வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஜூலை, 2026

வாசிப்பின் இடையிடையே

சில ஆண்டுகளுக்கு முன்பு "பாகீரதியின் மதியம்" என்ற‌ புனைவு நூலை வாசிக்கும் பொழுதில் தான் ஓவியர் ஆதிமூலம் பற்றியும் அவரது காந்தி ஓவியங்கள், மிதக்கும் வண்ணங்கள் போன்ற படைப்புகளையும் பற்றி அறிந்து அவ்வோவியங்களைத் தேடுகையில் கோட்டோவியங்களில் காந்தியின் உருவங்களையும் ஆங்கிலேய இந்தியாவின் அரசர்கள் ஓவியங்களில் முகம் இழந்து உடை, நகை போன்ற அணிகலன்களை மட்டுமே சுமந்த உருவப்படங்களைக் கண்டு ஏன் இப்படி வரையப்பட்டிருக்கிறது என்ற ஐயத்தில் உலாவந்தபோது அவர்களின் அடிமைத்தனத்தை காட்சிப்படுத்தவே இத்தகைய வடிவமைப்பைக் கையாண்டிருக்கிறார் என்று தெரிந்தது. எப்படி தெரிந்தது என்பது நினைவில் இல்லை. சில நாட்கள் முன்னதாக ஓவியர் சந்ரூ கூறிய கருத்தில் கூட இந்த வகை படைப்புகளுக்கு ஓவியர்கள் கொடுக்கும் விளக்கங்களை நக்கலடித்திருப்பார். இப்போது காந்தியின் சுயசரிதை வாசிப்பினிடையே மூன்றாவது பாகத்திலுள்ள பதினாறாவது அத்தியாயத்தில் மகாராசாக்கள் பெண்களைப் போல ஆடை அலங்காரங்களை வெறுப்புடன் தங்களுக்கு விருப்பம் இல்லாமலே அணிந்து தர்பாருக்கு வருவதும் அதனை அடிமைத்தனத்தின் குறியீடாக அவர்கள் எண்ணுவதையும் பதிவு செய்திருக்கிறார். ஓவியர் ஆதிமூலம் அவரது மகாராசாக்கள் ஓவியத்திற்கான மூலச் சிந்தனையை காந்தியிடம் இருந்தே பெற்றிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.


                                                     *

ஒளிப்பதிவு பற்றி அறியக்கூடிய அரிய தகவல்களையும் நுட்பங்களையும் எளிய மொழியில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ் இந்துவில் சி.ஜே ராஜ்குமார் எழுதி வரும் தொடரில் இன்று ஒப்பனையும் ஒளிப்பதிவும் எவ்விடத்தில் இணைந்து சிறப்புற பணியாற்றி சிறந்த படைப்புகளை உருவாக்க இயலும் என்பதற்குரிய நுட்பங்களை விவரித்திருப்பது தொடர்ந்த தேடலுக்கு உரமூட்டுவதாக இருக்கிறது எப்படி ஓவியத்தில் ஒளிநிழல் பிரித்து படைப்பை உண்மை நிலைக்கு நெருக்கமாக உருக்கொண்டு வருகிறோமோ அதே போலவே ஒளிப்பதிவிலும் ஒளியின் தன்மை மற்றும் ஒப்பனையின் தன்மை இரண்டும் இணைந்து எவ்வகையில் திரைக்கதைக்கு உயிரோட்டம் கொடுக்கிறது என்பது கலைகள் ஒன்றுக்கொன்று பிணைந்து வாழ்வை காட்சிப்படுத்தும் அழகியல். ஓவியம் பற்றிய தேடலுக்கும் இந்த வாசிப்பு உந்துதலை ஏற்படுத்துகிறது.

வியாழன், 11 ஜூன், 2026

வாசிப்பினிடையே

கலை என்பது கலைத்து வைப்பதன் சுருங்கியச் சொல் வடிவாக இருக்கலாம் என்றே அடிக்கடி எண்ணத்தில் ஓடுகிறது. இந்தச் சொல்லின் வேர் அல்லது பெயர் காரணம் என்ன என்றொரு அகத் தேடல். 

க்+அலை என இச்சொல்லை பிரிக்கலாமா அதற்கு இலக்கணம் இடம் தருமா என்று தெரியவில்லை ஆனால்  அலை என்பது அலைந்து கொண்டே இருப்பதன் சுருக்கமா அப்படியென்றால் கடல் அலை எப்போதும் இங்கும் அங்கும் அலைந்து அலைந்து திரிவதால் ஒருவேளை அதற்கு அலை என்று பெயர் வந்திருக்குமோ. இருக்கட்டும்.

க் என்ற ஒலிப்புக்கு ஏதேனும் பொருள் இருக்குமா உயிர் பெற்ற எழுத்துக்குத்தானே பொருள் உருவாக முடியும். நான் நினைப்பது சரிதானா. அலையும் மனம் கலைக்கானதாக பொருந்தி கலை என்ற சொல்லாகவும் உருமாறியிருக்குமோ. தெரியவில்லை செத்தேங் கொழப்பமாத்தாயிருக்கு.

                          ‌      ‌*  *  *
காந்தியின் சத்திய சோதனை வாங்கி சில ஆண்டுகள் இருக்கும். அப்போது தொடங்கி சில பக்கங்களுக்கு மேல் தொடர‌ ஆர்வமில்லாமல் வைத்துவிட்டு இந்த கோடையில் மீண்டும் முயன்று தொடர்கிறது வாசிப்பு. தன்னைப் பற்றிய நிலைப்பாடுகளை அப்பட்டமாக பல இடங்களில் முன்வைக்கும் காந்தியின் எழுத்துப் பிடித்திருக்கிறது. பயத்துடன் கூடிய தனது போராட்ட குணத்தை லண்டனிலும் தென்ஆப்பிரிக்காவிலும் வெளிப்படுத்துபவர் ஒவ்வொரு நிகழ்விலிருந்தும் அவரது நிலைப்பாடுகளை மதிப்பீடு செய்து அடுத்தடுத்து பயணிப்பதில் அவரது தேடலின் பிடிமானம் உணரப்படுகிறது. தனக்கு நேரமில்லாத காரணத்தால் கற்க இயலாத தென்மாநில மொழியைப் பேசும் மக்கள் தான் பேசும் மொழியைக் கற்றுக் கொண்டு தன்னோடு உரையாட வேண்டும் என நினைக்கும் இடத்தில் இருந்து இன்றும் தொடரும் இந்தித் திணிப்பின் அடி வேரைப் புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் தனது பயணத்தின் இடையே தமிழ் கற்கும் வாசிப்பை மேற்கொள்கிறார். மீண்டும் தென் ஆப்பிரிக்காவில் என்ன வகையிலான போராட்டம் தொடரும் என்று எதிர்நோக்குகிறேன்.

                        ‌        ‌* * *

செவ்வாய், 31 மார்ச், 2026

வதம் செய்வோம் வேங்கைகளே


எழுத்துக்களை விட ஓவியங்களின் வழியே வாசிக்கும் பொழுதில் தான் காமிக்ஸ் மேலும் ஆர்வமுள்ளதாகவும் தேடலுக்கு உரியதாகவும் மாற்றம் கொள்கிறது. இது ஜப்பானில் ஒரு சிற்றரசருக்கு கீழ் உள்ள சாமுராய் பற்றிய கதை.

டெட்சுவோவின் பயணத்தில் காடுகளும் மலைகளும் சமவெளிகளும் கோடுகளாக பயணிப்பது என்னையும் காட்சிக்குள் இழுத்துக் கொண்டது. முழுக்க முழுக்க கோட்டோவிய முறையில் வரையப்பட்டிருக்கும் சித்திரங்கள் உண்மையிலேயே மிரட்டுகின்றன. ஒவ்வொரு சட்டகத்தையும் பொறுமையாக உள்வாங்க உள்ளே கற்பனைக் கோடுகள் கட்டியணைக்கின்றன.

