திங்கள், 28 செப்டம்பர், 2015

தொலைந்துவிட்டது என்பார்கள்

ஒரு அம்மா, சிறு பையன் ஒருவனை கையில் பிடித்துக்கொண்டு சாப்பிட காசு இல்லை ஏதாவது உதவி செய்யுங்கள் (என் ஊகத்தின் அடிப்படையில்) என்ற வார்த்தைகளை பேசிக்கொண்டே இருக்கும் போது, அவரது கை அனிச்சை செயல்போல வயிற்றையும் அந்த சிறுவனின் முகத்தையும் தடவித் தடவி முன் நிற்கும் இருவரையும் நோக்கி நீட்டுவதும் மடக்குவதும் தொடர்ந்தது. சற்று தொலைவிலிருந்து கவனித்துக் கொண்டே அவர்களை கடந்து போனேன். அநேகம்பேர் இப்படியான காட்சிகளை கண்டிருக்க வாய்ப்புண்டு. சிலர் நின்று காசு கொடுத்திருப்பீர்கள் இல்லை கையை உதரிவிட்டு நகர்ந்து போயிருப்பீர்கள்.

அப்போது நான் தரமணியிலிருக்கும் கானகம் பகுதியில் வசித்து வந்தேன். அடையார் புற்றுநோய் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கி நடந்து செல்வது வழக்கம். அப்போது அந்த வழியில் சிற்றூந்து கிடையாது என்பதை கூறிவிடுகிறேன். ஐஐடி வளாகத்தின் முகப்பை அடுத்து மூத்திர நாற்றமெடுக்கும் முக்குச்சுவரை  கடந்தால் மேற்சொன்னபடியான காட்சிபோல மூன்றுபேர்ஒரு பெண், சிறுவன் மற்றும் சிறுவனின் அப்பா போன்ற ஒரு ஆண் நின்றார்கள்.என்னை மறித்த அந்த ஆண் பிஸ்கட், ரொட்டி என்று வாயிலும் வயிற்றிலும் கைவைத்து காட்டிக் கூறினான். எனக்கு மொழி தெரியாது என்ற உணர்வை  ஏற்படுத்திவிட்டதில் அவன் கண் சோகத்தை அதிகமாக விவரிக்கத் தொடங்கியதை என்னால் உணர முடிந்தது. சந்தேகத்துடனே சட்டை பையிலிருந்த முப்பது ரூபாயை கொடுத்துவிட்டு எதுவும் பேசாமல் நகர்ந்துவிட்டேன்.

இரண்டு நாள் கழித்து அதே இடத்தில் வேறொரு குடும்பம் வழிமறித்தார்கள். வழிப்பறி செய்கிறார்கள் என்று இந்த இடத்தில் கூறவிரும்பவில்லை. அவர்களின் செய்கைக்கு பதில் செய்கையாக பையை காண்பித்து கையை விரித்துவிட்டு கடந்து போனேன். அடுத்தடுத்து இடைவிட்ட நாட்களில் வேறுவேறு குடும்பம் போன்ற ஒரு குழு இப்படி நிற்பது வாடிக்கையாக இருந்தது. இவர்கள் இப்படி நிற்பதற்கான விளைவுகளை ஏற்படுத்தியவர்கள் யாராக இருக்கும். அவர்களின் உறவுகளையோ, அரசையோ குறை கூறுமுன் அவர்களிடம் உழைப்பதற்கான அத்தனை கூறுகளும் இருப்பதை ஒத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது, அந்த சிறுவர்களைத் தவிர்த்து.

மற்றொரு நாள் டைடல் பார்க் நிறுத்தத்தில் இறங்கி திருவான்மியூர் நோக்கி நடந்து கொண்டிருந்தேன், கருப்பு கால்சராய் வெள்ளைச்சட்டையோடு தொப்பையையும் அணிந்துகொண்டு ஐந்தரையடி உயரத்தில் ஒரு ஆள் தன் இரண்டு கையையும் விரித்து என்னை மடக்கினார் நான் அவசரத்தில் இருந்ததால் அவரை கண்டுகொள்ளவில்லை ஆனாலும் விடாமல் மறுபடியும் பின்னல் வந்து முன்னால் மறித்தார். என்னோடு நடந்து கொண்டே  " பர்ஸ தொலச்சிட்டேன், தம்பிக்கு எந்த ஊரு, கொஞ்சம் உதவி பண்ணணும்" என்றார். நான் நின்றேன் "எந்த ஊர்" எனக் கேட்டதும் ஆலங்குளம் என்றார். 

