சனி, 23 மே, 2020

கோபுரம் - விமலாதித்த மாமல்லன்

குருட்டு ஓவியனைப் பற்றிய சிறுகதை, வாசித்து முடித்ததும் யதார்த்தம் தொலைந்த கதையாகப்பட்டது ஆமாம் யதார்த்தத்தில் என்ன இருக்கிறது என கதையை உள்ளுக்குள் ஓட விட்டால், இதுவொரு கலைத் திருட்டு பற்றியதான கதையோ என்றும் கலை மதிப்பு என்ற கோணத்திலுமான கதையாகவும் புரிந்துகொண்ட பின். 

கண்களற்ற அவனின் கைகள் செய்யும் வித்தை ஆழ்மனத்தின் துடிப்பாக அங்கே மாயம் நிகழ வழி ஏற்படுகிறது, அந்த சிற்றூருக்கு இவன் செல்வதும் அங்குள்ள கோவில் கோபுரத்தின் எதிர்கால நிகழ்வை சித்திரமாக்கி அதற்காக அடி உதை வாங்கும் எளிய கலைஞன், இங்கு எளிய என்ற சொல்லை பயன்படுத்தவே கூச்சமாக உள்ளது, அவனது உருவகத்தை எழுதியிருக்கும் விதம் எளிமைக்கு எவ்விதத்திலும் சமமானதில்லை, மாறாக அதனினும் கீழ்மையானது. ஆனால் இவனது உள்ளம் கலையைத் தவிர தன் ஆழ்மனம் தவிர்த்த எதையும் துச்சமாக எண்ணுபவையானதா, வரைந்த அவனது கரிக்கோடுகளின் மீது வீசியெறியப்படும் காசுகளை தேவையற்றவையாகவே எண்ணி விலகிப்போகிறான், மக்களிடம் கலை பற்றிய எண்ணவோட்டம் கிஞ்சித்தும் இல்லாதது போலவே இவனுக்கும் அவர்களின் மதிப்பான பொருட்கள் மீது பற்றில்லை.

பிளவுபட்ட கோபுரத்தை வரைந்ததும் அதை அழித்துச் சென்ற கால்களிலிருந்து அவனது கரித்துண்டின் சாயம் விலக மறுக்கிறது, கதைக்குள் இதுவொரு படிமமாக பலமானதாக ஒட்டிக் கொள்கிறது, மக்கள் அவனையும் அவனது கலையையும் சிந்தனையையும் புறந்தள்ள எத்தனித்தாலும் அது விலகிவிடுவதில்லை அவர்களின் மனத்திலிருந்து, கதை முடிக்கப்படும் இடமும் இதைத் தெளிவாக நிகழ்த்துகிறது.

கோபுரத்தில் மாற்றலுக்குள்ளான சிற்பமொன்று வெளிநாட்டில்  கோட்டோவியமாகி ஏராளமான விலைக்கு விற்பனையாகிறது, இந்த ஓவியம் உருவானது எதன் விளைவு என எண்ணினால், கோபுரம் தரையில் ஓவியமாக விரிந்தபோது அதனை தங்களது ஒளிப்படக் கருவியில் நகலெடுத்த வெளிநாட்டுப் பயணிகள் முன் நிற்கிறார்கள். இந்த இடத்தில் கலைத் திருட்டிற்கான சாத்தியமிருக்குமோ எனத் தோன்றுகிறது. இருந்தும் கலைஞனை காப்பாற்றும் இடத்தில் இவர்களின் கெஞ்சலும் உடல் மொழியும் மேற்சொன்ன திருட்டு விளைவை மறுத்தாலும் அது நிகழ வேறுபல வழிகள் இருப்பதாகத்தான் புலப்படுகிறது. 

இந்த கதையின் கூறுகளை யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடிய போது, எம்.எஃப். உசேனை மதவாதிகள் துரத்தியதை அடியொற்றி எழுதியதாக ஒருவர்  குறித்துள்ளார்.