வெள்ளி, 3 ஜனவரி, 2025

நிலமும் உயிர்களும் - வாசிப்பு

திரு. ஆத்மா கே ரவி எழுதி பாரதி புத்தகாலயம் வெளியிட்டிருக்கும் நூல் "நிலமும் உயிர்களும்". இது சிறுவர்களுக்கான மிகச் சிறிய நூல் மிக எளிமையான சொற்களில் குழந்தைகள் காடுகளைப் பற்றியும் காட்டு விலங்குகளைப் பற்றியும் அறிந்து கொள்ள ஏதுவான புத்தகம். இதிலிருந்து தனக்கு விருப்பப்பட்டதை தேடி இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள உதவும் நல்லதொரு அறிமுகப் புத்தகமாக இருக்கிறது, குழந்தைகள் மட்டுமல்ல காடுகளையும் உயிர்களையும் நிலங்களையும் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் உரிய ஆரம்ப நிலை கையடக்கப் புத்தகம். 

இயற்கை ஒவ்வொரு உயிருக்கும் சமநிலையோடு வாழ எப்படி வழி வகுத்திருக்கிறது ஒரு எலியும் பன்றியும் எறும்புகளும் தனக்குத் தேவையான இருப்பிடத்தைத் தானே உருவாக்கிக் கொண்டு எவ்வாறு உயிர் வாழ்கின்றன, பறவைகள் வலசை புரிவதன் காரணங்கள் என ஆச்சரியமூட்டும் உயிரினங்கள் பற்றிய தகவல்கள் மற்றும் காட்டுப் பயணத்தின் போது விலங்குகளின் நடமாட்டத்தை அறிந்து கொள்ளும் அடிப்படை முறைகள் போன்றவற்றை மிகக் எளிமையான சொற்களில் விளக்கியிருக்கிறார்.

சனி, 23 நவம்பர், 2024

காலவெளி - வாசிப்பு

வாசிப்பின் வழியில் மீண்டும் வந்தடைந்து மேலோங்கிய ஓவியம் பற்றி அறிந்து கொள்ளவும் வரைந்து பழகவும் தொடங்கிய போது எழுத்தாளர் வா.மணிகண்டனின் நிசப்தம் இணையதளத்தில் ஓவியர்களுக்கான காலவெளி நூல் அறிமுகம் கிடைத்தது அப்போதும் அதற்கு சில ஆண்டுகள் கழித்த பிறகும் தேடியபோது புத்தகம் கிடைக்கவில்லை. இரு வாரங்களுக்கு முன்பு எழுத்தாளர் விட்டல்ராவ்-க்கு விளக்கு விருது வழங்கப்படுவதாக முகநூலில் வாசித்ததும் தேடினேன் அமேசானில் இருந்தது ஆனால் பனுவல் புத்தகக் கடையில் வீட்டுக்கு அனுப்பும் செலவையும் சேர்த்து அதைவிட குறைந்த விலையில் வாங்க முடிந்தது.

கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு நால்வர் குழுவாகச் செயல்பட்டு ஓவியக் காட்சிகள் வைத்தவர்கள் பிரிந்து போகிறார்கள். சக்கரவர்த்தி பிரிவுக்குப் பின்னர் கனடா சென்றுவிடுகிறார். சில ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றுகூடி குழுவை மீட்டெடுக்கும் முயற்சியின் பொழுதில் சக்கரவர்த்தி வெளிநாட்டில் இருப்பதால் அவரது படைப்பு மட்டும் தவிர்க்கப்படுகிறது. அதற்கு ரூடால்ப் ஒரு காரண்மாக இருக்கிறான். பிரசன்னன் தன்னிடம் தெரிவித்திருந்தால் செனாய் வாசிப்பவன் ஓவியத்தை தந்து உதவியிருப்பேன் என ஒரு கட்டத்தில் தெரிவிக்கிறான்.

ஓவியன் தன் படைப்புக்குள் பயணிப்பது அதற்கான கருவையும், வண்ணங்களையும் தெரிவு செய்வது, நீர்வண்ணமா எண்ணெய் வண்ணமா, சிற்பமா என படைப்பாளிகளின் மனநிலையை சித்திரம் வடிக்கும் எழுத்து. இந்த புனைவு முன் பின் என மாறி மாறி வருவதனாலும், சக்கரவர்த்தியின் ஓவியம் சிந்தியாவின் ஆங்கிலோ-இந்திய வீட்டினுள் நுழைவதை இருவேறு கோணத்தில் நம் மனக்காட்சிக்கு விருந்தாக்குவது வாசிப்பின்பத்தை பெருக்குகிறது. வரவேற்பறையை தாண்டும் போது அந்த ஆங்கிலோ-இந்திய வீட்டை பற்றி விவரித்துச் செல்வதும், அவர்களது நேற்றைய மற்றும் நாளைய திசைகளைப் பற்றிய கவலையில்லாத வாழ்க்கை சக்கரவர்த்தியின் பார்வையில் விவரித்துச் செல்வது அந்த வாழ்க்கை முறையை அறியாத என்னைப் போன்றோருக்கு புதியது. பொதுவாக அவர்களுக்கு பல்லாவரத்திலும் ராயபுரத்திலும் உறவுகள் இருப்பதையும் கவனப் படுத்தியிருக்கிறார்.

பல்லாவரம் மலையை கடக்கும் போதெல்லாம் எனது மனதில் ஒரு ஏக்கம் தழுவிக் கொள்ளும், எப்போது இந்த மலையிலிருந்து நகரத்தை பார்க்கப் போகிறாம், திரிசூல மலையிலிருந்து வானூர்தி நிலையத்தை பார்க்கப் போகிறோம் என்று. இந்தப் புனைவில் வரும் ஓவியக் குழு பல்லாவரம் மலைக்கு நேரடியாக பார்த்து வரையும் பயிற்சிக்காக செல்வதை வாசித்ததும் ஏக்கம் அதிதீவிரமாக பரவியது.

ஒவ்வோரு ஓவியருக்குமுள்ள தனித்தனி குணநலங்களை விரிவாக அலசி ஆராய்வது இயல்பாகவும் இப்போதைய ஓவியர்கள் இதனை வாசிப்பதன் மூலம் தங்களது எண்ணங்களை இந்த அனுபவத்தின் வழியே செதுக்கிக் கொள்ள இயலும். சக்கரவர்த்தியின் படைப்பாளுமை, தர்மன் மற்றும் முருகேசனின் ஓவிய விற்பனை விளம்பரம் சார்ந்த அணுகுமுறை, உன்னி கிருஷ்ணனின் படைப்புத்திறன், வராகமூர்த்தியின் விமர்சன எதிர்பார்ப்பு, ஓவியத்திற்கு சட்டம் அமைப்பதுவும் விற்பனைக்கும் துணையாக நிற்கும் மதன்லால் போன்றவர்கள் பற்றி ஒரு கண்காட்சிக்கான தயாரிப்பின் பின்னணியில் எழுத்தாண்டிருப்பது எந்த தொய்வுமில்லாத வாசிப்பனுவத்தை வழங்கக்கூடியதாகவும் உள்ளது.

இப்போது அருங்காட்சியகம் அந்த கால கட்டத்தில் அரும் பொருட்காட்சியகம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது, அந்தச் சூழலுக்குள் இப்போது சென்று வருவது நூற்றாண்டு கடந்த கலைப் படைப்புகளோடு உரையாடுவது போன்ற தோற்றத்தையும் மன நிறைவையும் தரக் கூடியது. ஏன் இங்குள்ள தேசிய காட்சிக் கூடத்தின் ஒரு பகுதியை தற்கால ஓவியர்கள் படைப்புகளை காட்சிப் படுத்துவதற்கென ஒதுக்க இந்த அரசு ஆவன செய்ய வேண்டுமென மனது அடித்துக்கொள்ளும். இங்குள்ள நடன அரங்கம் இப்புதினம் நிகழும் காலத்தில் காட்சிக் கூடமாக செயல்பட்டதென்பது வியப்பை அளித்தது.

