சாக்கடையும்
சகதியுமில்லாமல்
எழுதப்படும்
மழைக்கான கவிதை
இயல்பாக இருப்பதில்லை
சனி, 31 அக்டோபர், 2015
ஞாயிறு, 25 அக்டோபர், 2015
சோழமண்டலம் கலைஞர்கள் கிராமம்
சென்னைக்கு
வந்து நான்கு வருடங்களாகின்றது, சோழமண்டல கலைஞர்கள் கிராமம் என ஒன்று இருப்பதை
இரண்டு வருடத்திற்கு முன் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் இணையதளத்தில் ஒரு கட்டுரையை வாசித்தபோதுதான் அறிந்துகொண்டேன். அப்போதிருந்து போகவேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் போதெல்லாம்
கூகிள் வரைபடத்தில் அதன் இருப்பிடத்தையும் திருவான்மியூரிலிருந்து எப்படி போவதென்றும்
பார்த்துக்கொள்வேன். தாம்பரத்திலிருந்து எப்படி சென்றுவருவதென்று கடந்த இரண்டு வருடங்களாக
பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த காத்திருப்பிற்கும் எதிர்பார்ப்பிற்கும் உகந்த நாளாக
இன்று அமைந்துபோனதில் அகம் குளிர்ந்துபோனதென்னவோ உண்மை.
கலைஞர்கள்
கிராமம் என்றதும் வீடு போன்ற குடில்களில் அல்லது கட்டிடங்களில் உள்ளவர்கள் படம் வரைந்து
விற்பனைக்கு வைத்திருப்பார்கள். மேலும் அங்குள்ளவர்கள் எப்போதும் எதையேனும் வரைந்து
கொண்டே இருப்பார்கள் என்றே ஒரு கற்பனை பிம்பம் உருவானது. பின்னர் இணையத்தில் தகவல்
திரட்டும்போதுதான் பிரபல இந்திய ஓவியர்களின் வரைபடங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்
அருங்காட்சியகம் என தெரிந்து கொண்டேன்.
கடந்த
வாரம் உலக நவீன ஓவியங்களை பற்றி இணையத்தில் தேடிக்கொண்டிருக்கும் போது www.metmuseum.org என்ற இணையதளம் ஒன்று அகப்பட்டது.
அனைத்துலக நாடுகளின் வரலாற்றுக்கு முந்தய, ஆரம்ப மற்றும் சமகால ஓவியங்களை பற்றிய பல
அரிய தகவல்கள் கிடைக்கப்பெற்றன. முழுமையாக படிக்க முடியவில்லையென்றாலும், அது அவ்வளவு
எளிதான செயலல்ல என்பதை மறுக்க இயலாது. இந்தியாவை பற்றி வாசிக்கும் போது, ஓவியங்களைப்
பொறுத்தவரையில் ஒரு நீண்ட பாரம்பரியம் இல்லை என்று தெரிகிறது, பல படையெடுப்புகளை ஏற்றுக்கொண்டு
வெவ்வேறு விதமாக இடிபாடுகளுக்கிடையில் வளர்ச்சி அடைந்திருக்கிறது . இதை வெங்கட் சாமிநாதனின்
கலைவெளிப் பயணங்கள் கட்டுரை நூலில் தெளிவாக விளக்கியிருப்பார்.
ஒருவேளை
வாசிக்கப்படாமல் இருக்கும் சிந்துச்சமவெளி எழுத்துக்கள் போல, இன்னும் கண்டறியப்படாத
கற்சிற்பங்களும், பாறை ஓவியங்களும் எங்கேனும் புதைந்தோ அல்லது புதைக்கப்பட்டோ இருக்கலாம்.
இந்த
தளம் கண்டடந்த பின்னர்தான் சோழமண்டலம் செல்லவேண்டும் என்பதை உறுதி படுத்திக்கொண்டேன்,
சென்ற வாரமே சென்றிருக்க வேண்டியதுதான். அதற்கு முன் முகநூல் Chennai Weekend
Artists (https://www.facebook.com/groups/ChennaiWeekendArtists/) குழுவைச் சார்ந்த ஓவியர் முரளி (https://www.facebook.com/events/478430492339182/) வரும் வாரத்தில் அவரது கலைப்படைப்புகளை Game
Bigins என்ற பெயரில் கண்காட்சியாக வைக்கப்போவதாக அறிவிப்பு வந்தது, இவரோடு ஞாயிறன்று
மொத்த குழுவினரும் அங்கே கூடுவதாகவும் தகவல் கிடைத்தது. ஒரே கல்லில் மூன்று மாங்காய்
என்று நினைத்துக் கொண்டேன்.
