சனி, 27 அக்டோபர், 2018

விஜய் பிச்சுமணியின் செதுக்கோவியங்கள்


கடந்த பத்து நாட்களாக இதோ அதோவென இன்று தான் வாய்த்தது விஜய் பிச்சுமணியின் ஒவியங்களைக் காணும் நாள். இணையத்தில் அவரது ஒவியங்களை பார்த்திருந்தாலும் நேரில் அவை எழுப்பிய உணர்வுகள் பிரம்மிக்கத் தக்கதாக இருந்தது. கண்ணாடிக் கதவுகளுக்கு வெளியில் இருந்த “Share Auto” ஒவியம் அழகையும் நகைப்பையும் ஒருசேர அனுபவிக்கச் செய்தது, குறிப்பாக பகிர்ந்தூர்தியில் இருந்த பெண், ஆண் மற்றும் ஓட்டுனரின் கண்கள். உள் நுழைந்ததும் முதலில் “The Guard” என தலைப்பிடப்பட்ட ஒவியம் பார்க்கக் கிடைத்தது, அது ஓர் மரச் செதுக்கு ஒவியத்தை காகிதத்தில் அச்செடுக்கப்பட்ட படம். அதன் கருப்பு வெள்ளைச் செதுக்கு கீற்றுகள் நகர விடாமல் உள்ளிழுத்துக்  கொண்டது.

அச்சுப் பிரதி ஓவியங்கள் பால்யத்தின் நினைவுகளை கிளர்த்தி விட்டன. தலையிலிருக்கும் எண்ணையை அளி ரப்பரில் தேய்த்தெடுத்து புத்தகத்திலுள்ள எழுத்துக்களிலோ படங்களிலோ ஒற்றி எடுத்தால் ஒட்டிக்கொண்டு வரும். அதன் தொடர்ச்சியோ இதுவென எண்ணத்தோன்றியது. இதை எப்படிச் செதுக்கி அச்சு செய்திருப்பார் என்ற அறிதல் நோக்கில் மனம் உழன்று கொண்டிருந்தது, அதுபற்றி உரையாட வேண்டுமென்ற எண்ணம் மேலோங்கியது, ஆனால் நான் சென்ற வேளையில் ஓவியர் இல்லை.

ஓவிய வடிவங்களும் மொழி வடிவங்களும் ஒன்றுக்கொன்று பிணைந்திருப்பதாகவே தோன்றுகிறது. சில ஓவியங்கள் சிறுகதையோடும், நாவலோடும் கவிதை மொழியோடும் ஒன்றிப் போகும். அப்படியான ஓவியங்களை படைக்கும் சாத்தியங்கள் விஜயின் படைப்புகளில் ஒளிர்கிறது. காகத்தின் இத்தனை அசைவுகளை வேகத்தை பண்புகளை மரச் செதுக்கில் வேட்டையாடியிருப்பது ஆச்சரியத்தையும் பிரம்மிப்பையும் கொடுக்கிறது. நிலப்பகுதியை காக்கா பார்வை பார்த்திருப்பதிலிருக்கும் அடர்த்தியான கோடுகள் வியப்பில் ஆழ்த்துகின்றது, அதன் அச்சு ஓவியம் மட்டுமே காட்சியிலிருந்தது ஏமாற்றமளித்தது. காடு பறவைகள் விலங்குகள் கொஞ்சம் மனிதர்கள் என ஓர் காட்டின் கவிகைப் பரப்பில் பார்வையையும் நிலப்பரப்பில் கால்களையும் ஊன்றிக்கொண்டு வனத்துக்குள் சென்று வந்த உற்சாகம்.

சனி, 20 அக்டோபர், 2018

கோவேறு கழுதைகள் - வாசிப்பு


ஆரோக்கியத்திடமிருந்து தான் கதை தொடக்கம் கொள்கிறது, அவளே மைய்யமாகயிருந்து கதையை நகர்த்துகிறாள். வண்ணாரின் குடும்ப வாழ்வை வேறு யாரேனும் எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. கீழ்சாதிக்கும் கீழ்சாதியாக அல்லல் படும் இவர்களின் கதை நெஞ்சை அழுத்துகிறது. பிழைத்துக் கிடக்கும் அவ்வூரிலுள்ள மற்றய மனிதர்களைப் போலல்லாமல் சோற்றுக்கும் போக்குக்கும் சார்ந்திருத்தலும் அண்டிப் பிழைத்தலுமென ஒவ்வொரு பொழுதும் கசந்து கழிகிறது அவர்களுக்கு. ஆரோக்கியத்தின் ஓட்டத்திலேயே, உரையாடல் வழி நாம் அறியாத அவர்களின் வாழ்வை வலியை இழப்பை வாசிக்கையில் உள்ளம் கனக்கின்றது.

ஒட்டுமொத்த காலனிக்கும் ஒரேயொரு குடும்பம் அடிமையாகி பிழைப்பு நடத்தும் வகையில் இச்சமூக அமைப்பை கட்டமைத்தது யார் என்ற பெருங்கேள்வியை இப்புதினம் அல்லது இவர்களின் வாழ்வு தொடக்கத்திலேயே எழுப்பிவிடுகின்றது. தானியத்தை பிரித்தெடுத்து வேலை இறுதி கட்டத்தை நெருங்கும் பொழுதில், ஆகாத நைந்து போன  முறத்தை எடுத்து தூற்றச் சொல்வதும், மூன்று முறம் தானியம் கூலியாக கொடுக்க வேண்டிய இடத்தில் இரண்டு முறம் கொடுத்து உழைப்பைச் சுரண்டுவது என நீளும் வரியெங்கும் அடக்குமுறைகள். வசைச் சொல்லையும் வாங்கிக் கொண்டு கொடுப்பதை மட்டும எடுத்துக் கொண்டு மௌனித்திருக்க எழுதாத சட்டத்தை இயற்றியவர்கள் யார் என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