சக்கரவர்த்தி மற்றும் உன்னி கிருஷ்ணன் இருவரது படைப்பாக்கம் குறித்து விவரிக்கும் அளவுக்கு மற்ற இருவர் பற்றி அவ்வளவாக உள்ளார்ந்து  98 ஆவது பக்கம் வரை சொல்லவில்லை என்று நினைக்கிறேன் இல்லை நான் ஏதேனும் தவர விட்டுவிட்டேனா என்று தெரியவில்லை. உன்னியின் வண்ணங்கள் அடுத்தடுத்த கண்காட்சியில் வெம்மையிலிருந்து குளிர் நிறங்களுக்கு மாறிவருவதும், சக்கரவர்த்தி போர் சூழலால் சிங் வெள்ளை எண்ணெய் வண்ணம் கிடைக்காமல் அந்த வகைமையை விட்டுவிட்டு முழுவதும் வேறு பாணியை கைகொள்கிறார். இவரின் படைப்பு உக்கிரத்தை முழுவதுமாக விவரிக்காமலேயே அதன் தன்மையை உணரும் வடிவில் எழுத்து கைகூடியிருப்பது சிறப்பாக எண்ணத் தோன்றுகிறது.


செவ்வாய், 2 ஜூலை, 2024

க்ளிக்

புகைப்படங்களின் ஆரம்ப கால வரலாற்றில் தொடங்கி எப்படி ஒரு ஒளிப்படக்கருவி செயல் படுகிறது, காட்சி எவ்வாறு படமாக இக்கருவி உதவியுடன் பதிவு செய்யப்படுகிறது, அதிலுள்ள அனைத்து பாகங்கள் மற்றும் குவியாடிகளின் வகைகள் என ஒளிப்பட நுட்பங்களை விரிவாக அலசி எவரும் எளிதாக புரிந்து கொள்ள ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது "க்ளிக்" புத்தகம்.

ஒளி குவியாடியின் வழியே புகுந்து செல்லும் அளவைப் பொறுத்து கிடைக்கும் படங்களுக்கான அளவீடுகள் பற்றி வாசிக்க வாசிக்க நானும் ஒளிப்படக் கலைஞன் ஆகிவிடலாம் என்ற ஆர்வத்தை விதைக்கிறது. ஒளியினைப் பயன்படுத்தி அவர் வரைந்த ஓவியம் புதிதாகவும் வியப்பளிக்கக் கூடியதாகவும் உள்ளது.

அழகுணர்ச்சி கொண்ட கட்டமைப்பை உருவாக்க ஓவிய வாசிப்பின் அவசியத்தை உணர்த்தி அதற்கான விதிகளை வரையறை செய்து கொடுத்திருப்பது கற்றலின் பெருவெளி. இத்தனை ஆண்டுகள் இந்த புத்தகத்தை வாசிக்காமல் வைத்தது பெருந்தவறு என்பதை உணர்ந்த தருணம். இப்புத்தகத்தை எழுதியதற்கு ஒளிப்பதிவாளர் சி.ஜெ.ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி பாராட்ட வேண்டும்!!




திங்கள், 29 ஏப்ரல், 2024

பிசிறு சிறுகதை வாசிப்பு

கதைகள் வாசிக்கத் தொடங்கிய நாட்களில் எழுதுவதற்கான எண்ணவோட்டங்கள் அதிகமாக ஆர்ப்பரிக்கும் என்னென்னவோ நினைவுகள் வந்து நெஞ்சில் வட்டமடித்துப் போட்டியிடும் ஆனால் எழுதுவதற்கு அமர்ந்தால் சில வரிகளுக்குள் வலிந்து திணிக்கத் தொடங்குவது போலத் தோன்றும்.

இதற்கு முன் எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பினை முழுமையாக வாசித்திருந்தாலும் இன்று பிசிறு கதையை வாசிக்கையில் புதிதாக வாசிப்பது போன்ற எண்ண மாயம். 

மேற்சொன்ன கதைக்கான எண்ணவோட்டங்களில் ஒன்று பாடல் பற்றிய உரையாடல்கள். அப்பாவின் கடையில் மாலை நேரத்தில் வியாபாரிகள் கூடும் போது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் பற்றி பேசிப்பேசி நீளும் சொற்கள் அதை இசையமைத்தவர் படத்தின் பெயர் வெளிவந்த ஆண்டு எனத் தொடங்கி மற்றொரு வரியைச் சொல்லி அடுத்த பாடலுக்குத் தாவுவார்கள். யப்பப்பா என்றுச் சொல்லி நாக்கு பல்லில் அழுந்த க்க...க்க..ஒலியெழுப்பி கையையும் காலில் ஒரு தட்டுத் தட்டிக் கொள்வார் ஏ.என் மாமா..

பிசிறு கதை அந்த ஓட்டத்தில் இருந்தது இன்பத்தை ஏந்தியது மனதில்..

கதையிலிருந்து:
"ஆனையறுகுப் புதர்களின் ஓரம் எருமைகள் உருண்டு புரண்டு வெயிலுக்கு இதமாக சேற்றுப் பூச்சுமானம் செய்து கொண்டிருந்தன" என்று கதையின் தொடக்கத்தில் எழுதியிருக்கிறார். ஆனையறுகு எனக்குப் புதிதாக இருந்தது தேடிப் பார்த்தால் அறுகம்புல்லில் பலவகையிருப்பதையும் அறுகம்புல் தேடியலைந்த நாளொன்றும் நினைவில் தவழ்ந்தது.

அப்புறம் "ஆணியைப் பற்றுக்குறடால் பிடுங்கி விட்டு, மறுபடி குருத்தில் படாமல் அறைந்து மறுபக்கம் மடக்கினார்" என்றொரு வரி, ஆணியைப் பிடுங்கும் பற்றுக்குறடு என்ற சொல் எத்தனை அழகானது!!

சனி, 22 ஜூலை, 2023

நூலகத்தில்

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் இரண்டு நாட்கள் கோட்டூர்புரம் அண்ணா நூலகம் சென்று ஓவியம் சார்ந்த புத்தகங்களை வாசிக்க வாய்த்தது தொடர்ந்து செல்வதற்கு விருப்பமிருந்தாலும் குன்றத்தூரிலிருந்து கருத்த பாம்பு போல சாலை நீண்டு நேரம் பல்லிளிக்கிறது.

எழுத்தாளர் பாவண்ணன் அவருடைய கனடா இயல் விருது பயணம் பற்றியும், கோடைகாலம் முடிந்து பருவமழை தொடங்குவதை எப்படி மக்கள் கொண்டாடுகிறார்கள் என்பதை இலக்கியங்களில் பதிவு செய்திருப்பதை சிறப்பாக எழுதியிருந்த போகன் சங்கரையும் கறுப்பர் நகரம் புதினம் உருவானதன் பின்னணி உணர்வுகளை பகிர்ந்திருந்த கரன் கார்க்கியின் எழுத்தையும் அந்திமழை இதழில் வாசிக்க குன்றத்தூர் நூலகம் சென்று வந்தது நிறைவாக இருந்தது. 

நூலகத்தில் கண்ட இந்து நாளிதழ் வெளியிடும் "young world" சிறார் ஆங்கிலப் பத்திரிக்கையில் வந்த காமிக் கதைகள் வாசிப்பு ஆர்வத்தை தூண்டுகிறது. தமிழில் சிறுவர்களுக்கான சித்திரக்கதைகள் உருவாக்கப்படுகிறதா.

