வியாழன், 5 அக்டோபர், 2023

எல்லோரும்

யாரையோ வரைய
ஆரம்பித்து
யார் யாரோ வந்து போகிறார்கள்
எல்லோரும் எல்லோருமாக
மாறி விட முடிகிறது
எல்லோருக்கும் அப்படி இருக்க
வேண்டியதும் இல்லை

சனி, 30 செப்டம்பர், 2023

பெயரல்லாத

ஊருக்கு
ஒரு பெயர்
கருப்பட்டிப் பழம்
சீனிப் பழம்
நெய்ப் பழம்

எப்படியாவது இருக்கட்டும்
அந்தப் பழம்
தாங்கி நிற்கும் பெரியம்மையின் 
நினைவுக்கு முன்
பெயர் எதற்கு

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

இடம் பெயர்தல்

மழை நேரத்து
தவளைக்கு
நீருமில்லை நிலமுமில்லை
அதையுண்ணும் காக்கை
கண்டதில்லை

நீர்
வரைந்த முகம்
குழிக்குள் செல்லுமுன்
அகம் தேடும் கண்ணாடி

அக்ரிலிக்
கண்ணொன்று நகர்வது போன்ற
அவதானிப்பில்
இரவு தொடங்கியது



சனி, 26 ஆகஸ்ட், 2023

தெரியவில்லை

யாரும்
யாரையோப் போலவே
இருக்கிறார்கள்
ஏன் என்று தான்
தெரியவில்லை

சிலருக்கு
மூக்கு

சிலருக்கு
உதடு

சிலருக்கு
சிரிப்பு 

சிலருக்கு
தொண்டை 

சிலருக்கு
கண் 

ஏனோ
சிலருக்கு
காது 
என்று சொல்லத் தோன்றவில்லை 

புதன், 23 ஆகஸ்ட், 2023

தமிழைப் படுகொலை செய்யும் தமிழினத் தலைவர்கள்

கடந்த காரிக்கிழமை (சனி) வள்ளுவர் கோட்டம் சென்று தமிழ் வழிக் கல்விக்கான போராட்டத்தில் கலந்து கொள்ளச் சென்று கோட்டத்தை சுற்றி வலம் வந்து நின்றால் அதற்கான சுவடே இல்லாமல் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. என்னவாயிற்று என புலனத்தில் (வாட்சப்-புலனம்) தேடினால் எழும்பூர் ராசரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் மாற்றியிருக்கிறார்கள் இரவோடு இரவாக.




தமிழ் தமிழ் என முழங்கி ஆட்சியில் இருப்பவர்கள் இப்போது நீட் நீட் எனக் கூவி வியாபாரம் செய்ய ஒருநாள் சந்தைக்காக வள்ளுவர் கோட்டம் ஆயத்தம் ஆவதை தாய்த் தமிழ் பள்ளியினர் உரை விளக்கியது. ஆளும் கட்சி மத்திய அரசை எதிர்த்து மருத்துவக் கல்விக்கான நீதிக்கு போராடத் துணிகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டு அரசை திராவிட மாடல் அரசை (இந்த மாடல் என்ற சொல்லை தங்கள் கருத்தியலோடு கலந்திருப்பதிலேயே இவர்களது அகம் தமிழிலிருந்து எவ்வளவு விலகியிருக்கிறது என்பதைச் சுட்டுகிறது) எதிர்த்து பதினெட்டு தாய்த்தமிழ் பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பிற தமிழ் இயக்கத்தினர் கலந்துகொண்ட இந்த அறப்போராட்டம் அரசின் செவிக்குச் சென்று சேராமலா இடத்தை மாற்றியிருப்பார்கள்.

நாங்கள் என்ன வேற்று மாநிலத்திலா தமிழ் மொழியை கட்டாயப் பயிற்று மொழியாக்கக் கூறுகிறோம், எம் நிலத்தில் எங்களுக்கான முதன்மை உரிமையை பெற ஏங்கி நிற்க வைத்தது யார். இருக்கும் அத்தனை அரசுப் பள்ளிகளையும் ஆங்கிலவழிக் கல்வி முறைக்கு மாற்றவும் ஒட்டு மொத்த மக்கள் திறனையும் உலகத்திற்கு அடிமையாக்க ஒப்பந்தமிட்டுச் செயல்படும் இவர்களுக்கு வெட்கமில்லையா தமிழினத் தலைவர் எனக் கூறிக் கொண்டு திரிவதற்கு. 

போராட்டத்தில் ஓர் இயக்கத்து அன்பர் உரைத்தது "ஏன் அனைத்து பள்ளிகளிலும் தமிழை கட்டாயப் பாடமாக்க தயக்கம் என கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கேட்டதற்கு முரசொலி மாறன் "ஆங்கிலப் பள்ளிகளின் எண்ணிக்கை கூடுகிறது, இப்போது நீங்கள் தமிழை கட்டாயமாக்கினால் இவர்களின் வாக்குகள் சிதறிவிடுமென்று" அறிவுரை சொல்லியிருக்கிறார், வாக்கிற்காக நாக்கை அழுகக் கொடுப்பவர்கள்.






