ஞாயிறு, 31 டிசம்பர், 2017

சொற்களில் அந்நியம்- ரமேஷ் ரக்சனின் "ரகசியம் இருப்பதாய்"

கதைகளுக்கு துறை சார்ந்த கலைச்சொல் அவசியமில்லையா மொழியை அடுத்த படியில் நகர்த்தி வைக்க அவை தேவை இல்லையா, ஆங்கில வார்த்தைகளை தமிழ் எழுத்துக்கள் சேர்த்து எழுதினால் போதுமா என தொடர் கேள்விகள் அழுத்திக் கொண்டிருக்கின்றன ரக்சனின் "ரகசியம் இருப்பதாய்" சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும் பொழுதில்.

மடிக்கணினி என எழுதியிருக்கும் போது வீடியோ, கேமரா போன்ற எளிமையான சொற்களை ஏன் தமிழ் சொல்லாக்காமல் கடந்து போயிருக்கிறார். நடுத்தர வர்க்கம் என்ற சொல் தமிழுக்கு பழைய சொல்லே அப்படி இருக்கையில் மிடில்கிளாஸ் என்று ஏன் எழுத வேண்டும். இப்படி பல எளிமையான தமிழ் கதைகளில் புழக்கத்திலிருக்கும் சொற்களையே தவிர்த்திருப்பதாகத் தெரிகிறது, இது பிழைதானா என்ற அச்சம் மனதில் உழல்கிறது. கதை கூறுபவனின் நோக்கம் மொழியை அறிமுகம் செய்வதும் தானே, இவ்வாறு தான் அறிமுகம் நேர வேண்டுமா வாசகருக்கு.

"எழிலின் அப்பா" கதை, சொல்லாமலும் சொல்லியும் வலியை கடத்தியது, இத்தொகுப்பின் முக்கியமான கதையாக பார்க்கிறேன், இருந்தும் கவித்துவமாய் நகர்ந்திருக்க வேண்டிய இடத்தில் "ஏதோ எமோஷனலாய் போகிறது" என மிகச் சாதாரணமாக கடந்து போவது சோர்வை அளிக்கிறது. பொழுதுபோக்கிற்கென வாசிப்பவருக்காக எழுதப்பட்டிருக்குமா எனக் கேட்டால் நிச்சயமாக இல்லை ஏனென்றால் அவர்களுக்கான மொழியில்லை.

நிகிதா கதையில் வரும் தாராவிக்கும் சைனுக்குமிடையிலான நடைப்பாலம் எனது எண்ணங்களில் நிறைந்திருப்பவை அக்காட்சியை வாசித்ததும் உற்சாகம் கொண்டவனாய் அமர்ந்தேன் ஆனால் அதிகம் சித்தரிக்கப்படவில்லை எனக்குள் நெடுநாளுக்குப் பிறகு அப்பகுதியை பற்றிய சித்திரத்தை கடத்திவிட்டமைக்கு நன்றி.

ரமேஷின் மொழி வளமடைய வாழ்த்துகள்,

திங்கள், 11 டிசம்பர், 2017

தேரிக்காட்டு இலக்கியங்கள் - வாசிப்பு

இன வரலாறு அல்லது இனவரைவியல் எனத் தேடும் பொழுது அது எவ்வளவோ தொலைவுகள் இடம்பெயர்ந்திருக்கின்றன என்பதை வியப்பிற்கு பின்னே தொடர்ந்து பயணம் செய்ய இயலும். மக்கள் தான் வசித்த இடத்திலிருந்து காணா தொலைவு கடந்து வந்தாலும் அவர்கள் மறக்க மறுப்பது தன் மூத்தோர் பெயரையும் குலதெய்வ வழிபாட்டையும், அது கொடுக்கும் பிணப்பை நம்பிக்கையை எப்படி விட்டுவிட்டு நகர இயலும். தனிமனிதனுக்கு இவை தேவையற்றதாகக் கூடும் ஆனால் இனம் என்னும் குழுவிற்கு அதன் தேவை இருக்கிறது.

தேரிக்காட்டை பற்றி வாசிக்க எத்தனை வரிகள் கிடைத்தாலும் அது அமுதமாக உள் வாங்கப்படுகிறது. கீழப்பாவூரில் வசிக்கும் நாடார் சமூகத்து மக்களின் குலதெய்வங்கள் வசிக்குமிடம் தேரிக்குடியிருப்பு அது வரலாற்றின் தொற்று என்பதே முதற்காரணம். "தேரிக்காட்டு இலக்கியங்கள்" எனும் ஆய்வு நூலில் மக்கள் இடப்பெயர்ச்சி பற்றிய சிறு குறிப்பே முதல் கட்டுரையில் எஞ்சியுள்ளது ஆனால் இதில் அதிகமாக எதிர்பார்த்தது இதை பற்றிய முழு தகவலை அல்லது முடிந்தளவிலான விபரங்களை, அது இல்லை.

இரண்டாவது கட்டுரையில் திறனாய்வு செய்யப்பட்டிருக்கும் "பனையண்ணன்" நாவல் வாசிக்கப்படவேண்டிய நூல். கள்ளர்வெட்டு திருவிழாவின் வாய்மொழி கதையின் வழியாக நிகழ்வுகளை புரிந்துணரும் வரிகள் மிக முக்கியமானவை. வலங்கைமாலை புராணத்தினை பனையண்ணன் நாவல் வழியாக தொழில் மற்றும் சமூகங்களின் தோற்றங்களை அறிவதை விடுத்து விவிலியத்தை நாடிச் சென்றது ஏன் என கேள்வி எழுப்பப்படுகிறது. கால்டுவெல்லின் வரலாற்றை எழுதியிருப்பவர்கள் பெரிதாக ஆய்வு செய்ததாக தெரியவில்லை, மிக முக்கியமாக பஞ்சத்தில் உதவினார்கள் கிறுத்துவ பாதிரியார்கள் என்றால் பஞ்சம் உருவானதனை பின்னணியோடு கூறக் கடமை உள்ளதாக எண்ணவேண்டி உள்ளது. ஆனால் சிலச்சில குறிப்புகளை மட்டுமே அடுக்கிச் செல்கிறார் கட்டுரையாளர். இதன் தொடர்ச்சியாக பஞ்சத்தின் வரலாற்றை அறியவேண்டியது அவசியம்.

ஜி.யு.போப் பற்றிய கட்டுரையும் பல தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. தாமரை செந்தூர்பாண்டி மற்றும் நெல்லை கவிநேசன் எனும் இருவரை தேரிக்காட்டு படைப்பாளிகளாக முன்னிருத்தி அவர்களுடைய படைப்புகளை விமர்சன கட்டுரை எழுதியிருக்கிறார்கள். இன்னும் எழுதியிருக்கலாம் விமர்சித்திருக்கலாம்.

செவ்வாய், 28 நவம்பர், 2017

ஓவியத்தை கண்டடைதல்

எதற்காக வரையப்படுகின்றன என்பதைக் கடந்து வரைதல் கொடுக்கும் அகக் களிப்பே முன்வந்து முகம் மலர்கின்றது, எச்செயலுமே அதற்காகத் தான். வரையப்படும் ஓவியங்கள் கொடுக்கும் கிளர்ச்சியும் கற்றலுக்கான தொடர்ச்சியுமே நம்மை தொடர்ந்து இயக்க காரணிகளாக இருக்கிறது. தத்ரூபமான ஓவியம் ஒன்றை வரைந்து முடித்ததும் இல்லை முடிந்துவிட்டது என்பதான தோற்றம் கிடைத்ததும் சில நேரம் அதை பார்த்திருந்த பின் ஏற்படும் வெறுமையை எப்படி கடப்பது.

