சனி, 24 செப்டம்பர், 2016

இலையின் இயக்கம்

ஓவியங்களுக்கான
கூறுகள் பற்றிய வாசிப்பின்
இறுதியில்
காற்றில் அலையும்
இலைகளைக் கண்டேன்
அதன் இயக்கத்தினை
வரைய இயலுமா என்பதற்கு
பதிலில்லை - ஆனால்
வரையவேண்டும்

வெள்ளி, 16 செப்டம்பர், 2016

ஆசிரியருக்கு ஒரு கடிதம்

மதிப்பிற்குரிய என் ஆசிரியருக்கு, என்னை மதித்து அன்றிரவு தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொண்டது மகிழ்வை அழித்தாலும் கோர்வையான கேள்விகள் தொடர்ந்து துரத்திக்கொண்டிருக்கிது. அதற்கான நன்றியோடும் கடமையோடும் என்னுள் கிடக்கும் பல கேள்விகளில் சிவற்றுக்கு உங்கள் மூலம் ஒரு தெளிவினை அடையும் முயற்சியாக இதை எழுதத் துவங்குகிறேன்.

கல்விக்கொள்கை பற்றி எண்ணும் பொழுது அது தவறானது என்ற முடிவில் நின்றுதான் எப்பொழுதும் சிந்தை செய்து வருகிறேன், அது நமக்கு கற்றுக்கொடுப்பது கூலி வாங்கும் தொழிலாளிகளை உருவாக்கத்தான் எனும் பொழுது அப்படித்தான் யோசனை செய்ய வேண்டியுள்ளது. காலத்திற்கேற்றவாறு உயர்கல்வியில் அரசு அதற்கேற்றாற்போல் இல்லை முதலாளி வர்க்கத்திற்கேற்றது போல மாற்றம் கண்டுகொள்கிறது.அதில் தப்பிப் பிழைத்தோர் சிலர். நீங்கள் கூறியது போல நம் கல்விக்கொள்கை மோசமானதுதான்.

மாணவர்கள் மற்றும் மாணவிகள் பள்ளியினுள் வரும் பொழுது அரசின், பெற்றோரின்  பிள்ளைகளாகவோ இல்லாமல் ஆசிரிய பெருமக்களின் மாணவர்களாக மட்டுமே இருக்க வேண்டும், அதற்கான சூழ்நிலையை அரசு ஏற்படுத்த தவறியிருக்கிறது என்பதை அறிவோம். இருந்தும் அவ்வப்போது பத்திரிக்கைகளில் இணையதளங்களில் வெளிவரும் அரசுப்பள்ளி ஆசிரிய முயற்சிகளை கவனித்தால், அதே போன்றதொரு நிகழ்வுகள் பிற பள்ளிகளில் இயலாத ஒன்றாக இருந்து வருகிறது என்ற கேள்வி எழுகிறது.

பாலியல் வன்முறை பற்றி பேசும் பொழுதில் நாம் வாழும் சூழ்நிலைகளை ஒப்பிட்டுப்பார்க்க வேண்டுமென நினைக்கிறேன். படிக்கும் பிள்ளைகள் தவறிழைக்கின்றன என்றால் அதற்கு அவன் மட்டுமே பொறுப்பா என்றால் அதற்கான பதில் அதுவல்ல. சமூகமும் அது உருவாக்கும் சூழ்நிலைகளும் அவனை தவறுகளை நோக்கி உந்துகின்றது என்பது உண்மைதானே. குறிப்பாக ஊடகம் கைபேசி, தொலைக்காட்சி, திரைப்படமும் அதிலுள்ள பாடல் காட்சிகள், வரிகள், இணையம் என அளவற்ற தகவல்களை மாணவர்களுக்கு பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் கடத்துகின்றன. ஆனால் இவையெல்லாவற்றையும் தெரிந்துகொள்பவர்களுக்கு அதில் நல்லவை தீயவை பற்றி புரிந்துகொள்ள எவ்விதம் பயிற்சியளிக்கிறோம். இங்கொரு கேள்வி எழுகிறது.

இதுபோல் ஓரிரு கேள்விகளில் தேங்கி நிற்கிறோம். அதற்கான பதிலுரைகளை உங்களிடமிருந்தும் ஏனைய ஆசிரியர்களிடமிருந்தும் பெற விரும்புகிறேன்.

1) மாணவர்கள் படிப்பில் கவனமில்லாமல் ரவுடிசம் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதாக கவலை தெரிவித்தீர்கள், இவ்வெண்ணத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க பள்ளியளவில் எவ்வித முயற்சிகள் செய்யப்படுகின்றன? (அடிப்பதும் கண்டிப்பதும் தீர்வாகாது என்பதை உணர்வேன்)

2) பாலியல் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை எண்ணி வருத்தம் கொண்டீர்கள், அவர்களை இச்செயலிலிருந்து  வெளிக்கொண்டுவர பாலியல் கல்வி மிக அவசியம் எனக்கருதுகிறேன் ஆனால் அரசு அதை விடுத்து இலவசங்களால் மனதை பாழாக்குகிறது. இருந்தும் பள்ளியளவில் இதற்காக செய்யவேண்டியதென்ன?