கிறித்தவர்களாக இருந்தும் சாதியின் பிடியிலிருந்து அகல இயலாமலிருப்பது சாதியமைப்பை மத மாற்றம் எதுவும் செய்துவிட முடியாது என்பதைக் குறிப்பதாகவுள்ளது. அடிக்கடி வந்தால் தான் இறைவன் கண் திறப்பான் எனச் சொல்லும் சாமியாரான பாதிரியாருக்கு, இல்லாதவனுக்கு இறைவன் இல்லை எனும் சவுரியின் சொல்லையே பதிலாகக் கொடுக்கலாம். ஒரு நாள் ஊரிலிருந்து வெளி சென்றுவர காலனியிலுள்ள மொத்த வீட்டு வாசலிலும் அனுமதி வேண்டி நிற்பதெல்லாம் அம்மனிதர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் மிகப்பெரிய சதி. அந்தோணியார் இருக்கிறார் என்ற நம்பிக்கையிலேயே ஆரோக்கியம் வாழ்க்கையை புலம்பல்களுக்கிடையே நகர்த்துகிறாள்.

சாவு வீட்டில் பாடை கட்டுவது, திருமண வீட்டில் மணவறை கட்டுவது, கிழிந்த துணிகளை தைத்துக் கொடுப்பது, பிரசவம் பார்ப்பது, பீத்துணி, மூத்திரத்துணி, உடுப்புத் துணிகளை வெளுப்பது என பொழுதும் வேலைக்கிடையே வெந்து வாழும் வாழ்வு. சடையனால் வல்லுறவுக்கு ஆளாகும் போது மேரிக்குள் எளும் இவ்வாழ்வு பற்றிய கேள்விக்கு பதில் தன் தாத்தனுக்கும் பாட்டிக்கும் தெரிந்திருக்கூடுமென அக்கேள்வி மரித்துப் போகிறது.

ராணிக்கும் மேரிக்குமிடையே உள்ள நட்புறவையும் ஊருக்கு பயந்து மறைமுகமாக சந்தித்துக்கொள்ளும் அவர்களின் நிலை பற்றியும் மிகக் குறைவான வரிகளில் அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது.

இப்படியொரு வாழ்வினை இவர்கள், குறிப்பாக ஆரோக்கியம் அதிலிருந்து விலகாமல் இருப்பது உறுத்தலாக இருந்ததால் வண்ணார்களின் வரலாறு என்னவாக சொல்கிறது எனத்தேடிப் பார்த்தால், மற்ற சமூகத்தைப் போலவே இவர்களுக்கும் கதைப்பாடல்கள் உள்ளன. அக்காலத்தில் தெய்வத்துடன் தொடர்பு படுத்திக் கதையெழுதி மக்களுக்கு உரைத்துவிட்டு, அத்தெய்வத்தின் பெயரில் தொழில் செய்து கிடப்பதும் அதை பெருமையாக எண்ணும் எண்ணத்தினையும் விதைத்திருக்கிறார்கள். கி.ரா-வின் புதினமா கட்டுரையா என நினைவில்லை அதில் ஒரு வரியுண்டு “ அவர்களோட மூன்னோர் செஞ்சி கொடுத்த சத்தியத்துக்கு கட்டுப்பட்டு தான் இவங்க நமக்கு சேவகம் செய்துகிட்டு கெடக்காங்க” என்பது போல, அது நினைவில் வந்தது..

சலவைக்காரனும், தையல் கலைஞரும் ஊருக்குள் வரவும் ஆரோக்கியத்துக்குக்கான வெளுக்கும் வேலையில் தடங்கல் ஏற்படுகிறது, காலனிக்காரர்கள் சோறும் தானியமும் கொடுப்பதில் விருப்பமில்லாமல் போகிறார்கள். கிடைக்கும் துணியை எடுத்துக்கொண்டு தொரப்பாட்டுக்கும் வீட்டுக்குமாகவும், குண்டானையும் போகணியையும் தூக்கிக்கொண்டு சோத்துக்கும் வீட்டுக்கும் நடையா நடக்கிறாள். அழுகையோடு ஒப்பாரியும் பாடலும் வைக்கிறாள். அவளின் புலம்பல்கள் வாழ்வின் தத்துவார்த்தத்தை உதிர்த்துக் கொண்டேயிருக்கின்றன.

அட்டைப் படத்திலுள்ள கோட்டோவியத்திலுள்ளது சவரி என்றே எண்ணுகிறேன் ஆனால் அவன் கையில் ஏன் அரிவாளை கொடுத்திருக்கிறார் ஓவியர் என யோசனையாக உள்ளது. அது அரிவாள்தானா என்ற எண்ணமும் மேலிடுகிறது.

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

அருபமெனும் நிலவெளி

அரூப ஓவியங்களின் வெளிப்பாடு பெரும் அயர்ச்சியை அளிப்பவையாகவே இருந்து வருகிறது. ஆனாலும் அதனை அனுபவமாக மாற்றிக்கொள்ள குறைந்தபட்ச முயற்சி தேவையிருக்கின்றது. இருவருடங்களுக்கு முன்பு சென்னை வாரயிறுதி ஓவியர்களின் கண்காட்சியை காண்பதற்காக சென்றிருந்த பொழுதில் எதிர்பாராத விதமாக ஓர் படைப்புருவாக்கத்தை நேரிடையாக பார்க்க வாய்ப்பு அமைந்தது. வண்ணங்களை பிதுக்கி கித்தானில் தேய்த்துவிட்டு தூரிகையால் நிறமாற்றங்களை உருவாக்கிக் கொண்டே வந்தவரின் அப்படைப்புச் செதுக்கலை கண்ட எனக்கு, அதுவோர் இயற்கை காட்சியாக உருவம் கொள்ளும் என்ற எண்ணம் மேலெழுந்தது, ஆர்வம் அதிகரித்தது வண்ணப் பயன்பாட்டை பார்த்த கண்களுக்கு.

