திங்கள், 17 நவம்பர், 2014

பேசுதலின் நிமித்தம்

பேசினோம்
பேசிக்கொண்டேயிருந்தோம்
எந்த தடையுமில்லைதான்
கொசுவைத்தவிர

என்னன்னவோ
பேசினோம்

அகமுமம்
புறமும்
நெடுநல்வாடையும்
ஏற்பாடும்
குரானும்
கீதையும்

நிலவொளியும்
மின்னொளியும்
நுரையீரல்
தின்னும் புகையும்

வேப்பமரக் காற்றும்
தென்னங்கீற்றின்
சலசலப்பும்

இளஞ்சூட்டு
குளம்பியும் தேனீரும்

இத்தோடு
முடியுமா என்றால்
இல்லைதான்

புதன், 12 நவம்பர், 2014

அலையும் உருவங்கள்

மழைப் பொழுதின்
காலை நேரப் பேரூந்தில்.
செய்தி தாளை புரட்டிக்கொண்டிருந்தவர்.
கற்பழிப்பு, கொலை, கொள்ளை,
கருப்பு பணம் இவற்றிற்கு
தன் காலத்தோடு ஒப்பிலக்கணம் எழுதிக்கொண்டிருந்தார்.
எனக்கும் அவருக்குமான காற்று வெளியில்.
நிறுத்தம் வந்ததும்
பேரூந்தின் படியில் நின்று திரும்பிய வேளை
அவரின் உருவத்திற்கு
எனது முகத்தை
பொருத்திப்பார்த்துக் கொண்டேன்
பாதம் தரைதொடும் சில நொடிகளில்....

வெள்ளி, 7 நவம்பர், 2014

நகரத்து காலை

முகில்கள் அற்ற தெளிவான வானில்
இதுகாறும் மறையா முழுநிலவு
அதையொட்டி சிறகு விரித்த கரும்புறா
வாகன இரைச்சலில் தேம்பி அழும் குளிர் தென்றல்
தெளிவற்ற மனநிலையில் போக்குவரத்து சமிக்ஞை
பிறந்த குழந்தையின் பிசுபிசுப்பு இவன் கைகளில்
முழுமைபெற காத்திருக்கும்  நகரத்து காலை

வியாழன், 6 நவம்பர், 2014

ஒவ்வொரு இரவும்

நிலநடுக்கம் போன்ற
கனவுகள் நிறைந்த இரவுகள்
மழைச் சாரல் சிதறும்
காலையை நிகழ்த்திவிடுகிறது
இனி
ஒவ்வொரு இரவும்
அப்படியே அமைந்து விடுவது
உறுதி செய்யப்பட்டால்
விடியலுக்கு அழகுதான்...