மற்றொரு தோழர் பேசுகையில் கூறினார் "ஏன் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழை கட்டாயமாக்கச் சொன்னதற்கு ஆறாம் வகுப்பு வரை மட்டும் செய்திருக்கிறீர்கள் என கருணாநிதியிடம் கேட்டதும், அமைச்சர் பொன்முடியை பதில் சொல்ல அழைத்ததும் "ஆங்கில பள்ளிக்காரன் ஆறாம் வகுப்பு வரைக்கும் தமிழை கட்டாயமாக்குனதுக்கே வழக்கு தொடுத்துவிட்டான், நீங்க போங்கப்பா" எனச் சொல்லி ஒதுக்கியிருக்கிறார்கள். தற்போதைய ஆட்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிடம் கேட்ட போது "செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம் ஆனால் எப்படிச் செய்வது எனத் தெரியவில்லை" என்றிருக்கிறார். என்னக் கொடுமை இது, தெரியவில்லை என்றால் இருக்கும் தாய் தமிழ் பள்ளி முதல்வர்களிடமும் கல்வியியலாளர்களிடமும் கருத்து கேட்டு நடைமுறைப் படுத்தலாம் அதைக் கூடவா செய்யத் தெரியாமல் பொறுப்பில் இருக்கிறார்கள், ஒருவேளை மத்திய முதலாளி இப்படித்தான் பேசவேண்டுமென்று உத்தரவு கொடுத்திருப்பாரோ. மாதிரிப் பள்ளிகள் அமைப்பதற்கு டெல்லி செல்கிறார் முதல்வர். ஆச்சரியமாக இருக்கிறது கூடவே கோவமாகவும்.

 இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் தமிழை படுகொலை செய்தவர்களைக் கண்டு வெகுமக்கள் எதிர்ப்பதற்கு மாறாக ஆங்கில வழிக் கல்வியை  ஏற்றுக்கொள்ள வைத்திருப்பதை இனி எங்கனம் புரிந்து விழிக்கும். 




சனி, 12 ஆகஸ்ட், 2023

திருட்டுக் கும்பல்

சில மாதங்களுக்கு முன் ஊர் குளத்தில் குளிப்பதற்குச் சென்ற ஒரு காலையில் அங்கிருந்த இருவர் இணையத்தில் காணொளி பார்த்து அவ்வப்போது சம்பாதித்ததைப் பற்றி உரையாடினர். கடந்த மாதம் ஒரு நபர் புலனம் (வாட்சப்) வழியே தொடர்பு கொண்டு கூகுள் நிலப்படத்தில் தான் குறிப்பிடும் உணவகத்திற்கு மதிப்பீடு அளித்தால் பணம் கொடுப்பதாக வினவினார். எங்கோயிருக்கும் தெரியாத கடையை மதிப்பு செய்யத் தேவையில்லை என்று தொடர்பை துண்டித்தேன். இன்ஸ்டாகிராமில் பதிவுகளுக்கு விருப்பக்குறி இடுவதற்கு, பின்னூட்டம் இட மற்றும் பின் தொடரவும் பணம் கொடுப்பதாக நிறைய பேர் புலனத்தில் கேட்பது எரிச்சல். 

தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு இன்ஸ்டாகிராமில் எனது ஓவியங்களை பதிவிட்டு வந்தபோது "NFT" என்ற வணிகமுறையை பயன்படுத்தி ஓவியங்களை எண்ம வடிவிலேயே வாங்கிக் கொண்டு அதற்கு அதிகப்படியான அமெரிக்க டாலர்கள் கொடுப்பதாக அணுகுகிறார்கள், இம்மாதிரியான ஆட்கள் ஒரு குறிப்பிட்ட இணையதள முகவரியை பயன்படுத்துவதில்லை மாறாக அடிக்கடி தங்கள் இணையதளத்தின் பெயர்களை மாற்றி எவ்வளவு பேரிடம் பணம் பறிக்க முடியுமோ அவ்வளவு செய்கிறார்கள். ஓவியங்களை வாங்குவதற்கு முன்னூறு டாலர் தொகையை அவர்களுக்கு முதலில் செலுத்தக் கோருகிறார்கள். நம்பி ஏமாறுவதற்கு வாய்ப்பு அதிகம். ஒரே ஆள் வேறுவேறு இணையதளம் வழியாக என்னையும் சக ஓவியர் ஒருவரையும் குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்பு கொண்டதைக் கவனித்தோம். சில நாட்களுக்குப் பிறகு அந்த ஆளின் பக்கத்தை தேடினால் காணாமல் போயிருக்கும்.

இதே போல் இன்ஸ்டாகிராமில் ஆடை விற்கும் இணையதளத்தை நம்பி பணம் செலுத்தி உடை வாங்கினார் தெரிந்த நண்பர், அவருக்கு அழகான பெட்டியில் கந்தல் துணிகளை அனுப்பியிருந்தது அந்த இணையத்திருட்டு கும்பல். திருப்பி அளிக்கலாம் எனத் தேடியபோது இணையதளம் காற்றில் கலந்துவிட்டது. அதே நண்பர் மற்றொரு நம்பிக்கையான இணையதளத்தில் கைக்கடிகாரம் வாங்கியபோது அவருக்கு கிடைத்தது ஓடாத மண்ணுக்குள் புதைத்து எடுத்தது போன்ற மட்டமான முள்ளில்லாத கடிகாரம், நம்பக்கூடிய விற்பனையாளர் தான் ஆனாலும் பொறுப்பாக பொருளை கையளிக்க வேண்டிய முகவர் செய்த திருட்டால் ஏற்பட்டது இந்நிகழ்வு, பின்  நிறுவனத்திடம் புகார் அளித்ததும் பணத்தை திருப்பிக் கொடுத்தனர். திருட்டாகட்டும் எதுவாகட்டும் காலத்திற்கேற்ப தன் வடிவத்தை மாற்றிக் கொள்கிறது.

இதையெல்லாம் தொழில் போலச் செய்வது வெட்கக் கேடாக இல்லையா, ஒருவேளை வரும் ஆண்டுகளில் இதற்கென சட்டம் இயற்றி அரசு இசைவு கொடுக்கவும் வாய்ப்புண்டு. மட்டைப் பந்தாட்டத்தில் சூதாட்டம் பற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மாறி இன்று இணையவழி சூதாட்டம் செய்யும் நிறுவனத்தின் இலச்சினை இந்திய அணியின் சட்டையில் விளம்பரமாக இருப்பதைக் காண்கையில் எந்த ஊழலும் சட்டமாக மாற வாய்ப்புள்ளது.