ஒரு உருவத்தை படத்திலுள்ளது போல அச்சசலாக வரைவதற்கு ஆரம்ப காலத்தில் கட்டங்கள் வரைந்து பயிற்சி எடுக்க தொடங்கியபின் மூன்றாவது படம் எதிர்பார்ப்பை நிறைவேற்ற நன்றாகவே அமைந்தது என்றாலும் மேற்சொன்ன வெறுமை தொற்றிக்கொண்டதாக நண்பரிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே மனம் அவ்வோவியத்தின் ஊடாக பயணித்தது. வெறும் கோடுகளாக நிழல்களாக அதன் வடிவங்கள் பிரித்துணரப்பட வேண்டும் என சிறு எண்ணம் கீற்றாக விழுந்தது.



அன்று மாலை வீடு அடைந்ததும் டாலியின் முகத்தைக் கொண்ட ஓவியத்தை எடுத்து சுவரில் சாய்த்துவிட்டு சிறு இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டேன். ஒவ்வொரு கோடுகளின் நீளங்களை வளைவு சுழிவுகளை உறுப்புகளை இணைத்திருக்கும் நிழல்களின் மாயத்தை என பார்வையால் தீண்டத் தீண்ட என்னிடமிருந்தே நான் கற்றுக் கொள்ள வெளி உருவாகியிருந்ததை உணர முடிந்தது. அதற்கடுத்த படத்தினை வரையும் பொழுதையும் அதன்பின்னான ஒவ்வொரு நாளையும் இவ்வாறு கடந்தபோது அடைந்த உவகை பேரின்பம்.

சனி, 18 நவம்பர், 2017

பிரியமுடன் பிக்காஸோ - வாசிப்பு

பிக்காஸோவின் ஓவியங்களைப் பற்றி வாசித்ததில்லை ஓவியங்களை கண்டு புரிந்துகொள்ள (புரிந்தால் தானே உணர முடியும் என்பதால்) முயன்று அயர்ச்சியில் கடந்து போயிருக்கிறேன். மெல்ல மெல்ல நவீன ஓவியங்களின் ஓட்டங்களை அறிதலின் மூலம் ஒருநாள் இவரது ஓவியங்கள் வசப்படும் என்ற நோக்கோடு இன்று வாங்கிய "பிரியமுடன் பிக்காஸோ" என்ற சிறுவர் நாவலை வாசிக்கத் தொடங்கினேன்.


ஓவியர் பற்றிய அறிமுகத்திற்குப் பின் சில்வெட் என்ற சிறுமியுடனான உறவினை மையமாகக்கொண்டு நீளும் கதையாடல், சிறுமியினை கோட்டோவியமாக வண்ண ஓவியமாக க்யூபிச பாணி ஓவியமாகவும் வரைந்து இறுதில் அவளை சுதந்திரமானவளாக சித்தரிக்குமொன்றை பரிசாக அளிப்பதோடு இடையிடையே ஓவியம் வரைதலுக்கு உந்துதலாக தோன்றும், தான் காணும் காட்சிகளை புரிந்துகொண்டு அதை ஓவியத்தில் கொண்டுவரும் செயல்களை விளக்கும் நோக்கோடு கதை நகர்வது சிறுவர்களுக்கேற்ற உரைநடையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கெண்டை மீனை வரைந்து அதை கெண்டை கோழியாக மாற்றும் புகைப்படமும் அதைப்பற்றிய சிறு உரையாடலும் இவரது கோடுகளை அறிய ஓர் வழியை விலக்கித்தருகிறது.

மிகக்குறைந்த (80) பக்கங்களே கொண்ட நூல் வாங்கி வாசிக்கலாம்.


வியாழன், 16 நவம்பர், 2017

இரண்டு சிறுகதை - வாசிப்பு

இன்று வாசித்த இரண்டு சிறுகதையும் பள்ளிப்பருவ காலத்தை நினைவில் கிளர்த்திவிட்டது.

பிரைமரி காம்ளக்ஸ்
https://padhaakai.com/2017/08/27/primary-complex/

ஒரு சிறுவனின் நினைவோட்டத்தில் சொல்லப்படும் கதையேயானாலும் அதுமட்டும் போதுமா நினைவுகளுக்கு தலை சீவி விட. உடல்நிலை சரியில்லாமல் போனால் வீட்டில் கிடைக்கும் உபசரிப்பும் (பகலில் ரொட்டியும் பாலும் இரவில் தொட்டுக்க சீனியோடு இட்டிலியும்) மூன்று வேளை சோறுண்ணுவதிலிருந்து விடுதலையும், முட்டையின் மஞ்சள் கருவை சோற்றில் பிசைந்து சாப்பிடுவது வியாழக்கிழமை பள்ளியில் கிடைக்கும் முட்டை என நிகழ்வுகளை அசைபோட்டுக்கொண்டே வாசித்து முடித்தேன்.

இதோ எனது சரீரம்

இம்மாத தடம் இதழில் வெளி வந்திருக்கும் சிறுகதை.
ஓவியங்களையும் ஓவியரையும் புகலிடத்து அகதியையும் பற்றிய கதைதேயானாலும் அதில் வரும் இடைவார் என்ற சொல் இழுத்துப்போன தூரம் அகவயமானது. அவ்வார்த்தைக்குப்பின் "இடவாரக் காணோம், இடவார எங்கம்ம, இடவார எங்க வச்சேன்" என்று திரும்பத்திரும்ப எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். அதிலிருந்து எவ்வளவு தொலைவு அந்நியப்பட்டுவிட்டேன் என எண்ணம் ஓடிக்கொண்டிருக்கிறது.

புதன், 25 அக்டோபர், 2017

வெளித்தள்ளவும் உள்தள்ளவும்

குறிப்பிட்ட சிலருக்கு அதிகாரமோ ஆதிக்கமோ இருக்குமிடத்தில் அவர்களினிடத்தில் நாம் இருந்தால் கிடைக்கும் சலுகைகளை எண்ணிப் பாரக்காத மனமென்று ஒன்று இருக்குமா. அதிலும் திரைக் கதாநாயகர்களின் குணம்போல் உருவாகிவிட எத்தனிப்பது தமிழகத்தில் வெகு பிரபலம்.

சென்னையிலிருந்து பேருந்தில் ஊர் போகும் நெடுஞ்சாலை ஓரமுள்ள உணவகங்களில் ஒண்ணுக்கோ ரெண்டுக்கோ போக ஐந்து ரூபாய் கொடுத்தும் மிகையாய் புளித்த அல்லது புளிக்கவே புளிக்காத மாவில் சுட்ட இல்லை சுட்டது போன்ற தோசையை அறுபது ரூபாய் கொடுத்தும் வெளியேற்றவும் உட்கொள்ளவும் வேண்டிய அங்கு அதனை பணம் செலுத்தாமலே உண்டும் வெளியேற்றவும் செய்யும் ஓட்டுனராகவோ நடத்துனராகவோ ஆகிவிட்டாலென்ன என எண்ணுவதும் முதலில் சொன்னதோடு சேர்ந்ததுதானே.

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நாம் கூத்தாடிதான்... எல்லோரும் சொல்லும் பாட்டு

பாடல்கள் கேட்பது வெகுவாக குறைந்துவிட்டது கடந்த சில வருடங்களில், வாசிப்பு நேரத்தை எடுத்துக்கொள்வதால் பாடல்களும் திரைப்படங்களும் விலகியே இருக்கின்றன. கடந்த மாதம் அத்தை மகன் திருமணத்திற்காக ஊருக்கு சென்றிருந்த பொழுது, பாபநாசம் அருகிலுள்ள சிவந்திபுரம் மணமகள் வீட்டிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். மனம் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் நிழலாட்டங்களில் மயங்கிக்கிடந்தது வில்லுப்பாட்டு ஒலி கேட்டதும் காது அதற்கு இசைந்தது "கலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ" எனும் பாடல், வாகனத்தின் குலுக்கலும் பாட்டின் துள்ளலும் சேர்ந்து மனம் ஒரு சிற்பத்தை கற்பனை செய்யத் தூண்டியது.