ஓவியம் தீட்டுதல் முற்றுபெற்றது இறுதியாக ஓர் சிவப்புப் பட்டையை நீவி விட்டதன் பின், ஆம் தன் விரல்களால் ஓவியர் விஸ்வம் அவ்வண்ணத்தை இடது பக்கமாக நீவி விட்டார். அங்கே அமர்ந்திருந்த மற்றொரு ஓவியரை அவ்வோவியம் பற்றி பேச அழைத்தனர் அவர் அப்படைப்பை ஒரு மாய நிகழ்வு என்று கூறி பேசத் தொடங்கினார். எனக்கு அதுவொரு இயற்கையின் வடிவமென்றே புலப்பட்டது. அதற்குப் பின் அரூப ஓவியங்களை காண நேர்கையில் அதன் உருவாக்கத்தை மனதிலேற்றும் முயற்சியால் ரசிக்க பழகுகிறேன், ஓரளவு வரையத் தெரிந்த என்னால் படைப்பு உருவாக்க பார்வையிலேயே பார்த்து லயிக்க முடிகிறது. ஆனால் அதன் இறுதி வெளிப்பாடு இன்றும் அயர்ச்சியளிப்பதாகவே உள்ளது. அருபம் என்பதை ஓர் தொடர் நிகழ்வு நடைபெறவேண்டிய வெளி என்றே நினைவில் அழுந்தப் பிடித்துக் கொண்டிருக்கிறேன். முடிவற்றது.

வீட்டிலிருந்து இரு தெருக்கள் கடந்து வெட்டவெளியில் பூங்கா அமைப்பு போன்ற சிமெண்ட் பலகைகள் இரண்டு கொண்ட இடம், அங்கு அமர்ந்து வேடிக்கை பார்ப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலாது. வடக்கு நோக்கியமர்ந்தால் நிலவெளி தெற்கு பக்கமிருக்கும் சாலையை விட பார்வைக்கு தோதானதும் இதமானதும் கூட. கண்ணின் கிடைமட்ட பார்வை அளவிலிருந்து பார்வையை நீட்டும் முன்  சட்டமொன்றை கற்பனையில் உருக்கொண்டு வந்து நோக்கினால் செம்மண் நிறத்தில் மிதக்கும் சிவப்பும் சிவப்பு கலந்த வெண்மையும் அதனை சுற்றிலும் சிதறலாய் பரந்து கிடக்கும் பச்சையும் கொஞ்சம் மஞ்சள் கலந்த பச்சையும் ஒட்டிக் கொண்டிருக்கும். சட்டத்தின் மேல் பக்கத்தில் வெண்பச்சை திரண்டு நிற்க அதன் கீழ் கவியும் இருள் பச்சை, கோடுகளாய் கீழிறங்கும் இருளில் மங்கிய பழுப்பு நிறம்.

சட்டத்தின் உருவை விலக்கினேன், பெருவெளியொன்றை உள்ளிழுத்துக் கொண்டது அந்நிலம், அத்தொடர் நிகழ்வை இயற்கை நிகழ்த்தத் தொடங்கியது.

திங்கள், 3 செப்டம்பர், 2018

கலை வாசிப்பின் தொகுப்பு


கலை என்றால் என்ன அதில் அழகியலின் வடிவம் எது என்ற தேடல் போக்கு இந்த வாரங்களில் வியாபித்து நிற்கிறது. எங்கிருந்து தொடங்குவது என்பது பெருத்த கேள்விக் குறியாக மறித்து நிற்கையில் அலமாரியில் ஒழிந்து கொண்டிருந்த “Contemporary Art in India The Perspective” எனும் நூல் கையில் சிக்கியது. மேற்குலகை அடிப்படையாகக் கொண்டு நாம் வழும் சூழலின் கலைகளை புரிந்து கொள்ள இயலுமா எனும் கேள்வி எழுந்தபோது இந்தியக் கலைகளைப் பற்றி முதலில் வாசிக்கலாம் எனும் எண்ணம் மேலோங்கியது.

இவ்வெண்ணம் ஏற்பட தொடர்ந்த சிதறலான வாசிப்பும் ஒரு காரணம், ஜூன் மாத தடம் இதழில் கலை விமர்சகர் இந்திரன் எழுதிய தமிழ் அழகியல் எனும் கட்டுரை இந்திய தமிழக கலைகளை நோக்கிச் செல்ல உத்வேகம் கொடுத்தது. அதுபோலவே உற்சாகத்தையும் ஒரு பாதையையும் விளங்கச் செய்த, மேற்சொன்ன புத்தகத்தில் வரும் ஒரு பெயர் ஆன்ந்த கெண்டிஷ் குமாரசாமி. இதற்கு முன்னர் “அச்சப்படத் தேவையில்லை” எனும் புத்தகத்தில் குமாரசாமி அவர்களை பற்றிய கட்டுரை ஒன்றை வாசிக்கும் போது எனது தேடலுக்கான ஒரு புள்ளியொன்று காணக் கிடைத்திருப்பதாகத் தோன்றியது. மீண்டுமொருமுறை அக்கட்டுரையை வாசித்துப் பார்த்தேன். அத்தோடு அவரது நூல்கள் இரண்டை பதிவிறக்கம் செய்திருக்கிறேன். வாசிக்க வேண்டும்.

ஒன்றைப் பற்றிய புரிதல் இல்லாமல் அதனை ரசித்துவிட இயலுமா என்றால் இல்லை என்று சொல்ல இயலும். புரிதல் இல்லாமல் போனால் ஒன்று எப்படிச் செதுக்கியிருக்கிறான் பார் என்ற பிரம்மிப்பிலேயே விலகிச் செல்ல நேரிடும். இரண்டாவது வெறுத்து ஒதுக்கும் மனப்பான்மை இதற்குப் பின்னால் இருப்பது தனக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்ற அறியாமை போக்கு. மூன்றாவது சிற்பமோ ஒவியமோ வழிபாட்டுக்குரியதாக மாறும் போதும் கலையும் அது அதுவாக இருப்பதில்லை.