இரண்டு நாட்கள் முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரேயொரு பதிவிடுவதன் மூலம் கோடிக்கு மேல் பணம் பெறும் விளையாட்டு வீரர்கள் நடிகர்கள் பற்றி வாசித்ததுமே வியப்பு மேலோங்கியது.

நிற்க....

'இன்ஸ்டாகிராம்' தமிழ் சொல் தேடியபோது படவரி என்று கண்ணில் பட்டது, எவ்வளவு ஒத்துப்போகும் என அறிந்துகொள்ள வேண்டும்.

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2023

வாடகை மானுடம்

 ஒரு மாலையில் தெருவாசல் ஓரம் குழந்தைகளோடு இறகுப் பந்து விளையாடிவிட்டு உட்செல்ல எத்தனிக்கையில் இருசக்கர வண்டியில் பின்னாலிருந்தவர் இறங்கி வந்து இந்த பகுதியில் இடம் எவ்வளவு போகிறது என்றார். சரியாகத் தெரியவில்லை ஆனால் விளம்பரங்களை பார்க்கையில் நான்காயிரத்து ஐநூறு கிட்ட ஒரு சதுர அடி இருக்கலாம் என்றேன். எவ்வளவு ஆண்டாக இங்கே இருக்கீங்க என்றதும் எட்டு எனச் சொன்னேன், எட்டு ஆண்டுகளா வாடகை வீட்டுலயா என்று எடை போட்டார். இப்போது வண்டியை ஓட்டி வந்தவர் இறங்கினார் அவரது பையனாக இருக்கலாம் எனத் தோன்றியது, சாலையோரம் கட்டடங்களை இடித்திருக்கிறார்களே எதற்காக என்றார், சாலை விரிவாக்கம் என்று கூறுகிறார்கள் ஆனால் உறுதியாக தெரியவில்லை என்றதும். பின்னாலிருந்தவர் இடத்தோட விலை கூடுமா என்றார், மின்ன இருந்ததுக்கும் இப்போதைக்குமே கூடியிருக்கு என புன்னகை உதிர்த்து ஆனால் தெரியவில்லை என்று உட்புகுந்தேன்.


நாங்கள் இங்கு குன்றத்தூரிலிருந்து பல்லாவரம் போகும் பாதையில் உள்ள மணிகண்டன் நகருக்கு வந்த புதிதில் இப்போது குடியிருக்கும் வீட்டுக்குப் பின்புறத்தில் பெரியதொரு தோல் தொழிற்சாலை இருந்தது அதன் சுற்றுப்புறச் சுவரை அடுத்து சாலையோரம் மக்கள் பல தலைமுறைகளாக குடிசையில் வாழ்கிறார்கள். இந்த இடத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு "கம்பெனி" என்றே பெயர். சில ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனம் இழுத்து மூடப்பட்டது, மக்கள் குடியிருப்புக்கள் மணிகண்டன் நகரில் அதிகமானதால் இத்தொழிற்சாலை சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் விளைவிப்பது அதற்கான காரணமாகச் சொல்லப்பட்டது.


சில மாதங்களுக்கு முன்பு "G square" என்ற வீட்டு மனைகள் விற்கும் நிறுவனம் இந்த இடத்தினை மனைகளாக மாற்றி விற்கத் தொடங்கியது, அதிலிருந்து சில நாட்களில் சாலையோரம் உள்ள குடியிருப்புக்களை அகற்றுவதற்கு காவலர்கள் துணையாக பெருத்த ஊர்திகள் வந்து முதலில் கடைகளை மட்டும் அகற்றிவிட்டு அடுத்த வாரத்தில் வீடுகள் அகற்றப்படும் என எச்சரித்துச் சென்றிருக்கிறார்கள், இதற்கான காரணம் சாலை விரிவாக்கம் என்று கூறுகிறார்கள் ஆனால் பல்லாவரம் தொடங்கி குன்றத்தூர் வரை நீளும் இச்சாலையில் வேறெங்கும் இடிக்க முனைப்பு காட்டாமல், ஏன் எதிர் பக்கம் ஒரு நூலளவு கூட கை வைக்காமல் குறிப்பிட்ட இப்பகுதியை அப்புறப்படுத்துவதில் மட்டும் அரசு அக்கரை காட்டுவது மக்களுக்கு வினாக்களை ஏற்படுத்தியது. உண்மையில் அரசுதான் இதற்கு காரணமா என போராட்டமும் வினாக்களுமாக ஒவ்வொரு நாளும் விடியல் கொள்கிறது.

இன்னொன்று சொல்லவேண்டும், இந்த சாலையோர கட்டிடங்கள் இடிக்கத் தொடங்கிய மறுநாள் அடையாறு கரையோரம் இருந்த தென்னத்தோப்பு மொட்டையடிக்கப்பட்டு முழித்துக் கொண்டிருக்கிறது.

சிலர் அடையாறு எங்க குன்றத்தூருக்கு வந்ததுன்னு கேக்கலாம், இந்த ஆற்றின் தலை செம்பரம்பாக்கம் ஏரி, அங்கிருந்து வெளியேரும் நீர் இவ்வழி வந்து சென்னைக்குள் சென்று கடலில் கலக்கிறது. அனகாபுத்தூர் குன்றத்தூர் இடையே எல்லை போல் ஓடும் இவ்வாற்றைக் கடக்க தரைப்பாலம் ஒன்றிருக்கிறது, பாலத்திற்கு இந்தப்பக்கம் குன்றத்தூர் காஞ்சிபுர மாவட்டத்தில் அடங்கும், அந்தப் பக்கம் அனகாபுத்தூர் செங்கல்பட்டு மாவட்டம்.