மறுநாள் சென்னை வந்ததும் பாடலை யூட்யூப்பில் திரும்பத் திரும்ப கேட்டு தொடர்ந்து முணுமுணுத்துக் கொண்டிருந்தேன். இன்று காலை விழித்தவுடன் பாயிலிருந்து எழும்புவதற்கு முன்னே "நாம் கூத்தாடிதான்... எல்லோரும் சொல்லும் பாட்டு ..." என்ற வரிகள் குறுக்கும் நெருக்கும் ஓடிக்கொண்டிருந்ததன. என்னடா இந்த வரி என்று மீண்டும் மீண்டும் பாடிப்பார்த்தும் இவ்வரிகளைத் தாண்டி எதுவும் புலப்படவில்லை. எங்கிருந்து வந்து காலையிலேயே சோதனை செய்யுதென்று கூகுளில் தேடினால் மறுபடியும் படத்திலுள்ள பாடல். அடடா!! என்று கேட்கத்தொடங்கிவிட்டேன்.


ஓவியர் அரவக்கோன் - தன்வரலாறு - வாசிப்பு

ஓவியம் பற்றி தேடல்களில் காலத்தை செலவு செய்து கொண்டிருப்பதால் பேஸ்புக்கில் அறிமுகமான அ.நாகராஜன் (அரவக்கோன்) அவர்களின் தன்வரலாற்றுப் புத்தகம் சமீபத்திய சென்னை புத்தகக்காட்சியில் கிடைத்தது. சிறுவயதின் நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டு போகிறவர் வழியே சென்னை அடையாற்றின் பழைய முகத்தினை காட்சியாக்கி பக்கங்களை புரட்டுகிறார். ஓவியம் வரையத்துவங்கிய காலம் பற்றி இடையில் பேசும் பொழுதில் மெல்ல எனது காகிதங்களையும் பேனாக்களையும் தேடி ஓடியது மனது. மேலும் நகரத்தில் மனிதர்கள் வீடு வீடாக மாறிப்போவது எவ்வளவு எளிதாக நிகழ்ந்துவிடுகிறது. இதுவரை எத்தனை வீடு மாறியிருப்பார் என எண்ணக் கேட்டது மனது பாதி பக்கங்களுக்கு மேல் கடந்தபின்னர்.

பொதிகை அதிவிரைவு தொடர்வண்டியில் வரும்போது இப்புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன் அருகிலிருந்த மலையாளச் சிறுவன்  பின்பக்க அட்டையினை தூக்கிப் பார்த்தான் அதை திருப்பி நேராகக்காட்டியதும் "Flute" என்றான் சன்னமாக சிறிது நேரம் அப்படியே வைத்துக்கொண்டு நானும் பார்த்திருந்தேன். அவன் தந்தை அலைபேசியை கையிலெடுக்கவம் அவரோடு ஒட்டிக்கொண்டான். புத்தகம் வாங்கும்போது அப்பின்பக்க ஓவியத்தை முதல்முதலாக பார்த்தது நினைவில் ஓடியது. இப்புத்தகத்தை கடந்து இவரது வேறு ஓவியங்களை பார்த்ததில்லை மற்ற ஓவியர்களுடையதும் அதே நிலையில் காணக்கிடைக்காமல் உள்ளது. இணையத்தில் ஒருசில ஓவியர்களின் படங்கள் காணக்கிடைக்கின்றன. தமிழக ஓவியர்களின் ஓவியங்களை பற்றி யாரேனும் ஆய்வு செய்ய நேரிட்டால் அதற்கான மூலங்களை பெற பெருஞ்சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படலாம். அரசின் கலைத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறதோ, அதற்கான மன எழுச்சியும் அகதமிகளின் அரசியல் போக்கையும் கண்டித்திருக்கிறார் இப்புத்தகம் வழியே, செவி கொடுப்போர் உண்டா என்ற கேள்வி அதில் தொக்கி நிற்கிறது.

அவரது படைப்புகளை ஒளிப்படங்களாக மாற்றிக்கொண்டிருப்பதாக பதிவு செய்திருக்கிறார். காத்திருக்கிறேன்.
ஓவியங்களுடான வாழ்க்கை இன்றி வங்கிப்பணி பின்னால் சென்று பின் காலம் கொடுத்த இடைவெளியில் ஓவியத் திறனை மீட்டுருவாக்கம் செய்து ஓவியங்களை காட்சிப்படுத்துவதில் கிடைத்த அனுபவங்களால் தொடர்ந்து ஓவியனாகவே முன்னிருத்திக்கொண்டாலும் பகுதிநேரம் ஓவிய பங்களிப்பு செய்பவர்களை "ஞாயிற்றுக்கிழமை ஓவியர்கள்" என பகுக்கப்படுவதை குறிப்பிடுகிறார். இதேபோல் இலக்கியத்திலும் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் என்ற சொல்லாடலை கவிஞர் விக்கிரமாதித்யனின் பேட்டியொன்றில் வாசித்த ஞாபகம்.

வாசிப்பின் மீதான இவரது விருப்பங்களினிடையே விமர்சனமும் வைக்கிறார் புதுமைப்பித்தனின் கதைகளான துன்பக்கேணி மற்றும் பொன்னகரம் அவரை கீழிழுக்கும் கதைகள் என்கிறார் ஆனால் அதற்கான விளக்கமில்லை.

தமிழக ஓவிய மரபில் ஒரு தொடர்ச்சியை காணமுடியாது எனக்கூறுவதோடு இயல் இசை நாடகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து முத்தமிழாக சிறப்பித்திருக்கும் தமிழ் மொழி ஓவியத்தை ஏன் கைவிட்டது என கேள்வி எழுப்புகிறார். தேடலுக்கான கேள்வியும் கூட.

நவீன ஓவியங்கள் மூலம் உழைப்பவனுக்கு அதாவது பாமர மக்களுக்கு என்ன கூற விளைகிறீர்கள் என்பதற்கு எதுவுமில்லை என்ற பதிலோடு அம்மக்களுக்கு இதில் எல்லாம் விருப்பம் இருப்பதில்லை அதற்கான நேரமும் அவர்களிடம் கிடையாது அவர்களுக்கேற்றவாடு ஆடியும் பாடியும் களித்துக்கொள்கிறார்கள். கலைஞனானவனுக்கு படைப்புருவாக்கத்தில் உண்டாகும் அனுபவமே தேவையானதாக உள்ளது எனும் கூற்றை முன்வைக்கிறார் இது நவீன ஓவியர்கள் முன்வைக்கும் பொதுக் கருத்தாகவே உள்ளது.

"காலி கித்தானும் எனது கோடுகளும்" என்ற ஓவியக்காட்சி இவரது காட்சிப்படுத்துதலில் முக்கியமானதாக இருந்திருக்க வேண்டுமென தெரிகிறது ஆனால் மாதத்தினையும் தேதிகளையும் குறிப்பிட்டவர் வருடத்தினை சொல்லாமல் விட்டிருப்பதாகத் தெரிகிறது, நாட்குறிப்புகளிலும் அதற்கான குறிப்பேதுமில்லை.  நான் எங்கும் தவறவிட்டேனா எனத்தெரியவில்லை.

தன்வரலாற்றுப் பகுதிக்குப் பின் தனது நாட்குறிப்புகளை தொகுத்திருக்கிறார். இங்கு ஓவியம் சார்ந்த இரு முக்கியமான கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார், அவை ரவிவர்மாவின் ஓவியங்கள் ,காலண்டர் ஓவியங்கள் மற்றும் அச்சுப்பிரதிகளை பற்றியதாகவும். ரவிவர்மாவின் குறுவரலாறு பற்றியதுமாகும். இதில் திரைப்படங்களுக்காக பேருருவ ஓவியங்கள் வரையப்படும் முறை மற்றும் அதை காட்சிப்படுத்துவதையும் கணினியின் வருகை ஏற்படுத்திய பாதிப்புகள் பற்றியும் விவாதிக்கிறார். 

இந்தியாவிலும் தமிழகத்திலும் வெளிவந்த ஓவியப் பத்திரிக்கைகளை வரிசைப்படுத்தியிருப்பது வரலாற்றுச்சான்று.