ஒரு ஓவியனைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ கதையின் போக்குக்குள் இயல்பாக நுழைந்துவிட்ட மனம் பார்வையற்றவன் எப்படி வரைகிறான் என்றும் உழன்றது, பார்வையுள்ளவனை விட இவர்கள் நுட்பமானவர்கள் என எண்ணும் பொழுது கதையின் மாயம் மெல்ல விலகப் பார்த்தாலும் விலகுவதில்லை.

திங்கள், 18 மே, 2020

ஒளியிலே தெரிவது - வாசிப்பனுபவம்

எந்த புத்தகக்காட்சியில் வாங்கியதென்று நினைவில் இல்லை, ஆனால் முதல் கதையான "சிநேகிதிகள்" கதையினை எப்பொழுதோ வாசித்தது போல உணர்வு, ஒருவேளை படித்துறையை காட்சிப் படுத்தும் வேறேதேனும் வண்ணதாசன் எழுதுயிருந்தாலும் இருக்கலாம். "கழுத்துக்கு மேல் முகம் கல்சிலையாகி விட்டதுபோலப் போய்க்கொண்டு இருக்கும்" சேதுவின் இடத்தில் என் தலையை பொருத்திப்பார்த்துக் கொண்டேன். சிநேகிதிகளால் நிரம்பிய கதை, சில நாட்கள் முன் இதுவரை சிரிக்காத முகத்தைப் பார்த்துச் சிரித்ததையும் சிரிக்காமல் கல்லாகிச் சென்றதையும் மனதில் ஓட்டியது.

"இமயமலையும் அரபிக்கடலும்" வாசிக்கத் தொடங்குமுன் தலைப்பை கண்டுகொள்ளாமல் கதைக்குள் தஞ்சமடைவது இயல்பு, பின் முதல் வார்த்தையோ ஏதேனும் காட்சி ஏற்படுத்தும் சிறு சலனமோ பக்கத்தை புரட்டி தலைப்பை அண்ணாந்து பார்க்கச் சொல்லும், இந்நிகழ்வு சிறுகதை வாசிப்பின் பொழுதில் மட்டுமே வெளிப்படும். சோதனைக்குட்பட்டது. "லெக்கு" என்ற வார்த்தையைக் கண்டதுமே ஓர் பேருணர்வு, தன் ஆழ்மனத்தில் காணாமல் கசங்கிக் கிடக்கும் காகித இடுக்குகளில் சிக்கிய ஓர் சொல், இன்று இக்கதையின் வழி தன்னை விடுவித்து கும்மாளமிட்டு குதூகலிக்கிறது. அச்சொல்லை அப்படியே கடந்துவிட விருப்பமின்றி மனைவியிடம் ஓரிரு வரிகள் புலம்பிவிட்டு புத்தகத்துக்குள் வந்தால் மனதுக்குள் பல்வேறு உரையாடல்கள் அத்தனையும் "லெக்கு"வை மையமாக வைத்து நிகழ்பவை. இரண்டு நாளுக்குப் பிறகே கையிலெடுக்கிறேன். நடைபயணத்தின் வழியில் தங்கத்திற்கு ஏற்படும் எண்ணவோட்டங்கள் அவளின் வேலை இடதத்திற்கான லெக்கை (திசையை) மறக்கடிக்கின்றன, இறுதியில் மிதிவண்டிக்காரர் தன் புழுங்கிய உடலை துடைத்துக்கொண்டே தன் பூவிழுந்த கண்ணால் அவளைக் கண்டதோடில்லாமல், அவர் செய்த சிரிப்பும் பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கியா என்ற கேள்வியும் அவளை உலுக்கிவிடுகின்றன. கதைக்கான எழுத்துகள் நிறைவடைந்த இடத்தில் அடைந்த சிறு குழப்பம், என்னடா கதையிது என்று உள்ளுக்குள் கதைத்துவிட்டு படுத்ததும், கதை அதன் போக்கில் ஒரு ஓட்டம் ஓடியதும் படக்கென கிளர்ந்தது ஓர் உணர்வு.