திங்கள், 7 ஆகஸ்ட், 2023

கோபுரப் பூங்காவில்

கடந்த காரிக்கிழமை (சனிக்கிழமை) அண்ணா நகர் கோபுரப் பூங்காவில் சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆசான் ஓவியர் மு.பெ. சரவணன் சித்திரக்காரன் அவர்களும் ஓவிய நண்பர்களும் கூடி வரையத் தொடங்கினோம்.










 


சனி, 5 ஆகஸ்ட், 2023

அவ்வப்போது

என்னென்னவோ வரைய வேண்டும் என எண்ணம் கடல் அலை போல விடாது சிதறித் தெரிக்கும். எந்தவொரு படைப்புச் செயலிலும் வெளிப்படுத்த நினைப்பதை உருக்கொண்டு வர கொஞ்சமேனும் சிக்கல்களுக்கு இடமிருக்கும். 

என்னையும் வரைந்து கொடு என தம்பி, சித்தி மகன் கேட்டவுடன் தீட்டியது.

தம்பி முத்துவின் மகள் மகிழினி. 


ஓவியர் சந்ரு அவர்களுடைய ஓவியக் கண்காட்சி தற்போது தக்சன் சித்திரா ஓவியக் கூடத்தில் நடந்துகொண்டிருக்கிறது. அதைப் பற்றிய ஆங்கில கட்டுரை வாசிக்க கிடைத்தது அதில் அவரது கோட்டோவியத்தில் பறவையொன்று வேர்பிடித்து அசையாமல் நின்று தன் அலகில் வண்ணத்துப்பூச்சி ஏந்தி நிற்கும் காட்சி இயற்கையை இயங்கவிடாமல் சிறை பிடித்திருக்கும் இன்றைய காலத்தில் ஆற்றாமையை வெளிப்படுத்திய விதம் ஏற்படுத்திய தாக்கத்தில் வடிவமைத்து பார்த்த ஓவியம்.


அவ்வப்போது மனதில் தோன்றும் காட்சிகளை வரைந்து வைத்துவிடுவதில் ஒரு அமைதியும் மகிழ்ச்சியும்.


 

தியானம் என்ப

தொங்கும் கை
தொடையிலிருந்து விலக
புகை ததும்பும் விரலிடுக்கு
பார்க்க
மௌனித்தலும்

ஞாயிறு, 30 ஜூலை, 2023

குறுகலான நண்பகல்

மற்றக் கிழமைபோல்
இல்லாது
தலைக் குளியல் 
குழந்தையின் 
ஒலியை அள்ளித் தெளிக்கும் வெயிலையும் 
களைப்பையும்
சோம்பியிருத்தலையும்
மிகக் குறுகலான நண்பகலையும்
திங்களை எண்ணும் கருக்கலையும்
ஏன் சுமந்துத் திரிகிறது
ஞாயிற்றுக்கிழமை

செவ்வாய், 25 ஜூலை, 2023

இமைக்குள்

மழைச் செய்தி வந்த
வெயில் நாளில்
இமைக்குள்
மறை தேடி
தொலையும் நிறமிகள் 


சனி, 22 ஜூலை, 2023

நூலகத்தில்

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் இரண்டு நாட்கள் கோட்டூர்புரம் அண்ணா நூலகம் சென்று ஓவியம் சார்ந்த புத்தகங்களை வாசிக்க வாய்த்தது தொடர்ந்து செல்வதற்கு விருப்பமிருந்தாலும் குன்றத்தூரிலிருந்து கருத்த பாம்பு போல சாலை நீண்டு நேரம் பல்லிளிக்கிறது.

எழுத்தாளர் பாவண்ணன் அவருடைய கனடா இயல் விருது பயணம் பற்றியும், கோடைகாலம் முடிந்து பருவமழை தொடங்குவதை எப்படி மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை இலக்கியங்களில் பதிவு செய்திருப்பதை சிறப்பாக எழுதியிருந்த போகன் சங்கரையும் கறுப்பர் நகரம் புதினம் உருவானதன் பின்னணி உணர்வுகளை பகிர்ந்திருந்த கரன் கார்க்கியின் எழுத்தையும் அந்திமழை இதழில் வாசிக்க குன்றத்தூர் நூலகம் சென்று வந்தது நிறைவாக இருந்தது. 

நூலகத்தில் கண்ட இந்து நாளிதழ் வெளியிடும் "young world" சிறார் ஆங்கிலப் பத்திரிக்கையில் வந்த காமிக் கதைகள் வாசிப்பு ஆர்வத்தை தூண்டுகிறது. தமிழில் சிறுவர்களுக்கான சித்திரக்கதைகள் உருவாக்கப்படுகிறதா.

திங்கள், 17 ஜூலை, 2023

கலைப்படைப்பில் மரபு

நுண் கலைகள் பற்றி அறிந்து கொள்ளத் தேடினால் இணையச் சந்தில் மேற்குலகின் பாடங்களே சுற்றிச் சுற்றி அடுக்கி வைத்திருக்கும் பிம்பம். ஓவியராக விரும்பும் எவரும் முதலில் ஐரோப்பிய கலை வடிவங்களை கற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இங்கே தொற்றியிருப்பது காலத்தின் விளைவு இந்த விளைவில் சிக்கியது கலை மட்டுமல்ல கல்வி முதற்கொண்டு அத்தனைத் துறைகளும் என்பதை மறுக்க இயலாது. இங்கே மரபு நோக்கித் திரும்புவதும் அல்லது மரபை புரிந்து கொள்வதும் வாழ்வை பின்னிழுக்கும் செயலாக சிலர் எண்ணினாலும் அதனை நோக்கி நகரும் மனங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

கலை நுட்பங்களைப் பற்றி அறிந்து கொண்டு படைப்புகளை உருவாக்க எத்தனிக்கும் வேளை எண்ணற்ற கேள்விகள் வந்து நெஞ்சில் முட்டுகின்றன. உலகில் காட்சிக்குட்படும் மனிதன் உட்பட எந்த பொருளையும் வரைவதற்கான இலக்கணம் அங்கிருந்தே பெற வேண்டிய நிலை. நம்மிடம் அதற்கான தேடலே இல்லாமல் இருந்ததா பிரம்மாண்ட ஓவியங்களை சிற்பங்களை வடிவமைப்பு செய்வதில் நமக்கென தனி பாணியை உருவாக்கத் தவறினார்களா கலைக் கோவில்கள் படைத்த நம் சான்றோர்கள். அப்படியெல்லாம் இல்லை.