காலை
11.30 க்குள் இடத்தை அடந்துவிட்டேன். அருங்காட்சியகத்தில் சமகால ஒவியங்களில் சிலவற்றை
பார்வையிட்டேன், இங்கே அதிக நேரம் செலவழிக்கவில்லை. Game Bigins பக்கம் படியேறிவிட்டேன்.
இரண்டே படிகள் தான் அதிகமில்லை.
தமிழகத்தில்
ஜல்லிக்கட்டு பற்றி அறியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். சீறீப்பாயும்
காளைகள்தான் இந்த கண்காட்சியின் நாயகர்கள், இவைகளை அடக்கும் மனிதர்கள் அற்புதமாக காட்சிப்படுத்தப்
பட்டுள்ளார்கள்.
அரங்கத்தின்
உள் வலதுபக்கம் சிறு சிறு சட்டகங்களில் சீறும் காளை பல கோணங்களில் வரையப்பட்டுள்ளது
மிகவும் கவரும் தன்மையில் இருந்தன. இப்போது இடது பக்கத்திலிருந்து தொடங்கினேன். கரிக்கோல்
மற்றும் நீர் வண்ணங்கள் கொண்டு வரையப்பட்ட படங்கள் அழகாக இருந்தாலும், அதற்கடுத்தாற்போல்
இருந்த Acrylic on Canvas வகை ஒவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இரண்டு மூன்று என எத்தனை முறை
வேண்டுமானாலும் மிகவும் சேர்த்துக் கொள்ளுங்கள், அத்தனை அழகும் தினவும் கூடிய ஓவியங்கள்.
திமிரும்
காளையின் முகம் அதன் இரு கொம்பிலும் அதை அடக்கும் வீரனின் கைகள் மற்றும் வலது தோள்
மட்டும் தெரியும் விதத்தில் வரைந்திருப்பார். முழுவதும் பார்த்து முடித்தபின்னர் மீண்டுமொருமுறை
இறுதியாக அதை மட்டும் பார்த்துவிட்டு இல்லை தொட்டுப்பார்த்துவிட்டு வந்தேன். அதற்கடுத்ததில்
தினவுகொண்ட வீரனின் தோள்கள் மீது காளையின் முகம் இடது பக்கம் திரும்பியதுபோலிருந்த
ஓவியமும் அட்டகாசமாக இருந்தது.
Mixed
Media என்ற பிரிவில் சில படங்கள் காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. காளைகள் போட்டிக்கு
முன்னர் வரிசையாக நிற்பது போன்றதொரு வரைபடம் ஊதா வண்ணத்தின் ஆதிக்கம் அதிகமிருந்து
ஆர்வத்தை அதிகரித்தது. காளையின் ஒற்றைக்கண் மட்டும் வரைந்திருந்தது திடமான கவிதை. இந்த
வகையிலிருந்த மற்ற படங்களும் மிகச்சிறப்பாக வரையப்பட்டிருந்தது. மனிதர் அதிகமாக உழைத்திருக்கிறார்.
மரத்தின்
கிளைகள் மீது சிறுவர்கள் ஏறி நிற்பதும், அமர்ந்திருப்பதுமாக உள்ள ஓவியம் சில பசுமையான
பழைய நினைவுகளை கிளரிவிட்டது.
காளையை
அடக்குவது போன்ற கரிக்கோல் வரைபடங்கள் மிக அருமையான வடிவமைப்பு. காளைகள் துள்ளி குதிக்கும்
போது காணும் திமிலை பார்த்துக்கொண்டே இருக்கலம்.
இறுதியாக
எனது பெயரையும் அந்த குறிப்பேட்டில் எழுதிவைத்துவிட்டு வெளியில் வந்தேன். குழுவினர்
அவர்களது காகிதங்களுக்கும் உயிர் கொடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். எனக்கு ஒருவரின்
ஓவியத்தை பார்த்தாலும் அது தொடக்கம் முதல் இறுதிவரை அவரது கோட்டின் அழுத்தங்களை பார்த்துவிட
வேண்டுமென்று நினைத்தேன். அப்படி ஒருவர் சிக்கினார். பார்த்துக்கொண்டே இருந்தேன் படம்
பிடிக்க மறந்துவிட்டேன். அதனால் அவர் வரைந்த அந்த கற்சிற்பத்தின் ஒளிப்படத்தை இணைத்துள்ளேன்.