உறவுகளுக்குள் எத்தனை சாரங்கள், சுந்தரம் மாமாவுக்கும் அவளுக்குமான வெளிப்படையான பகிர்தலுக்கான பொழுதும், தந்தைக்கு மகளிடம் இருக்குமோர் விலகல் மனோபாவம், சரோ அத்தைக்கும் அம்மாவுக்குமுள்ள உறவால் வெளிப்படும் அளப்பரிய உணர்வு, சுந்தரம் மாமா கோடுகளை கிழித்து காகமாக்கிய பொழுதிலிருந்து பொங்கலிடும் வாசலில் கோலமிடும் வரையுள்ள கலையோடு அவருக்குள்ள உறவு, தந்தைக்கும் மாமாவுக்குமான நட்பு.
இத்தனைக்கும் மேலாக காகத்தினை கண்டதும் கா..கா..எனக் கத்தியவனுக்கும் அந்த ஓவியத்துக்குமான உறவே பேரின்பப் பெருவெள்ளம் அதில் மிதக்கும் கப்பல்களே உறவுகள்.

ஞாயிறு, 17 மே, 2020

சைகை

கடந்த ஒரு மாதமாக சைகை (Gesture) ஓவியங்கள் வரைய பயிற்சி எடுத்துக்கொண்டு வருகிறேன், இதற்கு முன்னாலும் இப்படி முயற்சித்து சோர்வு தட்டியதும் அதை விட்டு ஓடி ஒழிந்திருக்கிறேன். அஜந்தா ஓவியப் பள்ளியில் பயிலுகையிலும் கூட கடனே எனக் கோடுகளை வரைந்து பயிற்சி மாதிரியாக அனுப்பியிருக்கிறேன், அதனளவில் அது நிறைவைத் தந்தாலும் ஒரு கற்பனைச் சித்திரத்தை வரைய சைகையை வரைந்து பழகுதல் மிக முக்கியமாகப் படுகிறது.

ஒரு முறை ஊர் செல்வதற்காக எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தில் காத்திருந்த போது, தண்டவாளத்தின் மறுபுறம் அதாவது எனக்கு எதிர்புறம் பணியாளர் ஒருவர் அமர்ந்திருந்தார், அவரது நிலையான தோற்றம் வரையுதலுக்கான உந்துதலை அளித்தது என்றாலும் அவரது முகத்தைக் கடந்து கோடுகள் நீள மறுத்தன, அவரது முகம் தெளிவாகத் தெரியவில்லையானாலும் எனது எண்ணம் முழுவதும் அவரது முகத்தை வரைந்துவிடும் நோக்கத்திலேயே குவிந்திருந்தது. (அவர் அமர்ந்திருந்த காட்சியை இப்போது நினைவிலிருந்து பார்க்கிறேன் சற்று குனிந்து தன் செல்பேசியை உற்றுப் பார்க்கும் உருவம் அதோடு கையில் பணிக்கான கம்பியில்லா தொடர்புக் கருவி) சிறிது நேரத்தில் அவ்வெண்ணத்தைச் சிதறடிக்கும் வண்ணம் தண்டவாளத்தினை வண்டியொன்று ஆக்கிரமிப்பு செய்ததும் அதனை வரையத் தொடங்கினேன். ஏன் இப்படியென்றால் அந்த நாள் வரையில் முழு உடலையும் சிரத்தையோடு வரைந்து பார்த்திராத அல்லது காண விருப்பமில்லாத மனநிலை என்றோ கூறலாம். இது நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்கும்.