இரு மாதத்திற்கு முன்னர் மீனாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்த போது அங்குள்ள சிற்பங்களை நுட்பமாக நோக்கச் செய்த்தற்கு “சிற்பம் தொன்ம்ம்” நூல் வாசிப்பு மிக முக்கிய காரணம். அதேபோல் ஓவியங்களை ரசிக்க அதன் வரலாற்றை விளங்கிக் கொள்ள படியாக இருக்கும் பனுவல் “தமிழக் ஒவிய வரலாறு”. கசடுகள் கவிந்த மனதை, சூழலையும் மனிதனையும் கலையாக ரசிக்கச் செய்ததற்கு இச்சில ஆண்டு வாசிப்புகள் மிகமிக அடிப்படை. தேடலின்றி அமையாது வாசிப்பு, தொடர்ந்து தேடுவேன். ஓவியம் சிற்பம் சார்ந்த புனைவுகளையும் தேடிக் கொண்டிருக்கிறேன். வாசிப்போம்.

புதன், 4 ஜூலை, 2018

சுயவாசிப்பு

பெரும்பாலும் பயணங்கள் புத்தகத்துடனே தொடக்கம் கொள்கிறது, ஆனால் அறைக்குள் தொடர்ந்து நீளும் வாசிப்பைப் போல பயணத்தின் வாசிப்பு இருப்பதில்லை. புத்தகத்தை கையிலெடுக்கும் போது யாரோவொருவர் அலைபேசியில் கத்திக் கத்திப் பேசுவதைக் கடந்து வாசிப்பு வளர்கையில் இரண்டாவது வார்த்தையோ வரியோ கண்களை பேருந்தின் இரயிலின் சாளரத்தை நோக்கித் திருப்பும், முதல் வார்த்தையோ வரியோ அப்படி சில பொழுதுகளில் செய்வதுண்டு.

அதற்குப் பின் நினைவின் அடுக்கிலிருந்து பயணவேகத்தை துரத்திக்கொண்டு வார்த்தைகள் வந்து விழும், இதையெல்லாம் எழுதாமல் விடுகிறோமே என்றொரு ஏக்கம் சன்னலோரத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் மனவோட்டம் எந்தத் தடையுமின்றி காட்டாறு மேல் பயணிக்கும் சருகு போலவோ நாய்க் குட்டி போலவோ வளைந்து நெளிந்த நீண்ட பாதையில் ஓடிக் கொண்டிருக்கும்.

வாசித்த அவ்வரிக்கு சிறிதும் தொடரபற்ற சிந்தனைகளை விரவி கேள்விளை பரப்பிச் செல்லும், சடாரெனத் தோன்றும் மலைகளும் காடுகளும் அப்பகுதியைச் சிதைத்து வேறொரு நினைவடுக்கினுள் சிக்குண்டு கிடக்கும் கதைகளை, கேள்விகளை பிணைத்து உருக்கொண்டுவரும். வாசிப்பையும் விஞ்சும் சுய வாசிப்பின் நேரமது.

திங்கள், 11 ஜூன், 2018

கொமோரா - வாசிப்பு

சொரக்காபட்டியிலிருந்து கட்ராம்பட்டிக்கும் கம்போடியாவுக்கும் கதை தன்னை வெட்டி வெட்டி அங்கங்கே நிறுத்தி நகரும் தொடர்ச்சியற்ற பின்னல். கதையென்ற துணுக்கின் வழியே தத்துவ விசாரணைகளை நிகழ்த்திச் செல்கிறது.

ஒருவாரமாக கிடைத்த நேரத்தில் வாசித்து முடித்திருக்கிறேன், இவ்வாரத்தின் ஒவ்வொரு இரவும் கனத்த கேள்விகளை செரிக்க இயலாமல் கடந்து வந்தது ஆச்சரியத்தை எழுப்புகிறது, புதினங்களை வாசித்தல் என்பது வாசகன் தன்னை சுய விசாரணை செய்துகொள்ளக் கூடிய நிகழ்களம். அதற்கான ஊள்ளீடுகளையும் பரந்த வெளியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது கொமோரா.

புதன், 4 ஏப்ரல், 2018

கோடுகளும் நிழல்களின் சேர்க்கையும்






இசை வாகனன்


உட்கார்ந்து கதவை அடைத்ததும் ஒலிச் சரட்டினை (சரடு-Wire) கையில் தந்து பாட்டு போடுங்க கேக்கலாமென்றார். எனக்குள் ஆச்சரியம் பெருகி 6249 எண் கொண்ட வாகனமும் ஓட்டுனரின் முகமும் சடுதியில் தோன்றி மறைந்தது, ஏனென்றால் இதற்கு முன் ஓலா தொடுதிரையை காண்பித்து அதிலுள்ள பாடல்களை தேர்வு செய்து கேட்க அவர் சொன்னதும் அதே போல் இல்லையென்றாலும் அதையொற்ற நிகழ்வென்பதால் சிறு நினைவோட்டம். கடந்த ஓரிரு ஆண்டில் இப்படியொருத்தரும் கேட்டதில்லை.