Pastel
வகை ஓவியங்கள் வரைவதை முதல் முறையாக நேரில் பார்த்தேன், அவரின் பெயர் சங்கர் என்றறிந்தேன்.
அவரது காகிதமும் விரல்களும் வண்ணமாகி எழில் பெற்றதை அடிக்கடி அருகில் சென்று பார்த்துக்கொண்டேன்.
இடையிடையே
மற்ற அன்பர்களை நோட்டமிட்டுக் கொண்டே இருந்தேன். நீர் வண்ணக்கலவையில் ஒரு நண்பர் கிராமத்தின்
உள்பக்க பார்வையில் வரைந்திருந்த முகப்புத்தோற்றம் பச்சை வண்ணச்சிதறல்களில் மிளிர்ந்தது.
இதே வகையில் இன்னும் இரண்டுபேர் வரைந்திருந்த ஓவியம் மிகச்சிறப்பாக இருந்தது. அதிலொருவர்
ஊதா வண்ணங்களை உபயோகித்து முற்றிலும் வேறுபட்டதொரு சாயலை உருவாக்கியிருந்தார்.
அத்தனை
பேரும் அவரவர் பங்களிப்பை கொடுத்து, இறுதியில் அதை விமர்சித்துக் கொள்கிறார்கள். மிக
அழகான குழு. என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை என்றாலும் அவர்கள் எனக்கு அறிமுகமானதில்
மிக மகிழ்ச்சியுடனே அங்கிருந்து கிளம்பினேன்.
நீங்களும் சென்று பார்த்து வாருங்கள் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
சனி, 24 அக்டோபர், 2015
ட்ராயிங் வெளாடலாமா
வந்ததும்
“மாமா ட்ராயிங் வெளாடலாமா” ன்னான், அவன் வரைவதென்பதை விளையாட்டாகவே கருதி வருகிறான்.
வெளியிலிருந்தால் திறன்பேசியில் வரைவதும், வீட்டிலிருந்தால் கரிக்கோல்
மற்றும் வெள்ளைக் காகிதம் கொண்டும் அமர்ந்துவிடுவான். நெடுநாள் கழித்து இன்று வீட்டுக்கு
வேறொரு
நோக்கில் வந்தவன் அப்படிக் கேட்டான். கரிக்கோலும் காகிதமும் கொடுத்து வரையச் இல்லை விளையாடச் சொன்னேன்.
நோக்கில் வந்தவன் அப்படிக் கேட்டான். கரிக்கோலும் காகிதமும் கொடுத்து வரையச் இல்லை விளையாடச் சொன்னேன்.
நடு
அறையில் தொலைக்காட்சியின் முன் சென்று அமர்ந்து கொண்டு வரையத்தொடங்கினான். எனது வேலையை
முடித்துவிட்டு அறையில் வந்தமர்ந்து அருகில் அழைத்துக்கொண்டேன். காகிதத்தை பார்த்தபோது
அதில் ஒரு வீடு உருவாகியிருந்தது.
சனி, 17 அக்டோபர், 2015
மாலைப்பொழுதின் நிறம் - சிறுகதை
கவிதைத் தொகுப்பின் மூன்றாவது கவிதையை வாசிக்கும் போது புத்தகம் மெல்லிய நடுக்கத்திலிருந்தது கைகளின் உதவியோடு. இதேபோலத்தான் முகநூலின் பதிவுகளை வாசித்தும் வாசிக்காமலும் கடந்து போகும் போது ஒரு படபடப்பு ஏற்படும். ஏன் ஏற்படுகிறது, வாசிப்பு என்பது இல்லாமல் நேரத்தை விரயமாக்கிக்கொண்டு நகர்ந்து போவதனால். கவிதை வாசிக்கப்படுகிறதே பிறகு ஏன் நடுக்கம்? கவிதை என்பது மனஓட்டங்களால் கட்டி இறுக்கப்பட்ட எதுவோ ஒன்று, எதுவிமில்லாமல் இருப்பவனிடம் வெயிலை முற்றிலும் இழந்துவிட்ட மாலைப்பொழுதின் நிறம் ஏற்படுத்தும் படபடப்பு. இனி இப்படி இருப்பது தவிர்க்கமுடியாத சிலவற்றை ஏற்கும் சூழலை உருவாக்குமென்ற எண்ணம் எழுந்ததால். வெளியே கிளம்பத் தயாரானேன்.