ஓர் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாக மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்காவில் ஓவியக் கண்காட்சி திறந்தவெளியில் நடைபெற்றது, அதற்கு முந்தைய வருடங்களில் நிகழ்ந்ததா எனத் தெரியவில்லை ஆனால் அந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நிகழவில்லை. நான் சென்ற அந்த இரண்டில் முதல் ஆண்டில் ஓவியர் ஜோதி நீர்வண்ணத்தில் எல்லோர் முன்னாலும் வரைந்து காண்பித்தார், அதுவொரு நிலக்காட்சி பசுமையான நிலவெளியின் நடுவே ஒத்தையடிப்பாதையில் பெண்ணொருத்தி சிவப்புச் சேலையில் தன் வீடு நோக்கிச் செல்கிறாள், ஓவியத்தில் தூரமாக வீடும் இருந்ததாக ஞாபகம். அந்தப் பெண்ணை வரைகையில் அவர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை, ஒரு சிறு வட்டம், அதிலிருந்து கீழ் நோக்கி வளைவாக எதிரெதிர் திசையில் சீராக ஒன்றையொன்று இடையில் மோதிப் பிரியும் இரு கோடுகள் பின் வண்ணமிடுகையில் அதை அவளாக மாற்றிவிட்டார், விந்தை. இல்லையென்றால் இப்போது நினைவில் வருமா.

இன்று சைகை கோடுகளை வரைந்து கொண்டிருந்த பொழுதில் அவரின் கோடுகள் நிழலாடியது.





வியாழன், 14 மே, 2020

சங்கச் சித்திரங்கள் - வாசிப்பனுபவம்

வெகுநாட்களாகவே சங்க இலக்கியங்களை அதன் சுவையறிந்து வாசிப்பின்பம் அடைய வேண்டுமென்ற எண்ணமிருந்தது, நேரடியாகப் பொருள் புரிந்து விளங்கிக் கொள்வதைக் காட்டிலும் ஓர் அனுபவத்தின் வழி கவிதையின் இன்பத்தை அடைவது பேரின்பம். தயக்கத்துடனே "சங்கச் சித்திரங்கள்" புத்தகத்தை கையிலெடுத்தேன், மாலைப்பொழுதின் தாபத்தை ஓர் அழகான காலையில் வாசிக்கையில் தொடர்ந்து வாசிக்கும் உந்துதலை அளித்தது.

முதல் நான்கு கவிதைகளை வீட்டின் அறையிலமர்ந்து வாசித்தேன் சொல்களுக்கான விளக்கங்களை அறிவதும் புரிந்துகொள்வதுமாக வாசிப்பினிடையே சோர்வும் வந்து கதவைத் தட்டியது, நேற்று மச்சிப்படியின் அருகே நின்ற பொழுதில் உணர்ந்த குளிர்வு வாசிப்புக்கான இடமல்லவா இது என உணர்த்தியது, எப்போதும் உடற்பயிற்சிக்காக மச்சிக்கு வரும்போது உடன் தூவலும்(பேனா) ஓவியத்துக்கான ஏட்டையும் எடுத்து வருவதுண்டு, இன்று அதற்கு மாற்றாக சங்கச் சித்தரங்கள் கொண்டு வந்தேன். இருபது நிமிட கை கால் உதறலுக்குப் பின் வாசிப்பிற்காக படியில் அமர்ந்தேன். 

தென்னைமரம் போன்ற ஆனால் அதுவல்லாத பூக்கவும் காய்க்கவும் பார்த்திராத மரம் வரிசையாக நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு பின்னுள்ள ஓர் நிறுவனத்தின் சுற்றுச்சுவரருகே நிற்கிறது, காற்றில் அதன் கிளைகள் அசைவதால் கொஞ்சம் அனல் மறந்து அமரலாம், கனடாவின் அல்கான்க் காட்டினை பற்றி வாசிக்கும் போது சரசரவென்ற ஓசை கேட்டு மரத்தை நோக்கினேன், அணிலொன்று ஓலைகளுக்கிடையை நகர்ந்து வந்து நுனியில் நின்றுகொண்டு மச்சியை பார்த்துக்கொண்டே காலை உதறியது தாவுவதற்காக தவிப்பது போலத் தோன்றியது, என்னை அதுவரை கவனிக்காதது, சுற்றும் முற்றும் தலை திருப்பிய போது என்னைக் கண்டுகொண்டது "அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்" என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தோம்.
சில நாள் முன் கண்ட காணொளியில் அணிலொன்று சுவரிலிருந்து தாவி ஒருவரின் தோள் மீது பரவி அமரும் காட்சி நினைவில் வந்ததும் சில நொடி கழித்து மெல்ல கையை உயர்த்தி அழைப்பது போல் பாவனை செய்யும் முன் திசை திரும்பிச் சென்றது.