திங்கள், 26 ஜூன், 2023

மிதவை மீள் வாசிப்பு

மிதவை வாசித்து ஏழு ஆண்டுகள் இருக்கும் இன்னும் இரண்டாயிரத்து பதினைந்து வெள்ளத்தின் ஈரம் காய்ந்த பூஞ்சை தன்மீது படர்ந்திருக்க மீண்டும் கையிலெடுத்திருக்கிறேன் புதிதாக வாசிப்பது போலிருக்கிறது சண்முகம் பயணிக்கும் தண்டவாளங்கள் தடதடக்கும் பாதையிலிருந்து மீண்டதனாலோ என்னவோ நெருக்கமான புதினமாக என்னிடமுள்ள மறக்கவே இயலாத புத்தகம் என் பிறப்புக்கு ஓராண்டு முன் முதல் பதிப்பு கண்டது என நேற்றுதான் கவனித்தேன் இக்கதையில் சண்முகம் பட்டப் படிப்பில் இரண்டாவதாக வந்து வெற்றி பெற்றதை விவரிக்கும் இடத்தில் "மனம் தண்ணீரில் சிறகு முக்கிப் படபடத்தது" என்றொரு சொல்லாடல் எழுதப்பட்டிருக்கும் அதை இரண்டு நாட்களாக கடன் வாங்கியிருக்கிறேன் முதலில் வாசிக்கும் போது என்ன உணர்வில் இருந்தேன் என்பதை எண்ணினால் ஓரிரு காட்சிகளைத் தவிர்த்து எதுவும் நினைவுகளில் வர மறுக்கிறது சின்னதாக ஒரு குறிப்பு எழுதிய ஞாபகம் அதைத் தேடிப் பார்க்க வேண்டும் வேலையில்லா பட்டதாரிகள் இல்லாத காலமென்று ஏதேனும் உண்டா ஒருவேளை பட்டதாரிகள் இல்லாத காலத்தில் இருக்கலாமோ அங்கும் உணவுக்கும் உடைக்கும் எதற்கும் போராடவேண்டிய சூழல் எப்போதும் இருக்கத்தான் செய்யும் போல. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் சொல்லாடலில் நிகழ்வுகள் எவ்வித மிகைப்படுத்தலுமின்றி அதற்கான சித்திரங்களை கண்முன் நிறுத்துவதும் உணர்வுகளை நம்முள் கடத்துவதும் இயல்பாக இருக்கிறது.


  வாழ்வை ஒருவித விமர்சனப் பார்வைக்குள் புகுத்தி தன்னைத் தானே விடுவித்துக் கொள்ளும் முனைப்புடன் நகரும் கதையில் வழிநெடுக ஊடாடும் மனித வாழ்வினை எள்ளலுடன் நடைபாதையில் இருந்து விலகி அதனை பார்க்கச் சொல்லும் சொற்கள்.

மிதவை முதல் வாசிப்பின் போது எழுதிய சிறு குறிப்பு இந்த சுட்டியில்

திங்கள், 3 ஏப்ரல், 2023

உணவோடு கதைத்தல்

காலை உணவு வேளை கதையோடு நகர்வதுண்டு, சென்ற வாரம் வரை "வால் இழந்த எலி" என்ற கதைதான் தொடர்ச்சியாக நாள்தோறும் வாசித்தோம். இன்று காலையில் அதே புத்தகத்தை தேடியவளது கண்ணில் பாவேந்தர் தமிழ் வழிப் பள்ளியின் முதல்வர் திரு.வெற்றிச்செழியன் எழுதிய "விடுதலை கிளிகள்" புத்தகம் அகப்பட்டதும் "அப்பா கதைப்பாடல்கள் எடுத்துட்டு வாரேன்ன, ஐயா எழுதுனது. இதுல ஒரு திருடன் கதையிருக்கும் அத படிப்பமா" என்றாள் இயல்.

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2022

முகங்(கலை)தல்



 கலை அப்படின்னா என்ன அதுவொரு மாய உலகமா எளிதில் எட்டி விடாதா தொலை தூரத்தில் உள்ளதா, எது கலைப் படைப்பு எதனால் அது கலைப் படைப்பாகிறது, எது அழகு எதனால் அது அழகு , எந்த இடத்தில் கலை உருவாகிறது யார் உருவாக்குகிறார்கள் என பலதரப்பு கேள்விகள் நம்மைச் சூழலாம் அல்லது இவை எதுவும் என்னவென்றே அறியாது ஒதுங்கி நிற்கலாம் அப்படி நிற்பதில் கூட கலைக்கான செயல்பாடு எதாவது இருக்குமானால் இருக்கலாம் அதை அறியாததால் என்னவென்றே தெரியாததால் அது காற்றில் கலந்து விடுகிறது அந்த காற்றை எல்லாருமே உள்ளிழுப்பதால் யாருக்காவது அதாவது கலை பற்றிய தேடலில் வானத்தைப் பார்த்து புலம்பிக் கொண்டிருக்கும் உயிரான ஒன்று அதை இழுத்துக் கொள்வதால் ஒரு புன்னகையில் அக்காற்றை வெளியிடுகிறது அல்லது வேக வேகமாக தாளை எடுத்து எதையும் எழுதவோ வரையவோ துணியாமல் மீண்டும் வானத்தையே பார்க்கத் தொடங்கினால் வேரொரு உயிர் தூரிகையால் வண்ணங்களை குதப்பி அப்புகிறது என்னவென்று கேட்டால் தெரியவில்லை என உரத்துச் சிரிக்கிறது வேறு சில அவ்வுயிரியை நவீனம் என்கிறது. நவீனம் பெருங் குழப்பமடைந்து ஆமாம் ஆமாம் என்று தான் தெரியவில்லை புரியவில்லை எனச் சொன்ன வண்ணங்களுக்கு புது மொழி பெயர்ப்பு செய்கிறது, ஆமாம் எழுத்தைத் தானே மொழி பெயர்ப்பார்கள் இதுயென்ன ஓவியத்தையும் பெயர்க்கிறது. கலை என்பதற்கு வடிவம் எதுவுமில்லை அதுவொரு உணர்ச்சிக் கடல் அது எந்த உயிருக்கும் உண்டு இன்னாருக்கு உண்டு இன்னாருக்கு இல்லை என்று எதுவுமேயில்லை. வரைவதும் எழுதுவது இசைப்பதும் நடிப்பதும் ஆடுவதும் மட்டுமே கலையா. கனவிலும் உணர்வுண்டு கழிப்பறையிலும் உணர்வுண்டு என மேம்போக்காக சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் பொது உயிரிகளிடம் பேசும் போது முகஞ்சுழிக்கக் கூடுமாகையால் இன்னும் கொஞ்சம் விளக்கியும் விலக்கியும் கூறவேண்டியதாகிப் போகிறது. அந்த உயிரி வரைந்த கரிக்கோல் ஓவியத்தை இரண்டு நாள் கழித்து பார்த்துவிட்டு இதை ஏன் வரைந்தேன் என நொந்தது, மீண்டும் ஒரிரு மாதம் கழித்து அதே ஓவியத்தை பார்த்ததும் அதிலுள்ள கோடுகளெல்லாம் தெரிந்தது அட இந்தக் கோடு எவ்வளவு ஒயிலாக திசை மாறுகிறது என்றெல்லாம் தனக்குத் தானே கேட்டுவிட்டு இணையத்தின் ஊடாக சில ஓவியங்களை பார்க்கிறது அங்கேயும் கோடுகளை மேய்கிறது, அப்பாடா என்று இன்னும் சில முகங்களை கோடுகளாக்குகிறது. ஆமாம் எது கலை எது அழகு எது படைப்பு.







புதன், 17 ஆகஸ்ட், 2022

தொடர் வரைவு ஏழும் புத்தகங்களும்

ஒவ்வொரு நாளும் வேறு வேறு ஓவிய வகைமைகளை வரைந்து பார்க்க வேண்டுமென்று நேற்று காலையில் ஒரு எண்ணம் விரிவடைந்தது. முகம், முழு உருவம், நோக்குநிலையில் காணும் பொருளை அல்லது இடத்தை வரைவது, அரை மணி நேரத்தில் ஒரு வண்ண ஓவியம் என ஒரு நாளுக்கு ஒன்று என வரைந்து பார்க்கலாம்.