ஓவியரின் வாசிப்பனுபவம் தித்திப்பூட்டுகிறது, மிகக்குறைந்த வார்த்தைகளில் புத்தகங்களை கதைகளை விமர்சித்துச் செல்வதும் தன்னை சுய பகடி செய்துகொள்வதும் நிறைந்திருப்பதோடு சதுரங்க விளையாட்டு பற்றிய தெளிவான விரிவான குறிப்புகளை வாசிக்கும் பொழுதில் கல்லூரிப் பருவத்தில் நூலகத்திலிருந்து எடுத்துவந்த சதுரங்க பயிற்சி புத்தகத்திலிருந்த ஆட்ட நகர்வுகளால் விழிபிதுங்கியது நினைவில் ஊடாடியது.

நிறைவுரைக்கு முன்னதாக ஓவியங்களால் நிரம்பியிருக்கின்றன பக்கங்கள். இவர் பறவைகளை தீட்டியிருக்கும் ஓவியங்களில் குழந்தைத் தன்மையை உணர முடிகிறது அதேபோல் குடியிருப்பு ஓவியமும். 

மீள்வாசிப்பிற்குரிய முக்கியமான நூல்.

இவரது "20-ம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள்" வாசிக்க காத்திருப்பதுபோல அச்சிலிருக்கும் சித்ரசூத்ரம் மற்றுமிரு நூல்களுக்காகவும் காத்திருக்கிறேன்.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

மௌனியிடம் பயில்கிறேன்

ஒருசில கதைகளுக்குப் பின் ஓரமாக வைத்திருந்த மௌனியின் படைப்புகளை புரட்ட ஆர்வம் மேலெடுத்தது. மூன்று நாட்களாக ஒவ்வொரு கதையாக (சிகிச்சை, மாபெருங்காவியம், எங்கிருந்தோ வந்தான்) வாசித்து முடித்தேன். மரணத்தை மையங்கொண்டே காதலை அன்பினை வெளிப்படுத்தும் மாந்தர்களை உருவாக்கி தன் புனைவு வெளியை சித்தரிக்கிறார். எங்கிருந்தோ வந்தான் கதையினை வாசிக்கையில் அரூப ஓவியத்தில் ஒழிந்திருக்கும் கீற்றுகளின் ஓட்டங்களை கூர்ந்து நோக்குவதுபோலத்தான் இருந்தது, சமயத்தில் கதையிலிருந்து வெளித்தள்ளி மனதினை காலவெளியில் அலைந்து திரிய விடுகிறது.

இக்கதைகளின் காட்சி சித்தரிப்பில் தேர்ந்த ஒளிப்படக்காரனின் உள்ளுணர்வும் ஓவியனின் பிரதிபலிப்புமாகவே விரிகின்றது.

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

கனவுராட்டினம்

"கனவுராட்டினம்" பெயரும் பெயருக்கேற்ற அட்டைப்பட ஓவியமும் இப்புனைவின் பதிப்பாளர் அறிமுகப்படுத்திய பொழுதே வாசிக்கவேண்டுமென்று மனதில் எழுத்து பதியப்பட்டது.
அட்டைப்பட ஓவியத்தை ஓர் நீர்சுழல் போல் எண்ணிக்கொள்ளத்தான் மனம் நாடுகிறது. மையத்திலிருந்து பிரிந்துசெல்லும் கோடுகள் ஒரு முடிவற்ற பயணக்குறியீடாக காட்சியளிக்கிறது அதேவேளை அவை நேர்கோடுகளும் அல்ல அதேபோல் மையம் நோக்கி திரும்பப்போவதும் இல்லை.

கனவுகளை ரசிக்காத மனது என்று ஒன்று உள்ளதா என்றால் நிச்சயமாக இருக்க வாய்ப்பில்லை ஒவ்வொரு வயதும் அதன் அளவிற்கேற்ப கனவுகளை சுமந்துகொண்டு அதோடு உரையாடிக்கொண்டுதான் இருந்து வருகிறது. நண்பன் ஓணான் அடிக்கையில் புளியமரத்தின் தடித்த வேரில் மூத்திரத்தை உதிர்ப்பவனுக்கு தொடையில் ஈரம் கிச்சுகிச்சு மூட்டியோ "அம்மை" குண்டியில் அடித்த பின்னோ நனைந்த கால்சட்டையோடு கனவு கலையும் இரவு என பல வடிவில் நினைவுகளின் ஓட்டம் துரத்தும். இதுபோன்ற இன்னும் பல கனவுக்காட்சிகளை நினைவுப்படுத்தி அசைபோட்டு கிளர்ச்சியில் தழைத்தது மனது.

ஒரு மளிகைக்கடைக்காரனுக்கு என்ன பிரச்சினை இருந்துவிட முடியும் என அவனிடம் பொருட்கள் வாங்கும் நீங்களும் நானும் நினைக்கலாம் சுந்தருக்கு பிரச்சினை இருப்பதிலிருந்தே கதை தொடங்குகிறது. தனக்குள் எழும் கேள்விக்கு பதில் தேடி அலைபவன் பாணதீர்த்தம் இருக்கும் மலைக்காட்டில் கனவுப்பயணத்திற்குள் விழுபவன் தொடர்ந்து அவனின் கனவுகளில் வழுக்கிக்கொண்டே செல்கிறான்.
அவனது உறவினர், சிறுவயதில் வேலைபார்த்த மளிகைக்கடை செட்டியார், காதலிகள், என தாவித்தாவி ஓடுகிறான். தான் ஏன் இப்படித்திரிகிறோம் என சிந்திப்பவனிடம் அங்கே சந்திக்கும் ஜெமி எனும் கனவு உருவம் அவனது காதலனை கனவில் தொலைத்துவிட்டதாக கூறுகிறாள். 

சுந்தருக்கு கனவு பற்றிய விளக்கம் இவளால் அளிக்கப்படுகிறது. கனவு பற்றிய ஆராய்ச்சி அந்நிழலுலகில் காட்சியிலிருந்து காட்சி மாற உதவும் சிறு எந்திரம் என ஒரு த்ரில்லர் நாவலுக்குரிய வேகம்.

ஓவியத்தில் மீயதார்த்தம் (சர்ரியலிசம்) என்ற கோட்பாட்டோடு இக்கதையமைப்பை பொருத்திப்பார்க்கலாம். ஆழ்மனத்திற்குள் நுழைந்து எதற்கோ பதில் தேடி வந்தவனை குழப்பத்தில் ஆழ்த்தும் ஜெமியின் விஞ்ஞான மெய்ஞான விளக்கங்கள். இந்த விளக்க உரையாடலில் வரும் வரிகள் வாசிப்பவனை இட்டுச் செல்லுமிடம் வியப்பிற்குரியது.

எனக்கு இப்படித்தான் தோன்றிக்கொண்டிருந்தது "ராட்டினத்தின் பெட்டியில் எதிரெதிர் இருக்கையில் இருப்பது எனதும் அவளதுமான கனவு எனில் இங்கே ராட்டினத்தின் பெட்டி அல்லது அதனை சுழற்றுபவன் யாருடைய கனவு."
ஒரு புதினம் வாசிப்பின்போது ஏற்படுத்தும் நினைவோட்டங்கள் புதுப்புது சித்தாந்தங்களும் புரிதல்களுக்குமான வெளியை திறந்துவிடும் அதற்கான அழகிய வழி இவ்வாசிப்பு. இதில் மிகைப்படுத்தல் எதுவுமில்லை கனவுகளை ரசிப்பவனுக்கு அதை அனுபவிக்க விரும்புபவனுக்கு அதன் சுழல்களை அறிய விரும்புபவனுக்கு ஓர் ஆழ்ந்த வாசிப்புக்குள் புகுத்திவிடும்.