புதன், 13 மே, 2020

கதைகள் உருவாக்கும் பாதை

மூத்தவள் (ஜெபரத்திகா) நடக்க ஆரம்பிக்கும் முன்னால் நெஞ்சின் மீது படுத்துக்கொண்டு அணில் போல என் கண்களை அவதானிப்பாள், சிரித்தால் அவள் வெடித்துச் சிரிப்பாள். கி.ரா-வின் தாத்தா சொன்ன கதைகள் (தலைப்பு சரியாக நினைவில் இல்லை அதோடு இப்புத்தகம் இப்போது யாரிடம் உள்ளது என்றும் நினைவில்லை) என்ற புத்தகத்தில் மொச்சைக் கொட்டையின் வயிறு வெடிப்பது போல் ஒரு கதையின் காட்சி வரும், அதைச் சொல்லி "ட்டமார்" னு வெடிச்சிட்டுன்னு சொன்னால், உரத்தச் சிரிப்பொலி கேட்கும், பொக்கை வாய் சிரிப்பு.

வேலை முடித்து வீடடைய பத்தரைக்கு மேல் ஆகிவிடுமென்பதால், அப்போதெல்லாம் பெரும்பாலான நாட்கள் உறங்கிவிடுவாள், பள்ளி செல்லும் நாட்களில் மட்டும். அதற்குமுன் அதாவது பள்ளியில் சேரும் முன், சில இரவுகள் பன்னிரண்டு மணிவரைக்கும் நீளும் கதையாடலும் விளையாட்டுமாக, இப்போது இரு மாதமாக தொடர்ந்து வீட்டிலிருந்து பணி செய்வதால் ஒன்பதரை மணிக்குப் பாய் விரித்துவிடுவது வழக்கமாகி விட்டது. 

ஒவ்வொரு நாளும் கதைப் பேச்சிற்கு பிறகே உறக்கம் என ஆகிவிட்டது, இளையவளும் (இயல்) இந்த கதைப் பொழுதில் இணைந்துவிட்டாள் வெகு இயல்பாக இவளின் பெயருக்கேற்ப, குழந்தைகளுக்கென வாங்கிய புத்தகங்கள் பெரும்பாலானவை அதன் முகமிழந்து, பின் கை கால் என அத்தனை அங்கங்களும் அற்றுப் போயின இவள்களின் சாகசத்தால், எஞ்சியது குன்றத்தூர் பாவேந்த பள்ளியின் சில புத்தகங்கள், அவை வண்ணமும் கிறுக்கலும் பெற்று கிழிதலிலும் தோற்கவில்லை. மிஞ்சியவை சில கதைப்படங்களும் பாடல்களும்.

சில கதைகளை நானே உருவாக்கி நேரத்திற்கேற்ப கதையை நீட்டி முழக்குவேன், சலிப்பு தட்டிவிடும் பொழுதில் முதல் காட்சியை நானும் அடுத்த காட்சியை அவளுமாக மாற்றி மாற்றி உருவாக்குவோம், இந்த மாதிரியான கதை உருவாக்கலுக்கு முன் ஓரிரு குட்டிக் கதைகளை அவளுக்கு பரிசளிக்க வேண்டும், (சமயத்தில் குட்டிக் கதைகளினூடே தூக்கம் அவளை அள்ளி அணைத்துக் கொள்ளும்). அதற்கு சிறுவர்களுக்கான எழுத்தாளர் விழியன் "வாட்சப் (புலனம்)" வழியே நாள் தோறும் பதிவிடும் கதைகளையும், பாவேந்தர் பள்ளியின் முதல்வரும் கதைசொல்லியுமான ஐயா வெற்றிச்செழியன் அவர்களின் கதையாடல் வலையொளித் (யூ ட்யூப்) தொடரில் சொல்லப்படும் கதைகளையும் வாசித்தும் கேட்டும் மகள்களிடம் கடத்துகிறேன்.