கேள்விகள் கேட்டுக் கொண்டையிருக்கலாம் பதிலை நோக்கி திசை திருப்ப யார் உண்டு அவரவர்க்கான பாதை அவரவர்க்கே வெளிச்சம் என்பதே இயல்பு எல்லாமும் இங்கே இருக்கிறது அதற்கான வழியை மறந்திருக்கிறோம் வினாக்களுக்கு பதில் இல்லாமலில்லை. கடந்த மாதம் சென்னை அருங்காட்சியகம் சென்ற போது கொஞ்சம் நிதானமாகவே சிற்பங்களை கண்டு புரிந்து கொள்ள விளைந்தபோது புத்தர் கால சிற்பங்கள் வடிவமைத்திருந்த விதத்திற்கு முன்னால் மறுமலர்ச்சி கால மேற்கத்திய ஓவியங்கள் வெளிப்படுத்திய அழகியலும் நேர்த்தியும் குறைவு என்றே எண்ணத் தோன்றுகிறது. எத்தனை வகையிலான நடராச சிற்பங்கள் எவ்வளவு நுண்ணிய உருவங்களாக செதுக்கப்பட்டுள்ளது பரவசமூட்டும் சிற்பங்கள். நம் படைப்புகள் சிந்தனை மரபில் ஊறிப்போனவை யதார்த்தங்களை மீறிய வெளியொன்றை உருவாக்க மிகவும் ரசனையோடு செயல்பட்டிருக்கிறார்கள். 

நாங்கள் வசிக்கும் தெருவிற்கு பக்கத்துத் தெருவில் உள்ள கிறுத்தவர் வீட்டின் வெளிப்புறம் ஒரு சிற்பமுண்டு காலில் ஒருவனை மிதித்துக் கொண்டு கத்தியோடு நிற்கும் உருவம். வீரபத்திரர் எனும் சிவனின் அம்சமாக உள்ள உருவம் பெரும்பான்மை தமிழக கோவில்களில் பார்க்கலாம் இவ்விரண்டு வடிவமைப்பும் ஒத்துப்போவதை பார்த்தால் வியப்பாக இருக்கிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வீரபத்திரர் சிற்பம் கண்டதும் அடைந்த பிரமிப்பு இன்னும் நிறைந்திருக்கிறது.








சனி, 15 ஜூலை, 2023

வெள்ளிக்கிழமை

ஒரு நாளையோ ஒரு புத்தக வாசிப்பையோ இவ்வகையான எழுத்தும் சித்திரங்களும் நிறைந்த பக்கங்களாக உருவாக்கிப் பார்த்தால் எப்படி இருக்கும். 
தொடர்ந்து பார்க்கலாம்.

 

வியாழன், 13 ஜூலை, 2023

அசைவு

மோப்பத்தில் துடிக்கும்
தெருநாயின் மூக்கு போல
அல்லல் படும் சிந்தனை

தொலைவு முகட்டில்
சிறு அசைவு 

கூந்தலுக்கிடையே
சதை தேடும் பேன்

திங்கள், 26 ஜூன், 2023

மிதவை மீள் வாசிப்பு

மிதவை வாசித்து ஏழு ஆண்டுகள் இருக்கும் இன்னும் இரண்டாயிரத்து பதினைந்து வெள்ளத்தின் ஈரம் காய்ந்த பூஞ்சை தன்மீது படர்ந்திருக்க மீண்டும் கையிலெடுத்திருக்கிறேன் புதிதாக வாசிப்பது போலிருக்கிறது சண்முகம் பயணிக்கும் தண்டவாளங்கள் தடதடக்கும் பாதையிலிருந்து மீண்டதனாலோ என்னவோ நெருக்கமான புதினமாக என்னிடமுள்ள மறக்கவே இயலாத புத்தகம் என் பிறப்புக்கு ஓராண்டு முன் முதல் பதிப்பு கண்டது என நேற்றுதான் கவனித்தேன் இக்கதையில் சண்முகம் பட்டப் படிப்பில் இரண்டாவதாக வந்து வெற்றி பெற்றதை விவரிக்கும் இடத்தில் "மனம் தண்ணீரில் சிறகு முக்கிப் படபடத்தது" என்றொரு சொல்லாடல் எழுதப்பட்டிருக்கும் அதை இரண்டு நாட்களாக கடன் வாங்கியிருக்கிறேன் முதலில் வாசிக்கும் போது என்ன உணர்வில் இருந்தேன் என்பதை எண்ணினால் ஓரிரு காட்சிகளைத் தவிர்த்து எதுவும் நினைவுகளில் வர மறுக்கிறது சின்னதாக ஒரு குறிப்பு எழுதிய ஞாபகம் அதைத் தேடிப் பார்க்க வேண்டும் வேலையில்லா பட்டதாரிகள் இல்லாத காலமென்று ஏதேனும் உண்டா ஒருவேளை பட்டதாரிகள் இல்லாத காலத்தில் இருக்கலாமோ அங்கும் உணவுக்கும் உடைக்கும் எதற்கும் போராடவேண்டிய சூழல் எப்போதும் இருக்கத்தான் செய்யும் போல. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்லாடலில் நிகழ்வுகள் எவ்வித மிகைப்படுத்தலுமின்றி அதற்கான சித்திரங்களை கண்முன் நிறுத்துவதும் உணர்வுகளை நம்முள் கடத்துவதும் இயல்பாக இருக்கிறது.


