புதன், 8 ஜூன், 2022

நீர் நிலம் வனம் - கடல்

கடலை கடலோடியிடம் விட்டுவிடுங்கள் எனும் வறீதையா கான்ஸ்தந்தின் குரல் காது வழி மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மீனவன்னு செய்தில எழுதுறீங்களே அதுவே தப்பு நாங்கள் கடலோடிகள் என்பவரது குரலை மறுக்கவும் மறக்கவும் இயலுமா. ஒரு நகரத்தாளுக்கு ஒட்டுமொத்த விவசாய நிலத்தையும் விவசாய நிலமாகவும், கடல் சாராத ஆளுக்கு ஒட்டு மொத்த கடலும் ஒரே கடலாகவும் புரிதலுக்குள்ளாக வாய்ப்பிருப்பதும் அதை நாம் அல்லது குறைந்தபட்சம் இந்நாட்டின் அரசு அறியாதிருப்பது எவ்வளவு அயற்சியானது.

ஒவ்வொரு விவசாய நிலமும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருப்பது போல் கடலிலும் பல பண்புகள் நிறந்த பகுதிகள் இருப்பதை இந்த நூல் வாசிப்பிற்கு பிறகே அறிதலுக்குள்ளாகிறது. கடலில் மிதப்பது படகு அல்லது கப்பல் என்பதைக் கடந்து அதன் உண்மையான பெயர்கள் புலப்படவும் கடலோடிகளின் வாழ்வைப் புரிந்து கொள்ளவும், கடல் வாணிபத்தில் கொழிக்கும் மனிதர்களையும், இலங்கை ராணுவம் ஏன் கடல் எல்லை தாண்டியதாக தமிழர்களைச் சுடுகிறது, கச்சத்தீவை ஏன் இலங்கை ஈர்த்துக் கொண்டது, தமிழ் நிலத்திற்கும் இலங்கைக்குமுள்ள ஆதி உறவு  மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் நிலமும் கொண்டிருக்கும் வெவ்வேறு பண்புகளை உணர்ந்து கொள்ளவும் மிகப் பெரும் உந்துதலை வழங்குகிறது இந்நூல்.

கடல் புறத்தில் சுற்றுலாவை மேம்படுத்தினால் கிடைக்கும் பொருளாதாரத்தில் அங்கிருக்கும் பெரும் சுரண்டல் ஆலைகளை இல்லாமல் ஆக்கிவிடலாம் எனும் கடலோடியின் குரலை கேட்பாரில்லை என்றே தோன்றுகிறது. 

எங்கிருந்து நம் நிலங்களுக்கான விடுதலையை சுய பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும் என எண்ணும் போது நமது கல்வி முறையில் உரிய மாற்றங்களைச் செய்யாமல் இது சாத்தியமில்லை, எப்படி ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்த பண்பிருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு அந்தந்தப் பண்பிற்கேற்ற பள்ளிக் கல்வியை ஊக்குவிக்கவும் உருவாக்கவும் வேண்டும். ஆனால் நாம் ஒற்றை கல்விக் கொள்கை எனும் சுருக்கும் கயிற்றில் தொங்கத் தொடங்கிவிட்டோம்.

கொற்கை புதினம் வெளியான நாள்முதல் அதை எப்படியும் வாங்கி வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் போதெல்லாம் அதன் விலை மீது மாறாத பயமொன்றை சுமந்து கொண்டிருந்தேன். அந்தச் சுமையை புறந்தள்ளி வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் நிற்கிறேன்.ஞாயிறு, 22 மே, 2022

க(ன்)னி

எட்டாத கனியொண்ணு
ஏக்கமா தொங்குதாம்
தோரணத்து இலை பறிக்க
வந்தவன் கை 
வச்சவொடனே
உனக்கு கனி கேக்குதோ
கால்வாய் படியில
கன்னி கண்ட 
கண்ணுக்கு கனி 
இனிக்குமோன்னு மாவிலை
சலசலத்ததாம்
யாரு யாருன்னு
இவனுக்கு வேத்துப் போனதும்
காயொண்ண பறிச்சி
காம்புப் பால் வச்சி
"க(ன்)னி"ன்னு மரத்துல எழுதிட்டு
ஓடிட்டானாம்