3) பாடத்திட்டத்தை தவிர்த்து வெளியுலகை மொழியை புரிந்துகொள்ள தகுந்த நூலக அமைப்பு நம் பள்ளியில் உள்ளதா இல்லையெனில் பொது நூலகத்தை பயன்படுத்த வாசிப்பதற்கான வாய்ப்புகளை பழக்கங்களை ஏற்படுத்திக் கொடுக்கிறோமா?

நாம் சரியான தலைமுறைகளை உருவாக்கினால் போதும் அரசியல் மக்களுக்கானதாக மாறும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளது. தலைமுறை உருவாக்குதலில் பெரும்பங்கு ஆசிரியர்களான உங்களுக்கே உண்டு என்பதால் உங்களிடமிருந்து பதிலுரை அறிய விரும்பும். மேலும் எங்களாலான முயற்சிகளை மேற்கொள்ள காத்திருக்கும் உங்கள் மாணவர்கள்.

வியாழன், 8 செப்டம்பர், 2016

கதவு - சிறுகதை தொகுப்பு

நேற்றுதான் கி.ராவுக்கு விருது வழங்கும் விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிய உரையை கேட்டேன். கி.ராவின் படைப்பில் அவர் பேசிய கோபல்லபுரத்து மக்கள் புதினத்தை வாசித்திருக்கிறேன்.  இப்பொழுது கதவு சிறுகதை தொகுப்பு. பதிமூன்று சிறுகதைகள் உள்ளடக்கம். முதல் சிறுகதை கதவு, மனதிற்கு மிகநெருக்கமானதாக ஓர் உணர்வு. இதற்கு முன் வாசித்தது போன்ற நினைவெழுந்தது, எங்கள் வீட்டிலும் கதவுக்கும் எங்களுக்குமான உறவு அகக்கிளர்ச்சி நிறைந்தது, அதுவொரு காரணமாயிருக்கலாம். சீனிவாசனும் லட்சுமியும் தொலைத்தது போல நாங்களும் சிலவற்றை தொலைத்திருக்கிறோம்.

இரண்டாவது கதையில் புல்லை (மாடு). சீதனமாக கிடைத்த மாடு இறந்தபின் அயிரக்கா மனமுடைந்து கிடப்பதும், பக்கத்துவீட்டு முத்தையா வந்து திட்டித் தீர்த்து தொட்டண்ணனை அழைத்துக்கொண்டு கோவில்பட்டி போய் மருத்துவரை கூட்டிவர கிளம்புகிறார்கள் மருத்துவர் வர இயலாத சூழலில் ஊர்வந்த பொழுதில் புல்லை கண்மூடியிருந்தது. கூட்டு மாடு சேர்ந்து உழுதவனுக்கு வாக்கு தவறாமல் மூன்று நாள் பிறகு மாட்டிற்கு பதிலாக நுக்காலை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு அவனோடு போவதும் அதை அயிரக்கா பார்த்து முகம் புதைத்து கொள்வதுமாக கதை முற்றுகிறது.

மின்னல் கதை கிராமத்து பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை பற்றி எழுதியிருப்பது. ஒரு பெண்ணும் குழந்தையும் அந்த சூழலில் பொருந்தும் பொழுதும் விலகிப்போகும் போதும் பேருந்துக்குள் நிகழும் சூழல் மாற்றங்களை ஓவியம் போல் வரைந்திருப்பார்.

படித்ததில் பிடித்தது என்பதைவிட பாதிக்கும் சில கதைகள் இருக்கும் சாவு, மாயமான் மற்றும் கரண்டு அந்த வகையில் சேர்க்கலாம். சுமங்கலியின் கோலம் கணவனை இழந்தபின் பதினாறாம் பக்கம் நாடகம் போல நிகழ்ந்து கலைக்கப்படும் நெஞ்சறுக்கும் பொழுதை சாவில் சொல்லியது போலவே. அரசு கொடுக்கும் உதவித்தொகையை நம்பி கிணறு வெட்டி விவசாயத்தில் தோல்வியுற்று சொத்தை இழந்து ஊர்விட்டு ஊர் பிழைக்கப்போகும் குடும்பத்தை பற்றியது மாயமான் கதை.

பலாப்பழம் கதையில் வருவதுபோல் உண்மையில் நிகழுமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும், அதில் அனுபவமுண்டு என்பதால் அப்படி கூறமுடிகிறது. ஆமாம் மசக்கை பெண் கேட்பதை வாங்கிக் கொடுக்கவில்லையென்றால் பிறக்கும் குழந்தைக்கு சீழ் வடியுமா?!. பலாப்பழப் கதையில் வடிவதை சிரித்துக்கொண்டேதான் வாசித்தேன். கி.ரா பெரும்பாலும் சிரிக்க வைப்பவர் ஏனென்றால் அவர் எழுதுவது கிராமத்து வெள்ளந்தி உள்ளங்களை. பாலியல் கதைகளை தொகுத்து புத்தகம் எழுதியிருக்கிறார், வாசிக்கணும். நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது.