  வாழ்வை ஒருவித விமர்சனப் பார்வைக்குள் புகுத்தி தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் முனைப்புடன் நகரும் கதையில் வழிநெடுக ஊடாடும் மனித வாழ்வினை எள்ளலுடன் நடைபாதையில் இருந்து விலகி அதனை பார்க்கச் சொல்லும் சொற்கள்.

மிதவை முதல் வாசிப்பின் போது எழுதிய சிறு குறிப்பு இந்த சுட்டியில்

சனி, 24 ஜூன், 2023

தூவல்

என் முதல் இருப்பிடம்
எதுவென்று தெரியவில்லை
அவசரத்திலோ அவசரமில்லாமலோ
அவனுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
உன்னோடு 
சென்னையின் தண்டவாளம்
அடுத்தடுத்து நிறைய தண்டவாளங்கள்
உனது அறையை எங்கேயும் 
எப்போதும் இருப்பிடமாக்கி
ஒரு கோடு கிழிக்க வக்கில்லாமல்
தன்னிலை பழகாமல் என்ன வாழ்வு
எந்த நிறமானாலும் 
இன்றேனும் ஒரு சொட்டு மை  ஊற்றிப்பார்




செவ்வாய், 13 ஜூன், 2023

நகராட்சிப் பூங்கா


என்ன கால்கள் இது மூன்று சுற்றுகளுக்கு மேல் நடக்க மறுக்கிறது ஆற அமர உட்காரலாமென்றால் ஒரு இருக்கை கூட இல்லையே எவன் சிந்தனையில் உதித்த வடிவமைப்பு இதற்குப் பேசாமல் மொட்டை மாடியில் நடந்திருக்கலாம் தான் முட்டி ஒத்துழைக்காதென்று இங்கு வந்தால் நிம்மதியா உட்கார இடமில்லை கழுதை கெட்டால் குட்டிச் சுவரு என்பது போல சுற்றி நடைபாதை ஓரமுள்ள இந்த சிறு திண்டாவது இருக்கிறது இதுயென்ன இளஞ்சிவப்புப் பூ அடடா செம்பருத்திச் செடி வீட்டில் இப்படியொரு பூச்செடி இல்லையே மொத்தத்திற்கு நான்கு பேர்தான் இருக்கிறார்கள் எதிர்த்தால் இருப்பவனோ மரங்களையும் வானத்தையும் வெறிக்கிறான் அவன் மட்டுமா உடற்பயிற்சி என்ற பெயரில் சாய்ந்த இரும்புப் படுக்கையில் கண்மூடிக் கிடக்கும் பெருந்தொப்பை ஊஞ்சலாடும் நரைத்த கிழவிகள் உட்பட யாருமே என்னை பார்க்கப் போவதில்லை மெல்லப் பிடுங்கலாம் எப்படித் தெரியாமல் எடுத்துப்போவது முந்தானை இருக்கிறதே சொருகிக் கொள்ளலாம் ஒரு நாளைக்கு எத்தனை பூக்களோ நான்கைந்து மலர்ந்தால் நன்றாக இருக்கும் திரும்பிப் பார்க்கலாமா வேண்டாம். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் பூங்காவிற்கு வரக்கூடாது செடிக்கு நீரூற்ற வேண்டும்.

திங்கள், 12 ஜூன், 2023

துள்ளியோடும் நதி

எனக்கான தேடலுக்கான பாதையை எழுத்தில் கண்டு இன்று ஓவியங்களில் தொற்றிக் கொண்டு பயணிக்கிறேன், ஓவியம் வரைதலிலும் அதைப்பற்றிய வாசிப்பிலும் முயன்று அறிய முற்பட்டாலும் பணிச் சூழல் அதிக பொழுதையும் அதற்கான ஓய்வு என்று சில பொழுதையும் உட்கொண்டு விடுவதால் சுய தேடலில் கரைந்து போக மனம் பொருந்தி வருவதில்லை, ஐந்து வருடமாக தீவிர மனோபாவத்தில் தான் ஓவியம் சார்ந்து இயங்க முற்படுகிறேன் ஆனாலும் இலக்கு என்று எதையும் நோக்காமல் நீண்டதொரு பயணமாகவே இதனை பார்க்க எண்ணுவதாலோ என்னவோ அவ்வப்போது கொஞ்சம் இடைவெளி உருவாகிவிடுகிறது, என்னால் எழுதவோ வரையவோ மட்டுமே இயலுமென்பதை உணர்த்தியிருக்கிறது இப்பயணம், ஒவ்வொரு திசையிலிருந்தும் பெறப்படும் அல்லது திணிப்புக்குள்ளாகும் சிந்தனைகளில் எது எனதானது என்பதை கண்டடைவதில் பெருங் குழப்பம் எப்போதுமே இருக்கும், எனக்கான தேடல் எங்கே தேங்கியிருக்கிறது அது எதில் தொடரவேண்டுமென எண்ணற்ற கேள்விகள் எழும், அத்தனை கேள்விகளுமே எதையாவது செய் என்பதில் கொண்டு வந்து நிறுத்தும், இப்படி எதையாவது என்ற போக்கு பெருங்குழப்ப நிலைக்கு ஆட்படுத்துகிறது, திடீரென கிழக்கு பின் வடக்கு அடுத்த நாள் மேற்கு சில மணி நேரத்தில் மேற்கு என திசையறியா பறவை போல மனம் முட்டி மோதும் எதற்கும் முகம் கொடுக்க மறுக்கும்