முகத்தை படம் பார்த்து வரைந்துவிடலாம். கற்பனையிலும் அதேபோல வரைந்து விடலாமே என்று தான் மனத்தில் தோன்றும், ஆனால் உண்மை அப்படியிருப்பதில்லை, கண் மூக்கு வாய் காது தாடை நெற்றி என வரைந்து விட்டாலும் அதை முப்பரிமாண எல்லைக்குள் இழுத்துச் செல்லவும் பயிற்சி வேண்டும். இதற்கு மனித முகம் மற்றும் உருவ அமைப்புகள் குறித்த ஓரளவு புரிதல் இருக்க வேண்டும். எல்லாம் இருப்பது போல் இருந்தாலும் அதிலொரு மேதமை வடிவத்தை உருவக்கத் தேவையான அடிப்படை புரிதலை அடைய வேண்டும், அதற்கான தினப் பயிற்சியாக ஒளி நிழல் பிரித்து முப்பரிமாணத்தை குறுகிய கோடுகளில் அழைத்துவரும் முயற்சி.

நேற்று வரைந்த இவ்விரண்டு முகங்களும் கற்பனை முகங்கள் மற்றும் சில அடிப்படை புரிதலுக்கு என்னை ஆட்படுத்திக் கொண்டு ஒளி நிழல் பிரித்துப் பார்த்தேன், அவ்வளவு துல்லியமாக வரவில்லையென்றாலும் சுமாராகவும் வரவில்லை என்பதே எனது எண்ணம். இதே முறையினை வண்ணத்திலும் பயன்படுத்திப் பார்க்க வேண்டும்.





இப்பதிவு எழுதும் சில நிமிடம் முன் வரைந்தது, போன வாரம் குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்த போது எதேச்சையாக ஒரு கருப்பு தூவல் (பேனா) கண்ணில் பட்டது (Goldex என்று அதன் மீது எழுதியிருக்கிறது, இதுவரை பார்த்திராத கேள்விப் படாத நிறுவனம்), எதிர்பார்த்ததை விட நன்றாகவே இருக்கிறது படம் வரைவதற்கு. எங்கள் வீட்டு அலமாரியில் ஓவியங்களை வைக்க இடம் கொடுத்து கட்டிலில் காத்திருக்கும் கனவான்கள் இப்புத்தகங்கள். தடித்த புத்தகங்களுள் பாகீரதியின் மதியம் மனதுக்கு மிக நெருக்கமான புதினம். பக்கங்கள் அதிகமானாலும் அது கொடுக்கும் பயணம் பேரானந்தம்.



புதன், 8 ஜூன், 2022

நீர் நிலம் வனம் - கடல்

கடலை கடலோடியிடம் விட்டுவிடுங்கள் எனும் வறீதையா கான்ஸ்தந்தின் குரல் காது வழி மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மீனவன்னு செய்தில எழுதுறீங்களே அதுவே தப்பு நாங்கள் கடலோடிகள் என்பவரது குரலை மறுக்கவும் மறக்கவும் இயலுமா. ஒரு நகரத்தாளுக்கு ஒட்டுமொத்த விவசாய நிலத்தையும் விவசாய நிலமாகவும், கடல் சாராத ஆளுக்கு ஒட்டு மொத்த கடலும் ஒரே கடலாகவும் புரிதலுக்குள்ளாக வாய்ப்பிருப்பதும் அதை நாம் அல்லது குறைந்தபட்சம் இந்நாட்டின் அரசு அறியாதிருப்பது எவ்வளவு அயற்சியானது.

ஒவ்வொரு விவசாய நிலமும் வெவ்வேறு பண்புகளைக் கொண்டிருப்பது போல் கடலிலும் பல பண்புகள் நிறந்த பகுதிகள் இருப்பதை இந்த நூல் வாசிப்பிற்கு பிறகே அறிதலுக்குள்ளாகிறது. கடலில் மிதப்பது படகு அல்லது கப்பல் என்பதைக் கடந்து அதன் உண்மையான பெயர்கள் புலப்படவும் கடலோடிகளின் வாழ்வைப் புரிந்து கொள்ளவும், கடல் வாணிபத்தில் கொழிக்கும் மனிதர்களையும், இலங்கை ராணுவம் ஏன் கடல் எல்லை தாண்டியதாக தமிழர்களைச் சுடுகிறது, கச்சத்தீவை ஏன் இலங்கை ஈர்த்துக் கொண்டது, தமிழ் நிலத்திற்கும் இலங்கைக்குமுள்ள ஆதி உறவு  மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் நிலமும் கொண்டிருக்கும் வெவ்வேறு பண்புகளை உணர்ந்து கொள்ளவும் மிகப் பெரும் உந்துதலை வழங்குகிறது இந்நூல்.

கடல் புறத்தில் சுற்றுலாவை மேம்படுத்தினால் கிடைக்கும் பொருளாதாரத்தில் அங்கிருக்கும் பெரும் சுரண்டல் ஆலைகளை இல்லாமல் ஆக்கிவிடலாம் எனும் கடலோடியின் குரலை கேட்பாரில்லை என்றே தோன்றுகிறது. 

எங்கிருந்து நம் நிலங்களுக்கான விடுதலையை சுய பண்புகளை வளர்த்தெடுக்க வேண்டும் என எண்ணும் போது நமது கல்வி முறையில் உரிய மாற்றங்களைச் செய்யாமல் இது சாத்தியமில்லை, எப்படி ஒவ்வொரு நிலத்திற்கும் தனித்த பண்பிருக்கிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு அந்தந்தப் பண்பிற்கேற்ற பள்ளிக் கல்வியை ஊக்குவிக்கவும் உருவாக்கவும் வேண்டும். ஆனால் நாம் ஒற்றை கல்விக் கொள்கை எனும் சுருக்கும் கயிற்றில் தொங்கத் தொடங்கிவிட்டோம்.

கொற்கை புதினம் வெளியான நாள்முதல் அதை எப்படியும் வாங்கி வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும் போதெல்லாம் அதன் விலை மீது மாறாத பயமொன்றை சுமந்து கொண்டிருந்தேன். அந்தச் சுமையை புறந்தள்ளி வாசிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் நிற்கிறேன்.



செவ்வாய், 29 மார்ச், 2022

வலி - விமலாதித்த மாமல்லன்

ஒரு சிறுவனின் பார்வையில், அவனுடைய சென்னையிலுள்ள தாத்தாவை காணப் போகும் பயணத்தை எண்ணி குதூகலித்து தன் பக்கத்து வீட்டு அக்காவிடமும் தன் நண்பனிடமும் பகிர்ந்து மகிழ்பவனுக்கு அப்பாவிடமும் அம்மாவிடமும் அக்குதூகலத்தை காணாதது கண்டு வியப்பிற்கும், தனக்குள் எழாத அல்லது எழுந்த விசாரணைக்கும் பதிலாக தனது தாத்தாவை காண்பதே கதையின் முடிச்சு.

பயணம் என்றதும் சிறுவர்களுக்கு ஏற்படும் குதூகலமும், அதனை தனது பக்கத்து வீட்டு உறவுகளுக்கு தெரிவித்து பெருமையடித்துக் கொள்வது. சன்னல் வழியாக நண்பன் வீட்டை எட்டிப் பார்ப்பதும், அக்காவிடமான உரையாடலும் அவள் அன்பின் வெளிப்பாடாக இவனுக்கு கிடைக்கும் முத்தமென அழகியல் வடிவங்களுக்கு அப்பால் தலைப்பை சுமந்து நடக்கும் கதை எழுத்தாளர் விமலாதித்த மாமல்லனின் வலி சிறுகதை. 