வாசிப்பின் இடையிடையே கதையோட்டத்தின் தர்க்கம் சார்ந்த கேள்விகள் எழாமல் இல்லை ஆனால் தொடரும் பக்கங்கள் அவைகளை தேவையற்றதாக மாற்றிவிடுகின்றன.  இங்கு குறைகள் இருக்கலாம் ஆனால் எனக்கென்னவோ குறைகள் கண்ணிலும் எண்ணத்திலும் விழவில்லை. இறுதியில் நீங்கள் இந்த ராட்டினத்திலிருந்து இறங்காமல் சுற்றிக்கொண்டிருக்கும் அற்புதத்தில் கழற்றிவிடப்படுவீர்கள். கனவு கண்ட அன்றைய தினம் எவ்வளவு குதூகலத்தோடு இருக்குமோ அதுபோன்றதொரு மனநிலையிலேயே தொக்கிநிற்கச் செய்கிறது இவ்வாசிப்பு.

செவ்வாய், 26 செப்டம்பர், 2017

பிக்பாஸும் நான்குகாலிகளும் (நாற்காலி)

அலுவலக தோழி ஒருவர் மதிய இடைவேளையின் பொழுதில் அரசியல் பற்றிய பேச்சு வந்தபோது ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசியேயில்லை என்றாள். நண்பரொருவன் அதற்கு அவர் ஒரு "சொல்புத்தி" பிள்ளை என எண்ணுகிறேன் என்றான். அதை ஆமோதித்தது போல அவளும் தலையாட்டி உச்சி கொட்டினாள்.

பிக்பாஸ் பற்றிய பேச்சு வந்ததும் தீவிரமான குரலில் இன்னொரு நண்பன் கமலுக்காகவே அந்த நிகழ்ச்சியை பார்ப்பதாகவும் அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார் என்றான். அதை மறுதலித்து அவர் வரமாட்டார் என்றான் ஸ்டாலினை சொல்புத்தி என்று சொன்னவன். அதெப்படி நிச்சயமாக வருவார் என்று நெஞ்சு புடைக்க கத்தினான் என்றே சொல்ல வேண்டும்.

மூன்று நாள் கழித்து முரசொலி பவளவிழா முடிந்த மறுநாள் மாலையில் சாலையோர பெட்டிக்கடையில் நான் ஃகாபியும் மற்றவர்கள் இஞ்சி தேனீரோடு புகைக்குழலையும் உறிஞ்சிக்கொண்டிருக்கும் போது அதே தீவிரமான குரலில் சொன்னாலும் வெட்டவெளி என்பதால் குறைவான ஓசையிலேயே காதில் விழுந்தது "கமல் அரசியலுக்கு வருவார் ... வரவில்லை என்றாலும் யாருக்காவது வழிகாட்டுவார்" என ஒலித்து முடித்தான். 

அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது என்றான் அந்த சொல்புத்தி என்று சொன்னவன். ஏன் நடக்காது அக்காலத்திலேயை கலைஞர் கமலை அரசியலுக்கு அழைத்திருக்கிறார் தெரியுமா. ஆனாலும் அவர் போகவில்லை பதிலும் சொல்லவில்லை என்றும் சொன்னான்.

கலைஞர் கூப்பிட்டே வராத கமல் மற்ற யார் கூப்பிட்டும் வரமாட்டேன் எனக் கூறியதான உள் அர்த்ததில் தான் இதை புரிந்துகொள்ளவேண்டும் என்றும் திமுக ஆட்சியில் அமர்ந்தால் விஸ்வரூபம் இரண்டாவது பாகத்தையும் வெளியிட்டு மற்றைய படங்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுவார் என்றான். ஆமாம் ஸ்டாலுனுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிடைக்காமலே போனால் என்னாகும் என்றான் இன்னொருவன்.

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

புதன், 30 ஆகஸ்ட், 2017

முட்டக்கண்ணும் சரபோஜியும்

உணவுநேரமானாலும் காபி இடைவேளையானாலும் உப்பு சப்பற்ற பேச்சுகளையே விவாதிக்க பழகியிருக்கிறோம். அடுத்தவரின் அந்தரங்ககங்களையே பேசித்தீர்ப்பது எப்போது தீருமோ என எண்ணுமளவு நடிகர்கள் அரசியல்வாதிகள் தவிர்த்து பேசுவதற்கு எதுவுமற்றே உலாவுகிறோம் ஒரே குட்டைக்குள் உழல்கிறோம். இவர்கள் யாருக்கும் தாம் விவாதிப்பதாக நினைத்து அரட்டை அடிக்கும் பொழுதில் அப்பொருள் அல்லது அதன் தொழில்நுட்பம் சார்ந்து ஆழமான அறிவோ பார்வையோ இருப்பதில்லை கூட்டத்தில் ஒருவன் கொஞ்சம் விளக்க முற்பட்டால் வார்த்தைகளை தடம் புரட்டி வேறு தேவையற்ற பொருள் நோக்கி இயல்பாக நகர்த்திவிடும் ஆட்களுமுண்டு.

சில சமயங்களில் யாருக்கும் பேச வார்த்தைகளின்றி காஃபியை விழுங்கிக் கொண்டிருக்கும் போது தெறிப்பான ஒரு கேள்வியை உதிர்த்து விட்டால் போதும், பற்றிக்கொள்ளும். இத்தருணங்களில் சிலர் இதுவரை அக்கூட்டத்தில் பேசவே பேசாத தகவல்களை அள்ளிவிடுவார்கள். அதுவன்றோ விவாதத்தளம் என்ற நிலை உணரும் இடம்.

புத்தர் எப்படி இறந்தார் எனத்தெரியுமா என்ற கேள்வியை புதிதாக பௌத்தம் அறிந்து கொண்டிருப்பவரிடம் கேட்டதில் தொடங்கியது தாவித்தாவி சரபோஜி மன்னரிடம் வந்தடைந்தது எந்த இடத்தில் தடம் புரண்டு இவரை அடைந்தோம் என நினைவில்லை. மராட்டிய மன்னர்கள் தமிழகத்து பகுதிகளை ஆட்சி செய்த போது இசை ஓவியம் போன்ற கலைகளில் நாட்டம் கொண்டளவு கட்டிடக்கலையில் சிறப்பு செய்யவில்லை மேலும் தமிழ் மொழியிலும் தமிழ் தொன்மக்கலைகளிலும் எவ்வித வளப்படுத்துதலையும் நிகழ்த்தவில்லை, குறிப்பாக சரபோஜி ஆங்கிலேயரை அரவணைத்தே ஆட்சி நடத்தினார் என நீண்ட வார்த்தைகளின் இடையே அந்த புதுக்கோட்டைப்பெண் உற்சாகமான குரலில் "ஏன் இல்லை... இருக்கிறது... மனோரா கோட்டை... சரபோஜி இரண்டாவது மன்னர் கட்டியது" இதோ பாருங்கள் என கூகுளில் காண்பித்தாள். இதுவரை அறியாத தகவல் அது, அலெக்ஸாண்டரிடம் வாட்டர்லூ போரில் மோதி வெற்றிபெற்ற ஆங்கிலேய நண்பனுக்காக நினைவுச்சின்னமாக கட்டப்பட்டிருக்கிறது இக்கட்டிடம். இரண்டு நாள் முன்பு வாஸகோடகாமா பற்றி கேட்டபோது முட்டக்கண்ணை உருட்டியவளின் உணர்விலிருந்து வந்த வரலாற்று தகவல் வாசிப்பிற்கான தளத்தை விரிவாக்கியிருக்கிறது.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

தென்காசி சாரல்

இரண்டு நாட்களாக குளிர்ந்த காற்றும் சாரலும் சூழலை நிசப்தமாக்கி வைத்திருந்தது கீழப்பாவூரில். பொதுவாக குற்றால சாரலை ரசிப்பதற்கெல்லாம் அப்பா அழைத்துச் சென்றதில்லை "சீசன்" தவிர்த்த அருவியில் நீர் விழும் இல்லை கொட்டும் நாள்தான் செல்வது வழக்கம். சீசன்களுக்கு அப்பா தரும் விளக்கம் "அய்யப்பசாமிகள் பேண்டு போட்டுருக்கும்" என்பதும் "வெளியூராளுவளுக்கு நேந்து விட்டுருக்கும்" என்பதும் தான்.