சனி, 27 மே, 2023

காக்கைகள் இல்லாத ஊர்

ஒரு மனிதரோடு பழகும் போதோ ஒரு புத்தகத்தை வாசிக்கையிலோ அங்கே வெளிப்படும் சொற்களை நம் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்து எண்ணங்களை விரிவாக்கிக் கொள்வதுண்டு. "காக்கைகள் இல்லாத ஊர்" என்றொரு சிறுகதை காகங்கள் இல்லாமல் போவதற்கான காரணமாக அவ்வூரில் ஒழிந்துபோன அதற்கு உணவளிக்கும் சடங்கைச் சொல்லும் சூழலை எண்ணும் போது காக்கைகளுக்கு எந்த ஊரில் யார் சோறு வைக்கிறார்கள் என்ற கேள்வியில் எங்கள் ஊர்ப் பகுதியில் உணவு வைத்ததாக ஞாபகப் படுத்த எவ்வளவு முயற்சி செய்தாலும் தாத்தா இறந்த பின் முப்பதாம் நாள் கோயில் போகும் முகமாக குற்றாலம் சென்ற அந்த காலையில் சிவனடியார்களுக்கு அன்னம் (சமைத்த உணவு என்றெண்ண வேண்டாம், அரிசி முதல் உப்பு வரை சோற்றுக்கும் குழம்புக்குமான உணவுப் பொருட்களை அவர்களது திருவோட்டில் தானம் கொடுப்பது) வழங்கியதும் அவர்கள் அதிலிருந்து ஒவ்வொரு பிடி எடுத்து "நாளை வீட்டில் சமைத்து காக்காவுக்கு வைத்தபின் எல்லோரும் சாப்பிடுங்க" என்று சொன்னச் சொற்களும் மீதியான பழையச் சோற்றில் உள்ளியை நறுக்கிச் சேர்த்து உருண்டை பிடித்து ஓட்டில் காய வைக்கும் போது வரும் காகங்களுமே எஞ்சி நிற்கின்றன.

ஊரில் இப்படி முப்பதாம் பக்கம் கோயிலுக்கு போவது என்றால் குற்றாலம் அல்லது பாபநாசம் போவார்கள், அந்த ஒருநாள் சனிக்கிழமை விடியுமுன் கிளம்பி இருட்டிய பின் ஊருக்கு திரும்புவது வழக்கம், இப்போது இதன் தோற்றங்கள் மாறியிருந்தாலும் நிகழ்கிறது. இந்த சூழலில் கோயிலுக்கு செல்லும் போது அங்குள்ள சிவன் ஆலயத்திற்குள் நுழைவதேயில்லை, ஆற்றிலோ அருவியிலோ தலை நனைப்பதோடு சிவனடியார்களுக்கு அன்னம் கொடுத்த பின் உணவு சமைத்து உண்டு உறங்கி திரும்புவதே வாடிக்கை. இந்த நாள் என்றில்லை அருவியில் தண்ணீர் கொட்டும் நாட்களில் அங்கு குடும்பத்தோடு சென்றாலும் பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பதோடு வழிபாடு முடித்து வைக்கப்பட்டு, சிவன் ஆலயத்திற்குள் ஒரு நாளும் சென்றதில்லை. ஏன்னென்று கேட்டிருந்தால் பதில் அப்படியொன்றும் விளக்கமாக வந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் சென்னை அப்படியல்ல இங்கே காக்கைக்கு உணவு வைப்பவர்கள் அதிகம், அமாவாசைச் சடங்குக்கு தெருவில் பூசணிக்காய் உடைத்துப் போடுவது என அதிகம் கண்டிராத சடங்குகள். ஒவ்வொரு பகுதிக்கும் சடங்குகளில் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். மாநகரம் எல்லாச் சடங்குகளையும் தக்கவைத்திருக்கிறது அதன் மனிதர்களோடு.

கதைக்கு வருவோம், யதார்த்தங்களை மீறிய கற்பனையில் எழும்பி நின்று எண்ணங்களா தத்துவங்களா எதுவாகினும் அதிலுள்ள முரண்பாடுகளையும் அதனால் ஏற்படுத்தப் படும் மனித விளைவுகளையும் பேசும் இப்புனைவு எழுத்தாளர் ஜீவ கரிகாலனின் "கண்ணம்மா" தொகுப்பில் வருகிறது, இந்த புத்தகத்திலுள்ள கதைகளை வாங்கிய நாளில் ஒருமுறை வாசித்திருந்தாலும் கடந்த வாரம் அலமாரியைச் சரி செய்தபோது மீள் வாசிப்பிற்காக எடுத்து வைத்திருந்தேன். இரண்டு நாள் முன் வரையத் தொடங்கி பல அடுக்கு வண்ணத் தொகுப்பிற்குப் பிறகு காக்கையொன்று வந்தமர்ந்து உரையாட ஆரம்பித்ததை (இன்னும் முடிவுராத ஓவியம் கீழே) எனது கைகளில் ஏந்தி வருடிக்கொண்டிருந்த அன்றைக்கு மறுநாள் தொலைக்காட்சி மேசைக்கு கீழுள்ள அடுக்கிலிருந்து எடுத்து புரட்டியபோது "காக்ககள் இல்லாத ஊர்" வாசிக்கக் கிடைத்தது எதன் விளைவு என ஓடும் கேள்வியும் கதையின் ஊடே பதிப்புக்குள்ளாகியிருக்கும் ஓவியர் விஜய் பிச்சுமணியின் காகங்கள் என என்னை வட்டமடிக்கத் தொடங்கியிருக்கும் இப்பறவையின் இறகுகளுக்கிடையே உலவும் காற்றை கையிலேந்த காத்திருக்கிறேன்.