வியாழன், 28 ஏப்ரல், 2022

ஓவியம் தொப்புள் கொடி உறவு

 எல்லாருமே வரையக் கூடியவர்கள் தான் ஆனால் அதைத் தொடர்வதில்லை, வரைதல் என்பது தொப்புள் கொடி உறவு போல நம்மாடு பிணைந்து இருப்பதுதான் என்றாலும் அந்த இணைப்பு பற்றிய சிந்தனை நம்மில் பலரிடம் மறைந்து ஒழிந்து கொள்வதுண்டு. சிலருக்கு அதைப் பற்றிய எண்ண ஓட்டங்கள் ஏதேனும் ஒரு வடிவில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். வெளிப்படுதல் என்பது பெரிய பெரிய ஓவியங்கள் தீட்டுவதோ அதை காட்சிக்கு வைத்து பெயர் அறியச் செய்வதோ அல்ல. யாரிடமோ அலைபேசியில் பேசும் பொழுதில் எவ்வித புற அழுத்தமும் இன்றி காகிதமொன்றில் கிறுக்குவது கூட ஒரு வகையான வெளிப்பாடு என்றே கருதலாம்.

இந்த கிறுக்கல்கள் அளிக்கும் நம்பிக்கை வரைதல் நோக்கிய அடுத்த தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லலாம் அல்லது இப்படி கிறுக்குவதே ஒருவித வெளிப்பாடாகி அதில் பல்வேறு முயற்சியை அலைபேசியில் பேசாத  வேறொரு தனிமை பொழுதில் உருவாக்கிப் பார்க்கும் எண்ணமும் ஏற்படலாம். இதற்கு எல்லையில்லை.

ஒருவேளை அடுத்த கட்ட நகர்வு ஒன்று அமைய நேருமானால் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை எப்படி மதிப்பீடு செய்வது, எப்படி வரையத் தொடங்குவது என்ற கேள்விகள் எழும். இதற்கு ஒரே விடை முறையாக ஒரு ஆசானிடம் பயிற்சி பெற்றுக் கொள்வதேயாகும். இன்றைய காலம் நமக்கு அள்ளிக் கொடுக்கும் தகவல்கள் ஏராளம், அவையெல்லாம் முறையாக ஒழுங்கு படுத்தப் படுமானால் அதைவிடப் பெரிய ஆசான் இருக்க இயலாது,  ஆனால் இவ்விடம் நமது பலகீனம் ஆற்றல் மிக்கதாக ஆகிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பதால் பலம் வலுவிழந்து விடலாம்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

வடக்கனிக்கி போன மேகத்த

வெட்டவெளி வானத்துல
போற ஒத்த மேகத்துட்ட
கேட்டானாம் எங்க
போறன்னு
போக்கு தெரிஞ்சா
பொலம்பலுக்கு ஆளாவேனோன்னு
பொசுங்கிச்சாம்
இப்பிடி அழுவுதியே
பொலம்பல்ல இது சேராதான்னான்
போடா போக்கத்த பயலேன்னு
வடக்கனிக்கி போன
மேகத்த கூப்புட்டு 
சொன்னானாம்
கிழக்கனிக்கி போனா
செத்தேன் சொகமாயிருக்கும்லா

திங்கள், 18 ஏப்ரல், 2022

ஆளில்லா காடு

ஆள் அரவமில்லா காட்டுக்குள்ளே
சருகு ஒண்ணு முணுமுணுத்துச்சாம்
யாருடே அதுன்னு
பதிலொலிக்க ஆளில்லாம
பரிதவிச்சிக் கெடந்தத
காலொண்ணு மிதிச்சிப் போனதாம்
மிதிச்ச காலுக்கு
கண்ணில்லயாக்கும்னு கேக்கத்தான்
தெசையில்ல
லெக்கு தெரியாம பறந்து வந்த
பச்சயெலையொண்ணு
காம்போரமா கண்ணீர
ஊத்துதாம்
ஒக்கிட ஆளில்லாம
ஓஞ்ச மரத்துல
ஒடிஞ்ச இலை நான்னு
ஒப்பாரி வச்சிதாம்
ஒலுங்கொண்ணு
ஒய்யாரமா இலைய
பாத்துக் கேக்காம்
இரத்தமுள்ள ஆளில்லயாக்கும்னு 