யாரும் வீட்டில் இல்லை, அவள் இருந்திருந்தால் எதையாவது கேட்டுக் கொண்டேயிருப்பாள். இல்லாமலிருக்கும் போதும் கேட்பாள் அலைபேசி வழியாக “ நான் இல்லன்னொண்ணே சந்தோசமா யிருக்கியளோ “. எப்போதும் இது தவறாமல் ஒலிக்கும். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே வந்தேன். சிமெண்ட் தரையெங்கும் மணல் வழக்கத்திற்கு அதிகமாகவே சேர்ந்திருந்தது. இதற்கும் அவள் இல்லாததற்கும் நிச்சயம் தொடர்பு உண்டு.
தெருவில் இறங்கி நடக்கும் போது மேற்கே திரும்பிப் பார்த்தால், வானம் கொஞ்சம் செம்பழுப்பு பூசிக்கொண்டிருக்கும். ஏதாவதொரு மிருகத்தின் சாயல் தெரியும் பெரும்பாலும் குதிரை, இன்று வாயைப் பிளக்கும் நாய் போன்றதொரு உருவம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை எது என்று. மழை பெய்தால் சிறு சிறு குளங்களில் வானம் அழகு காட்டும். இன்று மழையில்லை வெறும் பள்ளங்கள். வெறுமை அல்லது தெருவின் உடற்புண். தார் கொண்டு அழகு பூசாத முகம் என்று கூட சொல்லலாம். தேசப்பிதாவின் பெயர் கொண்டதாலோ என்னவோ தார் பூசிவிட அலுவலர்களும் அரசியல்வாதிகளும் பெருத்த யோசனையில் இருப்பது போலவே தெரிகிறது. பெயரை மாற்றுவதற்கு ஒரு மனுவைக் கொடுத்துவிடலாம் என்று நினைக்கிறேன். சாத்தியமா எனத் தெரியவில்லை. தார் பூசினால் மழைக்காலத்தில் சாலையெங்கும் ஜனநாயகம் பல்லிளிக்கும் என்பது மட்டும் தெரியும்.
எனக்குத் தெரியும் அவன் கடை வாசலில் இருப்பான் என்று, இருந்தான். புன்முறுவல் செய்தேன். எப்பொழுதும் தலையாட்டிச் சிரிப்பான், இன்று பார்க்காததுபோல் பார்த்து புன்முறுவல்தான் செய்தான். சிரிப்பை எதிர்பார்க்கவில்லைதான், ஆனால் அவனின் மாற்றத்திற்கு சமாதானம் கொள்ளுமளவு காரணமுண்டு. இந்த மாதம் முடிதிருத்த வேறு கடைக்குச் சென்றேன். எல்லாம் ஒன்றுதான் இவன் கத்தியில் கவனம் இல்லாதவன், இன்னொருவனுக்கு சீப்பில். கத்திக்கு சீப்பு தேவலை என்பது என் எண்ணம். மேலும் சில நேர்மையான காரணமும் உண்டு.
எல்லாமே கிடைக்கும் இவரது கடையில் நான் கேட்பதைத் தவிர, அதனால் பால் மட்டும் வாங்கச் செல்வதுண்டு. விரல்கள் இல்லாத கைகளின் உதவியோடு பாலை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து தருவார். சக்கரை வியாதிக்காரர் என நினைத்துக் கொள்வேன். இப்போது கால்களிலும் கட்டு போட்டிருக்கிறார். “அங்க போயி எதும் வாங்காத“ என்பாள். அவளுக்குத் தெரியும் தனக்கும் வயது போகுமென்று, இருந்தாலும் சொல்வாள். மனிதன் இப்படித்தான் சிந்திப்பான். காரணத்தை ஆழ்ந்து யோசனை செய்யத் தெரியாமல் புறத்தோற்றத்தில் மயங்குவான் இல்லையென்றால் பயப்படுவான். அது அவனைத் தற்காலிக வெற்றியில் களித்திருக்க உதவி செய்யுமேத் தவிர வேறொன்றுமில்லை என்ற பிரக்ஞை கிடையாது. இவளும் அப்படித்தான். இவரும் அப்படித்தான் பிறர் பற்றிய உணர்வற்றவர்கள். இந்த சமூகக் கட்டமைப்பே அப்படிப்பட்டதுதானே.