இதற்கு பிறகு அச்சிறுவன் தனது தாத்தா பற்றிய பிம்பத்தை எப்படி மறு கட்டமைப்பு செய்வான்அத்தை பற்றிய எண்ணங்களை எப்படி வடித்துக் கொள்வான் என்பதில் மனம் சற்று மௌனித்துக் கிடக்கிறது.






திங்கள், 10 மே, 2021

ஓவியர் ஆதிமூலம்

சிறுபிள்ளையில் எவருக்குமே உள்ள தன்மையோடு கையில் கிடைக்கும் எழுது பொருள் வழியே கோடுகளை கிறுக்கும் தனது ஆர்வத்தை அடுத்தடுத்து நகர்த்தும் எண்ணத்தில் மளிகைக் கடையை புறந்தள்ளி சென்னைக்கு பயணித்தவர் ஓவியர் ஆதிமூலம். பி.எஸ். செட்டியார் என்பவரது வழிகாட்டலில் சிற்பி தனபால் அவர்களை அடைகிறார். இவரது வழிகாட்டலில் ஓவியக் கல்லூரிக்குள் நுழையும் ஓவியர், பயிலும் காலத்திலேயே தனக்கென தனி பாணியை உருவாக்கி அதில் தொடர் பயணம் செய்தது போல புரிந்துகொள்ள முடிகிறது.

கோட்டுச்சித்திரங்களில் இவர் நிகழ்த்தியிருக்கும் நிழல் ஒளியில் கிட்டும் அதிகமான இருளுக்குள் மிளிரும் ஒளி, ஓவியத்தை காணும் பொழுதில் உள்ளிழுத்து நகரவிடாமல் செய்துவிடுகிறது. தத்ரூபமான படங்கள் தீட்டியிருக்கிறாரா எனத் தேடியதில் ஒரு பெண்ணின் முகம் தவிர்த்து எதுவும் கிடைக்கவில்லை. கோடுகளிலிருந்து வண்ணக் கலவை புரியும் அரூப ஓவிய முறைக்குள் சென்று தனது படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். இவரது சில படைப்புகளை "ஆதிமூலம் அழியாக் கோடுகள்" என்ற புத்தகத்தில் வெவ்வேறு ஆளுமைகளின் கட்டுரைகளோடும், பத்திரிக்கைகளில்  வெளிவந்த இவரது பேட்டிகளோடும் வெளியிட்டிருக்கிறார்கள்.

பயிற்சிக்காக இவரது இரண்டு ஓவியங்களை வரைந்து பார்த்ததில் இதுவரை செல்ல மறுத்த இருளுக்குள் சென்று மீண்ட உற்சாகமொன்று தோளில் செல்லமாக தட்டிவிட்டது.

காணொளி வடிவில்


சனி, 6 பிப்ரவரி, 2021

கற்றலை நோக்கிய பயணம்

 கடந்த நான்கு வருட இடைவெளி விட்ட பயிற்சியில் தற்போது ஓரளவு முகங்களை வரையக் கற்றுக் கொண்டேன்/கொண்டிருக்கிறேன். மனித முகங்களை கற்றறிவது அவ்வளவு சுலபமல்ல, ஆனால் அவர்களை உணர்ந்து கொள்ள தலைப்பட்டால் மிக எளிமையாக பாவனைகளை கோடுகளாக்கி விடலாம் என்பது புரிதலுக்கு உள்ளாகியிருக்கிறது. மிகக் குறைவான படங்களையே பயிற்சி செய்திருக்கிறேன் என்பதலோ என்னவோ இன்னும் விரைந்து குறைந்த நிமிடங்களுக்குள் முகத்தை கோடுகளாக்கும் வித்தையை கைகொள்ள என்னை நானே தாமதப் படுத்துவது போன்றதொரு எண்ணம்.


வாசிப்பின் நேரம் வரைதலுக்கான நேரம் என பிரித்து செயல்பட நினைத்த நாட்கள் கடந்து, வாசிப்பது வெகு குறைவாகவும் வரைதலுக்கு அதிமுக்கியம் கொடுக்கவும் இவ்வருடத்தை பழக்கி வருகிறேன். இத்தோடு குழந்தைகள் வளர்ந்து வருவதாலும் அவர்களுக்கான கற்றல் செயல்பாடுகளுக்கு தேவையானவற்றை நாம் கற்க வேண்டியதொரு காலகட்டத்திற்குள் நுழைந்திருப்பதாகவே எண்ணிக் கொண்டு அவர்களுக்காக சில வாசிப்புகளை தொடங்கியிருக்கிறேன், செம்மை வெளியீட்டகம் பதிப்பித்திருக்கும் "மரபுக் கல்விக்கான பாடநூல்" என்ற புத்தகம் நல்லதொரு திறப்பை வாழ்விலும் கற்றல் முறையிலும் விளைவிக்கும் என எண்ணவைக்கிறது.


இன்றொரு எண்ணம் வரைதல் சார்ந்து மேலெழுந்தது, மனித முகங்களை எவ்வளவு வேகமாகவும் துல்லியமாகவும் வரைய இயலும் என்ற அவ்வெண்ணத்தை தொடர்ந்து செயல்படுத்த ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு முகம் என வரையலாம், இதனால் பல தரப்பட்ட புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை முதல் இரண்டு படங்களிலேயே கண்டுகொள்ள இடமிருந்தது. தொடர்ந்து செயல்படத் தேவையான அகத்தூண்டலை உயிர்ப்பிக்க தன்னை நோக்கிய பயணமும் மிக அவசியமான ஒன்றாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.


இன்று வரைந்த இரு பத்து நிமிடப் படங்கள்.





சனி, 23 மே, 2020

கோபுரம் - விமலாதித்த மாமல்லன்

குருட்டு ஓவியனைப் பற்றிய சிறுகதை, வாசித்து முடித்ததும் யதார்த்தம் தொலைந்த கதையாகப்பட்டது ஆமாம் யதார்த்தத்தில் என்ன இருக்கிறது என கதையை உள்ளுக்குள் ஓட விட்டால், இதுவொரு கலைத் திருட்டு பற்றியதான கதையோ என்றும் கலை மதிப்பு என்ற கோணத்திலுமான கதையாகவும் புரிந்துகொண்ட பின். 

கண்களற்ற அவனின் கைகள் செய்யும் வித்தை ஆழ்மனத்தின் துடிப்பாக அங்கே மாயம் நிகழ வழி ஏற்படுகிறது, அந்த சிற்றூருக்கு இவன் செல்வதும் அங்குள்ள கோவில் கோபுரத்தின் எதிர்கால நிகழ்வை சித்திரமாக்கி அதற்காக அடி உதை வாங்கும் எளிய கலைஞன், இங்கு எளிய என்ற சொல்லை பயன்படுத்தவே கூச்சமாக உள்ளது, அவனது உருவகத்தை எழுதியிருக்கும் விதம் எளிமைக்கு எவ்விதத்திலும் சமமானதில்லை, மாறாக அதனினும் கீழ்மையானது. ஆனால் இவனது உள்ளம் கலையைத் தவிர தன் ஆழ்மனம் தவிர்த்த எதையும் துச்சமாக எண்ணுபவையானதா, வரைந்த அவனது கரிக்கோடுகளின் மீது வீசியெறியப்படும் காசுகளை தேவையற்றவையாகவே எண்ணி விலகிப்போகிறான், மக்களிடம் கலை பற்றிய எண்ணவோட்டம் கிஞ்சித்தும் இல்லாதது போலவே இவனுக்கும் அவர்களின் மதிப்பான பொருட்கள் மீது பற்றில்லை.