செவ்வாய், 23 மே, 2023

இரவு

மிதக்கும் கோடுகளுக்கு அப்பால்
சிதறிக் கிடக்கும் வண்ணங்கள்
ஒத்ததாக சுருங்க 
பகல் எச்சரிக்கையில்
ஒளிந்திருந்தது

செவ்வாய், 2 மே, 2023

The Whiskey Whispered - Short stories

ஒரு சிறுகதை அளவிலும் கருவிலும் வெளிப்படும் விதத்தில் அடுத்த கட்ட உரையாடலுக்குள் நுழையும், அவ்வாறு புகாமல் விலகிப் போகும் கதைகள் காகிதத்தில் எழுத்தாக மட்டுமே உறைந்து போகும். எழுத்தாளர் அமல் மோகன் அவர்களுடைய "The Whiskey Whispered" ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பிலுள்ள முதல் கதையினை மற்ற கதைகளுக்கு பிறகே வாசித்தேன். நினைவுகளில் கரைந்து உருகும் கதைகளில் இந்த "Meraki" வலிகளையும் சொற்களற்ற காற்று வெளியையும் நம்முள் கடத்துகிறது.

குறிப்பிட்ட நிலையான காதல் என்றொன்று இல்லை என்பதை நிரூபிக்கும் கதைப் போக்கு இந்த தொகுப்பின் ஒட்டுமொத்தக் கருவாக பிணைந்திருக்கிறது என்று சொல்லலாம். அதே போல ஒவ்வொரு கதையும் அடுத்த கட்ட வாசிப்புக்குள் நம்மை இயல்பாக நகர்த்துவதை தவிர்க்க இயலாது.



 தற்கால வாழ்வு என்பது பெரும் வினாக்களோடு போராடுவது, கடந்த காலங்களில் வழி மாறிய காட்சிகளை மறு உருவாக்கம் செய்து கொள்வது எனப்  பொருந்தா வெளியில் உணர்வுகளைத் தேடித் திரியும் அகதியாக நிற்கிறோமா. இன்னாருக்கு இந்த உணர்வு மட்டும் என்று கட்டமைக்கப்படாத பிரபஞ்சத்திலும் கட்டமைக்கப்பட்ட சமூகத்திலும் வாழ்வதா வாழ்க்கை. ஒரு உயிர் மற்றொன்றுடன் பொருந்தும் நோக்கில் பற்றிக் கொள்ள பிடி தேடும் கொடி போலத் தான் படைக்கப் பட்டிருக்கிறதா என அடுத்தடுத்து விடை தேடும் முடிச்சிகளைக் கொண்ட கதைகள். ஒரு உயிர் மற்றொன்றுடன் எதனால் ஈர்க்கப் படுகிறது எந்த புள்ளியில் அது விலகிப் போகிறது. சாதி மதம் பார்க்காமல் வாழத் தெரிந்தவனுக்குள் நிறமும் உருவமும் எப்படி குரோதத்தை விதைக்கிறது.

"Girl on the other end" கதையில் தொலைபேசி உரையாடல் குரலில் அவனது பழைய காதலியின் சாயலை உணரும் பெண்ணின் உருவம் பற்றி முதலில் எந்த விவரிப்பும் இன்றி அவர்களின் சந்திப்பின் போது சொல்லப்படும் அவளின் உருவமும் நிறமும் கதையின் போக்கிற்கு ஏற்ற வடிவத்தில் அமைந்துள்ளது.

ஆண்களுக்கு அழுகையை வெளிப்படுத்த உரிய சூழல் நம்மிடம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது. அன்பிற்காக ஏங்கி அழும் ஆண்கள் கதையில் கலந்திருக்கிறார்கள். மகிழ்ச்சியாக இல்லாதிருப்பதில் மகிழ்ச்சி எனும் கூற்றை முன்வைக்கும் "Director's cut" கதையில் மகிழ்வை வெளிப்படுத்தும் ஓவியத்தை வரையச் சொல்லும் பெண்ணைப் பற்றிய தனது திரைக்கதையில் இறுக்கமான காட்சியில் தனது திரைப்படத்தை முடிப்பது கூற்றை மெய்ப்பிக்கும் தளம்.

திங்கள், 10 ஏப்ரல், 2023

வண்ணங்களின் வாழ்க்கை நூல் அறிமுகம்

தமிழக ஓவியர்கள் பற்றிய அறிதலுக்கும் அவர்களின் படைப்புலகம் சார்ந்த உணர்வை பெறுவதற்கும் சிறந்த நூல்களில் ஒன்று எழுத்தாளர் சுந்தர புத்தன் தொகுத்திருக்கும் "வண்ணங்களின் வாழ்க்கை". தமிழ் நாட்டில் ஓவியம் பற்றி வெளியாகியிருக்கும் மிக முக்கியமான கவனத்திற்குரிய நூல்.

நூல் பற்றிய சிறு அறிமுகக் காணொளி

திங்கள், 3 ஏப்ரல், 2023

உணவோடு கதைத்தல்

காலை உணவு வேளை கதையோடு நகர்வதுண்டு, சென்ற வாரம் வரை "வால் இழந்த எலி" என்ற கதைதான் தொடர்ச்சியாக நாள்தோறும் வாசித்தோம். இன்று காலையில் அதே புத்தகத்தை தேடியவளது கண்ணில் பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியின் முதல்வர் திரு.வெற்றிச்செழியன் எழுதிய "விடுதலை கிளிகள்" புத்தகம் அகப்பட்டதும் "அப்பா கதைப்பாடல்கள் எடுத்துட்டு வாரேன்ன, ஐயா எழுதுனது. இதுல ஒரு திருடன் கதையிருக்கும் அத படிப்பமா" என்றாள் இயல்.

சனி, 1 ஏப்ரல், 2023