வீட்டுக்குள்ளிருக்கும் போது இருண்டது போல் காட்சியளித்த வானம், இப்போது சற்று வெளிச்சமாகத் தெரிகிறது. கண் இருட்டிற்கு மட்டுமல்ல வெளிச்சத்திற்கும் பழக்கப்பட வேண்டும் போலப் புரிகிறது.
கவலைப்படுவதற்கு வேண்டுமானால் தினமும் இருபது நிமிடம் செலவழித்துக்கொள் என்று எங்கேயோ வாசித்தது நினைவில் வரும்போது திடலை நெருங்கி இருந்தேன். மனதைத் தொலைப்பது எப்படி என்றொரு கேள்வி?. கேள்வியோடு அருகிலிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தேன், வெயிலும் அங்கே ஓய்வில் இருந்ததை உணர முடிந்தது. அரைமணி நேரம் தாங்காதா உனது பின்பக்கம் எனும் துணைக்கேள்வி வேறு.
தலைக்குமேல் கொடூரமான பழகிப்போனதொரு பெருத்த சத்தத்தோடு, உண்மையிலேயே விமானமொன்று பறக்கத்தான் செய்தது. மனதைத் தொலைக்கும் கேள்வியை அதில் ஏற்றி விட்டுவிட்டு பார்த்துக் கொண்டிருந்தேன், அதன் வேகத்தைப் பொருத்து அதன் அளவு குறைந்தது போலவே தன் போலியான நிறத்தை விடுத்து பொதுவான நிறத்தை பூசிக்கொண்டு துகள் அளவுக்கு சிறுத்தது. அதற்குமேல் இல்லாமல் போனது. அது தொலைந்து போனது என்றுதான் என்னால் சொல்லமுடியும்,
அருகில் அலோபதி, சித்தா என்று விவாதிக்கும் வயோதிகக் குரல்கள் இரண்டு புலனுக்கு எட்டியது. டாக்டருக்கு தொண்ணூத்தி ரெண்டு வயசு பத்மஸ்ரீ அவார்டு வாங்கியிருக்கார் என்று தொலைக்காட்சி விளம்பரம் போல் ஒருவர் பேச இன்னொருவர் கேட்டுக் கொண்டிருந்தார். மீண்டும் வானைப் பார்த்தேன், தொலைந்து விட்டதே என்று நினைக்கும் போது பின்பக்கம் சுட்டது எழுந்துவிட்டேன்.
http://malaigal.com/?p=7402
நன்றி
மலைகள்.காம்
வியாழன், 8 அக்டோபர், 2015
சுந்தர ராமசாமி - கற்றலின் வழி
ஒருகதையோ, கவிதையோ, கட்டுரையோ வாசித்தால் அதன் கருத்துகளை உள்வாங்கிக் கொள்ளுமளவிற்கு, அந்த எழுத்துக்களை வார்த்தைகளின் பயன்பாட்டை, அளவுகளை எளிதாக உள்வாங்க இன்னும் கற்றறியவில்லை. அது தவறு என்றும் சொல்லிவிட முடியாது தீவிர வாசிப்பின் இரண்டு வருடங்கள் வெகுவான எழுத்தாளர்களின் எழுத்துக்களை என்னிடம் அழைத்துவந்திருக்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்று அதிலிருந்து மற்றொன்று என இடைவிடாமல் தொடரும் பயணங்கள் எவரின் எழுத்தையும் முழுமையாக கற்றுணராமல் வைத்திருந்தாலும், எழுத்துகள் என்னிடம் என்ன பேச முயற்சி செய்கிறது என்பதை புரிந்து கொண்டு வாசிக்க முடிகிறது.