ஆலங்குளம் என்றதும் சிலர் நினைவில் வந்தார்கள். அவரிடம் எதுவும் கேட்காமல் பார்த்துக்கொண்டே நின்றேன். "அக்கவுன்ட் நம்பர் குடுங்க திரும்ப அனுப்பி வைக்கிறேன்" என்றார். "அதெல்லாம் முடியாதுங்க" என்று கையை ஆட்டிவிட்டு நகரும் போது மீண்டும் மறித்தார். அந்த நேரத்தில் நூறு ரூபாயா இருக்க வேண்டும் சட்டைப் பையில், கொடுத்துவிட்டேன். "இன்னும் இருநூறு ரூபாய் குடுப்பா பஸ்ல போயிருவேன்" என்றதும் நான் நிற்கவேயில்லை வேகமாக நடக்க ஆரம்பித்தேன். கிடைத்தது போதுமென அவரும் வேறொருவரை தேடுவதுபோலத் தெரிந்தது. திரும்பிப் பார்த்துவிட்டு நடந்தேன்.

எனது கண்ணிலும் மனத்திலுமிருந்து நூறு ரூபாய் அகலவேயில்லை, பணம் மொத்தமும் தொலைந்த பின்னும் ஐநூறு கொடுத்து பேருந்தில் போகவேண்டுமென்று ஏன் நினைக்கிறான், ரயிலில் போனால் நூற்றி நாற்பெத்தெட்டு (சில வருடம் முன்) தான் ஆகும், பேருந்தை விட விரைவாகவும் சென்று விடலாம். மேலும் நான் ஊருக்கு போனால் பதிவு செய்யப்படாத ரயில் பயணம்தானமென்று யோசனையோடே நகர்ந்து கொண்டிருந்தேன்.

பின்னொரு நாள் இரவு வேலை முடித்து ஈக்காட்டுத்தாங்கல் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் போது ஒரு ஆள் வந்து "எக்ஸ்க்யூஸ்மி வேர் ஆர் யூ கோயிங் " என்றார். யோவ் தமிழ்ல பேசுயா என்பதுபோல் கொட்டாவியோடு அவரை பார்த்தேன். "எங்க போரிங்க சார்" என்றார். "தாம்பரம்" என்றதும், "ஊரப்பாக்கம் எப்டி போறது" எனக் கேட்டார். "கூடுவாஞ்சேரி பஸ்ல போங்க"ன்னேன்.

சிறிது நேரத்திற்குப்பின் தாழ்வான குரலில் "பர்ஸ தொலச்சிட்டேன்"னான். ஒரு அடி விலகி வந்து "இன்னும் சம்பளமே போடல, காலையிலே வந்து" என கையை நீட்டிவிட்டு கொஞ்சம் தொலைவில் நின்று கவனித்தேன். மற்றொருவரிடம் பேசத் துவங்கியிருந்தான்.

பேருந்தில் ஏறி விமான நிலையம் நெருங்கும்போது உள்ளுணர்வு அந்த உருவத்தை அடையாளப்படுத்தியது. வெகுநாட்களுக்கு முன்  திருவான்மியூரில் பார்த்த அதே உருவம்

முதலில் பேசப்பட்டவர்களைக் கூட ஒருவகையில் மன்னித்துவிடலாமென்றால், கடைசியாக வழிப்பறி செய்தவனையெல்லாம்??.


ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

கொல்லைக்கி போனியா குத்தைக்கெடுக்க போனியால

மகனுக்கு ஹிந்தி சொல்லிக்கொடுக்க ஏதேனும் செயலி (APPLICATION) இருக்குமா என அக்காவிடமிருந்து ஒரு கேள்வி. தேடிப்பார்க்கிறேன் எனக்கூறினேன். அவனுக்கு இப்போது ஐந்து வயது ஆங்கில வழிக் கல்வி பயில சென்று வருகிறான். மொழி எதற்காக கற்கிறோம் என்று அறியாத சிறு உள்ளம். இப்போதே மூன்றாவது மொழியை கற்பிக்கிறார்கள், இதை கற்பிப்பது எனக்கூறலாமா என்றே புரியவில்லை. நான் பள்ளியில் படித்தபோது (தமிழ் வழிக் கல்வி) இரண்டாம் வகுப்பில் ஏ.பி.சி.டி சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் அதன் தொடர்ச்சியாக மூன்றாம் வகுப்பிலிருந்து பாடங்கள் ஆரம்பிக்கும், எனக்கு நினைவேயில்லை என்ன படித்தேனென்று ஏ.பி.சி.டி யை தவிர்த்து. அந்த இரண்டாவது மொழியே கசப்பாகத்தானிருந்தது இன்றும் அப்படித்தான் இருக்கிறது.


ஒருநாள் மாலை வீட்டிற்கு வந்தவனிடம் படம் வரைவோமா என்று கேட்டதுமே சரியென்று கட்டிலிலிருந்து இறங்கிவிட்டான். நானும் பென்சில் வெள்ளைத்தாள் சகிதம் தரையில் அமர்ந்து விட்டேன். வீட்டின் மத்திய அறையில் இருக்கும் தொலைக்காட்சி