இரண்டு நாட்களாக ரத்திகா கேட்கிறாள் "அப்பா இந்த சிங்கங்கத மாட்டுக்கத மீன்கத அப்றோம் காக்கா கதல்லாம் எங்கப்பா படிச்ச" 

"புத்தகத்துல தாம்டே படிச்சேன்"

"எனக்கு காமியேன்"

"அது செல்லுல இருக்குமா, கடையெல்லாம் துறந்தொடனே புத்தகமா வாங்கித்தாரேன் சரியா, இதுல எழுத்தா இருக்கு பாரு, படமே இல்ல, ச்சீ" என்று செல்லை நீட்டியதும் சிரித்துக்கொண்டே ஓடினாள். 

அப்போ இவள்கள் செல்பேசியில் எதுவுமே பார்ப்பதில்லையா எனக் கேட்டால் அதுவும் உண்டு, அதற்கான அடாவடித்தனங்களுமுண்டு. 
@

எழுத்தாளர் விழியனின் கதைகளை தினமும் வாசிக்க, உங்கள் பெயர் மற்றும் ஊர் உடன் ஒரு வாட்சப் தகவலை "90940 09092" எண்ணுக்கு அனுப்புங்கள். கதைகள் கொட்டும்.

ஐயா வெற்றிச் செழியன் அவர்ளுடைய கதையாடல் தொகுப்பில் இதுவரை இருபத்தியாறு கதைகள் வந்துவிட்டது, அதற்காக சொடுக்குங்கள் https://www.youtube.com/playlist?list=PLh6l104YXvxLkFyFG3NECtykhyqX99DgU

கதைகள் ஒலிக்கட்டும்

சனி, 9 மே, 2020

நினைவுகளின் சுவட்டில்

அங்கங்கே வெங்கட் சாமிநாதன் அவர்களின் சில கட்டுரைகளையும், கலைவெளிப் பயணங்கள் எனும் கட்டுரைத் தொகுப்பை மட்டுமே வாசித்திருந்தாலும், அதிலிருந்த கருது பொருள் மற்றும் மாற்றுச் சிந்தனை  வியப்பிலாழ்த்தியது உண்மை. 

இந்த தன் வரலாற்று நூலை வாசிக்க இருமுறை கையிலெடுத்து ஒருவரி கூட வாசிக்காமல் அலமாரியில் வைத்துவிட்டு, சென்ற வாரம் மீண்டும் எடுத்தேன் சிற்பி தனபால் அவர்களின் தன்வரலாறு வாசிப்பிற்கு பிறகு, அதற்கும் இதற்கும் கலை சார்பு இருக்குமென்ற கருதுதலே இப்போது வாசிக்கத் தொடங்கியதன் காரணமென எண்ணத் தோன்றுகிறது.

முன்னும் பின்னுமாக காட்சி சித்தரிப்புகளைக் கொண்ட அவரின் வாழ்வு நாவலுக்குரிய தன்மையில் இருந்ததாகப்பட்டது, அதனாலோ என்னவோ தொடர்ந்து வாசிக்க அதன் போக்கில் உள்ளிழுத்துக் கொண்டது. சுதந்திரத்துக்கு முன் மற்றும் பின்னான காலகட்டத்தின் முக்கிய நிகழ்வுகளோடு ஊடோடி வாழ்ந்த இவ்வாளுமையின் ஓட்டம் சுவாரசியமும் வலியும் மிக்கதாகவுள்ளது. ஒரு காலகட்டத்தின் பயணங்கள் எத்தகையதாக இருந்தது என்பதை வாசிக்கையில் அக்காலத்திற்கான ஆவணமாகவும் இப்படைப்பை கொண்டாட முடியும்.