இறந்த காலம் பெற்ற உயிர் என்ற கட்டுரை நூல் சுந்தர ராமசாமி அவர்கள் எழுதியது. இவரின் புளியமரத்தின் கதை, ஜே.ஜே
சில குறிப்புகள் மற்றும் இந்த கட்டுரைத்
தொகுதியையும் வாசித்திருக்கிறேன். ஜே.ஜே வை வாசிக்கும் போது எழுத்தின் வேகத்திற்கு ஈடு
கொடுக்கமுடியாமல் கருத்துகளை புரிந்துகொள்ள சில இல்லை பல வரிகளை மீண்டும் மீண்டும்
வாசிக்கவேண்டியிருந்தது. விழுமியங்கள் நிறைந்து கிடக்கும் வரிகளின் ஓட்டம் சற்று
வேகமாகத்தானிருந்தது. ஒரே எழுத்தாளரின் மூன்று நூல்கள் வாசித்தது இவருடையது மட்டுமே, இது திட்டமிட்டு வாசித்ததுமில்லை கையில் கிடைத்ததை வாசித்தது. புளியமரத்தின் கதை
வாசிப்பதற்காக அண்ணா நூலகம் நோக்கி ஞாயிறு தோறும் ஒடியது நினைவில் வருகிறது.(கையில் கிடைத்தபின் ஓடிவர வைத்தது.) எதையெதையோ வாசிக்க வேண்டும் எல்லாமும் அறிய வேண்டுமென நினைத்தாலும். எல்லாமும் சாத்தியமாவதில்லை. அதுதான் உண்மை.
இவரது தமிழகத்தில் கல்வி
என்ற நூலை வாசிக்கவேண்டும்.
ஆர்ப்பாட்டமில்லாமல் சகோதரனாக
நண்பனாக
அரவணைத்துச் செல்லும்
இவரது எழுத்துக்கள் கற்றுக்கொடுப்பவை அளவீடுகள் அற்றது. இதைத்தவிர எதுவும் சொல்லத்தெரியவில்லை.
கற்றது கையளவு கல்லாதது உலகளவு.... பொய்யாக மாற்றம் காணமுடியாத உண்மை இது.
வியாழன், 1 அக்டோபர், 2015
விகடனுக்கு ஒரு திறந்த மடல்
ஜூனியர் விகடனில் பெரியோர்களே தாய்மார்களே என்ற தொடர் கட்டுரையை ப.திருமாவேலன் எழுதி வருகிறார். இது ஒலிப்பதிவாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றது, சில பதிவுகளை நண்பர்கள் குழு வழியே வாட்சப் பகிர்தல் மூலம் கேட்டிருக்கிறேன்.
இந்த வாரத்திற்கான புத்தகத்தில் தமிழர்களின் வரலாற்று தொன்மங்களை பற்றி பேசியிருக்கிறார். தமிழக வரலாற்று நூல்கள் மூலம் நாமறிந்த அல்லது அறிந்திருக்க வேண்டிய இலக்கிய மேற்கோள்களையும் கூடுதல் தகவலாக, மதுரை கீழடியில் தென்னந்தோப்பின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செங்கற்களாலான நம் முன்னோர்கள் வாழ்ந்த கட்டிடம் பற்றியும் எழுதியிருக்கிறார்.
தமிழ், தமிழினம் என்று பேசுபவரெல்லாம் குறிப்பிட்ட அரசியல் கட்சி அல்லது இயக்கம் சார்ந்தவன் என்ற எண்ணம் தமிழ் மக்களிடையே இருந்து வருவதிலும், மேலும் கீழடியில் கண்டடைந்த நம் தொன்மத்தைப் பற்றி தமிழக அரசு எந்த நிலைப்பாடுமற்று உறங்குவதைக் காண்பதிலும் அறச்சீற்றம் தெரிகிறது.
பல மாநிலங்களில் இந்தியும் ஆங்கிலமும் , ரோமன் எண்களும் இல்லா பேருந்துகளும் ரயில் நிலையங்களையும் கூறினார் அதில் மகராஷ்டிராவையும் சேர்த்திருக்கலாம்.
இப்படியொரு கட்டுரை வெகுஐனப் பத்திரிக்கையான விகடனில் வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனாலும் இதை வாசித்து முடித்ததும் விகடனின் டைம்பாஸ் என்ற இருட்டு மூத்திரச் சந்து நினைவில் வருகிறது. இப்படி என்போல் எண்ணுவோர் எத்தனையோ அறியேன்.
ஒருபக்கம் இதோபதேசங்கள் செய்துவிட்டு மறுபக்கம் வக்கிரபுத்தியைக் காட்டுவது வெறும் பணம் புரட்டும் பத்திரிக்கை வாதமாகத்தான் தெரிகிறது. தமிழ்சினிமா கதாநாயகன் போன்றவர்கள் நீங்கள். அது உண்மையும் கூட. நீங்கள் இத்தனைகாலம் எழுதியும் விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், கொசுக்கடியில் தூங்கும் தமிழனை சுகமாக சொரிந்து விடும் உங்கள் நரித் தந்திரம் நாங்கள் அறிவோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)