில்
சேர்க்கை செய்யும்
வௌ்ளை வண்ணத்துப்பூச்சொன்று
நொடிக்கொரு கவிதையொன்றை
பாடி படபடத்தது
தன் வௌ்ளைவண்ணச் சிறகை....

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

கேலிப் புன்னகை

யார் எறிந்திருப்பார்கள்
எறிந்தபின் இறந்ததா
இறந்தபின் எறியப்பட்டதா
கேள்விகளோடு ..
குப்பையில் வீழ்ந்து கிடந்த
நாய்க்குட்டியை
அள்ளிச் சாக்குப்பையில்
நிரைப்பவனின்
உதட்டோரப் புன்னகை
கேள்வியை மௌனித்து
கேலி செய்தது எறிந்தவனை...

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

மேகத்திரள்கள் வந்திருக்கின்றன

நண்பா
வானூர்தி நிலையத்தின்
கூரையிலிருந்து எட்டிப்பார்
மாலைச்சூரியன் கைபிடித்து
நாம் ரசித்து சிலாகிக்கும்
மேகத்திரள்கள் வந்திருக்கின்றன
உன்னை வழியனுப்ப
ஊர்தி உயரம் தொட்டதும்
கட்டளைக்குப் பின்
சாளரம் திறந்து
கண்களை மிதக்கவிட்டுப்பார்
உன் உறவுகளும் நட்புகளும்
வெண்திரளுருவமேற்று
பயணித்திருப்போம்
இனி வேறுபடும்
முழுநிலவு நாட்களின்
இரவுகள் நமது நினைவுகளை
சுமந்து திரியட்டும்

புதன், 6 ஆகஸ்ட், 2014

புதுப்பித்திருந்த பாதை

ஆலமரத்தின் இளம் விழுதுகளும்
சுற்றுச்சுவரின் சிகப்பு பூச்சும்
நெடுநாட்களுக்குப்பின்
தேங்கிக்கிடக்கும் மழை நீரும்
ஈன்றெடுத்த குட்டிகளோடு
நடை போகும் நாயும்
வேகம் தவிர்த்த என் நடையும்
பழைய பாதைகளை
இன்று புதுப்பித்திருந்தன...

சனி, 2 ஆகஸ்ட், 2014

இரு நிமிடமாவது

பயணிகள் நிழற்க்குடையில்
ஒதுங்கி யிருக்கும் போது
தன் கைத்தடியை
தொடையில் சாத்திவிட்டு
சிலரிடம்
கைகளை கூப்பி ஏதோ
கேட்டுக் கொண்டிருந்தார்
எனக்கு அவரது
மகனையோ மகளையோ
திட்டவேண்டும் போலிருந்தது
இருந்தும்
நான் என்ன நினைக்கிறேனென
அலைபேசியின் கண்ணாடியை
பார்த்தபோது
என்னை இரு நிமிடமாவது
அவரது மகனாக
இருக்க கூறி மறைந்தார்