அவர் பாடல் போடச் சொன்னதும், என்னிடம் பழைய பாடல்கள் தான் இருக்கிறது அது பிடிக்குமோ என்னவோ என்றேன். இப்போதிருப்பது நாமிருவர் தான் அதனால் எதிர்ப்பு எதுவும் வரப்போவதில்லை என தெளிவாகச் சொல்லிமுடிக்கவும் ஒரு பாடலை ஒலிக்க விட்டேன், இதுவரையில் சந்தித்திராத அவரது முகமும் உள்ளமும் ஒருசேர சந்தித்தில் அதற்கேற்றதொரு பாடலிலே விரல் பதிந்தது. அடுத்தடுத்த இரண்டு பாடல்களுக்குப் பின் “அப்பனென்றும் அம்மையென்றும்” என ஒலிக்கத் துவங்கவும் சத்தத்தை மெல்ல உயர்த்தி புன்னகைத்து அனுபவித்தார். ஒலிக்காமல் கிடந்த பேழைகள் உற்சாகமடைந்த உணர்வு எனக்குள்.

ஒரிரு பாரதி பாடல்களுக்குப் பின் இறுதியாக “தீர்த்தக் கரையினிலே” எனும் பாரதி பாடல் ஒலிக்கவும், எஸ்.பி.பி யோட பழைய குரலில்லியா என்றார், நான் மெல்ல புன்னகைத்து ஆரம்ப காலகட்டமாக இருக்கக்கூடும் என்றேன். பாடல் முடியவும் அலுவலக நுழைவாயில் தொடங்கவும் சரியாக இருந்தது. இவரது வாகன எண்ணும் நினைவில் நிற்கக் கூடும்.

செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

கத்தரிப்பூ சட்டைக்காரர்


கரையாஞ்சாவடியில் இறங்கி கத்தரிப்பூ நிறச் சட்டையணிந்தவரையும் அவருக்குப் பின்னாலிருந்த இனிப்பகத்தையும் (அக்கடையை இனிப்பகம் என்றுரைப்பதா பேக்கரி என்றுரைப்பதா என என் தமிழ் மனம் ஒரு கேள்வி கேட்கிறது, அது என்ன தமிழ் மனம் என நீங்கள் கேட்கலாம். ஆம் இங்கே தமிழகத்தில் அலுவலுக்கொரு மொழி வாழ்வுக்கொரு மொழி அகம் சார்ந்து ஒரு மொழி என ஒன்றே பலவகையில் சிதைந்து அல்லது கலந்து கிடப்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது அதுதான் யதார்த்தம் எனவும் மொழி பற்றிய சிந்தனையே இல்லாமலும் இருக்கலாம், அது உங்கள் பாடு.) கடந்த பிறகும் ஆவடியிலிருந்து கரையாஞ்சாவடிக்கு மிதவைப் பேருந்துக் (அரசுப் பேருந்து எல்லாமே ஒன்றுதான் என்றாலும் வடிவத்திலும் பெயர் பலகையின் நிறத்திலும் வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது, அதற்காகவேனும் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு வெவ்வேறு விலையில் காசு கொடுத்தாக வேண்டியுள்ளது (இவ்விடம் காசு என்று எழுதும் போது தான் பழைய பயணச்சீட்டுகளை இப்போதெல்லாம் பார்க்க முடிவதில்லை என்பது நினைவில் வருகிறது, புதிய விலையில் அச்சடிக்க வருத்தப்பட்டு அனைத்து நடத்துனரின் கழுத்திலும் மின்னணு எந்திரத்தை தொங்கவிட்டுவிட்டதோ என்னவோ) இப்பொழுது ஐம்பது ரூபாய் ஒருநாள் பயணச்சீட்டும் கிடையாது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது, ஏனென்றால் இரு மற்றும் நான்கு சக்கர உரிமையாளர்கள் மற்றும் பயணிகள் இது என்ன தமாசு என போய்விடக் கூடாதல்லவா) கட்டணம் பத்தொன்பது ரூபாய் என்பது குறைவு எனப்பட்டது.      (கம்பெனி (குன்றத்தூர்) நிறுத்தத்திலிருந்து கரையாஞ்சாவடிக்கு ஏன் பூந்தமல்லிக்கும் இருபத்தி மூன்று என்பதனால், இதெல்லாம் இங்கு தேவையற்றதுதான் என்றாலும் சொல்லவேண்டிய கட்டாயம் காலத்திற்கு உண்டு என்பது போல எழுத்துக்குமுண்டு, மேலும் இது ஒரு உள் மன ஓட்டம் என்பதனால் இதனை தவிர்த்து விட்டு செல்ல உங்களுக்கு முழு விடுதலையும் உண்டு) கண்ணாடிக்கு பின்னாலிருந்த ரொட்டியின் மேலுள்ள பாலேடுகளைக் கண்டதும் தன் விரல்களால் தொட்டு சப்பிச் சப்பி சிரித்துச் சுவைக்கும் இரண்டு வயதுக்குள் சொத்தையான பற்களையுடைய என் மகளின் நினைவு வந்ததும் கடையை நோக்கித் திரும்பினேன்.

