சனி, 25 ஏப்ரல், 2020

பால் பால்

மனிதர்கள் ஏன் பால்... பால் என்று பித்தர்கள் போல அலைகிறார்கள் எனத் தோணும் அவ்வப்போது.  பிறப்பிலிருந்து கல்லூரி காலம் வரை ஊரிலிருந்த பொழுதுகளில், காலையிலெழுந்ததும் செல்லத்துரை பெரியப்பா வீட்டுக்குச் சென்று கால் பாதங்களின் இடுக்கிலுள்ள பானையில் தயிரை  மத்து கொண்டு வெண்ணையை பிரித்தெடுக்கும் பெரியம்மையிடம் நூறு மில்லி பால் வாங்கி வருவேன். கருப்பட்டி காப்பியை வெண்மையாக்க பாலை கொஞ்சமாக ஊற்றித் தருவாள் எங்கள் அம்மை. தேநீர் கடைகளில் பாலாகிய வென்னீரில் காப்பிக்கொட்டை வடிநீர் அல்லது தேயிலைத் தண்ணீரை சிறிது கலந்து குடிக்கத்தரும் பழக்கமுண்டு இது முற்றிலும் வீட்டுப் பழக்கத்திற்கு எதிர்மறையானது. இம்முறையிலான கடைப் பழக்கம் திருமணம் போன்ற மற்றைய விழாக்களின் போதும் புழக்கத்தில் இருந்தது.

நகரத்து வீடுகளில் 2011-ம் ஆண்டு வரை காப்பியோ தேநீரோ அருந்தியதில்லை அல்லது நினைவிலிருக்கும் படியான அளவில் எண்ணிக்கையில்லாமல் இருக்கலாம், பின் அக்கா வீடுகளிலும் இம்மாதிரியான கடைப்பழக்கம் லிட்டர் கணக்கில் பால் புழங்குதல் எல்லாம் நிகழ்ந்தது. அலுவலகத்தில் பால் பற்றிய பேச்சு எழும் போது எந்த நிறுவனத்தின் பால் சிறந்தது என்று கேள்வி வரும், பாலை கொழுப்பு நீக்கியது, மிதமான கொழுப்புடையது, கொதிக்க வைத்தது என வகை வகையாகப் பிரித்து விற்பனை செய்யும் அரசினுடைய வழியே தவறென்று வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள். இதில் சிறந்தது எதுவென எங்கிருந்து கூறுவது. அப்படின்னா பாலுக்கு என்ன செய்வீங்க, இப்போதான் தெருவில் நேரடியாக வந்து விற்கிறார்களே அதை வாங்கலாமே என இன்னொரு கேள்வி வரும் "அய்யா பால் வேண்டவே வேண்டாங்க" என்றால் அப்போ கால்சியத்துக்கு என்ன பண்ணுவீங்கம்பாறு இன்னொருத்தர், பாலில் மட்டுமே கால்சியம் இருக்குன்னு யாராவது சொல்லியிருக்காங்களா. இப்படியே போகும் பாலுக்கான பாடு. காலையில் வாயிலிருந்து வரும் கெட்ட வாடையின் மிகுதிக்கு காரணம் நுரை ததும்பும் பால் தான் என அதை வாங்குவதை நிறுத்தியுள்ளான் நண்பனொருவன், ஆய்வுக்குரியது.

