செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

உரையாட தொடங்கியது

நேற்று
என்னோடு பேசமறுத்த
மரங்களெல்லாம்
கண்ணீரோடு
உரையாட தொடங்கியது
மழை ஓய்ந்த
இன்றைய காலையில்

திங்கள், 23 பிப்ரவரி, 2015

இரவிற்கு போதுமானது

இந்த இரவிற்கு இது போதுமானதாக இருக்கிறது.

ஆத்மநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி சிறுகதையை வாசிக்கும் போது, குமாரசாமி கேட்கும் கேள்விகளும், ஆத்மநாமின் கவிதைகளும். தனிமையை உணரச்செய்கின்றன, வாழ்க்கையை சுவாசிக்க கற்றுத்தருகின்றன.

“நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய்

என்கிறது மனித இனம்

நான்

வேலையைக் கேட்கவில்லை

உணவைக் கேட்கவில்லை

குடியிருப்பைக் கேட்கவில்லை

கேட்பதெல்லாம் ஒன்றுதான்

நான் வேறு நீ வேறு

என்பது பொய்

நானும் நீயும் ஒன்றுதான்

என்பதை உணர்“

நான் முன்னர் எங்கேயோ வாசித்ததை, பிரமிளின் கவிதை என்று தெரியாமல் வாசித்ததை , இன்று மீண்டும் வாசித்தபோது உணரமுடிந்தது. என்னுடைய கவிதைக்கான ஒரு விரலை அது பற்றிக்கொண்டதை.

சிறகிலிருந்து பிரிந்த

இறகு ஒன்று

காற்றின்

தீராதபக்கங்களில்

ஒரு பறவையின் வாழ்வை

எழுதிச்செல்கிறது
.....
http://www.sramakrishnan.com/?p=4498

புதன், 18 பிப்ரவரி, 2015

பறக்கத் துவங்கியிருந்தது

அவளின்
மழலைச் சொல்
கொக்கு வரையச் சொன்னபோது
சிறுபிள்ளையில்
நான் வரைந்த கொக்குதான்
நிழலாடியது..

ஒன்று ஒற்றைக்காலில்
மீனுக்கான தேடலிலும்
மற்றொன்று
மீனை தன் அலகில்
ஏந்திக்கொண்டுமிருக்கும்...

அதில்
தேடலில் இருக்கும்
முதல் கொக்கை
வரைந்து காட்டினேன்..

"இதா கொக்கு கொண்டாங்க நான் வரையுதேன்" என்றவள்
வரைந்த கொக்கு
பறக்கத் துவங்கியிருந்தது...