அவரைக் கடக்கவும்சார்என்ற குரல் கேட்டது, கத்தரிப்பூ நிறச் சட்டைக்காரர் பேசத் தொடங்கினார், அதோ இருக்கிறதே மஞ்சள் வண்ணக் கட்டிடம் அங்குதான் உடல் ஆரோக்கியத்துக்கு வழி சொல்லும் எங்கள் அலுவலகம் உள்ளது என்றதும் பின்னால் திரும்பி மஞ்சள் நிறம் தெரிகிறதா என நோக்கி காணக்கிடைத்ததும் (இரவில் அது தூய மஞ்சளாக இல்லை, ஆனால் பகலில் பார்த்தால் மஞ்சளாகத்தானிருக்கும் என்ற எண்ணத்தை உருவாக்கியது, ரஜினியும் கமலும் வந்தால் தமிழகம் சரியாகிவிடும் என்பது போன்ற போலித்தன்மை அதில் இல்லை என தாராளமாகச் சொல்லலாம்) என்னை நோக்கி நீட்டப்பட்டிருந்த அம்மெல்லிய இளம் மஞ்சள் நிறத்திலான அட்டையில் கிளிப்பச்சை நிறப்பட்டைக்குள் கருப்பு எழுத்துக்கள் வெகு சொற்பமாகவே பொறிக்கப் பட்டிருந்தன, அதைப் பெற்றுக்கொள்ள விரல்களால் தொட்டதும் அது மிக அழுத்தமாகப் பிடிக்கப்பட்டு எதையோ (எதையோ என்று எழுதிவிட்டுப் போவது அவ்வளவு இனிமையாய் இருக்காது என்பதால் அவ்வழுத்தம் அக்கணத்தில் குற்றவுணர்வுக்கு ஆட்படுத்தியது என்பதை சொல்ல விரும்புகிறேன், யாருக்குத் தெரியும் அது அவர்களது மேலாண்மை தத்துவமாக அல்லது கற்றுக்கொடுக்கப்பட்ட பாடமாகக் கூட இருக்கலாம்) குறிப்புணர்த்துவது போல் இருந்ததும் விரல்களின் பிடியை விடுவித்து அவரின் முகம் பார்த்தேன் நன்றாக மழித்து சவரம் செய்யப்பட்ட தாடை, நேர்த்தி செய்யப்பட்ட மீசை, உள்சொருகப்பட்ட சட்டை, சட்டையின் நிறம் உங்களுக்கு பரிச்சயமானதுதான். சத்தான உணவுகளைப் பற்றி தெரிந்துகொள்ள விருப்பமுள்ளதா என வினவினார். ஆமாம் என்றதும் எப்படி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது, அதன் மூலம் கொழுப்பு சேராமல் தடுக்கலாம் என்று எனது தொப்பையை கண்டு சொன்ன போது அவருக்கு தொப்பை இல்லை என்பதை கண்டு கொண்டேன் (பசியில் வாடிய வயிறாகக் கூட இருக்கலாம், மேலும் அவரிடம் கொஞ்சம் உண்மையைச் சொல்லலாம் என்று கூட எண்ணம் எழுந்தது), இதைப் பற்றி அறிய ஆவலுள்ளதா என்றார். தற்போது உடற்பயிற்சி செய்து வருகிறேன் அது போதும், எவ்வளவு நாளாக செய்கிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள் என்று மீண்டுமொரு முறை தொப்பையோடு முழு உடலையும் ஒட்டு மொத்தமாக பார்த்துவிட்டு கேட்ட போது அவரது வலது நெஞ்சுக்கு சற்று மேல் குத்தப்பட்டிருந்த வட்ட வடிவிலான எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட அடையாளத்தினைக் கண்டேன், “எடையை குறைக்க வேண்டுமா என்னிடம் கேளுங்கள்” என்ற வாசகம் வெள்ளை நிறப் பின்னணியில் சிவப்பு எழுத்துக்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இருக்கட்டும் என்ன வகை உணவு சாப்பிடுகிறீர்கள், நான் சாப்பிடாத காய்கறிகளை பழ வகைகளை கூறியதும், வேறுவகை உணவு பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா, இல்லை சிறுதானியமெல்லாம் உண்ணுகிறேன் அதனால் போதுமென்று நினைக்கிறேன் என்றதும், இன்னொரு முறையும் அதே கேள்வியை தொடுத்தார், தேவையில்லை என்றேன். சரி என்ற சொல்லோடு முகத்தைத் திருப்பினார், இனிப்பகத்தில் இனிப்பு ரொட்டியும் (பாலேடு இல்லாத) பூண்டு முருக்கும் வாங்கிக் கொண்டு மறுபடியும் அவரைக் கடந்து பின் பேருந்தில் மாங்காடு வரையிலும் வந்த பின்னர் ஒரு எண்ணம் அவரிடம் இன்னும் பேசியிருக்க வேண்டும், என்ன வகை உணவை பரிந்துரைக்கிறார் என அறியக் கிடைத்தால் அது யாருக்கான வியாபாரம் என ஓரளவு புரிந்து கொண்டிருக்க முடியும். அதே வேளை அவர் கையிலிருந்த மஞ்சள் நிறத்தை பிரதிபலித்த வெள்ளை முகவரி அட்டையினை கையில் வைத்துக்கொண்டு பயணித்தால் நகரத்து இரவின் ஒளிகள் அதோடு கலந்து செய்யும் ஒளியின் சாகசங்களை அனுபவிக்கலாம் என்றெண்ணிய பொழுதில் சாலையின் ஒரு மருங்கில் ஒளிர்ந்து கொண்டிருந்த சிவனும் பார்வதியும் கண் வழியே மூளை வரை வலிக்குமளவு ஒரு கோடு கிழித்தது போன்ற உணர்வு.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

வெண்ணிற இரவுகள் - வாசிப்பு

முன்பொரு முறை நூலகத்திலிருந்து சூதாடி புதினத்தை எடுத்து வந்து வாசிக்கும் பொழுது அதன் தொடர்ச்சியான எழுத்து ஓட்டம் மலைப்பை ஏற்படுத்தி திருப்பி கொடுக்கச் செய்தது, அது வெற்றுப்புலம்பலாகப் பட்டது எனக்கு, அதுபோலவே இருந்தது வெண்ணிற இரவுகள் ஆனாலும் கதை உள்ளத்தின் ஒட்டடைகளை விலக்கி பல நினைவுகளையும் நிகழ்வுகளையும் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தது, ஒருவேளை இப்போது சூதாடியை வாசித்தால் ஏதாவது புலப்படுமோ என்னவோ. இப்படியான தொடர் உரைநடையின் வடிவில் எழுதப்பட்ட "பாகீரதியின் மதியம்" தமிழ் புதினம் பெரும் கிளர்ச்சியை உருவாக்கியது.