கடந்த ஞாயிறன்று நாங்கள் குடியிருக்கும் பகுதியில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் சென்று வர அனுமதியளிக்கும் வகையில் விதிமுறைகளோடு நீல நிற அட்டையொன்று வழங்கப்பட்டது, வாங்கிக்கொண்டு வரும் வழியில் பின்னாலிருந்து வந்த தனிக்குரலொன்று கேட்டுத் திரும்பினேன் , புதன் கிழமையும் சனிக்கிழமையும் மட்டும் காலையிலிருந்து மதியம் வரை ஒருவர் மட்டும் வெளியில வரலாம்னு சொல்லுதாங்க அப்படின்னா தினமும் கடைக்குச் சென்று பால் வாங்குதவங்க என்ன செய்வாங்கன்னாரு. இதுவெல்லாம் ஒருமாதிரி ஒருத்தரையொருத்தர் திருப்தியடைய வைக்கும் சம்பிரதாயங்கள் மற்றபடி பக்கத்துக் கடைகளுக்கு நாம போய் வரலாம்னுதான் நினைக்கிறேன் என்றதும், கடைக்காரன் சொன்ன நேரத்துக்குத்தான் வரணும் இல்லன்னா பொருள் கிடையாதென்றுச் சொன்னால் என்ன செய்ய முடியும் என்றார், நல்ல கேள்வி என்ன நடக்குன்னு பாப்போமென்று சொல்லிவிட்டு பிரியும் தெருவில் வலப்பக்கம் நானும் நேராக அவரும் நடந்தோம். பொருட்கள் தட்டுப்பாடு அதிகமாகும் போது அவர் விருப்பம் போல் விலையை அதிகரிக்கும் கடைக்காரர் இந்த நேரத்திற்கு மட்டும் தான் பொருள் தருவேன் என்று சொல்லிவிடுவாரா என்ன.

முந்தாநாள் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தொற்று உறுதியானதும், எங்கள் பகுதிக்கான வாசல்கள் அத்தனையும் இரும்புத் தட்டிகளால் அடைத்துப் பூட்டப்பட்டன. தட்டியின் ஓரம் உள்ள இடைவெளியில் பால் வாங்கலாமென பெரியவர் ஒருவர் தெருவில் விசாரிப்போரிடம் நேற்று காலையில் கூறிச் சென்றார். தெருவில் பிரிந்து போனவரின் எண்ணம் என்னவாக இருக்குமென எண்ணிப் பார்க்கிறேன், நேற்றுவரை இருந்த அனுமதி கூட இன்றில்லை நாளை என்னவாகிப் போகுமோ. இதோ நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு.


ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

இது யாருடைய வகுப்பறை - வாசிப்பு


எப்பவுமே புதினம் வாசிக்கயிலதான் நினைவுகளின் பக்கம் ஓடியோடி மனம் துள்ளிக் குதிக்கும், ஆனால் அதற்கு நேர்மாறாக இது யாருடைய வகுப்பறை?” என்ற தலைப்புடைய கல்வி சார்ந்த இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நினைவுகளை முன்காட்டி வியக்க வைக்கிறது. எவருக்கும் மகிழ்வான இக்கட்டான நிகழ்வுகளை உள்ளடக்கிய காலமாக அவர்களுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் இருக்கும். அந்த சூழ்நிலையில் என்னோடிருந்த முகங்கள், ஆசிரியராகட்டும் அல்லது உடன் படித்த நண்பர்களாகட்டும் அவர்களோடு மானசீகமாக உரையாடியபடியே வாசித்துக் கொண்டிருந்தேன்.




நமது இன்றைய கல்விச் சூழலை புரிந்துகொள்ள அதன் தோற்றம் முதல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஒவ்வொரு கல்விக் குழுவின் செயல்பாடுகளையும் உள்ளடக்கி, பல்வேறு கல்வியலாளர்கள் முன்வைத்த கருத்தியல்கள், ஆசிரிய மாணவ உறவுகளின் இன்றைய தேவையென சிறப்பான குழந்தை/மாணவ மைய கல்விக்கான தீர்வை நோக்கி பயணிக்கிறது நூல். மிகப்பெரிய உரையாடலுக்கான களம் கல்வி என்பதை உள்வங்கிக் கொள்ள உதவும் நூல்.