செவ்வாய், 6 செப்டம்பர், 2016

அதுபோதும்

செய்ய இயலாததை
உங்களால்
சொல்லாமல் இருக்க
முடியுமென்றால்
அதுபோதும்

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

சிதறிக்கிடக்கும் கதைகள்

கதைகள் அறிமுகம் கிடைக்க நேரம் காலம் இருக்கா என்ன? இருக்கலாம். அப்போது ஐந்து மணி இருக்கும் எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தினுள் நுழைந்தோம். நடைமேடை எண் நினைவில் இல்லை, ஆனால் கடந்த வாரம் சென்ற போது கச்சிகுடா விரைவுவண்டியை ஆறாவது நடைமேடையில் நிறுத்தியிருந்தார்கள். ஒருவேளை இதுவோ அல்லது வேறொரு மேடையாகக்கூட இருக்கலாம். இரண்டாயிரத்து ஏழாம் வருடம்.

வேலைக்காக சென்னையிலிருந்து சார்மினார் நோக்கி விரைய இருக்கிறோம். வண்டி கிளம்புவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன்தான் எங்களுக்கான இருக்கையை அடைந்தோம். பெட்டிகளை கீழே தள்ளிவிட்டு அமரும் பொழுதில் பாலா கையிலிருந்த புத்தகத்தை இருக்கையில் வைத்தான். கதவைத்திற காற்று வரட்டும். ஒரு ஆசாமி ஒருவன் மீசை மழித்த மேலுதட்டுச் சிரிப்போடு அட்டையில் காட்சியளித்தார். அறிமுகமில்லாத முகம் என்பதால் எழுத்தாளர் போல என்று நினைத்துக்கொண்டேன். அதிக புத்தக பரிச்சயமில்லா காலம். இராசராசனை பற்றி பேச ஆரம்பித்தான். பொன்னியின் செல்வன், அந்த பெயரையே பிரம்மிக்கத்தக்க வகையில் உச்சரித்து கதையை தொடர்ந்தான். நாங்கள் இல்லை, அவன் பேசுவதோ, புத்தகமோ, அல்லது எங்கள் உருவமோ ஒருவித திகிலை உருவாக்கியதுபோல் ஒரு பார்வை. ஓரக்கண்ணால் பார்த்தபோது எனக்குள் ரத்தநாளங்கள் முறுக்கிக்கொண்டன. அகக்குளிர்வு நிலை. எதிர்பாலல்லவா அப்படித்தானிருக்கும். அதற்கு பிறகு எத்தனையோ பயணங்கள், ஆனால் கானல் நீர் கண்டு காய்ந்துகிடக்கும் பாலைவனங்களே அவை.

காலையில் அவள் தனது சடைமாட்டியை குடும்பத்தோடு குனிந்தும் நிமிர்ந்தும் தேடும் பொழுது சிரிக்காமல் சிரித்தோம் எங்களுக்குள். வண்டி கிளம்பியபின் எந்த ஊர் என கீழிறங்கி எட்டிப்பார்த்தபோது கர்னூல் பெயர்ப்பலகை டாடா சொல்லியது. மழை வெறித்துக் கிடந்த காலையில். அவ்வப்போது நினைவுபடுத்திக் கொள்வோம். சிரிக்கவும் செய்வோம்.

மும்பை கர்ரீ ரோடு  தொடர்வண்டி நிலையத்திலிருந்து பத்லாபூர் செல்லும் மின்சார வண்டியில் சையன் தாண்டும் பொழுது தொடங்கினார். கணினியின் வன்பொருட்களை பழுது பார்த்துக்கொடுக்கும் அவனுக்கு ஒரு காலகட்டத்திற்கு பிறகு வேலையில்லாமல் போவதன் கதை. அதைத்தவிர்த்து வேறெதுவும் தெரியாத ஒருவனின் கதை எனவும் கொள்ளலாம். குண்டு வெடிப்பொன்றில் இறந்து போவதோடு அவன் முற்று பெறுகிறான். கதை முடிவதில்லை என்றே எண்ணுகிறேன். குண்டு வெடிப்பும் அதன் பல்வேறுபட்ட இழப்புகளும் அங்கங்கே கதைகளை சிதறடிக்கத்தான் செய்கின்றன.

கரிக்கோல் கோடுகள்

சனி, 3 செப்டம்பர், 2016

தூரிகையின் தாம்பத்யம்

கரு ஊதாவில்
துவங்கிய கோடு
எதற்காக என
எண்ணவிரும்பிய கேள்விகள்
பதில்கள் இல்லாது
சிதறிய வேளை
அது வண்ணங்களை
விரவிக்கொண்டிருந்தது
எதுவது
தூரிகையது!

@லலித் கலா மன்றம் சென்னை. ஓவியம் :- ஓவியர் விஸ்வம்