நாஸ்தென்காவிடம் தன்னைப்பற்றிய கடந்த காலத்தை விளக்குவதை நாடக பாணி என ஒப்புக்கொண்டே சன்னதம் வந்தது போல இடைவிடாது சொற்கள் பனியாய் கொட்டத்தொடங்குகிறது அவனிடமிருந்து, ஆனால் நாஸ்தென்கா அவளைப் பற்றி கூறுமிடம் உரைநடையில் மாற்றம் தெரிகிறது,  அவரவர் மனவோட்டத்திற்கேற்ப எழுத்தை கட்டமைப்பது கதையாசிரியனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதைவிட வாசகருக்குள் அவ்வேறுபாட்டை உணரவைப்பது மிக முக்கியம்.

இருவருக்குள் நடைபெறும் பெரும் உரையாடலை அல்லது புலம்பலை இறுதியில் கதையின் மையமான பாத்திரமொன்று வெகு இயல்பாக முடித்து வைக்கிறது, அவனது தனிமை அங்கிருந்து மீளத்தொடங்குகிறது.

வெள்ளி, 26 ஜனவரி, 2018

ஓவியக் கண்காட்சியில் சில நிமிடங்கள்

யாருமில்லாத அக்கூடம் அமைதியாகத்தான் இருந்திருக்க வேண்டும் அப்படியில்லை அங்கிருந்த உருவங்கள் உரையாடிக் கொண்டிருக்க அவ்வமைதி அவ்வோவியங்களுக்கு தேவையாக இருந்திருக்கலாம் ஆனால் அதில் உடன்பாடில்லாமல் மரத்தாலும் கண்ணாடியாலுமான கதவைத் தள்ளி உள் நுழைந்தோம், அவைகள் பேச்சை நிறுத்தி விட்டது போலவே புலப்பட்டது. அழகாக இருக்கும் யாருமற்ற நிலவெளி போலத்தான் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருந்தது, யாருமில்லாமல் எப்படி அழகாக இருக்க முடியும் அல்லது அப்படி இருப்பது போல் கூற இயலுமா, முடியாதுதான் அங்கே தோழிகளும் காதல் வயப்பட்டவரும் கனவுலகும் இறை நிலையும் ஓவியங்களாக இருந்தனர்.




தாமிர நிறத்தில் நீண்டு நெழிந்த டி.ஜோசப் ராஜ்-ன் திண்மமான கோடுகளுக்கிடையே ஒழுகிக் கொண்டிருந்த வண்ணங்கள் மிக அதிகமான மனித முகங்களையும் உருவங்களையும் பறவைகளையும் புலனாக்கிக் கொண்டிருந்தன. மனிதனுக்கு கலையை அணுக யதார்தத்தை கடந்த ஒரு வெளி தேவையாக உள்ளது அது குதிரை போன்ற குதிரையாகவும், உதடு போன்ற உதடாகவும் இருக்கிறது, ஆம் அவர்கள் பெண்கள் தான் ஆனால் அந்த முகங்களில் நாம் யாரை வேண்டுமானாலும் பொருத்திப் பார்க்கலாம், ஆம் அந்த மூன்று பெண்கள் (தோழிகள் ஓவியம்) இடத்தில் எனக்குள்ளிருந்தோரை என்னால் மனதுக்குள் வரைந்து பார்க்க்க முடிந்தது, என்ன அவ்வோவியத்தின் பெண்கள் மடியில் “பீடித்தட்டு” இல்லை நான் வரைந்து பார்த்த்தில் அதை சேர்த்துக் கொண்டேன்.

அந்தக் கோடுகளின் இடையிடையே தென்படும் உருவங்களை உள்வாங்க முயற்சித்து படுதோல்வி அடைந்தேன், இன்னும் அதிலிருந்து மீளவில்லை எனக்கு என் இரண்டு வயது மகள் பென்சிலால் சுவரில் வட்டம் வட்டமாக வரைந்துவிட்டு “மீனு மீனு” எனச் சொல்லி பூரிப்பதே நினைவில் வந்தது, ஓவியர் முனுசாமி அவர்களின் இக்கோடுகளில் முகங்கள், விலங்குகள் உண்டு யதார்தத்தை மீறி நீண்டு குறுங்கும் எளிய கோடுகள்.

கொற்றவையின் முகத்தையும் ஆயுதங்களையும் கடந்து சுற்றி வரையப்பட்டிருந்த வாசல் வடிவங்கள் மனதை உள்ளிளுத்துக் கொண்டிருந்தபோது என் மகள் என்னைப் பிடித்து இழுத்து மண்டியிட்டு வணங்க மழலைச் சொல் மொழிந்தாள் நான் சிரித்துவிட்டு அரவக்கோன் அவர்களின் அடுத்த ஓவியங்களுக்குள் நுழைந்தேன், சக்தி ஓவியமும் பின் மற்றொரு இறைவி அதிலும் வாசல் வடிவமைப்பு உண்டு அதனை வேறொரு திறப்புகளை உருவாக்கும் வழியாக உணர்ந்து கொள்ளலாம் என அப்பொழுதில் தற்காலிக முடிவொன்றை பெற்றுக்கொண்டு நகர்ந்தேன்.

சின்னஞ்சிறிய நுண் கோடுகள் கொண்டு வரையப்பட்ட இரு ஓவியங்கள் அனேகமாக அது இராமன் அவர்களுடையதாக இருக்க வேண்டும் அதற்குள் மறந்துவிட்டது. இவ்வகை ஓவியங்களை இதற்குமுன் இருமுறை காட்சியில் கண்டிருக்கிறேன் வெகு இலகுவான ஈர்க்கும் ஆற்றல் கொண்ட கோடுகள். சுந்தரமூர்த்தி அவர்களின் பேனா மற்றும் பென்சிலால் தீட்டப்பட்ட கோடுகள் சிக்கலான கோடுகளை கொண்ட தெளிவான உருவங்களை வெளிப்படுத்தும் கலை ஆம் அந்த மீன்கள் மிகு கவர்ச்சியாக இருந்தன. இடையில் ஒன்றிரண்டு பேர் வந்து போக இறுதியில் அவ்வோவியங்களை உரையாட விட்டுவிட்டு வெளியேறினோம் நானும் என் மகளும்.