வியாழன், 14 ஏப்ரல், 2022

தபால் நிலையத்தில் ஒழிந்துகொண்ட கோடுகள்

எப்போதும் மாதத் தொடக்கத்தில் கேட்கப்படும் கேள்விகள் ஒலிக்காமலிருப்பது செயலை நாட்கள் கழித்து செய்ய வைக்குமென்பதில் பிசகு இல்லை. வழக்கத்திற்கு மாறாக தபால் நிலையத்தில் பணம் செலுத்தும் காகிதத்தில் தமிழும் மறுபக்கம் ஆங்கிலமும் கடந்த இரு மாதங்களாக பார்க்க முடிகிறது. அதை பார்த்த பின்னர் வீட்டிற்கு எடுத்துவந்து எழுதிச் செல்லும் பழக்கமும் ஒட்டியிருக்கிறது. நேற்று எழுதுகையில் "என்ன தேதி எழுதாம வச்சிருக்கு" என மாதாமாதம் ஒலித்து இம்மாதம் ஒலிக்காத கேள்விகளின் குரல் கேட்டது. "சமயத்துல கணினி பழுதாயிரும்லா" எனச் சிரித்துக் கொண்டேன். ஒற்றை ஆள் மட்டுமே அந்த அம்மா இருக்கும் மேசையை எட்டிப் பார்க்க இன்று வேலை எளிதாக முடிந்துவிடுமென எண்ணி நுழைந்து இரண்டு வருடங்களுக்கு பிறகு முகக் கவசமில்லாத எனது கற்பனைக் கோடுகள் எங்கோ ஓடி ஒழிந்துகொண்ட அம்முகத்தில் அரசு அலுவலகத்தின் சலிப்பு மட்டும் தீராமல் "அரைமணிநேரம் கழிச்சி வந்து பாருங்க, ஒண்ணும் வேலை செய்யல" . "குடுத்துட்டு போகட்டுமா" எனக் கேட்கவும் "அதெல்லாம் இனிமே கிடையாது" சலிப்பு.

ஆதார் அட்டை பதிவு செய்ய தனியாக கணினி அச்சுப்பொறி என எல்லாம் இருக்கும் மேசை போர்வையா பொன்னாடையா என ஊகிக்க இயலாத துணியால் மூடப் பட்டிருந்தது அதற்குள் அகப்படாமல் கணினிக்குரிய விசைப்பலகையும் அதன் மேலிருந்த பத்து ரூபாய் நாணயமும் புழுதியால் பிணைந்திருந்தது. முகக் கவசத்தை இழுத்து இழுத்து கொட்டாவியை வெளிநடப்பு செய்த அதே அம்மாவிடம் இன்று ஒருமணி நேர காத்திருப்பிற்குப் பிறகு சேமிப்பு புத்தகத்தை நீட்டினேன். எப்படியோ இன்று அச்சுப்பொறி வேலை செய்ததை எண்ணி மகிழ்கையில் முகக்கவசமில்லாத பெண் தபால் காரரை பார்த்ததும் கோடுகள் ஒழிய இடம் தேட மறுத்தது.

செவ்வாய், 29 மார்ச், 2022

வலி - விமலாதித்த மாமல்லன்

ஒரு சிறுவனின் பார்வையில், அவனுடைய சென்னையிலுள்ள தாத்தாவை காணப் போகும் பயணத்தை எண்ணி குதூகலித்து தன் பக்கத்து வீட்டு அக்காவிடமும் தன் நண்பனிடமும் பகிர்ந்து மகிழ்பவனுக்கு அப்பாவிடமும் அம்மாவிடமும் அக்குதூகலத்தை காணாதது கண்டு வியப்பிற்கும், தனக்குள் எழாத அல்லது எழுந்த விசாரணைக்கும் பதிலாக தனது தாத்தாவை காண்பதே கதையின் முடிச்சு.

பயணம் என்றதும் சிறுவர்களுக்கு ஏற்படும் குதூகலமும், அதனை தனது பக்கத்து வீட்டு உறவுகளுக்கு தெரிவித்து பெருமையடித்துக் கொள்வது. சன்னல் வழியாக நண்பன் வீட்டை எட்டிப் பார்ப்பதும், அக்காவிடமான உரையாடலும் அவள் அன்பின் வெளிப்பாடாக இவனுக்கு கிடைக்கும் முத்தமென அழகியல் வடிவங்களுக்கு அப்பால் தலைப்பை சுமந்து நடக்கும் கதை எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் வலி சிறுகதை. 

இதற்கு பிறகு அச்சிறுவன் தனது தாத்தா பற்றிய பிம்பத்தை எப்படி மறு கட்டமைப்பு செய்வான்அத்தை பற்றிய எண்ணங்களை எப்படி வடித்துக் கொள்வான் என்பதில் மனம் சற்று மௌனித்துக் கிடக்கிறது.