பிளவுபட்ட கோபுரத்தை வரைந்ததும் அதை அழித்துச் சென்ற கால்களிலிருந்து அவனது கரித்துண்டின் சாயம் விலக மறுக்கிறது, கதைக்குள் இதுவொரு படிமமாக பலமானதாக ஒட்டிக் கொள்கிறது, மக்கள் அவனையும் அவனது கலையையும் சிந்தனையையும் புறந்தள்ள எத்தனித்தாலும் அது விலகிவிடுவதில்லை அவர்களின் மனத்திலிருந்து, கதை முடிக்கப்படும் இடமும் இதைத் தெளிவாக நிகழ்த்துகிறது.

கோபுரத்தில் மாற்றலுக்குள்ளான சிற்பமொன்று வெளிநாட்டில்  கோட்டோவியமாகி ஏராளமான விலைக்கு விற்பனையாகிறது, இந்த ஓவியம் உருவானது எதன் விளைவு என எண்ணினால், கோபுரம் தரையில் ஓவியமாக விரிந்தபோது அதனை தங்களது ஒளிப்படக் கருவியில் நகலெடுத்த வெளிநாட்டுப் பயணிகள் முன் நிற்கிறார்கள். இந்த இடத்தில் கலைத் திருட்டிற்கான சாத்தியமிருக்குமோ எனத் தோன்றுகிறது. இருந்தும் கலைஞனை காப்பாற்றும் இடத்தில் இவர்களின் கெஞ்சலும் உடல் மொழியும் மேற்சொன்ன திருட்டு விளைவை மறுத்தாலும் அது நிகழ வேறுபல வழிகள் இருப்பதாகத்தான் புலப்படுகிறது. 

இந்த கதையின் கூறுகளை யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தேடிய போது, எம்.எஃப். உசேனை மதவாதிகள் துரத்தியதை அடியொற்றி எழுதியதாக ஒருவர்  குறித்துள்ளார்.

ஒரு ஓவியனைப் பற்றிய கதை என்பதாலோ என்னவோ கதையின் போக்குக்குள் இயல்பாக நுழைந்துவிட்ட மனம் பார்வையற்றவன் எப்படி வரைகிறான் என்றும் உழன்றது, பார்வையுள்ளவனை விட இவர்கள் நுட்பமானவர்கள் என எண்ணும் பொழுது கதையின் மாயம் மெல்ல விலகப் பார்த்தாலும் விலகுவதில்லை.

திங்கள், 18 மே, 2020

ஒளியிலே தெரிவது - வாசிப்பனுபவம்

எந்த புத்தகக்காட்சியில் வாங்கியதென்று நினைவில் இல்லை, ஆனால் முதல் கதையான "சிநேகிதிகள்" கதையினை எப்பொழுதோ வாசித்தது போல உணர்வு, ஒருவேளை படித்துறையை காட்சிப் படுத்தும் வேறேதேனும் வண்ணதாசன் எழுதுயிருந்தாலும் இருக்கலாம். "கழுத்துக்கு மேல் முகம் கல்சிலையாகி விட்டதுபோலப் போய்க்கொண்டு இருக்கும்" சேதுவின் இடத்தில் என் தலையை பொருத்திப்பார்த்துக் கொண்டேன். சிநேகிதிகளால் நிரம்பிய கதை, சில நாட்கள் முன் இதுவரை சிரிக்காத முகத்தைப் பார்த்துச் சிரித்ததையும் சிரிக்காமல் கல்லாகிச் சென்றதையும் மனதில் ஓட்டியது.

"இமயமலையும் அரபிக்கடலும்" வாசிக்கத் தொடங்குமுன் தலைப்பை கண்டுகொள்ளாமல் கதைக்குள் தஞ்சமடைவது இயல்பு, பின் முதல் வார்த்தையோ ஏதேனும் காட்சி ஏற்படுத்தும் சிறு சலனமோ பக்கத்தை புரட்டி தலைப்பை அண்ணாந்து பார்க்கச் சொல்லும், இந்நிகழ்வு சிறுகதை வாசிப்பின் பொழுதில் மட்டுமே வெளிப்படும். சோதனைக்குட்பட்டது. "லெக்கு" என்ற வார்த்தையைக் கண்டதுமே ஓர் பேருணர்வு, தன் ஆழ்மனத்தில் காணாமல் கசங்கிக் கிடக்கும் காகித இடுக்குகளில் சிக்கிய ஓர் சொல், இன்று இக்கதையின் வழி தன்னை விடுவித்து கும்மாளமிட்டு குதூகலிக்கிறது. அச்சொல்லை அப்படியே கடந்துவிட விருப்பமின்றி மனைவியிடம் ஓரிரு வரிகள் புலம்பிவிட்டு புத்தகத்துக்குள் வந்தால் மனதுக்குள் பல்வேறு உரையாடல்கள் அத்தனையும் "லெக்கு"வை மையமாக வைத்து நிகழ்பவை. இரண்டு நாளுக்குப் பிறகே கையிலெடுக்கிறேன். நடைபயணத்தின் வழியில் தங்கத்திற்கு ஏற்படும் எண்ணவோட்டங்கள் அவளின் வேலை இடதத்திற்கான லெக்கை (திசையை) மறக்கடிக்கின்றன, இறுதியில் மிதிவண்டிக்காரர் தன் புழுங்கிய உடலை துடைத்துக்கொண்டே தன் பூவிழுந்த கண்ணால் அவளைக் கண்டதோடில்லாமல், அவர் செய்த சிரிப்பும் பள்ளிக்கூடத்துக்கு போயிருக்கியா என்ற கேள்வியும் அவளை உலுக்கிவிடுகின்றன. கதைக்கான எழுத்துகள் நிறைவடைந்த இடத்தில் அடைந்த சிறு குழப்பம், என்னடா கதையிது என்று உள்ளுக்குள் கதைத்துவிட்டு படுத்ததும், கதை அதன் போக்கில் ஒரு ஓட்டம் ஓடியதும் படக்கென கிளர்ந்தது ஓர் உணர்வு.

உறவுகளுக்குள் எத்தனை சாரங்கள், சுந்தரம் மாமாவுக்கும் அவளுக்குமான வெளிப்படையான பகிர்தலுக்கான பொழுதும், தந்தைக்கு மகளிடம் இருக்குமோர் விலகல் மனோபாவம், சரோ அத்தைக்கும் அம்மாவுக்குமுள்ள உறவால் வெளிப்படும் அளப்பரிய உணர்வு, சுந்தரம் மாமா கோடுகளை கிழித்து காகமாக்கிய பொழுதிலிருந்து பொங்கலிடும் வாசலில் கோலமிடும் வரையுள்ள கலையோடு அவருக்குள்ள உறவு, தந்தைக்கும் மாமாவுக்குமான நட்பு.
இத்தனைக்கும் மேலாக காகத்தினை கண்டதும் கா..கா..எனக் கத்தியவனுக்கும் அந்த ஓவியத்துக்குமான உறவே பேரின்பப் பெருவெள்ளம் அதில் மிதக்கும் கப்பல்களே உறவுகள்.

வியாழன், 14 மே, 2020

சங்கச் சித்திரங்கள் - வாசிப்பனுபவம்

வெகுநாட்களாகவே சங்க இலக்கியங்களை அதன் சுவையறிந்து வாசிப்பின்பம் அடைய வேண்டுமென்ற எண்ணமிருந்தது, நேரடியாகப் பொருள் புரிந்து விளங்கிக் கொள்வதைக் காட்டிலும் ஓர் அனுபவத்தின் வழி கவிதையின் இன்பத்தை அடைவது பேரின்பம். தயக்கத்துடனே "சங்கச் சித்திரங்கள்" புத்தகத்தை கையிலெடுத்தேன், மாலைப்பொழுதின் தாபத்தை ஓர் அழகான காலையில் வாசிக்கையில் தொடர்ந்து வாசிக்கும் உந்துதலை அளித்தது.