நுலாசிரியர்: ஆயிசா இரா.நடராசன்




சனி, 11 ஏப்ரல், 2020

கொரோனா காலம்


கடந்த வருடம் சனவரியில் வாங்கிய ஏ3 அளவிலான 50 பக்கங்களைக் கொண்ட ஒவிய ஏட்டினை போன வாரம்தான் முழுவதுமாக பயன்படுத்தி முடித்தேன். எவ்வளவு குறைவாக வரைந்திருக்கிறேன் என எண்ணிக் கொண்டிருகிறேன். சென்ற வாரம் வாட்சப்-ல் ஒவியம் வரைய நண்பர்களை அவர்களது படங்களை அனுப்பக் கோரியும் முதல் ஐந்து படங்கள் கரிக்கோல் ஓவியமாக்கப்படும் என்ற நிலைத்தகவல் ஒன்றை பதிவிட்டேன், அதன் படி முதல் ஐந்து படங்களை வரைந்து ஏட்டினை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டேன்.

மார்ச் மாதம் அவசரப் பயணமாக ஊருக்குச் செல்கையில் புதிதாக வாங்கிய ஏ4 அளவும் 50-பக்கங்களும் கொண்ட ஏட்டினை தொடர்வண்டியிலிருந்த சில முகங்களை கோடுகளால் கிறுக்கினேன். இதோ பாதி புத்தகத்தினை கிறுக்கித் தள்ளிவிட்டேன் இவை சொற்பமே ஆனாலும் என்னைப் பொறுத்தவரையில் சிறப்பானதும் கூட, ஊரடங்கு முடியுமுன் முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறேன், அப்படியாகிவிட்டால் நீர்வண்ண ஓவியம் வரையும் காகிதங்களையும் தூரிகைகளையும் கையிலெடுக்க வேண்டியதுதான், ஆனால் அது அத்தனை எளிதல்ல இரு சிறு பெண்களை வைத்துக்கொண்டு, வண்ணங்கள் அவர்களை ஈர்த்துவிடும்.

பேரமைதியில் வாசிக்க ஏதுவான சூழலை காலையில் ஏற்படுத்திக் கொண்டு குழந்தைகளின் விடியலுக்கு முன் சில பக்கங்களை வாசித்துவிட முடியும், அப்படிச் சில நூல்களை இந்த நாட்களில் வாசித்து முடித்திருக்கிறேன். கடந்த வருடம் என்ன என்ன வாசித்தேன் என எந்த பட்டியலும் வரிசைப் படுத்தவில்லை ஆனால் இந்த வருடம் அப்படியில்லாமல் கொஞ்சம் தீவிரமாகவே தலைப்புகளை “GOODREADS” உதவியோடு வரிசை படுத்தி வருகிறேன், எனக்கென்னவோ இந்த வருடம் புனைவுகளை நோக்கியே மனம் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது, என்னை சுய பரிசோதனை செய்ய ஏற்ற காலமாக இந்த வருடத்தை பயன்படுத்திக் கொள்ள விழைகிறேன். இத்தோடு அமேசான் கிண்டில் செயலி வழியாகவும் சில நூல்களை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். முன்னெப்போதும் இல்லாத அளவு தமிழ் எழுத்தாளர்கள் தங்களது புத்தகங்களை இலவசமாக பதிவிறக்க அனுமதியளிக்கிறார்கள் அல்லது இப்பொழுதுதான் எனது கண்களுக்கு அகப்பட்டிருக்கிறது, எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் இதற்கு முழுமுதற் காரணம் என அவரது முகநூல் பதிவுகளால் அறிய முடிகிறது.

எழுத்தாளர் செல்வேந்திரன் எழுதியிருக்கும் வாசிப்பது எப்படி என்ற புத்தகத்தை நேற்று தொடங்கி இன்று நியாவிலைக் கடையில் பொருட்கள் வாங்க தனிமனித இடைவெளி விட்டு நின்று கொண்டிருக்கையில் இப்புத்தகத்தின் பெரும் பகுதியை கிண்டிலில் வாசித்து விட்டேன், மாலையில் குழந்தைகள் மச்சிக்கு சென்று விளையாடும் நேரத்தில் மீதமிருந்த பக்கங்களையும் முடித்துவிட்டேன், இன்னும் நிறைய புத்தகங்களை கிண்டில் நூலகத்தில் பதிவிறக்கியும் விட்டேன். இனி வாசிக்கும் பசியோடு இருப்பதைத் தவிர வேறென்ன.