இப்பொழுதும் நல்ல சீசன் ஊரெல்லாம் சாரல் என்றால் குற்றாலம் எப்படியிருக்குமென உணர முடியும். சில முறை நண்பர்களுடன் சென்று வந்ததுண்டு. நான்கு நாட்கள் ஊரிலிருந்தும் போய்வர இயலாமல் போனது. மாலை தென்காசியில் பேருந்து ஏற வரும் பொழுது இன்னும் குளுமை அதோடு சூடாக இரண்டு உளுந்தவடையும் வாழைக்காய் பஜ்ஜியும் தேங்காய் சட்னியோடு உள் தள்ள இதமானது பொழுது. அதன்முன் லயன் காமிக்ஸ் புத்தகங்கள் நான்கையும் "காக்கைச் சிறகினிலே" இலக்கிய மாத இதழையும் வாங்கி பைக்குள் சொருகிக்கொண்டதை சொல்லாமல் விட முடியுமா.

செங்கோட்டையிலிருந்து ஐந்து மணிக்கு கிளம்பி தென்காசிக்கு ஐந்து இருபதுக்கு வரும் அரசுப் பேருந்தில் ஏறுவது மூன்று வகையில் சிறந்தது. முதலாவது இருக்கைகள் மற்றும் இன்னபிற அம்சங்கள் மற்ற நேரத்து வண்டிகளைவிட அம்சமானது.

இரண்டாவது மதுரை சுங்கச்சாவடி அருகே "ஹரி" என்றவொரு உணவகத்தில் நிறுத்துவது, நான் இதுவரையிலான பயணத்தில் இங்கு உண்டதில்லை, உண்ணுமளவுக்கு பையில் தெம்பில்லை. ஆனால் ஒண்ணுக்கு இரண்டுக்கு போக(கட்டணமில்லாமல்) மற்ற இடங்கள் போல ஐந்து ரூபாய் கொடுத்துவிட்டு மூச்சைப்பிடித்துக்கொண்டு வெளிவரவேண்டியதில்லை என்பது சிறப்பென்றால் அங்கிருக்கும் புத்தகக்கடை வெகுசிறப்பு.

மூன்றாவது காலையில் ஏழுமணிக்கு வீடடைந்து விடலாம். இதைவிட அரசுப்பேருந்தில் வேறென்ன வேண்டும், மற்றைய வண்டிகளையும் இதுபோல் வழங்கலாம் பராமரிக்கலாம்.

இரண்டாவது மகள் "இயல்"

ராஜபாளையத்தில் தேனீர் குடித்த பின் பேருந்து கிளம்பியதும் அம்மா கேட்டாள் "பிள்ளைக்கி என்னபேர் வைக்க" என்று "இயல்" எனச் சொன்னதும் "எய்யல்... இதென்ன பேரு ஒரு எழுத்தா" என்றதும் இ ய ல் மூன்றெழுத்து என பிரித்துச்சொன்ன பின்னும் அவளால் சரியாக உச்சரிக்க இயலவில்லை. வேறு ஏதேனும் பெயர் வைக்கலாம்லா என்றும் அது வாயில் வரவில்லை எனவும் கூறினாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது இயல் என்ற பெயர் எப்படி அன்னியமானதாகிப் போனதென்று. ஊருக்கு வந்ததும் பெரியம்மா மற்றும் பக்கத்து வீட்டு அக்காவும் உச்சரிக்க சங்கடப்பட்டார்கள். எனக்குள் ஒரு விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கிறது இவ்வுச்சரிப்புகள்.

அதன்பின் உறவுகள் மற்றும் நண்பர்களிடத்தில் பெயரை கூறியதும் அதற்கான விளக்கத்தை வைக்கவேண்டியிருந்தது. தங்கை ஒருத்தி "இயல் இசை நாடகம்"னு வருமே அதுவா என்றாள் அதேதான் என்றேன், இன்னொருத்தி அப்படின்னா என்னண்ணேன் என்றாள் "எழுத்துத்தமிழ் முத்தமிழில் ஓர் தமிழ்" என்றேன். நல்லாருக்கு அதையே வைங்க. பின் யாரிடமும் பெயரை கூறியபின் முத்தமிழில் ஓர் தமிழ் என்று சொல்லவேண்டியிருந்தது சிலருக்கு அது தேவையில்லாமலிருந்தது.

எனது தம்பி முத்து "ரக்ஷிதா" என்ற பெயரை மனதில் வைத்திருந்திருக்கிறான். மூத்தவள் பெயர் ஜெபரத்திகா அதன் சாயலோடு இருக்க அப்படி எண்ணியிருப்பான் போல, பின் அவனும் இயல் என்றே அழைத்தான் இரண்டாவது மகளை.

புதன், 23 ஆகஸ்ட், 2017

ஒன்றாகி பின் விலகிய

அந்தச் சிறுகதையின் இரண்டாவது வரி அவனை இறுகப் பற்றிக்கொண்டதும், நேற்றைய இரவுக்கனவில் வந்த நண்பனின் பள்ளிப்பருவ காதலியும் முன்று நாள் முன்னர் வரைந்து பழகிய உடற்கூறு கோணல்களும் ஒரு புதினத்திற்கும் மற்றொரு புதினத்திற்குமான வாசிப்பு இடைவெளியும் கோட்பாடுகளின் விளங்காத் தன்மையும் கோடைகாலத்து வெய்யில் வியர்வையாக இறங்குவதுபோல மனதிற்குள் விலகி விலகி ஒன்றாகி பின் விலகின

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

கனவுகளை வரைந்தவன்


கனவுகளின் கீற்றினை ஓவியமாக்கிய மீயதார்த்தவாதி "சல்வோடார் டாலி"யை காகிதத்தில் கரிக்கோல் கொண்டு வடித்தது.

திங்கள், 7 ஆகஸ்ட், 2017

அப்படியாண்ணே

என்ன தம்பி பிள்ள நல்லா வளந்துட்டா போலுக்கு, பள்ளியோடத்துல கிள்ளியோடத்துல சேத்துவிடலாம்லா

இப்பதாம்ணே ஒன்றரை வயசாவுது

அது சரிப்பா இந்த "ஃப்ளே ஸ்கூல்"ங்கானுவள அதுல கிதுல

ஃப்ளே ஸ்கூல்னா என்னண்ணே

அதுவந்துடே ஏதோ "கலர் டே"வாம் அன்னைக்கி மாத்திரம் எல்லா பிள்ளியளும் ஒரே கலருல சட்ட போட்டுக்கிட்டு போறதும் கேக் வெட்டி பொறந்தநாள் கொண்டாடுததும் மாதிரி தெரியுதுப்பா.

ஓகோ அப்படியாண்ணேன்...

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

கனவுராட்டினம் - படைப்பாளிக்கொரு கடிதம்

வணக்கம் மாதவன்,

எனக்கு கனவுகளை பிடிக்கும் அதைக்கண்ட அன்றைய பொழுது எப்படி குதூகலமாக இருக்குமோ அப்படித்தான் உணர்ந்தேன் கனவுராட்டினம் வாசிக்கும் போதும். புதினம் தொடங்கியதும் எடுக்கும் வேகம் அது முடியும் வரை குறையவேயில்லாமல் ஊடாடுகிறது, வழுக்கிக்கொண்டோடுகிறது.
ஒரு புதினம் வாசிப்பவனின் உள்ளத்தையும் எண்ணத்தையும் என்ன செய்யவேண்டுமோ அதைத் தாராளமாக செய்கிறது.

இறுதியில் சுந்தர் என்பவன் அவனே அல்ல வேறொருவன் என நம்பவைக்கப்படும் பொழுதில் வாசிப்பின் இடையே புனைவை அசைபோட்டபோது தோன்றிய இரண்டு வரிகளை மீண்டும் ஒருமுறை உச்சரித்தேன். 