முதல் நான்கு கவிதைகளை வீட்டின் அறையிலமர்ந்து வாசித்தேன் சொல்களுக்கான விளக்கங்களை அறிவதும் புரிந்துகொள்வதுமாக வாசிப்பினிடையே சோர்வும் வந்து கதவைத் தட்டியது, நேற்று மச்சிப்படியின் அருகே நின்ற பொழுதில் உணர்ந்த குளிர்வு வாசிப்புக்கான இடமல்லவா இது என உணர்த்தியது, எப்போதும் உடற்பயிற்சிக்காக மச்சிக்கு வரும்போது உடன் தூவலும்(பேனா) ஓவியத்துக்கான ஏட்டையும் எடுத்து வருவதுண்டு, இன்று அதற்கு மாற்றாக சங்கச் சித்தரங்கள் கொண்டு வந்தேன். இருபது நிமிட கை கால் உதறலுக்குப் பின் வாசிப்பிற்காக படியில் அமர்ந்தேன். 

தென்னைமரம் போன்ற ஆனால் அதுவல்லாத பூக்கவும் காய்க்கவும் பார்த்திராத மரம் வரிசையாக நாங்கள் வசிக்கும் வீட்டிற்கு பின்னுள்ள ஓர் நிறுவனத்தின் சுற்றுச்சுவரருகே நிற்கிறது, காற்றில் அதன் கிளைகள் அசைவதால் கொஞ்சம் அனல் மறந்து அமரலாம், கனடாவின் அல்கான்க் காட்டினை பற்றி வாசிக்கும் போது சரசரவென்ற ஓசை கேட்டு மரத்தை நோக்கினேன், அணிலொன்று ஓலைகளுக்கிடையை நகர்ந்து வந்து நுனியில் நின்றுகொண்டு மச்சியை பார்த்துக்கொண்டே காலை உதறியது தாவுவதற்காக தவிப்பது போலத் தோன்றியது, என்னை அதுவரை கவனிக்காதது, சுற்றும் முற்றும் தலை திருப்பிய போது என்னைக் கண்டுகொண்டது "அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்" என்பது போல் பார்த்துக் கொண்டிருந்தோம்.
சில நாள் முன் கண்ட காணொளியில் அணிலொன்று சுவரிலிருந்து தாவி ஒருவரின் தோள் மீது பரவி அமரும் காட்சி நினைவில் வந்ததும் சில நொடி கழித்து மெல்ல கையை உயர்த்தி அழைப்பது போல் பாவனை செய்யும் முன் திசை திரும்பிச் சென்றது.




புதன், 13 மே, 2020

கதைகள் உருவாக்கும் பாதை

மூத்தவள் (ஜெபரத்திகா) நடக்க ஆரம்பிக்கும் முன்னால் நெஞ்சின் மீது படுத்துக்கொண்டு அணில் போல என் கண்களை அவதானிப்பாள், சிரித்தால் அவள் வெடித்துச் சிரிப்பாள். கி.ரா-வின் தாத்தா சொன்ன கதைகள் (தலைப்பு சரியாக நினைவில் இல்லை அதோடு இப்புத்தகம் இப்போது யாரிடம் உள்ளது என்றும் நினைவில்லை) என்ற புத்தகத்தில் மொச்சைக் கொட்டையின் வயிறு வெடிப்பது போல் ஒரு கதையின் காட்சி வரும், அதைச் சொல்லி "ட்டமார்" னு வெடிச்சிட்டுன்னு சொன்னால், உரத்தச் சிரிப்பொலி கேட்கும், பொக்கை வாய் சிரிப்பு.

வேலை முடித்து வீடடைய பத்தரைக்கு மேல் ஆகிவிடுமென்பதால், அப்போதெல்லாம் பெரும்பாலான நாட்கள் உறங்கிவிடுவாள், பள்ளி செல்லும் நாட்களில் மட்டும். அதற்குமுன் அதாவது பள்ளியில் சேரும் முன், சில இரவுகள் பன்னிரண்டு மணிவரைக்கும் நீளும் கதையாடலும் விளையாட்டுமாக, இப்போது இரு மாதமாக தொடர்ந்து வீட்டிலிருந்து பணி செய்வதால் ஒன்பதரை மணிக்குப் பாய் விரித்துவிடுவது வழக்கமாகி விட்டது. 

ஒவ்வொரு நாளும் கதைப் பேச்சிற்கு பிறகே உறக்கம் என ஆகிவிட்டது, இளையவளும் (இயல்) இந்த கதைப் பொழுதில் இணைந்துவிட்டாள் வெகு இயல்பாக இவளின் பெயருக்கேற்ப, குழந்தைகளுக்கென வாங்கிய புத்தகங்கள் பெரும்பாலானவை அதன் முகமிழந்து, பின் கை கால் என அத்தனை அங்கங்களும் அற்றுப் போயின இவள்களின் சாகசத்தால், எஞ்சியது குன்றத்தூர் பாவேந்த பள்ளியின் சில புத்தகங்கள், அவை வண்ணமும் கிறுக்கலும் பெற்று கிழிதலிலும் தோற்கவில்லை. மிஞ்சியவை சில கதைப்படங்களும் பாடல்களும்.

சில கதைகளை நானே உருவாக்கி நேரத்திற்கேற்ப கதையை நீட்டி முழக்குவேன், சலிப்பு தட்டிவிடும் பொழுதில் முதல் காட்சியை நானும் அடுத்த காட்சியை அவளுமாக மாற்றி மாற்றி உருவாக்குவோம், இந்த மாதிரியான கதை உருவாக்கலுக்கு முன் ஓரிரு குட்டிக் கதைகளை அவளுக்கு பரிசளிக்க வேண்டும், (சமயத்தில் குட்டிக் கதைகளினூடே தூக்கம் அவளை அள்ளி அணைத்துக் கொள்ளும்). அதற்கு சிறுவர்களுக்கான எழுத்தாளர் விழியன் "வாட்சப் (புலனம்)" வழியே நாள் தோறும் பதிவிடும் கதைகளையும், பாவேந்தர் பள்ளியின் முதல்வரும் கதைசொல்லியுமான ஐயா வெற்றிச்செழியன் அவர்களின் கதையாடல் வலையொளித் (யூ ட்யூப்) தொடரில் சொல்லப்படும் கதைகளையும் வாசித்தும் கேட்டும் மகள்களிடம் கடத்துகிறேன்.

இரண்டு நாட்களாக ரத்திகா கேட்கிறாள் "அப்பா இந்த சிங்கங்கத மாட்டுக்கத மீன்கத அப்றோம் காக்கா கதல்லாம் எங்கப்பா படிச்ச" 

"புத்தகத்துல தாம்டே படிச்சேன்"

"எனக்கு காமியேன்"

"அது செல்லுல இருக்குமா, கடையெல்லாம் துறந்தொடனே புத்தகமா வாங்கித்தாரேன் சரியா, இதுல எழுத்தா இருக்கு பாரு, படமே இல்ல, ச்சீ" என்று செல்லை நீட்டியதும் சிரித்துக்கொண்டே ஓடினாள். 

அப்போ இவள்கள் செல்பேசியில் எதுவுமே பார்ப்பதில்லையா எனக் கேட்டால் அதுவும் உண்டு, அதற்கான அடாவடித்தனங்களுமுண்டு. 
@

எழுத்தாளர் விழியனின் கதைகளை தினமும் வாசிக்க, உங்கள் பெயர் மற்றும் ஊர் உடன் ஒரு வாட்சப் தகவலை "90940 09092" எண்ணுக்கு அனுப்புங்கள். கதைகள் கொட்டும்.

ஐயா வெற்றிச் செழியன் அவர்ளுடைய கதையாடல் தொகுப்பில் இதுவரை இருபத்தியாறு கதைகள் வந்துவிட்டது, அதற்காக சொடுக்குங்கள் https://www.youtube.com/playlist?list=PLh6l104YXvxLkFyFG3NECtykhyqX99DgU

கதைகள் ஒலிக்கட்டும்