எல்லாருமே வரையக் கூடியவர்கள் தான் ஆனால் அதைத் தொடர்வதில்லை, வரைதல் என்பது தொப்புள் கொடி உறவு போல நம்மாடு பிணைந்து இருப்பதுதான் என்றாலும் அந்த இணைப்பு பற்றிய சிந்தனை நம்மில் பலரிடம் மறைந்து ஒழிந்து கொள்வதுண்டு. சிலருக்கு அதைப் பற்றிய எண்ண ஓட்டங்கள் ஏதேனும் ஒரு வடிவில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். வெளிப்படுதல் என்பது பெரிய பெரிய ஓவியங்கள் தீட்டுவதோ அதை காட்சிக்கு வைத்து பெயர் அறியச் செய்வதோ அல்ல. யாரிடமோ அலைபேசியில் பேசும் பொழுதில் எவ்வித புற அழுத்தமும் இன்றி காகிதமொன்றில் கிறுக்குவது கூட ஒரு வகையான வெளிப்பாடு என்றே கருதலாம்.
இந்த கிறுக்கல்கள் அளிக்கும் நம்பிக்கை வரைதல் நோக்கிய அடுத்த தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லலாம் அல்லது இப்படி கிறுக்குவதே ஒருவித வெளிப்பாடாகி அதில் பல்வேறு முயற்சியை அலைபேசியில் பேசாத வேறொரு தனிமை பொழுதில் உருவாக்கிப் பார்க்கும் எண்ணமும் ஏற்படலாம். இதற்கு எல்லையில்லை.
ஒருவேளை அடுத்த கட்ட நகர்வு ஒன்று அமைய நேருமானால் நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை எப்படி மதிப்பீடு செய்வது, எப்படி வரையத் தொடங்குவது என்ற கேள்விகள் எழும். இதற்கு ஒரே விடை முறையாக ஒரு ஆசானிடம் பயிற்சி பெற்றுக் கொள்வதேயாகும். இன்றைய காலம் நமக்கு அள்ளிக் கொடுக்கும் தகவல்கள் ஏராளம், அவையெல்லாம் முறையாக ஒழுங்கு படுத்தப் படுமானால் அதைவிடப் பெரிய ஆசான் இருக்க இயலாது, ஆனால் இவ்விடம் நமது பலகீனம் ஆற்றல் மிக்கதாக ஆகிவிடக் கூடிய வாய்ப்பு அதிகம் என்பதால் பலம் வலுவிழந்து விடலாம்.