"இந்த இருக்கையில் நான் இல்லை எனது கனவு இருக்கிறது அதேயிருக்கையில் எதிரில் அவர் எனும் அவரது கனவு இங்கு இருக்கை என்பது யாருடைய கனவு."

வாழ்த்துகள் மாதவன் தொடர்ந்து எழுதுங்கள்.

உங்கள் மின்னஞ்சல் முகவரியில் "2o11" என அச்சாகியிருக்கிறது அது "2011" ஆக இருக்குமோ என்ற கற்பனையில் இரண்டுக்கும் அனுப்பியிருக்கிறேன் அது உங்களைச்சேருமா இல்லை நீங்களே ஒரு கற்பனை உருவமா என எண்ணிக்கொண்டிருக்கிறேன்.

அன்புடன்..... 
ஜெ.பாண்டியன்
PANDIANINPAKKANGAL.BLOGSPOT.COM

இதை பதிவிடும் பொழுதில் "2011" என முடியும் மின்னஞ்சல் தவறு என பதில் வந்துவிட்டது.

வியாழன், 27 ஜூலை, 2017

சித்திரங்களில் விசித்திரங்கள் - வாசிப்பு

வெர்மரின் ஓவியங்கள் பற்றிய கட்டுரையை வாசிக்கும்முன் "Girl with s pearl earring" திரைப்படம் பார்த்துவிட்டு சிறு குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன்.
http://pandianinpakkangal.blogspot.com/2017/07/Girl-With-A-Pearl-Earring.html?m=1

பிக்காசோ, லியோனார்டோ, பால் காகின், செசான், ஃப்ரைடா, வான்கா, ரெம்ராண்ட், டாலி என ஓவியர்களை அறிமுகம் செய்து அவர்களின் ஓவியங்கள் வழி பிறந்த திரைச்சித்திரங்களை முன்வைத்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகள் ஒளியினையும் ஓவியங்களை பற்றியுமான பரிதல்களுக்கு உதவுகிறது.

இந்திய ஓவியர்களின் வாழ்வில் எம்.எஃப் உசேனின் வாழ்கை புத்தகமாக வந்திருக்கிறது. அதுபோல் இன்னும் எத்தனையெத்தனை ஓவியர்களோ அவர்களை அறியவும் சமகாலத்தைய படைப்புகளையும் அறிந்துகொள்ள மறைவான உந்துதலை அளிக்கிறது புத்தகம்.

திங்கள், 24 ஜூலை, 2017

ஊரோடு ஒத்து வாழாதே சிலநேரங்கள் மட்டும்

இன்று திங்கள் கிழமை வார விடுமுறைக்குப்பின் அலுவலகத்தின் நெடியடிக்கத் துவங்கும் நாள், வீட்டில் தொடர் நாடகங்களின் பேயாட்டம் மட்டுமே பிரதானம் பிக்பாஸ் என்றால் அது என்ன என கேட்பவர்கள் தான் அம்மாவும் மனைவியும் திரைப்பட நடிகர்களை அதிகம் அறியாத அம்மா அதை பார்பதற்கு ஆவல் கொள்ளமாட்டாள் என்பது ஒருபக்கமிருந்தாலும் பக்கத்துவீட்டு அக்காள்கள் அந்நிகழ்ச்சி பற்றி இன்னும் ஏதும் பேசவில்லை என்று நினைக்கிறேன் இல்லையென்றால் என்னிடம் கேட்டிருக்க வாய்ப்புண்டு. என்னிடம் கேட்டால் மட்டும் என்ன சொல்ல முடியும்.

ஆனால் அலுவலகத்தில் அப்படியல்ல தொடர்ந்த விவாதங்கள், போதாததிற்கு யூடியூப் காணொளிகள் சத்தம் என அரக்கப்பரக்கிறார்கள். அநேகமா பல "session" உருவாக வாய்ப்பிருக்கிறது.

"ஊரோடு ஒத்து வாழ்" என்பது அனைத்திற்கும் பொருந்துவதில்லையாதலால் வெகுமக்கள் ஊடகத்தோடு (தேவையற்றவையோடு மட்டும்) ஒன்றாமல் இருப்பது வாழ்வை எளிய புன்னகையோடு கடந்துபோக உதவும்.

எங்க வாத்தியார்

எங்களுக்கு பள்ளியில் பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் சந்தானம் அவர்களின் உருவப்படம் பென்சிலால் தீட்டியது. ஊர் கீழப்பாவூர்,  திருநெல்வேலி மாவட்டம்.

சனி, 15 ஜூலை, 2017

சிறுநீரின் நிறம்

டச்சு நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஜோகான்ஸ் வீர்மீர் பற்றிய திரைப்படம் "Girl with a Pearl Earring" இது அவர் வரைந்த ஓவியத்தின் தலைப்புமாகும்.

படத்தின் ஒளிப்பதிவே ஓவியம் போல விரிந்து தொடர்ந்தது, பணிப்பெண் "க்ரீட்" ஓவியரின் வீட்டில் வேலைசெய்ய புறப்படுவதில் கதை தொடங்குகிறது. அவளின் தந்தையும் ஓவியராக இருந்து பின் பார்வை இழந்தவர் அதனால் ஓவிய நுட்பங்களை அறிந்தவளாக இருக்கிறாள். ஒரு காட்சியில் வீர்மீரின் ஓவிய அறையினை சுத்தம் செய்யச் செல்லுமுன் அவரது மனைவியிடம் சாளரத்தின் கண்ணாடிகளை துடைக்கவேண்டுமா எனக்கேட்கிறாள், நிச்சயமாக இதிலென்ன கேள்வி என பதில்வருகிறது. எந்த சலனமுமின்றி க்ரீட் சொல்கிறாள் "அதனால் வெளிச்சம் மாறுபடலாம்" என்று, சிலிர்ப்பை உண்டாக்கியது அந்த சொல்.

க்ரீட் கண்ணாடியினை துடைத்துக் கொண்டிருப்பதை காணும் வீர்மீரின் பார்வையில் அடுத்த ஓவியத்திற்கான பொருள் கிடைத்துவிட்டதெனும் ஆர்வம். அவளை சில நொடி நிற்கவைத்து பின் போகச்சொல்கிறான். ஓவியம் மெல்ல மெல்ல மெருகேருகையில் அவளுக்கு அதனை காணும் வாய்ப்பு கிட்டுகிறது. அக்காட்சியில் ஒளிநிழல்களை பற்றி ஓவியன் விவரிப்பதை கவனிக்கிறாள் ஆனால் அவளால் புரிந்துகொள்ள இயலவில்லை என்பதை அவதானித்தவுடன் சாளரத்தை திறந்து வான்மேகத்தைக் காட்டி அதன் நிறத்தைக் கேட்டவுடன் முதலில் "வெள்ளை" என்கிறாள் பின் அதை மறுத்து சில நொடி பார்வைக்குப்பின் "மஞ்சள், ஊதா, சாம்பல், மேகங்களில் வண்ணங்கள் உள்ளன" என்கிறாள், புன்னகையோடு புரிந்ததா என அவன் கேட்கவும் மேகத்திரள்கள் திரையில் விரிகிறது.




படத்தின் இருபதாவது நிமிடத்தில் வரும் விருந்துக்காட்சியில் வீர்மீரின் ஓவியமொன்று முதல்முறையாக காட்சிப்படுத்துகிறார்கள் அதை விமர்சிக்கும் மற்றொருவர் அதிலுள்ள நிறத்தினை பார்த்து "இந்திய மஞ்ச"ளா என்று கேட்கிறான் ஆமாம் என்ற பதிலுக்குப்பின் தொடர்கிறான் "மாவிலைகளை மட்டுமே உண்ட பசுவின் சிறுநீர் நிறம்".