செவ்வாய், 23 ஜனவரி, 2018

16 - வாசிப்பு

மிகக் கச்சிதமாகத் தொடங்கும் உரையாடல் ஒரு வேகத்துக்குள் நம்மை செலுத்திவிட்டு பின் காட்சியை உணர்த்துகின்ற கதையமைப்பு கடைசியில் ஒற்றை வரியிலோ வார்த்தையிலோ வாசிப்பவரை வெளியேற விடாமல் அக்கதைக்குள்ளே உழன்று வர வைக்கும் முடிவு, "ப்ச்" "பொம்மை" "சித்திரங்கள் ஆகிய கதைகளில் வாசகருக்கான வெளி இறுதி வார்த்தைகளில் தான் நீளத் தொடங்குகிறது. கதைச் சித்தரிப்பு இன்னும் வலுப்பட வேண்டும், ரகசியம் இருப்பதாய் என்ற இரண்டாம் தொகுப்புக் கதைகளை விட ரமேஷ் ரக்சனின் இம்முதல் தொகுப்பு சிறப்பு.

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

செம்மாரி - வாசிப்பு

ஆடுபுலி ஆட்டம் தான் கதையின் மையம் என்பதை அறிவித்தே தொடக்கம் கொள்கிறது இப்புதினம். முதல் பகுதி பத்தி எழுத்து நாவல் என வாசிக்கும் மனதில் அயர்ச்சியையும் தொடந்து வாசிக்கும் ஆர்வத்திற்கு தடை போடுவதாகவும் உள்ளது, ஆனால் தேசிகர் கதை சொல்லத் தொடங்கியதும் எழுத்து மாற்றம் கொள்வது கதைக்கான தொடர்ச்சி. பழந்தமிழ் நாடு பற்றிய அறிமுகம் நான்காம் தலைமுறை ஆட்சியில் தொடரும் கலைச் சிறப்புகள் என சலிக்காத சொல்லாடல்.

ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் கவனப்படுத்துவதில் அடுத்தடுத்த தலைப்புகளை பயன்படுத்தியிருக்கிறார் படைப்பாளி. சிற்பக்கலைக்காக வெட்டப்படும் மலைகள் அதற்காக உழைக்கும் தொழிலாளிகள் என சொல்லப்படும் விவரணைகளே அவர்களின் உழைப்பையையும் இன்று நாம் காணும் ஒரு சிற்பத்தின் பின்னாலிருக்கும் அடித்தட்டு மக்களின் பங்களிப்பையும் விவரணை செய்கிறது, வென்னீரையும் மரக்குச்சிகளையும் கொண்டு பாறையை பிளப்பதும் நிழலை வைத்து உயரத்தை அளப்பதும் சிற்பிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, கற்கடிகாரம், கல்லில் இசைக்கருவி, நுண் கற்சிற்பங்கள் என பல ஆச்சரியங்கள். இவையெல்லாம்  அறிந்துகொள்ளும் புள்ளியாகக் கருதி தொடர்ந்து வாசிக்கலாம்.

கதையின் மையமான ஆட்டம் செம்மாரியின் காதல் களிப்புகளுக்கு பிறகு வேகம் எடுத்து பக்கங்களை புரள வைக்கிறது. விளையாட்டுக்குப் பின்னான சதி வலை கதையை வேறொரு திசையில் நகர்த்திச் செல்கிறது. அட!! ஆமால்ல எனும் ஆச்சரியமும் இருக்கிறது இடையிடையில். ஒட்டமும் நடையுமான வாழ்க்கையில் புதிய குணங்களை வெளிப்படுத்துகின்ற நாம் ஏற்கனவே அறிந்த கதாப்பாத்திரத்திற்கு அதற்கேற்ப சிறு அறிமுகத்தை போகிற போக்கில் சொல்லிச் செல்வது சிறப்பு.

செம்மாரியின் விளையாட்டு உத்தியை வாழ்வில் நேரும் இன்னலான தருணத்தில் தன்னையும் சார்ந்தோரையும் காத்துக்கொள்ள பயன்படுத்தி வாசிப்போருக்கு சாகச நிகழ்வின் சாத்தியங்களை அனுபவிக்கச் செய்திருப்பது படைப்பாளியின் திறன், அவ்வப்போது செம்மாரி என்ன சிந்திக்கிறான் என்பதை ஊகிக்க வழி கிடைக்கும் பொழுதில் அதை செய்து முடித்துவிடுகிறான்.

ஆடுபுலியாட்ட கட்டங்களை சித்தரிக்கும் காட்சியிலும் நகலன் அதை வரையும் காட்சியிலும் எங்கள் ஊரின் மைதானத்தில் இருந்த வேப்பமரத்தடி மண்டபம் (சோம்பேறி மண்டபம் என்றுதான் அழைப்பார்கள்) தான் நினைவில் வந்துவந்து போனது, அங்கு இவ்வாட்டம் நிகழ்வதுண்டு அதோடு நீச்சல்காரன் (http://tech.neechalkaran.com/2012/05/adu-puli.html?m=1) இணையதளத்திலுள்ள விளையாட்டை விளையாடிப் பார்த்ததும் நினைவில் ஆடியது.
இனி ஆடும் ஆடுபுலியாட்டமும் கண்டால் ஏன் புலியைக்கண்டாலும் செம்மாரியின் நினைவுதான் வரும். 

எழுத்துப்பிழைகளை தவிர்த்தும் நிலப்பரப்பு பற்றிய காட்சி சித்தரிப்பிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம், வாழ்த்துகள்.