வெள்ளி, 14 ஜூலை, 2017

அவளுக்கு தலைவலி

"வாரயிறுதியில் என்ன செய்றீங்க" என்பது உரையாடலின் போது இரண்டாவது கேள்வியாக இருந்தது, முதல் கேள்விக்குள் புகுவது காலவிரையம் எனப்படுவதால் இங்கிருந்தே கதைக்க விரும்புகிறேன். வெளியில் செல்லும் பழக்கமிருந்தாலும் வீட்டில் உறவுகளை விட்டுவிட்டுச் செல்வதற்கு மனதொப்பாததால் வாசிப்பும் வரைதலுமே வழக்கமாகியிருக்கிறது மாறாக உறவுகள் ஊர் சென்றுவிட்டால் வீட்டிலிருக்கும் அவசியமில்லாமல் போவதும் உண்மையே.

உங்க மனைவி எதுவுமே சொல்வதில்லையா என்றவள் (அவள் என்பவள் அலுவலக தோழி) கேட்டதற்கு,  சொல்லாமலில்லை என்பதைத்தவிர சொல்வதற்கு நிறைய இருந்தும் கூறவிருப்பில்லாமல் நழுவினேன்.
நானும் வாசிப்பேன் தெரியுமா என்றவள் தொடர்ந்தபோது ரமணிச்சந்திரனையும் ராஜேஷ்குமாரையும் கடந்து வேறொரு எழுத்தாளரையும் பற்றி பேசவில்லை. நாவல் ஏதாவது இருந்தால் கொடுங்களேன் வாசித்துப் பார்க்கிறேன் என்றதும் சுஜாதாவின் எழுத்துக்களை கொடுக்கலாமென்றால் புத்தகம் தற்போது கைவசமில்லை, ஆதலால் வைரமுத்துவின் "வில்லோடு வா நிலவே" புதினம் நினைவிற்கு வந்தது.

வீடடைந்தபின் அதோடு "தண்ணீர்" புதினத்தையும் சேர்த்து பைக்குள் வைத்துவிட்டேன். தண்ணீர் குறைந்த பக்கங்கள் என்பதாலும் அதிகம் குழப்பாத எழுத்தாகையாலும் அத்தேர்வு.
 
வைரமுத்துவா இவரோடது புரியாதே (இவருடையதே புரியாதா என்றெண்ணி அசோகமித்திரனை வெளியிலெடுக்கவில்லை), வேறெதுவுமிருக்கா, அசோகமித்திரனை கொடுத்தேன். பின்னட்டையை பார்த்துவிட்டு "ஓ.. இவருதானா" என்றிழுத்தாள் குரலை.

அவ்வாரயிறுதிக்கு பின் இரண்டு நாள் கழித்து தண்ணீரை வந்தவேகத்தில் மேசை மீது வைத்தவள் "மொக்கையா" இருக்கு என்றாள்.

ஏன்?

தண்ணீர் பிரச்சனையை பற்றியே உரையாடுகிறார்கள் என்றவளிடம் எத்தனை பக்கங்கங்கள் வாசித்தாய் எனக்கேட்டதற்கு தொண்டையிலிருந்தொரு ஓசையெழுப்பிச் சிரித்தாள். மாலை காஃபி நேரத்தில் கூறினேன் "இப்பொழுது வேண்டாம் ஓரளவு பழக்கம் ஏற்பட்டதும் தண்ணீரை வாசித்துப்பார்". தலையை மேலும் கீழும் அசைத்து ம்ம் என்றொலித்தாள்.

நேற்று தலைவலி என்று புலம்பியவளிடம் அடுத்த இருக்கை நண்பர் இரவு திறன்பேசி பார்ப்பதை குறைக்க அறிவுருத்தினார். அவள் "இன்னைக்கு போய் இவரு குடுத்த புத்தகத்த படிக்கணும், தன்னால தூக்கம் வந்துரும்" என்றாள்.

வியாழன், 15 ஜூன், 2017

செவ்வாய், 13 ஜூன், 2017

காகித மனிதர்கள்

புதினங்களை வாழ்கையை தோண்டிப்பார்க்கும் மண்வெட்டி எனலாம். அதேபோல் மனிதர்களுடனான உரையாடல்கள் கலைந்துகிடக்கும் வாசிப்பின் பக்கங்களை அடுக்கிவைக்கும் அலமாரியாகக் கொள்ளலாமா?

"காகித மனிதர்கள்" பிரபஞ்சன் எழுத்தாக்கத்தில் வாசித்த முதல் புதினம், கதை. பல்கலைக்கழகங்களில் நடைபெறும் அரசியல் ஊழல்களையும் பெண்களை சீரழிக்கும் ஆசிரியர்களையும் பற்றிய கதையாடல். இதை வாசித்து மூன்று வருடங்களிருக்கும். மறக்கவியலாத மனித உருவங்களைப்பற்றியதும் அண்ணா நூலகம் செல்ல ஆரம்பித்த நாட்களில் வாசித்ததிலும் முக்கியமான புதினங்களில் இதுவுமொன்று, அதனாலேயே அலுவலக நண்பர் ஒருவரோடு உரையாடிய ("இத்தனை வருட அனுபவமிருந்தும் ஏன் ஒரு பட்டப்படிப்பை கற்காமல் திரிகிறாய், பதவி உயர்வுக்கு அது தேவையென யாருமே உன்னிடம் இதுவரை கூறியதில்லையா." "யாராவது கூறியும் கூறாமலும் அதைப்பற்றிய எண்ணங்கள் தீவிரமடையும் பொழுது மட்டும் இணையத்தில் சில பல்கலையின் பக்கங்களை படித்துவிட்டு கைவிடுவது வழக்கமாகிவிட்டது."  "எனக்குத்தெரிந்த ஆளொருவர் இருக்கிறார் தேர்வு நாளன்று சென்று திரும்பினால் போதும் மற்றவை அவரது கைகளில் (பணமும் பரீட்சைத்தாளும்), மற்றொரு நண்பரிடம் "நாம பணங்குடுக்க போல பொண்ணுங்கல்லாம் படு உசாரு" என்றார்) பின் அக்கதையின் பக்கங்கள் எழுத்துக்கள் அல்லாத காட்சி உருவங்களாக வந்து போயின.

புதினம் வெளிவந்தது எண்பதுகளில் என்று நினைக்கிறேன். காலமும் கல்வியும் நம்மை எந்த அளவீட்டில் மாற்றியிருக்கின்றன என்ற கேள்வி எழுகிறது, இன்றைய உண்மை நிலை என்னவாக இருக்குமோ (ஒரு மனிதனின் உரையாடலில் முடிவுக்கு வரவியலாதல்லவா, அது அவரின் புனைவுப் பேச்சாகக்கூட இருக்கலாம்)இப்படித்தான் இருக்குமென்றால் யாரை குறை கூறுவது.

படைப்பாக்கத்தில் எதிர்குரல்

"Piss Christ" என்றொரு புகைப்படம் 1987-ல் "சமகால கலைக்கான தென்கிழக்கு மையம்"வழங்கிய "மெய்நிகர் கலை" விருதினை ஓவியரும் புகைப்படக்கலைஞருமான ஆன்ட்ரஸ் செரனோ என்ற அமெரிக்கருக்கு வழங்கியிருக்கிறது.

இந்த புகைப்படத்திற்கான மூலப்பொருட்கள்தான் முக்கிய பங்கு வகிப்பவை, படத்திற்கான பெயரை வெளிப்படையாக வைத்து அதற்கான விளக்கத்தையும் முன்வைத்திருப்பது சிறப்பான எதிர்ப்புக்குரலாகவே கருதவேண்டும். தான் சார்ந்த சமயம் வணிக நோக்கில் சீரழிக்கப்பட்டதை விமர்சிக்கவே இப்படிச்செய்ததாக கூறியிருக்கிறார்.

கண்ணாடிக்குடுவையில் தனது மூத்திரத்தை நிரப்பியவர், அதனுள் இயேசுவை அரைந்த சிறிய சிலுவை ஒன்றை மூழ்கடிக்கச்செய்து படமெடுத்திருக்கிறார். விளக்கமோ சரியான தலைப்போ இல்லாமல் போயிருந்தால் தங்கமாக தகதகக்கும் கிறிஸ்துவாக மாறியிருக்க வாய்ப்புண்டு.